கதை கதையாம்
ஒரு (கட்டுக்) கதை.
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?
குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?
ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!
இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்!
அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..
ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்து விடுமாம்.
அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு, முதல் நாள் மட்டும்... ஒரு கோமாதாவின் கோமியத்தை..
7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே.. தன் உயிரை விடுமாம்.
தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்!
அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ,
வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா!
அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த.. உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கிறது மயில்கள்!
விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி..
அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்து ‘மயிலாடுதுறை மயில்சாமி சித்தர்’ எழுதிய “மயில் அகவல்” என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது!
மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..
ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!
தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா!
ஓம் முருகா.. முருகா..
மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூல் கிடைத்தால் படியுங்கள்...
நன்றிகள் !!! 😂
இரண்டு நண்பர்கள்
பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கையில் தன் நதிக்கரைத் தோழன், திரு. சொவாழையைக் கண்டு, அவர் முன் போய் நின்றார்.
போருக்கு முன்பு, மொரிசோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஒரு கையில் மூங்கில் பிரம்பும், முதுகில் தகர டப்பாவுடனும் விடியற்காலையில் மீன்பிடிக்கக் கிளம்பிவிடுவார். அவர் அர்காண்தாய்க்கு ரயிலேறி கொலொம்பில் இறங்கி, நடந்தே, மறந்த் என்ற தீவை அடைவார். அந்தக் கனவு இடத்தை அடைந்தவுடன், அவர் மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவார், இருட்டாகும்வரை மீன் பிடித்துக்கொண்டிருப்பார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மொரிசோ, திரு. சொவாழையைச் சந்திப்பார், சொவாழ் குட்டையான, தடித்த, வேடிக்கையான மனிதர். அவர் “நோத்ர் தாம் லொரத்” என்ற தெருவில் வாழ்ந்துவந்தார். அவரும் மீன் பிடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்கள் இருவரும், அடிக்கடி, அரை நாள் பொழுதை, பக்கத்து பக்கத்தில், கையில் தூண்டிலுடன், கால்களை ஆற்றின் மேல் தொங்கவிட்டுக் கழிப்பர். இவ்வாறு, அவர்கள் இருவரும் அவர்களின் நட்பை வளர்த்திருந்தனர்.
ஒன்றாகக் கழித்த பொழுதுகளில், சில சமயங்களில், அவர்கள் பேசிக் கொண்டதே இல்லை. ஆனால், சில சமயங்களில் அரட்டையடித்தே நேரத்தைக் கழிப்பர். அவர்கள் இருவரும் தங்களைப்பற்றி வார்த்தைகளால் பகிர்ந்துகொள்ளாமலே ஒருவர் மற்றவரை நன்கு புரிந்துவைத்திருந்தனர், அவர்களின் ரசனைகளும், உணர்வுகளும் நன்றாக ஒத்துப்போயின.
ஒரு வசந்தகாலத்தின் காலையில், பத்து மணியளவில், இளஞ்சூரியன் அமைதியான ஆற்றின் மேல் ஏறி, மூடுபனியை நீரோடையோடு நகர்த்தி, உற்சாகமான இரண்டு மீனவர்களின் முதுகில், பருவகாலத்தின் கதகதப்பைப் படரச்செய்தது, மொரிசோ சில சமயங்களில் தன் நண்பனிடம், “அட! எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று கூறுகையில், சொவாழும், “உண்மைதான், இதைவிட இதமானதொன்று எனக்குத் தெரியாது” என்பார். இதுவே அவர்களின் புரிதல் மற்றும் ஒத்த ரசனைகளுக்கான சான்று.
இலையுதிர் காலத்தின், அந்திப்பொழுதில், அணையும் சூரியன் ஆகாயத்தை இரத்தக்கறையாக்கி, செந்நிற மேக பிம்பங்களை நீரின் மேல் வீசி, நதி முழுவதையும் அடர் சிவப்பாக்கி, கீழ் வானத்தைப் பற்றவைத்து, இரு நண்பர்களையும் நெருப்பாகச் சிவக்கச்செய்து, ஏற்கனவே சிவந்திருந்த மரங்களுக்குப் பொன்முலாம் பூசிக்கொண்டிருந்த வேளையில், குளிர்கால சிலிர்ப்பின் அசைவுடன், திரு. சொவாழ் புன்னகையோடு மொரிசோவைப் பார்த்து, “அட! என்ன ஒரு ரம்மியமான காட்சி!” என்றார், அதற்கு மொரிசோவும் ஆச்சரியதொனியில், தன் மிதவையிலிருந்து கண்களை அகற்றாமல், “மரங்கள் நிறைந்த அகன்ற பாதைகளைவிடச் சிறப்பாக இருக்கிறதல்லவா?” என்றார்.
மொரிசோவும் சொவாழும் தங்களைப் பார்த்துக்கொண்டவுடன், உற்சாகமாகக் கைகுலுக்கிக்கொண்டனர், முற்றிலும் கடினமான சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொண்டதில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். திரு. சொவாழ், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, “என்னவெல்லாமோ நடக்கிறது !” என்று முணுமுணுத்தார். மொரிசோவும் மிகுந்த வருத்தத்துடன், “எல்லாம் நேரம் ! இன்றுதான் ஆண்டின் முதல் அழகான நாள் போல் இருக்கிறது.” என்று புலம்பினார்.
உண்மையில், வானம் முழுவதும் நீலமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருந்தது.
அவர்கள் நினைவுகளோடும், சோகத்தோடும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தார்கள். மொரிசோ மீண்டும், “ம்ம்ம், மீன் பிடித்தல்? என்ன அழகான நினைவுகள்!” என்றார்.
திரு.சொவாழ் அவரிடம், “நாம் மீண்டும் எப்போது அங்கு செல்வோம்?” என்று கேட்டார்.
அவர்கள் இருவரும் சிறிய மதுக்கூடத்திற்குள் நுழைந்து ஒரு அப்சிந்தை குடித்தனர், பின் அவர்கள் மீண்டும் ஒன்றாக நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
மொரிசோ திடீரென்று நடப்பதை நிறுத்தி: “இன்னொன்று குடிக்கலாமா?” என்றார். அதற்கு திரு.சொவாழும், “உங்கள் விருப்பம்” என்று இசைந்தார். அவர்கள் இன்னொரு மதுபான விடுதிக்குள் நுழைந்தனர்.
அவர்களின் காலி வயிற்றை மதுபானம் நிரப்பியதால், இருவரும் மிகவும் மயங்கிய நிலையிலிருந்தனர். மிதமான வானிலை நிலவியது. மெல்லிய தென்றல் அவர்களின் முகத்தை வருடியது.
வெதுவெதுப்பான காற்று திரு. சொவாழையை முழு போதையில் ஆழ்த்தியது, அவர் சட்டென்று, “நாம் அங்கு சென்றால் என்ன ?”
– எங்கே?
– மீன்பிடிக்கத்தான்.
– ஆனால் எந்த இடத்திற்கு?
– பிரெஞ்சு புறக்காவல் படையின் முகாம் கொலொம்பிற்கு பக்கத்தில் தான் உள்ளது. எனக்கு கர்னல் தியுமுலீனை தெரியும்; நாம் எளிதில் தாண்டிச் செல்ல அனுமதி கிடைத்துவிடும்.
மொரிசோ ஆர்வத்தில் பதறினார், “கண்டிப்பாக வருகிறேன்,” பின் அவர்கள் இருவரும் தங்களுடைய பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இருவரும் ஒன்றாக நெடுஞ்சாலையில் நடந்து, கர்னல் இருந்த இடத்தை வந்தடைந்தனர். அவர், அவர்களின் கோரிக்கையைக் கேட்டுச் சிரித்து, அவர்களின் நப்பாசைக்கு அனுமதி அளித்த பின், அனுமதிச் சீட்டோடு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
விரைவிலேயே அவர்கள் முகாமைத் தாண்டி, கைவிடப்பட்ட கொலொம்பை கடந்து, சேன் நதியை நோக்கி இறங்கும் திராட்சைத் தோட்டத்தின் விளிம்பை அடைந்தபோது, மணி பதினொன்று இருக்கும்.
அதன் எதிரே, அர்கெண்ட்டெயில் என்ற கிராமம், மயானம் போல் காட்சியளித்தது. ஒரிஜெமோன் மற்றும் சண்ணுவாஸின் உயர்ந்த தோற்றம் நாட்டையே ஆக்கிரமிப்பதுபோல் இருந்தது. நாந்தேர் வரை நீண்டிருந்த பெரும் சமவெளி, ஒன்றுமில்லா செர்ரி மரங்களாலும், காய்ந்த பூமியாலும் மொட்டையாகவும், வெறுமையாகவும் இருந்தது.
திரு.சொவாழ், தன் விரலால் மலை உச்சியைக் காட்டி, “பிரஷியர்கள் அதன் மேல் தான் இருக்கிறார்கள்” என்று முணுமுணுத்தார். அந்த பாலைவன ஊரின் முன் ஒரு விதமான கவலை இரண்டு நண்பர்களையும் முடக்கியது.
“பிரஷியர்கள்!”, அவர்களை அங்குப் பார்த்ததுகூட இல்லை, ஆனால் இந்தக் கண்ணுக்குத் தெரியாத, அதீத பலம் கொண்டவர்கள், ஒரு மாத காலமாக, பாரிஸைச் சுற்றி, பிரான்சின் அழிவிலும், கொள்ளையிலும், கொலையிலும், பசியிலும் உணரப்பட்டார்கள். மேலும், இந்தக் கண்ணுக்குத் தெரியாத, வெற்றி வீரர்கள் மேல், வெறுப்போடு சேர்ந்து ஒரு குருட்டுப்பயமும் பற்றிக்கொண்டது.
மொரிசோ திக்கியவாறு, “ஒருவேளை! நாம் அவர்களைச் சந்தித்துவிட்டால் ?”
சொவாழ் எல்லா சோகத்தையும் மீறி, பாரிசிய கேலியோடு, “சந்தித்தால்! நாம் அவர்களுக்கு வறுத்த மீன்களைக் கொடுக்கலாம்” என்று பதிலளித்தார்.
ஆனால் அவர்கள், அடிவானத்தின் அமைதியால் பயமுறுத்தப்பட்டு, ஊருக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்கினார்கள்.
ஒருவழியாக, சொவாழ், “போகலாம் வாருங்கள், ஆனால் நாம் கவனமாக இருக்கவேண்டும்” என்றார். பின், அவர்கள் திராட்சைத் தோட்டத்தில் இறங்கி, தரையோடு ஊர்ந்து, இலைகளால் தங்களை மறைத்து, திறந்த கண்களுடனும், தீட்டிய காதுகளுடனும் தொடர்ந்தார்கள்.
அவர்கள் நதிக்கரையை அடைய இன்னும் ஒரு துண்டு நிலத்தைக் கடக்கவேண்டியிருந்த நிலையில் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள், அவர்கள் கரையை அடைந்தவுடன், நாணல்களால் தங்களை மறைத்துக்கொண்டார்கள்.
மொரிசோ தன் காதுகளை நிலத்தில் வைத்து, தங்களைச் சுற்றி யாராவது நடமாடிக் கொண்டிருக்கிறார்களா என்று சோதித்தார் . அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கை வந்தவுடன் மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு எதிரில், கைவிடப்பட்டிருந்த மறெந்த் என்ற தீவு அவர்களை மறைத்திருந்தது. அங்கிருந்த சிறிய உணவு விடுதியும் மூடப்பட்டு, பார்ப்பதற்கு, பல வருடங்கள் திறக்கப்படாமல் இருந்தது போல் தோன்றியது.
சொவாழ் முதல் இரையை எடுத்தார், மொரிசோ இரண்டாவதைப் பிடித்தார், ஒவ்வொரு முறையும் அவர்கள் தூண்டிலைத் தூக்குகையில், அதன் முனையில் ஒரு முட்டாள் கெண்டை மீன் மாட்டித் துடித்தது,“உண்மையிலேயே அது ஒரு அற்புதமான மீன் வேட்டை.”
அவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை நேர்த்தியாக, இறுக்கமாகப் பின்னப்பட்ட வலையில் இடும்பொழுது, அவை, அவர்களின் பாதங்களை நனைத்தது. அது அவர்களுக்கு ஒரு உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்தது, அந்த மகிழ்ச்சியை நீங்கள் நீண்ட காலமாக இழந்து மீண்டும் அனுபவிக்கும்போதுதான் தெரியும்.
கதிரவன், தன் வெப்பத்தை அவர்களின் தோள்களுக்கிடையில் பாய்ச்சிக்கொண்டிருந்தான்; அவர்களால் வேறு எதையும் கேட்கவும், யோசிக்கவும் முடியவில்லை; அவர்கள் உலகத்தைப் பொருட்படுத்தாமல், ஆழ்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, திடீரென நிலத்துக்கடியிலிருந்து வந்ததுபோல் தோன்றிய பெரும் சத்தம் பூமியை உலுக்கியது. பீரங்கி மீண்டும் வெடித்தது.
