யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், ஆலமரங்களுக்கு அடியிலும், போரிலாலான இடிபாடுகளுக்கு மத்தியிலும், தாரிணி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அழகு தேவதையாக இருண்ட நாட்களை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பிரகாசமான புன்னகையையும் மற்றும் அவளுடைய தாய்நாட்டின் அமைதியான குளங்கள் போல பிரகாசிக்கும் கண்ககளையும் கொண்டிருந்தாள்.
"பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!"
இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும் கண் என பல வகைக் கண்களுடன் ஒப்பிட்டு தலைவனைப் பார்க்கும் போது மட்டும் அம்புபோல் பாய்கிறது என அழுத்தமாக கூறுகிறது. அப்படித்தான் அவளின் கண் உண்மையாகவே இருந்தது! ஆனால் அந்த பாக்கியவான் யார் ?
ஒரு மதியம், சமூக ஊடகங்களின் முடிவில்லாத உலகத்தால் ஆட்கொள்ளப்பட்ட தாரிணிக்கு கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர் கார்த்திக் என்ற நபரிடம் இருந்து ஒரு குறும் செய்தி வந்தது. அதில் அவன் பாவிக்கும் நேர்த்தியான கார்களின் படங்கள், பரபரப்பான நகரக் காட்சிகள், மற்றும் அவனின் கம்பீரமான தோற்றங்களென பல படங்களும் காணப்பட்டன. இவை கார்த்திக் கண்ணியமாகவும், எளிமையாகவும், ஆனால் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறாரென பரிந்துரைத்தது.
"ஹாய் தாரிணி, உங்கள் சுயவிவரம் என் கண்ணில் பட்டது. நீங்கள் அழகான உள்ளம் கொண்டவர் போல் தெரிகிறது. உங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்." என்று கார்த்திக் சுருக்கமாக குறிப்பிட்டு ஒரு கவிதையையும் இணைத்து இருந்தான்.
"நறுந்துணர் குழல் கோதி
பெருங்கொன்றைப் பூச்சூடி
பெருந்துயர் தந்தாயே...
செங்கருங்கால் அடியார
புல்லுருவி நிலம்போலே
செவ்விதழே என்நெஞ்சை
செய்துவிட்டதேனோ...
செல்லாத திசையெல்லாம் - தினம்
சொப்பனத்தில் வருகுதடி...
கொல்லாத களம் நோக்கி - மனம்
பல்லாக்கில் போகுதடி..."
கார்த்திக் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து இன்று ஒரு மென்பொருள் பொறியாளராக பண்புரிகிறான். அவனது தாய்நாட்டிலிருந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்தது அவனுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டியது - அவனது வேர்கள், கலாச்சாரம் மற்றும் ஒருவேளை அவன் எதிர்பார்க்காத இடத்தில் அன்பைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அப்படி இருந்து இருக்கலாம்?
கண்ணோடு கண் சேர்ந்த பிறகு புன்னகையோடு பொதுவாப் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்புறம் தன்னைப் பத்தி, தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுவாங்க. அடுத்து தன்னோட குறிக்கோள் பத்தி பேசுவாங்க. அப்படித்தான் இவர்களின் பயணமும் தொடங்கியது.
தாரிணி, அவனது மிதமிஞ்சிய பாராட்டால் அல்லது வேண்டுதலால் மகிழ்ச்சியடைந்து அவனது நவீன வாழ்க்கை முறையால் மயங்கி, அவனுக்கு பதிலளித்தாள். நாட்கள் வாரங்களாக மாறியது, விரைவில் அவர்கள் தினமும் பேசிக்கொண்டிருந்தனர். வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள சவால்கள், வெற்றிகள் மற்றும் ஒரு நாள் இலங்கைக்கு திரும்பும் கனவுகள் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக், தாரிணியை உண்மையாகவே விரும்பினான். ஆனால் அவளோ தனது குடும்பத்தின் நிலையில் இருந்தும் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாடுகளில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற ஆசையையும் மேலும் ஏதோவொன்றிற்கான ஏக்கமும் கொண்டிருந்தாள்.
