இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?

கட்டுரை தகவல்
எழுதியவர், மைல்ஸ் பர்க்
பதவி, பிபிசி நியூஸ்
19 பிப்ரவரி 2025
32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது.
ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய திட்டம் போல் தோன்றலாம். ஆனால், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸ் 1993 பிப்ரவரி 4ஆம் தேதி செய்ய முயன்றது இதைத் தான்.
ஆனால் ஸ்னாமியா (ரஷ்ய மொழியில் பதாகை எனப் பொருள்) திட்டத்தின் நோக்கம் உலகை மிரட்டி பணம் பறிப்பது போன்ற ஒரு கொடூரமான திட்டம் அல்ல.
ஸ்னாமியா ஏவப்படும் முன்னர் பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட் பெல்லிங்ஹாம், "இதன் நோக்கம், சைபீரியாவில் உள்ள ஆர்டிக் நகரங்களை இருண்ட குளிர்காலத்தின் போது ஒளிரூட்டுவது. அடிப்படையில் ரஷ்யாவின் துருவப் பகுதிகளில் இரவு கவிழ்ந்த பின்னர் சூரியனை ஒளிரச் செய்யும் முயற்சிதான் இந்த திட்டம்." என்று விவரித்தார்.
இன்றுமே கேட்பதற்கு இது ஒரு புதிய திட்டம் போல தோன்றுகிறது. இருப்பினும் ஒளியை பூமியின் மேற்பரப்பை நோக்கி பிரதிபலிக்க விண்வெளியில் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்ற நோக்கம் உண்மையில் புதுமையான ஒன்றல்ல. 1923இல் ஜெர்மனியின் ராக்கெட் முன்னோடி ஹெர்மன் ஓபெர்த் இதை தனது 'ராக்கெட் இண்டூ பிளானட்டரி ஸ்பேஸ்' என்ற புத்தகத்தில் முன்வைத்தார்.
மிகவும் சாத்தியமற்றதாக தோன்றுகிறது என்ற காரணத்திற்காக ஹைடெல்பர்க் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட அவரது பி.ஹெச்டி ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர் சுயமாக வெளியிட்ட புத்தகம். இது, ஒரு ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது எப்படி சாத்தியம் என்பதை கணித ரீதியாக காட்டியது.
விண்வெளி பயணத்தால் மனிதர்கள் உடலில் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள், செயற்கைக்கோள்களை எப்படி சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவது மற்றும் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி ஒளியை குவிக்கும் வகையில் விண்வெளியில் மிகப்பெரிய குழிவான கண்ணாடிகளை அமைப்பது ஆகியன குறித்த தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன.
'டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும்'

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,1912, டைட்டானிக் கப்பல் விபத்தைச் சித்தரிக்கும் ஓவியம்
இவ்வாறு ஒளிரூட்டுவது 1912-ல் டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும் அல்லது அதில் உயிர் பிழைத்தவர்களை மீட்க உதவும் என ஓபெர்த் தெரிவித்தார். பனிப்பாறைகளை உருக்குவதன் மூலம் கப்பல்களுக்கு பாதைகளை உருவாக்குவது அல்லது பூமியின் தட்பவெட்ப நிலையை மாற்றக் கூட விண்வெளி கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என ஓபெர்த் பேசியிருந்தார்.
விண்வெளியில் கண்ணாடி திட்டம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய இயற்பியலாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஹில்லர்ஸ்லெபனில் இருந்த நாஜி ஆயுத ஆய்வு நிலையத்தில், ஒளியை பிரதிபலிக்கும் ஒரு சூரிய துப்பாக்கியை (சானெங்வெயர் என ஜெர்மன் மொழியில் அறியப்படும்) உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
சூரிய ஒளியை குவியச் செய்து பூமியில் நகரங்களை எரியச் செய்வது அல்லது ஏரிகளில் உள்ள நீரை ஆவியாக்குவதுதான் சானெங்வெயரின் நோக்கம் என்று கைது செய்யப்பட்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் கூறியதாக, 1945ஆம் ஆண்டில் டைம் இதழ் செய்தி வெளியிட்டது.