மொரிசோ, தன் தலையை இடப்பக்கம் திருப்பி, கரையைத் தாண்டிப் பார்த்தபோது, சற்று முன் வெடித்த வெடியின் புகை ஒரு வெள்ளை கொக்கைப் போல், வலேரின் மலையின் பெரிய புறவடிவத்திற்குமுன் இருந்தது.
மீண்டும் உடனடியாக, இரண்டாவது புகை மண்டலம் கோட்டையின் உச்சியிலிருந்து கிளம்பியது; சிலநொடிகளுக்குப் பிறகு திரும்ப படாரென குண்டு வெடித்தது.
மற்ற குண்டுகளும் தொடர்ந்து வெடித்தபோது, அந்த மலை நொடிக்கு நொடி இரைத்த மரண மூச்சு, மெதுவாக, அமைதியாய் இருந்த வானத்தில் எழுந்து, மலைக்குமேல் புகைமேகத்தை உருவாக்கியது.
திரு.சொவாழ் தன் தோள்களை உயர்த்தி, “மீண்டும் தொடங்கிவிட்டது” என்று கூறினார்.
மொரிசோ, தன் மிதவையின் இறகுகள் மூழ்குவதைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின், அங்கு சண்டைபோடும் வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒரு சாதுவான மனிதனின் கோபத்துடன், “தங்களையே இப்படிச் சாகடித்துக்கொள்ளும் இவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்” என்று புலம்பினார்.
திரு.சொவாழ், “இவர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள்” என்றார்.
ஒரு சிறிய மீனைப் பிடித்திருந்த மொரிசோ, “அரசாங்கங்கள் இருக்கும் வரைக்கும் இப்படிதான் இருக்கும்” என்றார் .
திரு.சொவாழ் அவரை, “குடியரசு போரை அறிவித்திருக்காது…” என்று தடுத்தார்.
மொரிசோ அவரைக் குறுக்கிட்டு, “அரசர்களால் நாட்டிற்கு வெளியில்தான் போர், ஆனால் குடியரசில் நாட்டிற்குள்ளேயே போர்” என்றார்.
பொறுமையாக அவர்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். அரசியலின் பெரிய முடிச்சுகளை ஒரு சாதாரண மனிதனின் அறிவார்ந்த, வரையறுக்கப்பட்ட சரியான காரணங்களைக்கொண்டு அவிழ்த்தனர், தாங்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்கப்போவதில்லை என்ற கருத்தில் ஒன்றுபட்டனர். வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது, குண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் வீடுகளைச் சிதைத்து, வாழ்க்கையை நசுக்கி, உயிர்களை அழித்து, பல கனவுகளுக்கும், காத்திருக்கும் சந்தோஷங்களுக்கும், எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, மனைவிகள், மகள்கள் மற்றும் அன்னைமார்களின் இதயங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும் முடிவற்ற துயரத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு தான் வாழ்க்கை” என்றார் திரு.சொவாழ்.
மொரிசோ சிரித்துக்கொண்டே “இவ்வளவு தான் மரணம் என்று சொல்லுங்கள்” என்றார்.
அவர்களுக்குப் பின் யாரோ வரும் சத்தம் கேட்டுத், திடுக்கிட்டுத் திரும்புகையில், அவர்களின் தோள்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, தாடியுடன் நான்கு பெரிய உருவம் கொண்ட ஆட்கள், விநியோக ஊழியர்களைப் போன்ற உடையும், தட்டையான தொப்பியும் அணிந்து, துப்பாக்கி முனையைத் தங்களின் தாடையை நோக்கி வைத்திருந்தவர்களைக் கண்டார்கள்.
இரு நண்பர்களின் கையிலிருந்த தூண்டில்கள் நழுவி நதியில் விழுந்தது.
சில வினாடிகளிலேயே, இருவரையும் பிடித்துக்கட்டி, ஒரு படகில் வீசி, நதியைக் கடந்தனர்.
கைவிடப்பட்டதாக நினைத்த விடுதிக்குப் பின் இருபது ஜெர்மானியப் படைவீரர்கள் இருந்தார்கள்.
அங்கு, ஒரு நாற்காலியில் வித்தியாசமான கூந்தல் கொண்டிருந்த அரக்கனைப்போன்ற ஒருவர் அமர்ந்து, ஒரு பெரிய பீங்கான் புகைக்குழாயில் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் இரு நண்பர்களிடமும், சிறந்த பிரெஞ்சு மொழியில், “கனவான்களே, நன்றாக மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
ஒரு படைவீரன் மீன்கள் நிறைந்திருந்த வலைப்பையை பத்திரமாகக் கொண்டுவந்து, அதிகாரியின் காலடியில் வைத்தான். அதிகாரி சிரித்தபடியே, “அட! பரவாயில்லையே ! மீன்பிடி ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், இதன் பின்னால் வேறேதோ இருப்பதுபோல் தோன்றுகிறதே. நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டால், நீங்கள் சிரமப்படத் தேவையில்லை.
என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் என்னை நோட்டமிட வந்த உளவாளிகள், உங்களைக் கொண்டுசென்று, குண்டுகளுக்கு இரையாக்கிவிடுவேன். உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த, மீன் பிடிப்பதுபோல் நடித்துள்ளீர்கள். உங்கள் துரதிர்ஷ்டம், என் கைகளில் சிக்கிக்கொண்டீர்கள், என்ன செய்வது, அதுதான் போர்.
நீங்கள் புறக்காவலைத் தாண்டி வந்துள்ளீர்கள், அதைத்தாண்ட உங்களிடம் கண்டிப்பாக அடையாள வார்த்தை இருக்கும், அதை என்னிடம் சொல்லிவிட்டால் நான் உங்களை மன்னித்துவிடுகிறேன்.” என்றார்,
பதட்டத்துடன் இரு நண்பர்களும், இரத்தப்பசையற்று, கைகள் லேசாக நடுங்கிய நிலையில் எதுவும் பேசாமலிருந்தனர்.
அதிகாரி மீண்டும், “இது யாருக்கும் தெரியப்போவதில்லை, நீங்கள் பத்திரமாகத் திரும்பிச்செல்லலாம். இது ரகசியமாகவே இருக்கும். ஆனால், நீங்கள் மறுத்தால் மரணம்தான். சீக்கிரம் முடிவெடுங்கள்.” என்று அவர்களிடம் கூறினார்.
அவர்களோ அசைவின்றி வாயைத் திறக்காமல் அப்படியே இருந்தனர்.
பிரஷியன், மிகவும் அமைதியாக, நதியை நோக்கி கையை நீட்டி, “இன்னும் ஐந்து நிமிடங்களில் இந்த நீரின் அடியில் இருப்பீர்கள் என்பது நினைவிருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் தான்! உங்களுக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்கள் தானே?” என்று மீண்டும் கூறினார்.
வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது.
இரு மீனவர்களும் அமைதியாக நின்றுகொண்டேயிருந்தார்கள். அந்த ஜெர்மானியன் தனது மொழியில் உத்தரவுகளைப் பிறப்பித்தான். பிறகு, அவன் கைதிகளின் அருகில் இல்லாதவாறு, தனது நாற்காலியை வேறு இடத்திற்கு மாற்றினான்; ஒரு டஜன் படைவீரர்கள், இருபது அடிகள் முன்னகர்ந்து, துப்பாக்கியைக் காலுக்கருகில் வைத்தனர்.
அதிகாரி மீண்டும், “உங்களுக்குக் கடைசியாக ஒரு நிமிடம் தருகிறேன், அதற்குமேல் இரண்டு வினாடிகூட தாண்டமாட்டீர்கள்.” என்றார்.
பின் அவர் திடீரென்று எழுந்து, அந்த இரண்டு பிரெஞ்சுக்காரர்களின் அருகில் சென்று, மோரிசோவை கையால் பிடித்து, தூரமாக இழுத்துக்கொண்டுபோய்,
தாழ்ந்த குரலில், “சீக்கிரம், அந்த அடையாளச்சொற்களை சொல்கிறாயா? இல்லையா? உனது கூட்டாளிக்கு ஒன்றும் தெரியப்போவது இல்லை, நானும் உங்களை மன்னித்துவிடுவேன்.” என்றார்.
மொரிசோ ஒன்றும் சொல்லவில்லை.
பிரஷிய அதிகாரி திரு. சொவாழையும் இழுத்துக்கொண்டுபோய், அதே கேள்வியைக் கேட்டார்.
திரு.சொவாழும் எதுவும் சொல்லவில்லை.
பின், அவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் வந்து சேர்ந்தனர்.
பொறுமையிழந்த அதிகாரி, தன் கட்டளையைப் பிறப்பித்தார். படைவீரர்கள் அவர்களது துப்பாக்கியை உயர்த்தினார்கள்.
அப்போது, மொரிசோவின் பார்வை, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி, புல்வெளியின் மேலிருந்த பையில் நிறைந்திருந்த இரை மீன்கள் மேல் விழுந்தது. சூரியக்கதிர்கள், தத்தளித்துக்கொண்டிருந்த மீன்களை இன்னும் மின்னச்செய்தது. தளர்வு அவரை ஆட்கொண்டது, அவர் எவ்வளவு முயன்றும், கண்ணீர் அவர் கண்களை நிறைத்தது.
அவர் திக்கியவாறு, “விடைபெறுகிறேன் திரு. சொவாழ்” என்றார்.
திரு. சொவாழும், “நானும் விடைபெறுகிறேன்” என்றார்.
எதிர்கொள்ளமுடியாத பயத்தால் தலை முதல் கால் வரை நடுங்கிய இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
அதிகாரி, “சுடுங்கள்” என்று கத்தினார்.
பன்னிரண்டு குண்டுகளும் ஒன்றாய் வெடித்தன.
திரு.சொவாழ், தன் மூக்கு தரையில் படும்படி விழுந்தார். உயரமான மொரிசோவோ, ஊசலாடி, சுழன்று, தன் நண்பனைத் தாண்டி, முகம் வானத்தைப் பார்த்தபடி விழுந்தவுடன், அவரின் சட்டையைப் பிய்த்துக்கொண்டு நெஞ்சிலிருந்து ரத்தம் வெளியேறியது.
ஜெர்மானியன் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
வீரர்கள் விரைந்து சென்று, கற்கள் மற்றும் கயிற்றோடு திரும்பிவந்து, இரண்டு பிணத்தின் கால்களையும் கல்லோடு சேர்த்துக் கட்டி, தூக்கிச்சென்றனர்.
வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்த நிலையில், இப்போது அது புகையால் புதைக்கப்பட்டிருந்தது.
இரண்டு வீரர்கள் மொரிசோவின் தலை மற்றும் கால்களைத் தூக்கினர், அதேபோல் சொவாழையும் தூக்கினர். இரண்டு உடல்களையும் ஒரு கனம் வேகமாக ஊசலாட்டித் தூக்கியெறிந்தபோது, முதலில் கற்கள் கால்களைச் செங்குத்தாக மூழ்கச் செய்து, நதியில் சிற்றலைகளை உண்டாக்கியது.
சிறிய அலைகள் கரையைத் தொடும்போது நீர் தெறித்து, நுரை தள்ளி, சுழன்று, சலனமற்றுப் போனது.
கொஞ்சம் இரத்தமும் மிதந்து கொண்டிருந்தது.
அதிகாரி, பொறுமையாக, மென்மையான குரலில், “இப்போது மீன்கள் சாப்பிடும் நேரம்” என்று சொல்லி, கைவிடப்பட்ட விடுதியை நோக்கி நடக்கையில், அவரின் பார்வை புற்களில் கிடந்த, இரை மீன்கள் நிறைந்த வலைப்பையின் மேல் விழுந்தது. அவர் அவற்றை எடுத்து, ஆராய்ந்து, பின் சிரிப்புடன், “வில்லியம்” என்று ஜெர்மானிய மொழியில் கத்தினார்.
வெள்ளை உடையணிந்த படைவீரன் ஒருவன் ஓடிவந்தான். அந்த பிரஷிய அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட இரு நண்பர்கள் பிடித்த மீன்களை அவனிடம் தூக்கிப்போட்டு, “மீன்களை உடனடியாக வறுத்துக்கொண்டுவா, இவற்றிற்கு உயிர் இருக்கும்போதே சாப்பிட்டால், மிகுந்த சுவையுடன் இருக்கும்” என்றார்.
பின் அவர் மீண்டும் புகைக்க ஆரம்பித்தார்
அக்கினிக் கரங்கள்
கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார்.
2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது.
யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார்.
இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன.
1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல.
அக்கினிக் கரங்கள்
நாவண்ணன்
இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு
நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு.
ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன்.
ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது.
அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும்.
என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம்.
அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன்.
ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன.
காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன.
நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின.
மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன்.
இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன்.
உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி
இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன்.
அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு.
பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின.
இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர்.
இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது.
அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே!
அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை.
சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு.
நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற
அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன்.
கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......!
இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன்.
அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி!
பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு!
திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!
மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான்.
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.
'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள்.
அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்தப் பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான்.
மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி!
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான்.
இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.
வாய் உள்ள பிள்ளை.. எங்கும், எப்படியும் பிழைத்துக் கொள்ளும்.
முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும்.
''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..
"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......
"அன்பே என்னை மன்னித்துக் கொள்.
இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.
நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள
நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று...
பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...! 😂 🤣
ஸ்ரீவாணி மேடம்
பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள்.
“எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி.
“அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா.
“சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ பார்த்து யாரோ என்று நினைக்கிறீங்க நீங்க” என்றாள் சாவித்திரி.
“இல்லை சாவித்திரி. வருவது அவுங்கதான்” என்றாள் பத்மா.
அதற்குள் ஸ்ரீவாணி அருகில் வந்துவிடவே, பத்மா கைகளைக் குவித்து, “வணக்கம், மேடம்” என்றாள்.
புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றாள் ஸ்ரீவாணி.
“என்ன ஆச்சு இவுங்களுக்கு? இன்று ஏன் இப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் பத்மா.
“உண்மைதான். என்ன ஆயிற்றோ தெரியவில்லை” என்றாள் சாவித்திரி.
வியப்போடு அவள் சென்ற வழியையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேருந்து வந்து ஹாரன் ஒலி எழுப்பியவுடன் திடுக்கிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அமர்ந்த பின்னும் ஸ்ரீவாணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தர்கள்.
ஸ்ரீவாணி நல்ல வழக்கறிஞராகப் பெயரெடுத்த பெண்மணி. அவளுடைய கணவன் ரங்கசாயி, இஞ்சினியரிங் படித்த பின் இரட்டை பிஹெச்.டி. செய்தான். அமெரிக்காவுக்குச் சென்று பதினைந்து ஆண்டுகள் இருந்துவிட்டுத் திரும்ப வந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைத்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஸ்ரீவாணி தன் கம்பெனியின் லீகல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வாள். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபடுவாள்.
பத்மா தான் வேலை செய்யும் கம்பெனியின் பெண்கள் தின விழாவுக்காக ஸ்ரீவாணியைத் தலைமை தாங்க அழைத்தாள். அவள் வந்தாள். நல்ல உயரமும் உடல் வாகுமாக பார்ப்பதற்கு அழகான வடிவம். கழுத்தில் இரட்டை வட தாலிச் சங்கிலி. கருகமணி. கை நிறையத் தங்க வளையல்கள், காதுகளில் வைரத்தோடு. காஞ்சீபுரம் பட்டுப் புடவை. இவை எலலாவற்றையும் விட அதிகமாக மனதைப் பறிக்கும் புன்னகையோடு விளங்கிய அந்த உருவத்தைப் பார்த்து மெய் மறந்த சபையினர், அவளுடைய உரையைக் கேட்டு மேலும் பரவசமடைந்தனர்.
“தற்போதைய சமுதாயத்தில் பல பெண்கள் மன உளைச்சலால் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர்களைச் சுற்றி அலையாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் பிறரைப் பற்றி யோசித்து அவர்களுக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும். அவர்கள் நம் உறவினர்களாகவோ நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. கண்ணுக்கு எதிரில் தெரியும் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணி அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.
உதவி புரிவதற்கு ஆயிரமோ லட்சமோ செலவு செய்யத் தேவையில்லை. நமக்கு எந்த ஒரு நஷ்டமும் எற்படாமல் நமக்கு மன நிம்மதியை அளிக்கக் கூடிய சாதனங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பழைய துணிகளுக்கு பாத்திரங்கள் விற்பது அவளுடைய தொழில். கையில் பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு நைலான் சட்டையை அணிவித்திருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அவன் விக்கி விக்கி அழுதான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்ணை அழைத்தேன்.
“ஏதாவது புடவைத் துணி இருந்தால் எடுத்து வாருங்கள், அம்மா. பாத்திரம் தருகிறேன்” என்றாள் வந்தவுடன்.
“துணி போடுவதற்காக உன்னை அழைக்கவில்லை. முதலில் அங்கே உட்கார்” என்று சொல்லி விட்டு, சமையலறையில் இருந்த சாதத்தில் சிறிது தயிர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்து அவளைச் சாப்பிடச் சொன்னேன். அவள் சாப்பிடுவதற்குள் வீட்டிலிருந்த ஒரு வேஷ்டியைக் கத்தரித்து தையல் மிஷினில் குழந்தைக்கு நான்கு சட்டைகள் தைத்தேன். நைலான் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தென்ற கைத்தறி சட்டையை அணிவித்தவுடன் அந்த பச்சைக் குழந்தை ஆசுவாசமடைந்தது. அதைப் பார்த்து அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
இதுபோன்ற ஆனந்தத்தை அவ்வப்போது அனுபவித்து வந்தால் டிப்ரெஷன் நம் அருகில் கூட வராது” என்று அவள் உரையாற்றியபோது கைத்தட்டல் விண்ணை எட்டியது. விழா முடிந்தபின் பலர் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்கள். அவர்களுள் பத்மாவும் சாவித்திரும் இருந்தார்கள்.
அப்படிப்பட்ட பெண்மணி இன்று அள்ளி முடிந்த தலை, பழைய புடவை, கழுத்தில் சாதாரண கருகமணி, கைக்குக் கண்ணாடி வளையல் என்று ஒரு ஏழையைப் போல ஏன் தோற்றமளிக்கிறாள்?
அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையிலும் அதே டாபிக். அவர்களுக்குச் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த சுஜாதா இவர்களுடைய பேச்சு காதில் விழவே டக்கென்று எழுந்து இவர்களின் அருகில் வந்தாள். அவள் அதே ஆபீசில் வேறு டிபார்ட்மென்ட். வெறும் முகப் பரிச்சயம் மட்டுமே.
“நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று ஆரவத்தோடு கேட்டாள்.
“சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நம்முடைய விமென்ஸ் டே மீட்டிங்கிற்கு வந்தார்களே அந்த ஸ்ரீவாணி மேடத்தைப் பற்றி” என்றாள் பத்மா.
“ஒரு நிமிடம்” என்று கூறிச் சென்று தன் டிபன் பாக்சை எடுத்து வந்து இவர்களோடு அம்ர்ந்த சுஜாதா, “இப்போது சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“அன்று ஃபங்ஷனில் பார்த்தபோது எத்தனை கிரேஸ்ஃபுலாக இருந்தார்கள்? அதன் பிறகு ஒருமுறை டிவியில் கூட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் மகாலட்சுமி போல இருக்கும் மேடம், இன்று மிகவும் ஏழை போல காட்சியளித்தாங்க” என்றாள் சாவித்திரி.
ஏளனமாகச் சிரித்தாள் சுஜாதா. “அவள் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். என் வீட்டுக்காரருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவர்கள் ஒரு மாதிரியான மனிதர்கள். இங்கு வேலையை விட்டு விட்டு அமெரிக்கா சென்றார்கள். அங்கு இருக்க முடியாமல் மீண்டும் இங்கே திரும்பி வந்தார்கள். ஏதாவது வேலையில் சேரலாம் அல்லவா? அதுவுமில்லை. தாமே பத்து பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஒரு இண்டஸ்ட்ரி தொடங்கினார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை. ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளருங்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை. “தெய்வம் எங்களுக்கு குழந்தைகளைக் கொடுக்காத போது மீண்டும் இந்த வளர்ப்புகள் எல்லாம் எதற்கு? எங்கள் ஃபாக்டரியில் பணிபுரிபவர்களே எங்கள் பிள்ளைகள்” என்று டயலாக் பேசினார்கள்.
நூறு ரூபாய் சம்பாதித்தால் அதில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் செலவு செய்தால் ஒழிய அவர்களுக்குத் திருப்தி இருக்காது. ஆடம்பரத்திற்கும் தானத்திற்கும் குறைவு கிடையாது. நாளை என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே கிடையாது. அதி புத்திசாலித்தனமோ அல்லது அறிவீனமோ தெரியவில்லை. யாரோடும் சேர மாட்டார்கள். அவர்களுடைய உலகம் அவர்களுக்கு. என்ன எதிரடி விழுந்ததோ தெரியவில்லை. எந்த விஷயமும் இன்னும் எங்கள் வரை வரவில்லை” என்று பேச்சும் சாப்பாடும் ஒரே தடவையாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் சுஜாதா. கிடுகிடுவென்று கையைக் கழுவிக் கொண்டு மொபைலை எடுத்து கணவனுக்கு அந்தச் செய்தியை பரபரப்பாகப் பகிர்ந்தாள்.
மனைவி கூறியதைக் கேட்டு கணவன் சூரியம் மகிழ்ச்சியடைந்தான். அவர்களுக்கு நன்றாக வேண்டும் என்று நினைத்தான். அவன் அத்தனை மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் இருந்தது.
எப்போதோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சூரியத்திற்கு பண உதவி தேவைப்பட்ட போது ரங்கசாயியிடம் சென்று கேட்டான். அவன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்து உதவினான். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. ரங்கசாயி ஒரு தெய்வம் என்று புகழ்ந்தான் சூரியம். அதன் பின் சூரியம் குடும்பத்தினர் கொஞ்சம் செட்டில் ஆனபின் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது சூரியத்திற்குக் கோபம் வந்தது.
தன்னைப் போல ரங்கசாயி கூட அந்தக் கடன் பாக்கி விஷயத்தை மறந்து போயிருப்பான் என்று நினைத்தான் சூரியம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலம் கடத்திப் பார்த்தான். அவ்வாறு வாயிதா போட்டால், எரிச்சலடைந்து கேட்பதை விட்டு விடுவார் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் ரங்கசாயி கெட்டிமனிதன். “நீ மனிதனா? மிருகமா? வயிற்றுக்கு சோறு தின்கிறாயா? புல்லைத் தின்கிறாயா?” என்று திட்டித் தீர்த்து, விரட்டி விரட்டி கொடுத்த கடனை வசூல் செய்துவிட்டான். சூரியத்திற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது.
“அந்த ரங்கசாயிக்கு என்ன கேடு? குழந்தையா, குட்டியா? போகும்போது பணத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்வானா? வேண்டியவர்களுக்கு ஆபத்தில் உதவினால், அந்தப் பணத்தை அணா, பைசவோடு வசூல் செய்ய வேண்டுமா?” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அவ்விதம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான்.
இப்போது அந்த ரங்கசாயிக்கு ஏதோ கஷ்டம் வந்தது என்றும் அவன் மனைவி ஏழைபோல நடந்து செல்கிறாள் என்றும் தன் மனைவியின் மூலம் தெரிந்து கொண்ட சூரியத்திற்குச் சொல்ல முடியாத ஆனந்தம் தொற்றிக் கொண்டது. அதனைத் தன் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். உடனே போன் செய்து நான்கைந்து உறவினர்களுக்குக் கூறினான். அவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் அந்தச் செய்தி பரவி விவாதத்திற்கு உரியதானது.
“உலகம் என்றால் இப்படித்தான்.. ஏதோ பெரிய பாக்டரி இருக்கிறதென்று பெருமையடித்துக் கொண்டார்களே என்று சமீபத்தில் என் மகனை ரங்கசாயிடம் அனுப்பினேன். அவன் போக மாட்டேன் என்று சொன்னாலும் உறவினர் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர மாட்டானா என்று நப்பாசையில் அவனை பலவந்தமாக அனுப்பினேன். என் பிள்ளை பத்தரை மாற்றுத் தங்கம். பரீட்சைக்கு முன்னால் ஏதோ ஜுரம் வந்ததால் பத்தாவது பெயில் ஆகி விட்டானே தவிர ஒரு கலக்டரோ ஒரு கவர்னரோ ஆக வேண்டிய புத்திசாலி என் மகன். அப்படிப்பட்ட இளைஞனை அழைத்துச் சென்று லாரியிலிருந்து சரக்குகளை இறக்கும் உத்தியோகத்தில் வைத்தானாம். என் மகனுக்கு ஏற்கெனவே டஸ்ட் அலேர்ஜி. அந்த வேலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு சம்பளமும் ரொம்ப கம்மி. ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றானாம். இந்த நாட்களில் பிச்சைக்காரன் கூட அதைவிட அதிகம் சம்பாதிக்கிறான். என் மகனுக்கு ரோஷம் அதிகம். வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டான். வேண்டியவர்கள் வீட்டுப் பிள்ளை ஆயிற்றே, பக்கத்தில் இருத்தி வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்து அதில் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வோம் என்று இல்லை. நாளைக்கு அவர்களுக்குப் பிறகு அவனே பொறுப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறான். அந்த அளவு கூட அவர்களுக்கு இங்கித ஞானம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நன்றாக ஆனது. நன்றாக வேண்டும் அவர்களுக்கு” என்று புலம்பினாள் ஒரு இல்லத்தரசி.