டைம்பாஸ் காதல், மனமுதிர்ச்சி இல்லாத காதல், இப்படி நிறைய இருந்தாலும் உண்மையான காதலும் நிறைய இருக்கிறது. காதல் வழக்கம் போல சங்க காலத்திலிருந்து கண்ணிலிருந்தும் செவ்விதழிலில் இருந்தும் தான் ஆரம்பிக்கிறது. அப்படித்தான் இங்கும் ஆரம்பித்தாலும், அவள் அதை ஒரு டைம்பாஸ் காதலாகவே எடுத்துக் கொண்டாள். ஆனால் அது அவனுக்கு தெரியாது.
அவர்களது உறவு விரைவில் எதோ ஒரு காதல் உறவாக மாறியது. தாரிணியின் அழகும் எளிமையும் கண்டு வியந்த கார்த்திக், பெரும் வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கினான். அவளும் அதை தனக்கு சாதகமாக தந்திரமாக பாவித்து, அவனிடம் இருந்து மெல்ல மெல்ல பெரும் பணமும் செல்வமும் பல சாட்டுகளை அழகாகக் கூறி பெற தொடங்கினாள். இவைகளை அறியாத அவனோ, உண்மையில் அவளை காதலித்ததுடன் விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருவதாகவும், அவர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக அவளிடம் கூறினான். தாரிணியும், தனது சிறிய நகரத்தின் பழமைவாதக் கண்களிலிருந்து விலகி, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விருப்பம் என்று அவனுக்குத் தெரிவித்தாள்.ஆனால் அவளின் திட்டம் அதுவே என்றாலும், அவள் மனதில், அவளின் இனிமையான வார்த்தைகளுக்குக் கீழே வேறு ஒரு எண்ணமும் இருந்தது.
யாழ்ப்பாண வாழ்க்கை அவளுக்கு எப்போதுமே கடினமாகவே இருந்தது. நிதிக் கட்டுப்பாடுகள், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் அழுத்தங்கள். தாரிணி கார்த்திக்கை தனது தப்பிக்கும் பாதையாக மட்டுமே பார்த்தாள்.
கண்களுக்கு அடுத்த காதல் பரிமாற்றம் புன்னகை தான். காதலன் பேச காதலியோட சிரிப்பும், காதலி பேச காதலனோட சிரிப்பும் பார்க்கக் கண் கோடி வேண்டும். எதுக்கு சிரிக்கிறாங்கன்னு அவங்களுக்குத் தான் தெரியும். எதிலும் சிரிப்பு, எங்கும் சிரிப்பு. சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் என்ற பாடல் போல், அவன் தன்னை இழந்து அவளுக்குள் சிறைபோய்விட்டான். இந்தப் புன்னகை என்ன விலை ? என்ற பாடலைப் போல அவனும் விலை கொடுக்க, பணம் கொடுக்க வைத்துவிட்டது இங்கு நினைவு கூறலாம்.
மாதங்கள் கடந்துவிட்டன, கார்த்திக், ஆழ்ந்த காதலில், இலங்கைக்கு விமானத்தை பதிவு செய்தான். தாரிணியை முதன்முறையாகச் சந்திப்பதையும், அவள் தன் கைகளால் தன்னை கட்டிப்பிடித்து அணைப்பதையும், அவளது புன்னகையின் அரவணைப்பை நேரில் பார்ப்பதையும் அவன் கற்பனை செய்தான். மறுபுறம், தாரிணி, அவன் வருவதற்கு முந்தைய நாட்களில் வெகுதூரம் போய் விட்டாள். கார்த்திக் உற்சாகத்தில் நிரம்பி வழியும் அதே வேளையில், அவள் வஞ்சகத்தின் உச்சத்துக்கே போய்விட்டாள். அவனிடம் இருந்தது அவ்வவ்போது பெற்ற பணமும் செல்வமும் அதற்கு துணை நின்றது.