அவர்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப வரைபடங்களை அளித்த பின்னர் அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையின்மை தெரிவித்தாலும், ஜெர்மனிய விஞ்ஞானிகள் தங்களது சூரிய துப்பாக்கி 50 வருடங்களில் செயல்பாட்டிற்கு வரும் என நம்பியதாக நேச நாடுகளின் தொழில்நுட்ப உளவுப்பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜான் கெக் அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
1970-களில் மற்றொரு ராக்கெட் பொறியாளர் கிராஃப்ட் எரிக்கே இந்த சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் வி-2 ராக்கெட் குழுவில் எரிக்கே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார்.
யுத்தத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவிடம் சரணடைந்து, ஆபரேசன் பேப்பர்கிளிப் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்காக பணியாற்ற தொடங்கினார். 1,600 ஜெர்மானிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பு மிக்கவர்கள் என வகைப்படுத்தப்பட்டு, வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.
எரிக்கே அமெரிக்க விண்வெளி திட்டத்தின் ஒரு அங்கமாக மாறி, விண்வெளியில் கண்ணாடிகளை அமைக்கும் திட்டத்தை 1970-களில் தொடங்கினார். பூமியைச் சுற்றிவரும் பிரமாண்ட கண்ணாடிகள் இரவு வானை எப்படி ஒளிரூட்டி, விவசாயிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் சாகுபடி அல்லது அறுவடை மேற்கொள்ளலாம் அல்லது அந்த ஒளியை சூரிய ஒளி தகடுகளை நோக்கி திருப்பி உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என விளக்கி 1978-ல் அவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
இதை அவர் பவர் சொலெட்டா என அழைத்தார். குழந்தைப் பருவம் முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவரும், பிற கோள்களில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவருமான எரிக்கே, பவர் சொலெட்டா செயல்பாட்டுக்கு வருவதை பார்க்காமலேயே 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
ஆனால் அவருடைய விண்வெளி பயண கனவு அவரது இறப்பிற்கு பிறகு நனவானது. 1984-ல் தகனம் செய்யப்பட்ட அவரது எச்சங்கள், ஸ்டார் டிரெக்கை உருவாக்கிய ஜீன் ராடென்பெர்ரி மற்றும் 1960-களின் முக்கியமான உளவியலாளர் திமோதி லியரி ஆகியோரின் எச்சங்களுடன் சேர்த்து, பூமி சுற்றுப்பாதையில் 1997ஆம் ஆண்டு செலுத்தப்பட்டன.
1980-களில், சோலரெஸ் என்று அழைக்கப்படும் பூமியை சுற்றி வரும் கண்ணாடி அமைப்பு மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு குறித்து நாசா மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தது, ஆனால் அரசு ஆர்வம் காட்டினாலும் அந்த திட்டத்திற்கு போதிய நிதியை திரட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால் அதே நேரம் ரஷ்யாவில் சூரிய கண்ணாடிகள் குறித்த ஆர்வம் வேரூன்றியது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் வட துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது
விண்வெளியில் படகோட்டம்
அந்த நேரத்தில் விண்வெளி கலங்களில் மிகப்பெரிய சூரிய ஒளி பாய்களை இணைக்க முடியுமா என விளாடிமிர் சைரோமியாட்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டார். விண்வெளி பொறியியல் கண்டுபிடிப்புகளில் சைரோமியாட்னிகோவ் ஒரு முன்னோடியாக இருந்தார்.
சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரினை 1961-ல் விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் அவர் பணியாற்றியுள்ளார். ஆண்டோஜைனெஸ் பெரிபெரல் அசெம்பளி சிஸ்டம் (APAS) என அழைக்கப்படும் அற்புத விண்கல தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார்.
இது 1975 ஜூலையில், அப்போதைய பனிப்போர் எதிரிகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இணைந்து செயல்படுத்திய முதல் கூட்டு விண்வெளி பயணமான அப்போலோ- சோயூஸ் சோதனை திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அமெரிக்க விண்கலம், இரண்டு வீரர்களுடன் இருந்த சோவியத் சோயூஸ் கலத்துடன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.