“உண்மைதான் அண்ணி. என் பெண் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே சென்று அவர்களிடம் கூறினோம். கல்யாணத்திற்கு வர இயலாது, தில்லிக்குப் போகிறோம் என்று சொல்லி இருநூறு ரூபாய் பெறுமான ஒரு புடவையும் ஒரு அகல் விளக்கு அளவுக்கு வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழும் வைத்துக் கொடுத்தாள் அந்த மகராசி. ஒரு ஐநூறு ரூபாயை என் வீட்டுக்காரரின் கையில் வைத்து மாப்பிளைக்கு கொடுங்கள் என்றாள். இருக்கிற சொத்தையெல்லாம் போகும்போது கூட எடுத்துச் செல்லப் போகிறார்களா, என்ன? ஒரு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ கையில் வைத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவளுக்கு மனசு வரவில்லை. என்ன செய்வது? கருமித்தனம். போனால் போகிறது. எங்கள் கவலை என்னவென்றால், யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின் பத்து நாட்களில் அவர்களுடைய பாக்டரியில் வேலை செய்யும் பெண்ணை அங்கேயே பணி புரியும் ஒரு பையனுக்கு திருமணம் செய்வித்தார்களாம். குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், கட்டில் மெத்தை எல்லாம் வாங்கித் தந்தார்களாம். குறைந்தபட்சம் கல்யாணச் சாப்பாட்டோடு சேர்ந்து இருபதாயிரம் வரை செலவாகியிருக்கும். வேண்டியவர்களுக்கு இலையிலும் வேண்டாதவர்களுக்குத் தட்டிலும் என்று சொல்வார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் வேலியில் கூடக் காய்க்கும். வேண்டாம் என்றால் மரத்தில் கூட காய்க்காது” என்று தோளில் இடித்துக் கொண்டாள் மற்றொரு இல்லத்தரசி.
மற்றொரு இடத்தில் மற்றொரு விவாதம் நடந்தது. “இந்த ரங்கசாயி செய்யும் வேலையெல்லாம் தலைகீழ் வேலைகளே. ஒரு முறை அவர்கள் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி என்று அழைத்தார்கள். உறவினர்களுக்கு விருந்து போட்டதோடு ஏழைகளுக்கு அன்னாதானமும் செய்தார்கள். சொந்தக்காரர்களுக்கு புளியோதரை, பூரணம் போளி, சர்க்கரைப் பொங்கல், வடை எல்லாம் போட்டு அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு பூரி, குருமா, புலாவ், ஜாங்கிரி, ஐஸ்க்ரீம் எல்லாம் பரிமாறினான். இது என்னடா என்று கேட்டபோது ஏழைகளுக்குப் பாவம் இதெல்லாம் யார் கொடுப்பார்கள் என்று விதண்டவாதம் செய்தான். அவனுக்கு ஆமாஞ்சாமி போடுவதற்கு அவன் மனைவியும் கூடவே இருக்கிறாள். இரண்டும் இரண்டு ஆப்பை. இரண்டும் கழண்ட ஆப்பை என்பார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் ஒரு பெரிய மனிஷி.
“கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் பெருமைப் பட எதுவுமில்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரு பாக்டரி, ஒரு சொந்த வீடு, அவ்வளவுதான். வங்கியில் பணம் தங்காது. இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் கை சும்மா இருக்காது. ஏதாவது செலவு செய்து விடுவார்கள். புத்தி கெட்ட விதமாக ஏதாவது செய்திருப்பார்கள். அதனால்தான் இந்த நிலைமை. தனக்காகத் தெரியாவிட்டால் யாரையாவது கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்கவில்லை” என்று குமுறினார் ஒரு மேதாவி.
அதையெல்லாம் கேட்டு வருந்திய மனிதன் சேகரம் ஒருவனே. அவனுக்கும் ரங்கசாயிக்கும் தூரத்து உறவுமுறை உண்டு. நான்கைந்து முறை ரங்கசாயி, சேகரத்திற்கு உதவியுள்ளான். ரங்கசாயிக்கு போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ரங்கசாயியிடம் வாங்கிய கடன் ஒன்று பாக்கியிருந்தது. அவனுக்கு வலியச் சென்று போன் செய்தால் அவன் பணத்தைக் கொடு என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? தன்னிடம் பணம் இல்லையே, என்ற சங்கோஜம் அவனைத் தடுத்தது. அதனால் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட முடிவு செய்தான். அதுவுமின்றி, ரங்கசாயி தன் ஒருவனுக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு உதவியுள்ளான். யாரோ ஒருவர் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவ முன்வராமல் போகமாட்டார் என்று நினைத்துச் சும்மா இருந்தான் சேகரம்.
மொத்தத்தில் ரங்கசாயி பற்றியும் ஸ்ரீவாணி பற்றியும் அன்று நிறைய பேர் விவாதித்துக் கொண்டார்கள். சுஜாதா ஒவ்வொரு நாளும் அதே வேலையாக பத்மாவிடமும் சாவித்திரியிடமும், “என்ன ஆச்சு? மேற்கொண்டு ஏதாவது தெரிந்ததா? ஸ்ரீவாணியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இன்று கூட பார்த்தோம் அதே அவதாரம்தான். பாவம். நடக்க முடியாமல் அவங்களுக்குப் பெருமூச்சு வாங்கியது” என்றாள் சாவித்திரி. அந்தச் செய்தியை முடித்தவரை உடனுக்குடன் உறவுகளிடம் பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா.
சூரியம் பொறுக்கமுடியாமல் ஒருமுறை ரங்கசாயியின் பாக்டரிக்கு போன் செய்தான். “சார் ஊரில் இல்லை. திரும்பிவர நீண்ட நாட்கள் ஆகும். எங்கே சென்றாரோ எங்களுக்குத் தெரியாது” என்று பொதுப்படையாக கூறினார்கள். விவரம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
ரங்கசாயியின் வீட்டுக்கு போன் செய்து பார்த்தான். அந்த நம்பர் வேலை செய்ய வில்லை என்று பதில் வந்தது. போனைக்கூட பிடுங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவன் முகம் காட்ட முடியாமல் தலைமறைவாகி விட்டான் என்று தீர்மானித்து மனைவி சுஜாதாவிடம் கூறினான்.
“ஸ்ரீவாணி வேலையில் இருந்தாலாவது பிழைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும். அதையும் விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனக்கு மிஞ்சித்தானே தானமும் தருமமும்? சொந்த வியாபாரம், சொந்த கம்பெனி என்று பெருமை பேசி சமூக சேவையில் இறங்கினாள். நாமெல்லாம் வியாபாரம் செய்ய முடியாமல்தான் உத்தியோகம் செய்கிறோமா? இப்போது பாருங்கள். பாவம். இருவரும் சாலைக்கு வந்து விட்டார்கள்” என்றாள் சுஜாதா.
பிறர் கூறித் தெரிந்து கொண்டதையும் தானாக யூகித்ததையும் ஊராரிடம் வலியச் சென்று பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. அதன் காரணமாக உறவினர்களுள் சுஜாதாவுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. காலையில் எழுந்தது முதல் யாராவது ஒருவர் போன் செய்து, “என்னா ஆச்சு சுஜாதா? ஏதாவது தெரிந்ததா? புதிய செய்தி உண்டா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.
அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கலந்து கதை கட்டி பொழுது போக்கிக் கொண்டிருந்தாள் சுஜாதா. வரவர சுஜாதாவால் சஸ்பென்சைத் தாங்க இயலவில்லை. எப்படியாவது ஸ்ரீவாணியைப் பிடித்து விவரங்கள் எல்லாம் வரவழைத்து சுற்றத்தாருடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதை எப்படிச் செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினாள்.
ஒரு நாள் காலையிலேயே எழுந்து ஆட்டோ ஏறி அரை கிமீ பயணம் செய்து பத்மாவும் சாவித்திரியும் பஸ் ஏறும் ஸ்டாப்பிற்குச் சென்றாள். யாருக்கும் சந்தேகம் வராமால் முன்பாகவே அங்கு சென்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
பத்மாவும் சாவித்திரியும் வந்தார்கள். சுஜாதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, “நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டார்கள்.
“நேற்று இந்த ஏரியாவில் என் தோழியின் வீட்டில் பங்ஷன் நடந்தது. இரவு வெகு நேரமாகிவிட்டது. அதனால் இங்கேயே தங்கி விட்டேன். அதுதான் காலையில் பஸ் பிடித்துப் போகலாம் என்று வந்தேன்” என்று சுவர் எழுப்பினாற்போல் பொய் சொன்ன சுஜாதா, “எங்க ஸ்ரீவாணி வந்துட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள்.
“இன்னும் இல்லை. இனிமேல்தான் வருவார்கள். சில நாட்கள் அவர்கள் முன்னால் வருவார்கள். வேறு சில நாட்கள் எங்கள் பஸ் முன்னால் வந்து விடும்” என்றாள் சாவித்திரி.
“கடவுளே இன்று ஸ்ரீவாணி முன்னால் வர வேண்டும்” என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள் சுஜாதா. அவளுடைய வேண்டுதல் பலித்தது.
“அதோ ஸ்ரீவாணி மேடம்” என்றாள் பத்மா.
பத்மாவும் சாவித்திரியும் வியந்து போய் எத்தனை சொல்லியிருந்தாலும் எதிரில் ஸ்ரீவாணியைப் பார்த்த சுஜாதா வாயடைத்துப் போனாள். சாதாரண புடவை, வெறும் காது, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள், ரொம்ப இளைத்துப் போய் பெருமூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீவாணி.
சுஜாதா வியப்பிலிருந்து மீள்வதற்குள் அருகில் வந்த ஸ்ரீவாணி அவளிடம் பேசினாள். . “சுஜாதா, நீ என்ன இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டாள்.
“நான் ஏதோ வேலையாக வந்தேன். அதிருக்கட்டும். அக்கா, நீ என்னக்கா, இப்படி ஆகிவிட்டாய்? உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் சுஜாதா.
“நன்றாகத் தான் இருக்கிறேன் சுஜாதா. சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாகிறது” என்றாள் ஸ்ரீவாணி.
கிடைத்தாற்போல் கிடைத்து நழுவ இருந்த ஸ்ரீவாணியைப் பார்த்து சுஜாதாவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. “எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடுவேனா?” என்று நினைத்துக் கொண்டாள்.
“வா அக்கா. நானும் உன்னோடு வருகிறேன்” என்றாள்.
“பஸ் வந்துவிடும் சுஜாதா” என்று நினைவூட்டினாள் பத்மா.
“நான் ஆட்டோவில் வருகிறேன், பத்மா. ரொம்ப நாள் கழித்து அக்காவைப் பார்க்கிறேன் அல்லவா? கொஞ்சம் நல்லது கெட்டது பேசி விட்டு மெதுவாகக் கிளம்புவேன்” என்று கூறிவிட்டு ஸ்ரீவாணியோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சுஜாதா.
“எப்படி இருக்கிறாய் சுஜாதா? உன் கணவர் குழந்தைகள் நலமா?” என்று அன்போடு விசாரித்தாள் ஸ்ரீவாணி.
“நாங்கள் நன்றாக இருக்கிறோம். அக்கா, நீ சொல். என்ன செய்தி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சுஜாதா.
“நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுஜாதா. ஒரு குறைவுமில்லை. அண்மையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல பணியில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடாகா பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தேவதாசி வழக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணை அந்தச் சிறையிலிருந்து விடுவித்து கைவேலைகளில் பயிற்சி கொடுத்தோம். புடவையின் மேல் வொர்க் செய்து ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாயாவது அவள் சம்பாதிக்கும்படி செய்தோம். அவள் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினாள். தாயும் தந்தையும் எயிட்ஸ் நோயால் இறந்து போய் அனாதையாக மாறிய ஒரு ஐந்து வயது சிறுமியை அந்தப் பெண் தத்து எடுக்கும்படிச் செய்துள்ளோம். ஒரு குழந்தைக்காக தவமிருந்த தாய்க்கும் குழந்தை கிடைத்தது. அனாதையான சிறுமிக்கும் தாய் கிடைத்தாள். அவரகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும், சுஜாதா” என்றாள் ஸ்ரீவாணி.
சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா.
“எங்களுக்கு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து நல்ல ஆர்டர் கிடைத்திருக்கிறது, சுஜாதா. எப்போதும்போல் லாபம் கிடைக்கும்தான். ஆனால் மேலும் ஒரு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அந்த வேலையாகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டி இருக்கும். போனைப் பற்றி கேட்கிறாயா? பழைய போனை எடுத்து விட்டு சமீபத்தில் ரிலையன்ஸ் போன் வாங்கியுள்ளோம்” என்றாள் ஸ்ரீவாணி.