யாழ்ப்பாணம் வந்த கார்த்திக் அந்த ஊரின் அழகையும், மக்களின் அரவணைப்பையும் கண்டு வியந்தான். ஆனால் கடைசியாக தாரிணியைச் சந்தித்தபோது ஏதோ ஒரு குழப்பம் அவளிடம் இருப்பதைக் கண்டான். அவன் இணையத்தில் தெரிந்து கொண்ட துடிப்பான, உற்சாகமான பெண் மாதிரி இப்ப அவள் இல்லை. அவள் அவனை வரவேற்றாலும் கவனம் சிதறியதாகத் தோன்றியது, அவள் கண்கள் எதையோ மறைப்பது போல அடிக்கடி விலகிச் சென்றன.
கோவில்கள், கடற்கரைகள் மற்றும் யாழின் சின்னமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று, சில நாட்கள் ஒன்றாகக் கழித்தனர். அவர்களின் எதிர்காலத்தை ஒன்றாக இணைக்க, முன்மொழிய வேண்டும் என்பதில் கார்த்திக் உறுதியாக இருந்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி பேசும் போது, தாரிணி அதை எதோ ஒரு விதமாக தட்டிக்கழித்தாள். அதுமட்டும் அல்ல, அவளின் பெற்றோரிடமும் இதைப்பற்றி பேச அவனுக்கு இடம்கொடுக்கவில்லை. தனக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், தன் குடும்பத்தை விட்டு வெளியேற இன்னும் தயாராக இல்லை என்றும் அவள் கூறினாள்.
ஒரு மாலை, அவர்கள் யாழ்ப்பாணம் நகரத்தின் அண்மைக்கால பொழுதுபோக்கு திடலாக மாறிவரும் யாழ்ப்பாணம் கோட்டையின் தெற்கு பக்கமாக அமைந்துள்ள பண்ணை கடல் கரை ஓரமாக நட்சத்திரங்களுக்கு அடியில் அமர்ந்திருந்த போது, கார்த்திக் தைரியத்தை வரவழைத்து தன் காதலை, திருமண முடிவை முன்மொழிந்தான். அவன் ஒரு சிறிய வெல்வெட் பெட்டியை வெளியே எடுத்தான், அதன் உள்ளே ஒரு மென்மையான வைர மோதிரம் இருந்தது. அது அவனது அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம். அவன் அவள் முன் மண்டியிட்டான், அவன் இதயம் துடித்தது, அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டான்.
தாரிணி தயங்கினாள், அவள் முகத்தில் ஆனால் உண்மையில் முகமூடி தான் இருந்தது. என்றாலும் இனியும் காலம் கடத்தாமல், ஒரு தேர்வு அல்லது முடிவு அவளால் செய்ய வேண்டியிருந்தது. அவனிடம் பெற்ற பணமும் செல்வமும் அவளை மாற்றிவிட்டது. அவளுக்கு அது ஒரு பகட்டு வாழ்வுக்கு வழியும் வகுத்தது. அதனால் சில பணக்கார ஆண்களும் அவளின் பாய் பிரின்ட் அல்லது ஆண் நண்பர்களாகி விட்டார்கள். எனவே இப்ப அவள் கார்த்திக்கை ஏற்றுக்கொள்வதா இல்லை பல மாதங்களாக அவள் வகுத்த திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா என்பதில் ஒரு தயக்கம் கண்டாள்.
என்றாலும் செயற்கையாக வரவழைக்கப் பட்ட ஒரு கட்டாய புன்னகையுடன், அவள் மோதிரத்தை ஏற்றுக்கொண்டாள், அது வைர மோதிரமும் ஆச்சே. ஆனால் அவளுடைய உள் நோக்கங்கள் உண்மையானவை அல்ல என்பதை அவள் நன்கு அறிவாள். பாவம் கார்த்திக், ஒன்றும் புரியாத காதல் அப்பாவி!!