இதன் பின்னர் அமெரிக்க விண்கலங்கள் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைவதற்கு APAS பயன்படுத்தப்பட்டது. இன்றும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஒளி பாய்களை விண்கலங்களுடன் இணைப்பதன் மூலம் கப்பலின் பாய்கள் காற்றை பயன்படுத்திக் கொள்வதைப் போல அவை சூரியனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என சைரோமியாட்னிகோவ் நினைத்தார். இந்த பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்ட பாய்கள் சரியான கோணத்தில் வைக்கப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேறும் போட்டான் துகள்கள் அவற்றின் கண்ணாடி போன்ற பரப்பில் பிரதிபலித்து எரிபொருளை எரிக்க வேண்டிய தேவையில்லாமல், கலத்தை விண்வெளியில் முன்னோக்கி செலுத்தும்.
ஆனால் ரஷ்யாவில், சோவியத் சகாப்தத்திற்கு பிறகு, சைரோமியாட்னிகோவின் விண்வெளி திட்டம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார பலனை காட்டாவிட்டால் நிதி பெறுவது கடினமானது. எனவே தனது திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சைரோமியாட்னிகோவ் முடிவு செய்தார்.
பூமியை சுற்றி வரும் விண்கலத்தின் ஒளியை பிரதிபலிக்கும் சூரிய பாய்கள், ஒரு கண்ணாடி போல் செயல்படலாம் என்றும், சூரிய பாய்கள் எப்போதும் சூரியனை பார்க்கும் வகையில் அவற்றின் கோணத்தை விண்கலத்தின் திரஸ்டர்கள் மூலம் மாற்றலாம் எனவும் அவர் நினைத்தார். பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம். கூடுதலாக கிடைக்கும் சூரிய ஒளி விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். கூடுதலாக கிடைக்கும் சூரியவெளிச்சம் அந்தப் பகுதியில் விளக்குகள் மற்றும் வெப்பத்திற்கான மின்சார செலவுகளை குறைத்து அந்த பகுதி மக்களின் நலனுக்கு வலு சேர்க்கலாம் என அவர் கருதினார்.
இது அரசு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அமைந்தது. எனவே ரஷ்ய அரசு நிறுவனங்கள் மற்றும் முகமைகள் கொண்ட விண்வெளி ரெகாட்டா கூட்டமைப்பின் நிதி பங்களிப்புடன், ரஷ்ய விண்வெளி முகமை ரோஸ்காஸ்மாஸின் மேற்பார்வையில் ஸ்னாமியா விண்வெளி கண்ணாடியை மெய்ப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார் சைரோமியாட்னிகோவ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம்
முதலில் உருவாக்கப்பட்ட ஸ்னாமியா-1 மாதிரி விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பரிசோதனைகள் மேற்கொண்டு ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால் அவற்றை சைரோமியாட்னிகோவ் சரி செய்யும் வகையில் பூமியிலேயே இருந்தது.
ஸ்னாமியா-2 தான் சுற்றுப்பாதைக்கு செல்லவிருந்த முதலாவது கண்ணாடியாக இருந்தது. அதன் கண்ணாடி, விண்வெளியில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமாளிக்கும் அளவு வலுவானது என கருதப்பட்ட பளபளப்பான அலுமினியம் சேர்க்கப்பட்ட மெல்லிய மைலார் இழைகளால் உருவாக்கப்பட்டது. அது மத்தியில் சுழன்று கொண்டிருக்கும் டிரம்மில் இருந்து எட்டு பிரிவுகளாக வட்ட வடிவில் பிரிந்து மையவிலக்கு விசையைப் பயன்படுத்தி அதே வடிவில் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
"பயணத்தின் போது கண்ணாடி விண்கலத்தைச் சுற்றி இறுக்கமாக சுற்றப்பட்டிருக்கும். அதை பிரிக்க விண்கலம் வேகமாக சுழன்று ஒரு குடையை போல் அதை வெளியே தள்ள வேண்டும்," என 1992-ல் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு விளக்கிய பிபிசியின் பெல்லிங்ஹாம், "இந்த 20 மீட்டர் அகல பிரதிபலிப்பான் சாதாரணமாக பூமியை கடந்து செல்லும் சூரிய கதிர்களை அந்த உயரத்தில் ஈர்த்து அவற்றை பூமியின் இருளான பகுதியை நோக்கி திருப்புவது தான் சூட்சுமம்." என்றார்.