எச்சில் விழுங்கினாள் சுஜாதா. “அப்படியா அக்கா? ரொம்ப சந்தோசம். அது சரி, அக்கா, நீ ஏன் நடந்து செல்கிறாய்? உன் கார் எங்கே? நகையெல்லாம் ஏன் கழற்றி விட்டாய்?” பொறுமையிழந்த சுஜாதா நேரடியாக பாயிண்டுக்கு வந்தாள்.
“அதுவா? அண்மையில் எனக்குக் கொஞ்சம் ஆரோக்கியம் சரியில்லை, சுஜாதா. மெனோபாஸ் நேரம் அல்லவா? இடுப்பு வலி. அதோடு, இருந்தாற்போல் இருந்து இடது காலில் வலி. கேரள மருத்துவம் பார்க்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சரி என்று ஆரம்பித்தேன். பஞ்ச கர்மா சிகிச்சை. ஐந்தாறு வாரங்கள் செய்து கொள்ளவேண்டும். நன்றாக இருக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வார்கள் அல்லவா? அதனால், கால் மெட்டியோடு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னார்கள். அங்கு சென்று எடுப்பானேன் என்று வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு தினமும் செல்கிறேன். அதோடு வாக்கிங் செய்வது நல்லது என்று சொன்னார்கள். சரி உடம்பு குறையுமே என்று நடந்து செல்கிறேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். என் தங்கை ராதாவின் மகளுக்கு பிரசவ நேரம். “தனியாக இருக்கிறாள் கொஞ்சம் உதவியாக இரு” என்று கேட்டாள். சரி என்றேன். என் ட்ரீட்மென்ட் சென்ட்டரும் இங்கே அருகில்தான் இருக்கிறது. அவரும் ஊரில் இல்லை. இங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறேன். இது முடிந்ததும் வீட்டுக்குச் செல்வேன்” என்று எல்லாம் விவரித்து விட்டு, “நீ எங்கே போகவேண்டும்? எதிர்பாராமல் உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முடிந்தபோது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வா” என்று கூறிக் கொண்டே ஒரு சந்திற்குள் திரும்பினாள் ஸ்ரீவாணி.
வாயடைத்துப் போன சுஜாதா, மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். ஓட்டமாக ஓடி பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். ஆனால் அதற்குள் பஸ்கள் சென்று விட்டன. வேறு வழியில்லை. ஆட்டோவில்தான் செல்ல வேண்டும்.
அத்தனை தூரம் வருவதற்கு எந்த ஆட்டோகாரரும் சம்மதிக்கவில்லை. ரிடர்ன் தொகையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். சற்று நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு, வேறு வழியின்றி இருநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றாள். ஆபீஸுக்குச் சென்று பார்த்தால் கேட் மூடியிருந்தது. பார்மாலிடி எல்லாம் முடித்துவிட்டு உள்ளே சென்றால் லஞ்ச டைம் ஆகியிருந்தது. பாஸிடம் திட்டு வாங்கினாள்.
ஒடிந்துபோன மனதோடு லஞ்ச பாக்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றால் அங்கு பதமாவும் சாவித்திரியும் எதிரில் வந்தார்கள்.
“ஸ்ரீவாணி மேடத்திற்கு என்ன ஆச்சாம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.
“ஒரு மண்ணாங்கட்டியும் ஆகவில்லை” என்று எரிந்து விழுந்து விட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். “அதிர்ஷ்டக்காரர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. தரித்திரத்தை யாராலும் தீர்க்கவும் முடியாது” என்று நினைத்தபடி கண்களைச் சோர்வோடு மூடினாள் சுஜாதா. அவள் கண்கள் கண்ணீரைப் பெருக்கின.
ஓரிரவு
ஓரிரவு
மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவறவிட்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் அதை நிவர்த்தி செய்து விடலாம். அதைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் தான் தாமதமாயிற்று.
திங்கள் காலை வந்ததும் அவளிடம் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிட்டேன் என்று சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். அவளிடம் இருந்து ஒரு பாராட்டு. அவள் மகிழ்ச்சி அடையும் போது கண்ணாடிக்குள் கண்ணைச் சுருக்கி, கன்னத்தில் குழி விழ சிரிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எங்களது வேலையை மதிப்பிட்டு அவள் தான் எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேண்டும்.
எங்களுக்கு இந்த கிளைண்ட் நிறுவனத்தில் இரு வருடம் ஒப்பந்த வேலை. அவள் இங்கு முழுநேர வேலை பார்ப்பவள். எங்களது வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களது ஒப்பந்தத்தை நீட்டிப்பார்கள். பிடிக்கவில்லையென்றால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பின் எங்கள் நிறுவனம் எங்களை இடமுள்ள வேறு கிளைண்ட் நிறுவனத்தில் போடுவார்கள். எங்கும் இடம் இல்லையெனில் இரண்டு மூன்று மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். விசாவையும் ரத்து செய்து விடுவார்கள். பின் இந்தியாவுக்குதான் திரும்பப் போக வேண்டும். அதனால் தான் ஐந்து மணிக்கு ஹரிஸ் கிளம்பும் போது கூப்பிட்டும் போகவில்லை.
‘விரைவில் வரவும். காத்திருக்கிறேன்’ என்ற செய்தியோடு ஹரிஸ் இரண்டு மதுபாட்டில்கள் இருக்கும் படத்தை எனக்கு மொபைலில் அனுப்பி இருந்தார். எனது அலுவலகத்தில் இருந்து தமன்ஜெயா எல்ஆர்டி ஸ்டேஷன் செல்ல பதினைந்து நிமிடம் நடக்கவேண்டும். ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்தேன். அங்கிருந்து ரயில் பிடித்து மஸ்ஜித் ஜமக் ஸ்டேஷன் வந்து பின் ஜலன் இப்போவுக்கு பஸ் பிடித்தேன். சாதாரணமாக பதினைந்து நிமிட பஸ் பயணம் என்றாலும் வெள்ளிக்கிழமை இந்த நேரத்தின் வாகன நெரிசலில் சென்று சேர அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகும். இரவில் திரும்பி வரும்போது கடந்த ஆறுமாதமாக பேருந்தில் சாலையின் இடதுபுறத்தை பார்த்தவாறு ஜன்னல் ஓரத்தில் அமர்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். பேருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.
சௌகிட்டை தாண்டி விட்டால் இந்த வாகன நெரிசல் இருக்காது. வண்டி வேகம் எடுத்துவிடும். அப்போது நிறுத்தங்களில் கூட நிறுத்தாமல் சென்று விடுவார்கள். நாம் நிறுத்தம் வருமுன்னே மணியை அழுத்திவிட வேண்டும்.சௌகிட் சிக்னலைத் தாண்டி சில நிமிடங்கள் ஆன பின் ஒன்றை அடுத்து ஒன்று மூன்று டைல்ஸ் கடைகள் வந்த பிறகு செட்டியார் மண்டபத்திற்கு முன்னதாக அந்த சாலையில் சில தூரங்கள் இரவில் எந்த மின்விளக்குகளும், ஆள் அரவமும் இருக்காது. பேருந்து அந்த இடத்தை நெருங்கும்போதே எனது மனம் படபடக்க ஆரம்பித்துவிடும். அவள் இருக்கக்கூடாது அவள் இருக்கக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொள்வேன்.
பகல்நேரங்களில் அந்த இடத்தின் சாலையோரத்தில் இருக்கும் கட்டிடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் பழைய சுவர்களில் சுண்ணாம்பு பெயர்ந்து ஆங்காங்கே கருமை படிந்து காணப்படும். கீழ்தளத்தில் மெக்கானிக் கடையோ அல்லது சீனப்பண்டங்களை விற்கும் சிறிய பலசரக்குக் கடையோ இருக்கும். மேல் தளத்தில் கைவிடப்பட்ட பழைய வீடுகள். சிலவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருக்கும். சில செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் சூரியன் மறைந்த பிறகு கீழே அந்தக் கடைகள் இருந்ததற்கான சான்றே இல்லாமல் அந்த இடமே வெறுமையாக இருக்கும். செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மூடியிருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் உள்ளே மங்கலான விளக்கு எரிவது தெரியும்.
அந்நேரத்தில் அந்த சாலையின் ஓரத்தில் குறைவான வெளிச்சம் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் அந்தப் பெண் நின்றுகொண்டிருப்பாள். ஒரு அவலட்சணமான விபச்சாரி.
மஞ்சள் இனப்பெண். மஞ்சள் இனப்பெண்களின் வயதை எனக்கு தோராயமாகக் கூட கணிக்க இயலாது. நான் ஆரம்பத்தில் சியோக் வீயின் வயதை இருபத்தியேழாக இருக்கும் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு முப்பத்தாறு வயது. திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது. இவளைப் பார்த்தால் எப்படியும் வயது நாற்பதுக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றியது. நன்றாக மெலிந்த உருவம். முகவாய் கொஞ்சம் முன்னோக்கி நீண்டு, தோள்பட்டை பகுதி துருத்தி மேல்நோக்கி இருந்தது. மார்புப் பகுதியோ பிட்டம் பகுதியோ இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அக்குளில் ஆரம்பித்து தொடை வரை மட்டுமே இருக்கும் உடம்புக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அந்த உடை, அவள் அணிந்திருந்த செருப்பு இவையெல்லாம் பளபளப்பாக இருந்தாலும் சுத்தமாக அவளுக்குப் பொருந்தவில்லை.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செய்திருந்த ஒப்பனை, பளிச்சென்று பூசியிருந்த உதட்டுச்சாயம் அவளை இன்னும் பரிதாபமாகவேக் காட்டின. கடந்து போகும் ஆண்களைப் பார்த்து அவள் செய்யும் அந்த குலைவான செயற்கை சிரிப்பு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை. பேருந்தினுள் இருந்த என்னால் அவள் மேல் என்ன மாதிரியான மலிவான வாசனை திரவியத்தின் மணம் வீசும் என்பதைக் கூட உணரமுடிந்தது.
ஆறு மாத காலமாக இவளை இந்த நேரத்தில் பேருந்தில் திரும்பிவரும் போது இங்கு அவ்வப்போது பார்க்கிறேன். ஏன் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அந்த சாலையில் யாருமே நடந்து செல்ல மாட்டார்கள். வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கும். புக்கிட் பின்டாங்க் போய் நின்றால் கூடப் பரவாயில்லை. அங்கு அது போன்ற பெண்கள் நிறைய இருப்பார்கள். அதுக்கென்றே ஆண்கள் வருவார்கள். யாரேனும் ஒருவர் கூட்டிச்செல்ல வாய்ப்பு இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இன்னும் மூன்று நிறுத்தங்கள் தள்ளி சௌகிட் மார்கெட் அருகே சென்று நிற்கலாம். அங்கும் இது போன்ற பெண்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை வேறு பெண் என்று இன்னொரு வாய்ப்பு இருந்தால் இவளை எப்படியும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றா இங்கு தனியாக நின்றுகொண்டிருக்கிறாள். எங்கள் பேருந்து அவளைக் கடந்து சென்றது. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டாவது நிறுத்தம் என்னுடையது.
எனது அப்பார்ட்மெண்டின் தரைத்தளத்தில் இருக்கும் இந்திய மதுபானங்கள் விற்கும் கடையில் ஒரு பீர் வாங்கிக்கொண்டேன். ’உங்காளு வந்து வாங்கிட்டு போய்ட்டாரே’ என்றான் கடையிலிருந்தவன் சிரித்தவாறே. ‘நமக்கு அது பத்தாது’ என்று கூறிவிட்டு அந்தக்கடையின் பின்புறம் வழியாக சென்று எங்கள் அப்பார்ட்மெண்டின் நுழைவாயிலை அடைந்தேன். பத்தாவது மாடியில் எனது அறைக்குச் சென்று உடையை மாற்றி இரவு நேர பேண்ட்டும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டேன். அறையில் இருந்தவர்கள் அவர்களது லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் என் பீரை எடுத்துக்கொண்டு கீழிறங்கி எங்கள் அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே வந்து இடப்புறத்தில் ஓடையைக் கடந்து செல்லும் பாலத்தின் வழியாக ஹரீஸின் அப்பார்ட்மெண்டிற்குச் சென்றேன். என்னிடம் அதன் வாயிலை திறக்கும் அட்டை இல்லையாதலால் போன் செய்த பின்பு ஹரீஸே கீழே வந்து பதினெட்டாவது மாடியில் இருக்கும் அவர் ஃப்ளாட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றார்.