அதன் பின் கார்த்திக் நம்பிக்கையுடன் கனடாவுக்குத் திரும்பினான், அவளுடைய விசாவை ஏற்பாடு செய்து அவர்களின் எதிர்கால வீட்டை தயார் செய்வதாக உறுதியளித்தான். இதற்கிடையில் தாரிணி தன்னை மேலும் மேலும் தூர விலக்க ஆரம்பித்தாள். அவளுடைய செய்திகள் குறைந்தன, அவளுடைய அழைப்புகள் குறுகின. குடும்பக் கடமைகளைப் பற்றி, மற்றும் திருமண வேலைகளைச் செய்து முடிப்பதில் உள்ள போராட்டங்களைப் பற்றி அவள் சாக்குப்போக்கு சொல்வாள்.
மாதங்கள் கடந்தன, கார்த்திக்கிற்கு சந்தேகம் அதிகரித்தது. ஒரு நாள், சமூக வலைதளங்களில் உலாவும் போது, அவனது மனதைக் கனக்கச் செய்யும் ஒரு பதிவு தடுமாறியது. தாரிணி வேறொருவருடன், கொழும்பைச் சேர்ந்த ஒரு பணக்கார தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டாள் என்பது தெரிய வந்தது. அவனை அது, அதே மோதிரம் சூட்டிய யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இருந்து பல குண்டுகள் கொண்டு தாக்கியது போல் இருந்தது.
மனம் உடைந்து ஏமாந்து போன கார்த்திக் அவளை தொலைபேசியில் எதிர்கொண்டான். தாரிணி, எந்த வருத்தமும் இல்லாமல், "காதல் என்பது வெறும் விளையாட்டு, ஒரு சடுகுடு விளையாட்டு. இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. இங்கு அது 'காதல் சடுகுடு' கார்த்திக். நீ கனடாவில் இருக்கிறாய், உன் வாழ்க்கையை நன்றாக வாழ்கிறாய். நான் இங்கே பிழைக்க வேண்டும். நீ ஒரு அணி, நான் ஒரு அணி. யாருக்கு ஏமாற்றி பிழைக்க தெரியுமோ அவன் வென்றுவிடுவான். என்ன செய்வது நீ கடைசியாக தந்த விலை மதிப்பற்ற வைர மோதிரம் எனக்கு, என் வாழ்வுக்கு இன்னும் பகட்டை தந்தது. நான் 'காதல் சடுகுடு' ஆடுகளத்தின் நடுக்கோட்டை உன்னை ஏமாற்றி தாண்டிவிட்டேன். அவ்வளவுதான் , பாவம் நீ ? என்றாள்.
நொறுங்கிப் போன கார்த்திக், உடைந்த இதயத்தின் பாரத்தைச் சுமந்துகொண்டு கனடாவில் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான். அன்று இலங்கையில் எம் மொழி, உரிமை, பண்பாடு போன்றவற்றின் இருப்புக்காக குண்டுகளை எம் உடலில் ஏற்றோம். இன்று அது என்னவாச்சு ? தாரிணி, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 'காதல் சடுகுடு' விளையாட்டை விளையாடி, அதில் ஏமாற்றி வெற்றி பெற்று கொழும்பில் தனது வாழ்க்கையைத் ஆடம்பரமாக தொடங்கினாள். ஆனால் கார்த்திக், புலம்பெயர்ந்து கனடாவில் வசித்தாலும் அவன் பண்பாட்டு விழுமியத்தின் ஒரு முத்து, 'காதல் சடுகுடு'வில் தோற்றத்தில் அவனுக்கு கவலை இல்லை,
அது அவனுக்கு இன்று ஒரு பாடமே, அனுபவமே, அவ்வளவுதான் !!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]