முதலில் செலுத்தப்பட்டதைவிட படிப்படியாக பெரிய கண்ணாடிகளை அனுப்பி அவை பூமிக்கு வரும் போது எரிந்து விடும்படி பல ஸ்னாமியாக்களை ஏவுவதுதான் சைரோமியாட்நிகோவின் திட்டம். ஸ்னாமியாவின் மெல்லிய பிரதிபலிக்கும் தகடுகள் விண்வெளியில் எவ்வாறு செயல்பட்டன என்பதை ரஷ்ய பொறியாளர்கள் ஆய்வு செய்து அவரது மாதிரியை மேலும் மேம்படுத்த முடியும்.
இதன் தொடர்ச்சியாக நிரந்தரமாக பூமியை சுற்றி வரும் 200 மீட்டர் அகல பிரதிபலிப்பானுடன் கூடிய ஸ்னாமியா அனுப்பப்படும்.
பௌர்ணமி நிலவுக்கு இணையாக ஒளிர்ந்த விண்வெளி கண்ணாடி

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் என கணிக்கப்பட்டது
சுழலும் ஆற்றல் உள்ள இதுபோன்ற 36 பிரமாண்ட கண்ணாடிகளை விண்ணில் செலுத்தி பிரதிபலிக்கும் ஒளியை குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ந்து பாயும் வகையில் வைத்திருப்பதுதான் இந்த திட்டத்தின் உச்சபட்ச நோக்கம். ஒரு சிறிய பகுதியில் ஒளி பாய ஒரே ஒரு பிரதிபலிப்பான் பயன்படுத்தலாம்.
"ஒரு தெளிவான இரவில் அந்த விண்வெளி பிரதிபலிப்பானால் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு இணையான பகுதிக்கு ஒளியூட்ட முடியும். இதன் மூலம் நீண்ட குளிர்கால இரவுகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்," என்றார் பெல்லிங்ஹாம்.
கூடுதல் வெளிச்சம் அல்லது பெரிய பகுதியில் ஒளி வீச பல பிரதிபலிப்பான்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த விண்வெளி கிரிட் மூலம் ஒன்றாக செயல்படும் பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் எனவும் 90 கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒளியை பரப்ப முடியும் எனவும் கணிக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, திட்டம் தயாராக இருந்தது. ஆளற்ற புரோகரஸ் எம்-15 விண்கலம், ஸ்னாமியா-2 உடன் கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. பொருட்களை ஏற்றிச்சென்ற கலம் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைந்த போது, விண்வெளி வீரர்கள் பிரதிபலிப்பான்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த டிரம்மை புரோகரஸ் விண்கலத்தில் பொருத்தினர்.
ஸ்னாமியா-2 அந்த ஆண்டு இறுதியில் பரிசோதிக்கப்படவிருந்தது. ஆனால் மிர் குழுவினர் வரவிருக்கும் பிற திட்டத்திற்கான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்ததால் இதை செலுத்துவது தாமதமானது. இறுதியில் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி அவர்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராகினர்.
தானாக செயல்படக் கூடிய புரோகரஸ் விண்கலம், மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த போது அது சுழல ஆரம்பித்து ஒரு பிரமாண்ட விசிறியை விரிப்பது போல் கண்ணாடியை விரித்தது. அந்த கண்ணாடி சூரியனின் கதிர்களை ஈர்த்து, பூமியை நோக்கி பிரதிபலித்தது.
அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளி பெளர்ணமி நிலவுக்கு இணையான பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. அது பூமியில் 5 கிலோமீட்டர் விட்டத்துடன் ஒரு வெளிச்ச வட்டத்தை உண்டாக்கியது. விநாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் அந்த வெளிச்ச வட்டம் தெற்கு பிரான்ஸிலிருந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் மேற்கு ரஷ்யாவை கடந்தது.
மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவர்களால் ஒரு மெல்லிய ஒளி ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் கடந்ததைக் காண முடிந்தது. அந்த கண்டம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தாலும், பூமியில் இருந்த சிலர் அதை ஒரு வெளிச்ச கீற்றாக பார்த்ததாக கூறினர். சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த விண்வெளி கண்ணாடி சுழற்சிப் பாதையை விட்டு விலகி, கனடாவின் மேல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது எரிந்து போனது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,யூரி ககாரினை (புகைப்படத்தில் இருப்பவர்) விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் சைரோமியாட்னிகோவ் பங்காற்றினார்
ஒரு தொழில்நுட்ப வெற்றி
ரஷ்யாவில், ஸ்னாமியா-2 சோதனை ஒரு தொழில்நுட்ப வெற்றியாக பாராட்டப்பட்டது. ஆனால் அது இந்த திட்டத்திற்கான சில குறிப்பிடத்தக்க சவால்களையும் வெளிப்படுத்தியது. ஸ்னாமியா-2 பிரதிபலித்த ஒளி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான தீவிரத்துடன் இருந்ததுடன், பூமியில் ஒரு பெரிய பகுதிக்கு பயன்படுத்தத்தக்க ஒளியை வழங்க முடியாத வகையில் மிகவும் பரவலாக இருந்தது. சுற்றுப்பாதையில் சுழலும் ஸ்னாமியா-2-ன் நிலைத்தன்மையை பராமரிப்பதும் கடினமாக இருந்தது. மேலும் அதன் வெளிச்ச வட்டம் பூமியின் மேற்பரப்பில் விரைவாகப் பயணித்தது. அதன் உண்மையான பயன்பாடு மிகவும் குறைவு என தோன்றச் செய்தது.
ஆனால் இந்த திட்டம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும் புரிதல்களையும் வழங்கியது. எனவே திட்டமிட்டபடி ஸ்னாமியா-2.5 திட்டத்தை செயல்படுத்த சைரோமியாட்னிகோவ் முனைந்தார். இந்த முறை இது 25 மீட்டர் கண்ணாடியைக் கொண்டிருக்கும் இது ஐந்து முதல் 10 முழு நிலவுகளின் பிரகாசத்தை பிரதிபலிப்பதுடன் 8 கிலோமீட்டார் அகலமுள்ள வெளிச்ச வட்டத்தையும் பெற்றிருக்கும்.
ஸ்னாமியா-2.5 பூமியைச் சுற்றி வரும் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நிமிடங்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் ஒளிக்கற்றையின் திசையை கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். 24 மணி நேர சோதனையின் போது கண்ணாடி பிரதிபலிக்கும் சூரிய கதிரால் ஒளிர வட அமெரிக்காவில் இரண்டு நகரங்கள் மற்றும் ஐரோப்பாவில் சில நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
சைரோமியாட்னிகோவ் தனது குழு அடைந்த முன்னேற்றத்தால் மகிழ்ச்சியடைந்தார். 1998 அக்டோபரில் இதை ஏவ திட்டமிடப்பட்டது. "நாங்கள் இந்த துறையில் முன்னோடிகள்" என்று அவர் ஜூலை 1998இல் தி மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார்.
"பரிசோதனை திட்டமிட்டபடி நடந்தால், எதிர்காலத்தில் பல டஜன் விண்கலங்களை நிரந்தரமாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்." என்றார்.
வானிலையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலை
ஸ்னாமியா-2.5 புறப்படும் முன்னரே ரஷ்ய விண்வெளி அதிகாரிகளிடம் புகார்கள் வரத் தொடங்கின. விண்வெளி கண்ணாடி, இரவு வானத்தை ஒளியால் மாசுபடுத்தி, அவர்களின் தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பார்ப்பதை மறைத்துவிடும் என்று வானிலையாளர்கள் கவலைப்பட்டனர்.
ராயல் வானியல் சங்கம், விண்வெளி ரெகட்டா கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலிடம் இந்த சோதனை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு சென்றது. விண்வெளி கண்ணாடியின் செயற்கை ஒளி, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, வன உயிர்கள் மற்றும் இயற்கை சுழற்சிகளைப் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.
இந்த சந்தேகங்கள் இருந்த போதிலும், ஸ்னாமியா திட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து உலகளவில் கணிசமான கவனமும் உற்சாகமும் இருந்தது.
"மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இது என்ன பலனளிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்," என்று சைரோமியாட்னிகோவ் மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார்.
"மின்சார கட்டணங்கள் இல்லை, நீண்ட இருண்ட குளிர் காலங்கள் இல்லை. தொழில்நுட்பத்திற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம்." என்றார்.