அவர் திருமணத்திற்கு முன் வரை எங்களது ஃபளாட்டில் தான் இருந்தார். எங்கள் கம்பெனி வெளியே சாஃப்ட்வேர் கம்பெனி என்று சொல்லிக்கொண்டாலும் அது ஒரு அவுட்சோர்சிங் கம்பெனி. பெங்களூரில் ஒரளவுக்கு நல்ல திறமையுடைய தேவைப்படும் கணினிமொழியில் இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்களை வேலைக்கெடுத்து அவர்களை கோலாலம்பூருக்கு அனுப்பிவிடுவார்கள். இங்குள்ள அவர்களின் க்ளைன்ட் கம்பெனிகளில் நாங்கள் வேலை செய்யவேண்டும். தோராயமாக எப்போதும் ஒரு முப்பது பேர் இருப்போம். எல்லோரும் இந்தியர்கள். எல்லோரையும் அந்த அப்பார்ட்மெண்டில் ஃபளாட்டுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என குடியமர்த்தியிருந்தார்கள். எல்லா வசதியும் கொண்ட நல்ல சௌகரியமான ஃப்ளாட்கள். நாங்கள் வாங்கும் சம்பளம் மலேசியர்களோடு ஒப்பிடும் போது குறைவு தான் என்றாலும் இந்திய மதிப்பில் நல்ல பணம்தான்.
அவர் டேபிளில் இரண்டு குவாட்டர் ப்லென்ட்ர்ஸ் ப்ரைட்டு விஸ்கியும் சிக்கனும் கடலைப்பருப்பும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. நான் வாங்கி வந்திருந்த எனது ஒரு பியர் கேனையும் அதனுடன் வைத்தேன். அவர் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்குயூப்களை எடுத்து வந்து வைத்துபின்பு எங்களது ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருவரும் மதுவருந்த ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் இருவரும் எங்கள் குவார்டர்களைக் காலி செய்திருந்தோம். நான் அடுத்து எனது பியரை திறந்தபோது அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.
‘பாபி எப்ப வராங்க’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.
‘வருகிற பதினைந்தாம் தேதி. இன்னும் இரண்டு வாரங்களில்’
‘அப்ப கடைசியா ஒருமுறை இப்போ புகிட் பின்டாங்க் போலாமா?’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன்.
‘முடியவே முடியாது. கிருஷ்ணராய் இருந்த அந்த நேரம் முடிந்துவிட்டது. இப்போது இது நான் ராமராய் இருக்க வேண்டிய நேரம்’ என்றார் புன்னகையுடன்.
‘குறைந்தபட்சம் மசாஜாவது’
‘ம்ஹும். அது மசாஜோட மட்டும் நிக்காதுனு எனக்குத் தெரியும்’
‘போய் அந்த பாகிஸ்தானி கடைல சாப்பிட்டுட்டு மட்டும் வந்திடலாம்’
அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பார்சல் உணவைக் காண்பித்து ‘அதான் நான் ஏற்கனவே வாங்கி வச்சிட்டேன். இனி புக்கிட் பின்டாங்க் போகணும்னா வைஃப் வந்ததுக்கப்புறம் அவளோடதான் போகணும். மனச கட்டுப்படுத்தி வச்சிருக்கேன். நீ வேணா போய்ட்டு வா.’
‘தனியா போகணுமே’
‘உனக்கு போகணும்னா பனிரெண்டாவது மாடியில் இருக்கிற மஞ்சுநாத்த கூப்பிடு. அவன் எப்பவும் தயாரா இருப்பான்.’
‘மஞ்சுநாத்? எனக்கு யாருன்னே தெரியாது.’
‘ஃஜுரிச் க்ளைண்ட்ல இருக்கான்ல. டாட் நெட் டெவெலப்பர். கன்னடிஹா’
‘ம்ஹும்.’
‘நல்ல ஆளுதான் போ நீ. ஒரு வருஷமா இங்க இருக்குற, யாரச்சொன்னாலும் தெரியாதுங்கிற’
‘எனக்கு நம்ம ஃப்ளாட்ல இருக்கிறவங்க அப்புறம் 108ல இருக்கிறவங்க மட்டும் தான் தெரியும். வேற யாரையும் தெரியாது. அவனுகதான் கீழ ரெஸ்டாரண்டுக்காச்சும் வருவாங்க. மத்த யாரும் ரூம விட்டே வெளிய வரமாட்டானுக’
‘நீ தான் இப்பல்லாம் புகிட் பிண்டாங் போனாலும் ஒண்ணும் பண்றதில்லய. பீர் அடிச்சுட்டு இருப்ப. அப்புறம் ஏன் போகணும்னு சொல்ற. வேணும்னா கீழ போய் பீர் வாங்கிட்டு வா. நான் உனக்கு கம்பெனி கொடுக்கேன்’
‘வேணாம். வேணாம். சும்மாதான் கேட்டேன். ஒரு நல்ல ஹஸ்பண்டா இருக்கீங்களானு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டிங்க’ என்று சிரித்தேன்.
அவர் தனது சாப்பாட்டை முடிப்பதற்கும் நான் எனது பியரை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு தனது கணினியில் பழைய கசல் பாடல்களை ஒலிக்கவிட்டார். நானும் அவரிடம் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அவர் வீட்டின் பால்கனியில் வந்து நின்று கொண்டேன்.
அந்த பதினெட்டாவது மாடியில் இருந்து கீழே பார்க்கும் போது இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்று தோன்றியவுடன் அதன் கம்பித்தடுப்பை இறுகப் பற்றிக்கொண்டேன். தூரத்தில் அந்த இரட்டைக்கோபுரம் அதன் மின் விளக்குகளோடு சிறியதாய் தெரிந்தது. அதன் அருகே தான் புகிட் பின்டாங்க் இருக்கிறது. மணி பத்தாகிறது. இப்போது அங்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். தரமான உணவகங்கள், மால்கள், இசையுடன் கூடிய பார்கள், மசாஜ் பார்லர்கள், தெருவில் நின்று ஹேப்பி எண்டிங் மசாஜுக்கு அழைக்கும் சீன முகப் பெண்கள், ஆங்காங்கே வாடிக்கையாளர்களை ரகசியமாக அழைத்து வர நிற்கும் பிம்ப்கள், அவர்கள் அழைத்துப் போகும் ஹோட்டல்கள் என்று உற்சாகம் நிரம்பி வழியும்.
முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் இந்நேரத்தில் ஹரீஸும் நானும் கிளம்பி இருப்போம். அவருக்குத்தான் இடங்கள் அத்துப்படி. நல்ல பெரிய ஹோட்டல்களில் உள்ள பார்லர்களுக்கு அழைத்துச் செல்வார். ரிசப்ஷனிலேயே வாக்கிடாக்கியுடன் ஒருவர் வந்து அழைத்துச் சென்று ஒரு தனிஅறையில் சென்று நம்மை உட்காரவைத்து அருந்த குளிர்பானம் கொடுப்பார்கள். அந்த அறையின் மணமும் அதன் அரையிருளான ஒளியமைப்புமே நம்மை பரவசமடையச் செய்யும். பின் வாக்கிடாக்கியில் அழைத்ததும் எல்லாப் பெண்களும் சிறந்த உடை ஒப்பனை நளினத்தோடு மயக்கும் பார்வையில் நம்முன் வந்து நிற்பார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததும் அவளே நம்மை ஒரு அறைக்கு அழைத்துச்சொல்வாள். அவளே நம்மைக் குளிப்பாட்டி கட்டிலுக்கு அழைத்துச்சென்று காண்டம் அணிவித்து வழிநடத்துவாள். ஆரம்பத்தில் இருந்தே உங்களை உச்சத்திற்கு கொண்டுபோய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்துவிட எல்லா முஸ்தீபுகளையும் செய்வாள்.
ஆனால் சில செய்யக்கூடாதவைகள் உண்டு. முகம், உதட்டில் முத்தம் கொடுக்க கூடாது என்பது போன்றவை. எனக்கு முதல் சில தடவைகள் அவை பிரச்சனையாக இல்லை எனினும் பின் அந்த செக்ஸ் அவ்வளவு உல்லாசமாய் இல்லை. மேலும் ஒவ்வொரு முறையும் முடிந்தவுடன் சிலநிமிடங்கள் இருக்கும் குற்றவுணர்வு வேறு. ஆனாலும் இத்தனை பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என்ற எண்ணிக்கைக்காக சில சமயம் சென்று வந்த பின் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகெல்லாம் ஹரீஸுடன் சென்றால் அவர் வருவது வரை நான் ஏதேனும் பாரில் சென்று பியர் வாங்கி அருந்திக் கொண்டிருப்பேன்.
அறை உள்ளேயிருந்து வந்த அந்த கசல் பாடல் பால்கனியில் லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து கோலாலம்பூரின் இரவின் சப்தமும். காற்று மெலிதாக முகத்தை வருடிக்கொண்டிருந்தாலும் எனது நெற்றிப்பகுதி வியர்த்திருந்தது. மலைமேல் இருந்த கென்டிங் ஹைலேண்டின் விளக்கொளிகள் தூரத்தில் ஏதோ சிறிய நட்சத்திர கூட்டங்கள் போலத் தெரிந்தன. அந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து விலகி ஒரே ஒரு மங்கலான நட்சத்திரம் தனித்திருந்தது. அது அந்த மலைமேல் புதிதாக கட்டப்பட்டு யாருமே குடிபோகாமல் கைவிடப்பட்ட பிரசித்தியான ‘ஆம்பெர் கோர்ட்’ அப்பார்மெண்ட்டாக இருக்கலாம்.
அத்தனைப் பெண்கள் வரிசையில் வந்து நின்றால் கண்டிப்பாக அவளை யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வந்து திடுக்கிடவைத்தது. மதுவின் ஆரம்பநேர ஆசுவாசத்திற்குப் பிறகு அது உள்ளிருந்து கசடுகள், கழிவிரக்கங்கள், வீண் எண்ணங்கள் என்று எல்லாவிதமான எதிர் உணர்ச்சிகளையும் கொண்டு வர ஆரம்பித்து விட்டிருக்கிறது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த திசையை நோக்கிப் பார்த்தேன். கட்டிடங்களும் மரங்களும் மறைத்திருந்தன. அவள் இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருப்பாளா? ஹரீஸும் சிகரெட்டை ஊதியவாறு பாடலை பாடிக்கொண்டே பால்கனிக்கு வந்து என் அருகில் நின்றார்.
‘ஹரீஸ் அந்த மெயின்ரோட்டுல பெட்ரோல் பங்க் பக்கத்துல ஒரு பொம்பளை நிக்கும். அதை நோட் பண்ணிருக்கீங்களா’ என்றேன்.
பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டு முகத்தைச் சுருக்கி என்னைப் பார்த்து ‘பாத்திருக்கேன். அவ்வளவு அவசரமா? அந்த மாதிரி ரோடு சைடுல இருக்கிற பொம்பளைக் கிட்டலாம் போகாத. அது சேப் கிடையாது’ என்று சிரித்தார்.
‘இல்ல இல்ல. அதுக்கில்ல. இன்னைக்கு வரும்போது பாத்தேன். பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அங்க யாரு வருவாங்கனு அங்க நின்னுகிட்டிருக்கு’
‘ஆமா பாவம்தான். பொதுவா இங்க ப்ராத்தல் பண்ற சீனப் பொண்ணுங்க எல்லாம் மலேசியாகாரங்க இல்ல. எல்லாம் சீனாவுல இருந்து வர்ரவங்க. இல்ல வியட்னாம், மியான்மர். அனேகமா அது மியான்மரா இருக்கும்னு நினைக்கேன். வேலைக்குன்னு கூட்டிட்டு வந்து இங்க இந்த வேலைக்கு தள்ளி விட்டுருவாங்க. இல்ல அவங்களே பணத்துக்காக மாறிருவாங்க. நிறைய பேருக்கு விசா வேலிட்டா இருக்காது. மாட்டிகிட்டா பிரச்சனைதான். கொஞ்சம் நல்லா இருக்கிற பொண்ணுங்க பார்லர்ல போய் சேர்ந்துகிடுவாங்க. கிடைக்கிற காசுல போலீசையும் கவனிச்சுகிடலாம். இத யார் சேத்துப்பாங்க. நீ போவியா? அதான் போலீசுக்கு பயந்து இங்க மறைவா வந்து நிக்கும் போல.’
அவள் சிறு பெண்ணாய் இருந்து இப்போது இப்படி ஆவது வரை அவள் கடந்து வந்திருக்க சாத்தியமான பல விதமான வாழ்க்கை முறைகள் என் கண்ணில் ஓடி மறைந்தன. அடக்கிவைக்க முயன்ற கோபமோ அழுகையோ தலையை கனக்கச் செய்தது.
இருவரும் சிகரெட்டை புகைத்து முடித்தபின் ஹரிஸ் ‘இங்கயே படுத்துக்கிறியா’ என்று கேட்டார்.
‘இல்ல எனக்கு இன்னொரு பீர் வேணும் போல தெரியுது. நான் வாங்கிட்டு அப்படியே ரூமுக்கு போறேன்’ என்றேன்.
‘சரி. இது நான் என் மனைவியிடம் பேச வேண்டிய நேரம்’ என்று மீண்டும் கணினி அருகே சென்று உட்கார்ந்து கொண்டார்.
போதை மிதமாக ஏறி இருந்தது. அவரிடம் விடைபெற்று கீழே வந்தேன். அங்கிருந்த திறந்தவெளி உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எனது அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தேன். பாலத்தைக் கடக்கும் போது அந்த ஓடையின் சத்தம் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சென்று பாலத்தின் கீழ் எட்டிப் பார்த்து நின்றேன். சிறிது நேரத்தில் ஒடையின் சத்தமும் மறைந்து ஒரே நிசப்தம். ஏனோ அந்த நிசப்தம் மனதை தொந்தரவு செய்தது. ஓடை தனியாக ஓடி இருட்டில் கலந்து மறைந்தது. அவள் இன்னும் அங்கு நிற்கிறாளா என்று சென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது.
எனது அப்பார்ட்மெண்ட்டை தாண்டி அந்த சாலையை அடைந்து வலப்புறம் திரும்பி சாலையின் மறுபக்கத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு சிறிய உணவகம் ஆளில்லாமல் அரை இருளில் திறந்திருந்தது. அதுதவிர அந்த இடத்தில் எந்த ஆள் நடமாட்டம் இல்லை, ஒருசில வாகனங்கள் இருமருங்கிலும் சென்று கொண்டிருந்தன. அவள் இன்னும் அங்கு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். பெட்ரோல் பங்க்கை தாண்டிய போது அவளைக் அங்கிருந்து காணமுடிந்தது. இன்னும் அந்த இடத்தில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்தாள்.
பேருந்திலிருந்து பார்த்தபோது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது. நான் அவளுக்கு நேரெதிரெ சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். இருட்டில் இருந்தது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சிறிது நேரம் நின்று அவளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அங்கேயே முன்னும் பின்னும் எதையோ முனகியபடி நடந்து கொண்டிருப்பாள். ஏதேனும் இருசக்கரவாகனம் கடக்கும் போது ‘ஹே’ என்று சொல்லி சிரிப்பாள். பின் மீண்டும் நடை. பின் கைப்பைக்குள் இருந்து ஒரு கையடக்கமுள்ள ஒரு கண்ணாடியை எடுத்து தனது ஒப்பனையை சரிபார்த்துக் கொள்வாள்.
என்ன நினைத்துக் கொண்டிருப்பாள். தான் அவலட்சணமாக இருக்கிறோம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? மனம் மேலும் கனமானது. யாருமே வரவில்லை என்றால் அவள் இதை விட்டுத்தொலைத்திருப்பாள் இல்லையா? ஆறு மாதங்களாக இங்கு இருக்கிறாள் என்றால் யாரேனும் இவளை அழைத்துச் செல்கிறார்கள் என்று தானே அர்த்தம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றேன்.
இருபது நிமிடங்கள் அவளைக் கவனித்திருப்பேன். திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. எனது பேண்ட் பைக்குள் துழாவிப் பார்த்தேன். நூறு ரிங்கெட் இருந்தது. சாலையைக் கடந்து அவளை நோக்கி நடந்தேன்.
திடீரென்று அங்கு முளைத்து தன்னை நோக்கி வந்த உருவத்தைக் கூர்மையாக நோக்கினாள். பின் வெளிச்சத்தில் என்னைக் கண்டதும் ஒருவேளை சாலையைக் கடக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள் போல அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவளை நெருங்கும் போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஹே’ என்று உடலை அசைத்தவாறு சிரித்தாள். நான் எனது பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ஹாய் ஹௌ மச்’ என்றேன். அவளுக்கு புரியவில்லை. அவளைக் காட்டி ‘மசாஜ், ரிங்கிட்ஸ்’ என்று கூறி எவ்வளவு என்பது போல் கையைக் காட்டினேன். அவள் மலாயில் ஏதோ சொன்னாள். பின் எனக்கு புரியவில்லை என்றவுடன் ‘மசாஜ்’ என்று சொல்லிவிட்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டி பையிலிருந்து அவள் மொபைலை எடுத்து அதில் 80 என்று டைப் செய்து காண்பித்து ‘செக்ஸ்’ என்றாள். எண்பது ரிங்கிட்ஸ் அவளுக்கு அதிகம் தான் என்று மனதில் தோன்றி மறைந்தது. ‘காண்டம்’ என்று கேட்டதும் அவள் தனது கைப்பையைக் காட்டினாள். நான் பாக்கெட்டில் இருந்து நூறு ரிங்கட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக்கொண்டு என்னை வா என்று செய்கை செய்துவிட்டு முன்னால் நடந்தாள்.
போதை இன்னும் கொஞ்சம் வடிந்திருந்தது. அந்த சாலையில் இருந்து அவளுக்கு பின்புறம் ஒரு குறுகலான தெரு சென்றது. அதை நான் இவ்வளவு நாட்களாக கவனித்ததில்லை. அதில் நுழைந்து இடப்புறம் திரும்பினாள். அது இன்னும் கொஞ்சம் குறுகலான தெரு. அந்த தெருவிலும் ஓரிரு தெருவிளக்கைத்தவிர எந்த வெளிச்சமும் இல்லை. அதிலிருந்த இரண்டாவது கட்டிடத்தின் ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய மேல்நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் ஏறினாள். அது ஒரு பழைய கட்டிடம். வெளியே சுண்ணாம்பு போய் கருப்படித்திருந்தது. சுவரின் இடைவெளியில் ஆங்காங்கே செடிகள் முளைத்துநின்றன. தெருவிளக்கின் மீதமுள்ள வெளிச்சம் தவிர முழுக்கட்டிடமே இருண்டு இருந்தது. நான் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடந்து சென்றேன்.
முதல் மாடியில் சென்று ஒரு அறையின் முன் நின்று அதன் கதவைத் திறந்தாள். அது தாழ்மட்டுமே போடப்பட்டிருந்தது. பூட்டிடப்படவில்லை. அந்த சமயத்தில் சுற்றி நோட்டமிட்டேன். அதே போல் நிறைய அறைகள் இருந்தன. சில அறைகளின் கதவின் இடைவெளியில் இருந்து மஞ்சள் விளக்கின் வெளிச்சமும் முணுமுணுப்புகளும் கசிந்து வந்து கொண்டிருந்தன. அறையின் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை ஆன் செய்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள்.
ஒரு சிறிய அறை ஒரு வாஷ்ரூம். அவ்வளவு தான். அந்த அறையையே ஒரே ஒரு பழைய படுக்கை நிறைத்திருந்தது. அதன் அருகே ஒரு சிறிய மேஜை. மேஜை மேல் ஒரு விளக்கு. கீழே குப்பைக்கூடை. படுக்கைக்கு பின்னேமூடி இருக்கும் கண்ணாடி ஜன்னல். அதன்மேல் செய்திதாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் படுக்கையை தவிர்த்து இரண்டு ஆட்கள் மட்டுமே நிற்க அங்கு இடம் இருந்தது. அந்த அறையை இதற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறாள் போலும். லேசான மஞ்சள் வெளிச்சம் அந்த மேஜை மேல் இருந்த விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்திலும் மூட்டைபூச்சியின் ரத்ததடங்கள் சுவர் முழுக்க தெரிந்தன.
மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி அவள் உடலை என்னுடைய உடலோடு தேய்த்தவாறு அவளது உடலை ஒவ்வொரு நடிகைகளின் உடலாக கற்பனை செய்யத்தொடங்கினேன். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பின் அந்த உடலை சியோக் வீயின் உடலாக கற்பனை செய்த போது உடம்பு முழுக்க வெப்பம் அதிகரித்து விரைப்பு உண்டானது. அவசரமாக எழுந்து காண்டத்தை மாட்டிவிட்டு அதே நிலையில் சியோக் வீயை நினைத்து அவள் மீது வேகமாக இயங்கினேன். அவள் கைகள் என் முதுகின் மீது அலைபாய்ந்தது. அவளிடமிருந்து வந்த முனகல் சீரான இடைவெளியில் மிக செயற்கையாக இருந்தது.
பத்து நிமிட இயக்கத்திற்கு பின் உச்சம் வெளிவரும் வேளையில் அவளிடமிருந்து விலகி எழுந்து விட்டேன். அப்போதுதான் பார்த்தேன். காண்டம் முழுவதுமாகவே கிழிந்திருந்தது. அதைப் பார்த்ததும் உடலில் கணநேரத்தில் வெப்பம் அதிகரித்து வியர்த்துக் கொட்டத்தொடங்கியது. இதயதுடிப்பின் வேகம் அதிகரித்து என் காதுகளால் தெளிவாக கேட்கமுடிந்தது. கொஞ்சநஞ்ச போதையும் மொத்தமாக வடிந்திருந்தது. எனது எண்ணங்கள் எல்லாம் சூன்யமாக ஆனது. கால்கள் தள்ளாடியது.
அவள் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து பேயறைந்தது போல் இருந்த எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சையாக காண்டத்தை கழற்றி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு விறுவிறுவென்று எனது உடையை மாட்டிக்கொண்டேன். இன்னும் இதயம் வேகமாகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. மூச்சு விட கடினமாயிருந்தது. உடலில் நடுக்கம் குறைந்தபாடில்லை. தொண்டை வறண்டுவிட்டிருந்தது. படுக்கையில் தளர்ந்து உட்கார்ந்தேன். அவள் எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்று வந்து மேஜை அருகே இருந்த ஹேங்கரில் இருந்து தனது உடையை எடுத்தாள்.
நான் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவளைப் பாராமல் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை. பின் அவளை நோக்கி முகத்தைத் திரும்பி அவளைக் காண்பித்து நடுங்கும் குரலில் மீண்டும் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவள் அதைப் புரிந்து கொண்டு தலையைக் குனிந்து என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையாட்டினாள். உட்கார்ந்திருந்தவாறே கண்களை மூடி என்னை ஒருங்கிணைக்க முயன்றேன். எனது உடல் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தது போல் தோன்றியது. திடீரென்று அவளின் அந்தப் பார்வை நினைவுக்கு வர அது ஒரு காயம்பட்ட ஆட்டுக்குட்டியின் பார்வையை ஒத்திருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தேன். அங்கிருந்து உடனே போகவேண்டும் போல் தோன்றியது.
நான் அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக எழுந்து சென்று அறைக்கதவை திறக்க முயன்றேன். குறைவான வெளிச்சத்தில் அதன் தாழ்தட்டுப்படவில்லை. மீண்டும் அந்தப் பார்வையை எனது பிடரியில் உணர்ந்தபோது வெறிகொண்டு கதவைத் தள்ள முயன்றேன். அது திறக்கவில்லை. அவள் நிர்வாண உடலுடன் மெதுவாக நடந்து வந்து கதவின் மேலேயிருந்த தாழை விலக்கிவிட்டாள். நான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தலைகுனிந்து மௌனமாக கதவைத்திறந்து வேகமாக வெளியேறினேன்.
திங்களன்று சியோக் வீயிடம் அந்த வேலையை முடித்து விட்டதைக் கூறியதும் அவள் கண்கள் சுருங்கச் சிரித்தாள். ஏனோ அந்த சிரிப்பை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.
அந்த இரவுக்குப்பின் இப்போதெல்லாம் நான் வேலை முடிந்து வரும்போது பேருந்தில் இடப்புற ஜன்னல் இருக்கையில் அமர்வது இல்லை. அந்தப் பெண் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அவளது பார்வையை எனது பிடரியில் உணருகிறேன்.
இது நகைச்சுவை தத்துவ கதை.
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
.
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
.
பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.
.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
.
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
.
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
.
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
.
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
கடவுளும் கண்ணனும்
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள்.
கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள்.
ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் மாதிரி அவளும் அவர்களின் மூன்றாவது வயதில் குழந்தைகளைத் தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்பினாள். அவர்கள் மூன்றாவது வயதிலேயே தேவாரங்கள் பாடவும். திருஞான சம்பந்தர் ஞானப் பால் குடித்த புராணக் கதைகளையும கேட்டு மகிழ்ந்தார்கள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் தவறாது கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள். பல விரதங்களைச் செய்து தனது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
தனது பிள்ளைகள் வைத்தியர்களாக வருவதற்காகப் பல ட்யூசன்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கெட்டிக்காரர்களாக்கிளாள்.
இப்போது மகன் அவனின் இருபத்தி ஓராவது வயதில் வைத்தியக் கல்லூரியில் மூன்றாவது வருடப் படிப்பைத் தொடர்கிறான்.
அவர்களின் மகள் கருணாவுக்குப் பத்தொன்பது வயது. மெடிகல் சயன்ஸ்சில் பட்டப் படிப்பைத் தொடங்கிருக்கிறாள். இருவரும் பலகலைக்கழக விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது அருந்ததி அவர்களைக் கட்டாயம் கோயிலுக்கு அழைத்துச் செல்வாள்.
அவளின் கணவர், பரமானந்தன் இருவேலைகள் செய்து அவர்களின் குடும்பத்தையும் பராமரித்து, இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் உதவி செய்கிறான். அத்துடன், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருதரம் என்றாலும் ஊருக்குப் போய் வர அவனுக்கு ஏற்படும் செலவுகளுக்காகக் கடன் பட்டும் வாழ வேண்டியிருக்கிறது.