எனவே, ஸ்னாமியா-2.5 திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் இருந்து மிஷன் கண்ட்ரோல் கண்காணித்துக் கொண்டிருக்க, முன்பை விட பெரிய விண்வெளி கண்ணாடி பிப்ரவரி 5, 1999 அன்று ஏவப்பட தயாராக இருந்தது.
முதலில் அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தேறின. மடித்து வைக்கப்பட்டிருந்த விண்வெளி கண்ணாடி புரோகிரஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு, மிர் விண்வெளி மையத்தில் இருந்து எந்த பிரச்னையும் இன்றி பிரிந்தது. அது விண்வெளி மையத்தை விட்டு விலகி அதற்கான இடத்தில் நிலைகொண்டது.
புரோகிரஸின் திரஸ்டர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டதும், அது சுழன்று கண்ணாடியை விரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக புரோகிரஸுக்கு கூடுதலாக ஒரு கட்டளை தவறுதலாக பிறப்பிக்கப்பட்டது. விண்கலத்தை விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கான ஆண்டெனாவை செயல்படுத்தும்படி அதற்கு உத்தரவிடப்பட்டது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் (கோப்புப் படம்)
ஆண்டெனா நீளத் தொடங்கிய போது ஸ்னாமியா 2.5 -ன் மெல்லிய பிரதிபலிப்பான்கள் அதில் உடனடியாக சிக்கிக்கொள்ள தொடங்கியது. மிர் விண்வெளி மையத்திலிருந்து வந்த ஆண்டனாவில் கண்ணாடியிழை சிக்கிக்கொண்ட காட்சிகளை மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் வேதனையுடன் பார்த்தது. ஆண்டெனாவை உள்ளிழுக்க அவசர கட்டளைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்த நேரத்திற்குள் பல கஜ நீள கண்ணாடியிழை ஆண்டனாவை சுற்றிக்கொண்டதுடன், கண்ணாடியை பல இடங்களில் கிழித்துவிட்டது.
பிரதிபலிக்கும் பரப்பு மேலும் கிழித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து கட்டளைகள் நிறுத்தப்பட்டன. கண்ணாடியை விரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இறுதிக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
ஸ்னாமியா-2.5-ன் கிழிந்து கசங்கிய கண்ணாடியை விரிக்க முடியாது என்பதை உணார்ந்த மிஷன் கன்ட்ரோல், புரோகிரஸ் விண்கலத்துடன் இணைந்த நிலையிலேயே அதை பூமியில் விழ அனுமதித்தனர். அது அடுத்த நாள் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது.
"இங்கு மிகவும் சோர்வான மனநிலை உள்ளது," என மாஸ்கோவில் உள்ள மிஷன் கண்ட்ரோலின் செய்தித் தொடர்பாளார் வேலெரி லிண்டின் அப்போது பிபிசியிடம் தெரிவித்தார்.
ஸ்னாமியா-2.5 பூமியில் விழுந்தது அதை மட்டும் அழிக்கவில்லை. மாறாக சைரோமியாட்னிகோவின் உன்னதமான விண்வெளி கண்ணாடி திட்டத்தின் எதிர்காலத்தையும் அழித்தது. 70 மீட்டர் விட்ட கண்ணாடியுடன் 2001-ல் ஏவ அவர் திட்டமிட்ட ஸ்னமியா 3-க்கு நிதி கிடைக்காததால் அது தயாரிக்கப்படவே இல்லை.
தனது தலைமுறையின் தலைசிறந்த விண்வெளி பொறியாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சைரோமியாட்னிகோவ் 2006-ல் சூரிய சக்தி பாய்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய கனவுகள் நிறைவேறாமலேயே உயிரிழந்தார்.
"இந்த பரிசோதனை உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதால் இந்த தோல்வி மிகவும் வேதனையானது," என லிண்டின் 1999இல் பிபிசிக்கு கூறினார்.
"ரஷ்ய விண்வெளித் திட்டங்களின் பழைய கொள்கையை நாம் மறந்துவிட்டோம். முதலில் ஏதாவது செய்ய வேண்டும், பின்னர் அதைப் பற்றி பெருமை பேச வேண்டும்" என அப்போது அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?