அவனுக்கு நாற்பத்தி எட்டு எட்டு வயதாகிறது. நீரிழிவு நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் என்ற வருத்தங்களுடன் போராடுகிறான். அடிக்கடி வைத்தியரைப் பார்த்துப் பரிசோதனைகளும் மருந்துகளும் எடுக்கிறான். மனைவி மாதிரி அடிக்கடி கோயில்களுக்குப் போகாவிட்டாலும் முடியுமானவரை செல்வான். வீட்டில் மனைவியால் நடத்தும் பூசைகளிலும் முடிந்த நேரங்களில் கலந்து கொள்வான்.
அருந்ததி, லண்டனுக்கு வந்த காலத்திருந்து ஒரு இலங்கைத் தமிழரின் கடையில் வேலை செய்கிறாள். இலங்கையிலிருந்து வரும்போது ஆங்கிலம் சரியாகப் பேச வராது. கடையில் வேலை செய்யும்போது அங்கு வரும் அன்னிய வாடிக்கையாளரிடம், அவளின் வேலை நிமித்தமாக ஏதோ தட்டுத் தடுமாறி பேசி தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அந்த வெளியுலகத் தொடர்பைத் தவிர மற்றவர்களுடனான உறவு அருந்தததிக்குத் தெரியாது.
பெரும்பாலான தமிழர்கள் மாதிரித் தங்கள் கலாச்சாரத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவிருக்கிறாள். இப்போது என்ன பிரச்சினை என்றால் மகன் தாயிடம் தங்கள் சமயம் பற்றிக் கேள்வி கேட்கிறான்.
முதலாவது வருட, வைத்தியக் கல்லூரிப் படிப்புக் காலத்திலேயே, அம்மா அடிக்கடி விரதம் இருப்பதன் விளக்கத்தைக் கேட்டான். அதைத் தொடர்ந்து அவன் வரும் போது ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவன் பல இன இளம் தலைமுறையினருடன் படிப்பதும் அருந்ததிக்குத் தெரியாத புதிய வாழ்க்கையில் பல அறிவுகளைப் பெறுவதும் அதன் எதிரொலியாக அவன் கேள்விகள் கேட்பதையும் அவள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவளது கணவன் அன்புடன் அறிவுரைகள் சொன்னான்.
“அம்மா நாங்கள் இந்துக்களா’’ என்று ஒருநாள் கேட்டான்.
‘’ஓமோம், அதைப்பற்றி என்ன கேள்வி.’’
‘’இந்துக்கள் என்றால் இந்தியாவில் வாழ்பவர்கள். நாங்கள் இப்போது பிரித்தானியர், இங்கு பிரித்தானியாவில் வாழ்கிறோம, அப்படி என்றால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் எப்படி இந்துக்களாக வரமுடியும்” என்றான் கண்ணன்.
“நாங்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுவதால் இந்துக்கள் என்று கூறிக் கொள்கிறோம” என்றாள்.
‘’இந்து சமயம் என்றால் என்ன?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
“கத்தோலிக்கருக்கு இயேசு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். எங்களுக்கு யார் கடவுள்?” கண்ணன் தனது அறிவை விருத்தி செய்யும் தொனியிற் கேட்டான்.
“மகன். நாங்கள் பல கடவுளரை வணங்குறோம். படைக்கும் கடவுளாகப் பிரம்மா இருக்கிறார். காக்கும் கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அழிக்கும் கடவளாகச் சிவன் இருக்கிறார்” என்றாள் அவள்.
இதெல்லாம், அவன் மூன்று நான்கு வயதுகளில் லண்டனிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்தவைதான் ஆனாலும் அவன் இப்போது பல கடவுள்களின் தொழில்கள் பற்றிக் கேட்பது அருந்ததிக்கு மகிழ்ச்சி.
“காக்கும் கடவுள்தானா கண்ணனாக அவதாரம் எடுத்தவர்.’’ என்று கேட்டபோது அருந்ததிக்கு மனிதில் கொஞ்சம் சந்தோசம் அரும்பத் தொடங்கிவிட்டது.
மகன் தனது பெயரின் மகிமையை உணரத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று தனது மனதுக்குள் பெருமைப் பட்டாள்.
“அவர்தானே பெண்களின் ஆடைகளைத்திருடி அந்தப் பெண்களின் அவல நிலையைக் கண்டு ஆனந்தப் படுபவர். உலகத்தைப் பாதுகாப்பவர் ஏன் பெண்ணாசை வெறியன் மாதிரி பெண்கள உடைகளைத் திருடிச் சந்தோசப் படவேண்டும்” அவனின் அழகிய தமிழ் குரலில் இருந்த சந்தேகம் அருந்ததியைத் தர்ம சங்கடப் படுத்தியது.
அவனின் பெயர் கண்ணன் என்பதால், அவனின் சினேகிதர்கள் குறம்புத்தனமாக, “கண்ணன் வந்தான், கன்னியராடையைக் களவாடி மகிழ்ந்தான்’’ என்றபாடிக் கேலி செய்து மகிழ்வது அவனுக்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படிச் சேட்டை விட்டால், இங்கிலாந்தில் சிறையில் தள்ளி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இளவயதிலிரிருந்தே மற்றவர்களைத் துன்புறத்தக் கூடாது, எல்லோரையும் சாதி. மத, பெண், ஆண், நிறம், மொழி வித்தியாசமின்றி நடத்த வேண்டும் என்று ஆரம்ப பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுப்பார்கள்.
‘’அதெல்லாம் சும்மா கதைகள் மகன்’’ என்று சமாளித்து விட்டாள்.
“அம்மா சமயக்கதைகள் மக்களை நல்வழியில் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டவேண்டும் என்று சொல்வார்கள், ஏன் எங்கள் கதைகள் பல பெண்களை ஆண்களின் மகிழ்வுக்காக வாழ்பவர்களாகக் காட்டுகிறது?”
கண்ணன் மேற் கொண்டு தொடராமல் அவனின் கேள்விகளை, “மகன், உனக்காக் நெய்த்தோசை செய்திருக்கிறேன். தோசை சூடு ஆறமுதல் சாப்பிடு மகனே’’ என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டாள். ஆனாலும் அவனின் கேள்விகள் இதுவரை அவனின் அவனிடமிருந்து வராத புதிய தொனியில் வருவது அவளுக்குப் பயத்தைத் தந்தது.
கணவர் வந்ததும், “இவன் யூனிவர்சிட்டிக்கப் போகத் தொடங்கியதும் ஏன் இந்த விழல்க் கேள்வி எல்லாம் கேட்கிறான’’; என்று கேட்டாள்.
‘’அருந்ததி, பல்கலைக் கழகம் என்பதால் பல கலைகளையும் கற்குமிடம். அங்கு பல தரப் பட்ட மாணவர்களும் வருவார்கள், தங்களின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது ஒருத்தரின் சமயப் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பேசியிருக்கலாம். அதனால் கண்ணனின் மனதில் சில வித்தியாசமான கேள்விகள் வரும் தானே’’ என்று பதில் சொன்னான்.
அருந்ததி, ஒருநாள் வுழக்கம்போல் தனது மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,அவள் தமயன் கேட்ட கேள்விகளைச் சொன்னாள். இப்போதுதான் பல்கலைகப் படிப்பை ஆரம்பித்திருக்கும் மகள் தமயன் மாதிரிக் கேள்விகள் கேட்பதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில ஒரு தமிழத் தாய்பாசம் தவித்தது.
“எங்களுக்க விளங்காத விடயங்களைப் பற்றித் தாய் தகப்பனிடம் கேள்வி கேட்பது நல்ல விடயம்தானே’’ என்றாள்.
தனது தாய் தங்களுக்காகவும் தகப்பனுக்காகவும், குடும்ப நலங்காகவும் அடிக்கடி விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது என்றும் கருணா தனது தாய்க்குச் சொன்னாள்.
“அப்படியென்றால் நீ உனது கணவர் குழந்தைகளுக்காகக் கடவுளைக் கும்பிடமாட்டாயோ’’ என்று அருந்ததி சீறினாள். ஓரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இதுவரை வளர்த்த மகள் இப்படிக் கேட்டது அப்பாவி அருந்ததியைத் திகைக்கப் பண்ணியது.
“அம்மா, நான் பட்டினி இருந்துதாற்தான் கடவுள் நன்மை புரிவார் என்பதை நம்புவதில்லை. எங்களைப் படைத்தவனுக்குத் தெரியாதா எங்களின் தேவைகள்? அதாவது, என்னையும் உங்களைப் போல், கந்தஸஸ்டி விரதம், கௌரி விரதம் எல்லாம் இருக்கச் சொல்லாதீர்கள். ஓரு குடும்பத்தின் நன்மைக்கு எல்லோரும்தானே பாடுபடுகிறோம். அப்படியென்றால் பெண்கள் மட்டும்தான் விசேட விடயங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பம்மாத்து” என்று சொல்லி விட்டாள்.
இந்த விடயங்கள் நடந்த சில நாட்களில், அருந்ததியின் தமயன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனின் மனைவியின் சித்தப்பா ஒருத்தரின் மரணத்திற்குப் போயிருந்ததாகவும், அங்கு நடக்கும் மரணச் சடங்குகளுக்கே பெரிய செலவாகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இங்கேயும்தானே தம்பி, எல்லாச் சாமான்களும் கண்டபாட்டுக்கு விலையேறுது’’ என்றாள் அருந்ததி.
‘’ஓமோம், சனங்கள் செய்யுற கொடுமையால, ஐம்பெரும் கடவுளரும் கொதித்தெழுந்து இன்டைக்கு மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு, காடுகள் எரிகின்றன. கடவுளரைக் கோபிக்கப் பண்ணினால் அவர்கள் தண்டனை தருவார்கள்தானே’’ கடவுளர்களுக்காக மிகவும் துக்கப் பட்ட பெருமூச்சுடன் சொன்னார் அருந்ததியின் தம்பியார்.
“மாமா! நீங்க சொன்னதெல்லாம் நடக்கிறது கடவுளுக்கு வந்த கோபத்தால இல்லை. இந்த உலகத்து இயற்கைகளை பேராசை பிடித்தவர்கள் அழிப்பதாற்தான் அதன் எதிரொலியாக இந்த அழிவுகள் நடக்கின்றன.’’
மருமகள் அருணா மாமானாருக்குச் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய விளக்கத்தைச் சொன்னாள்.
“என்ன இருந்தாலும் கருணா, அதிவேகமாக மாறிவரும் மனித சிந்தனைகளையும் அதனால் மக்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் முகம் கொடுக்கத்தானே வேணும். உதாரணத்துக்க ஒரு விசயம் சொல்றன், மரணச் சடங்கை நடத்த வந்த ஐயர் தனக்குத்தரவேண்டிய தானங்களுடன் காலணிகளும் கேட்டு வாங்கினார். இதெல்லாம் முன்னோரு காலத்தில நடைமுறையில இருக்கவில்லை, ஆனா இப்ப எல்லாம் புதிய விடயங்களாக, சமய சடங்கு அணுகுமுறையாக வரத்தொடங்கி விட்டது’’ துக்கம் நிறைந்த தொனியுடன் மாமா சொன்னார்.
“மரணச் சடங்குக்கும் ஐயருக்குக் காலணிக்கும் என்ன சம்பந்தம்” மாமாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் கண்ணன்.
“இறந்தவரின் ஆவி சொர்க்கத்திற்குப் போகும்போது காலில் கல் முள் காயப் படுத்தாமல் இருக்க காலணியை அணிந்துகொள்ளச் சொல்லி ஆவியிடம் ஐயர் பிரார்த்தனை செய்வார். அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும” மாமா விளக்கம் சொன்னார்.
“புதிதாக வந்த மொடலில் வாங்கித் தரச் சொல்லி ஐயரிடம் ஆவி கேட்டிருக்குக்கும் என்று நினைக்கிறேன்’’ கண்ணன் தனது ஆத்திரத்தைக் காட்டாமல் கிண்டலாகச் சொன்னான்.
அருந்ததிக்குத் தன் குழந்தைகளின் கேள்விகள் பல சந்தேகங்களையுண்டாக்கத் தொடங்கி விட்டன. ஏன் இந்தக் கேள்விகளைக்கேட்கிறார்கள் என்று அவள் கவலை தொடர்ந்தது.
வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பலர் தங்கள் சமயத்தை விட்டு வேறு சமயங்களை நாடுவது அவளுக்குத் தெரியும். ஆனாலும். தனது குழந்தைகள, தங்களின் சமயத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய் தகப்பனை ஒருநாளும் மனவருத்தப் படுத்தமாட்டார்கள் என்று திடமாக நம்பினாள். தாயும் தகப்பனும் அவர்களின் வாழ்க்கையின் உயர்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது அவர்களுககுத் தெரியும்.
ஆனாலும் புதுச் சினேகிதங்கள் ஏதும் தேவயைற்ற புத்திமதிகள் சொல்லி அவர்களின் மனத்தைத் திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் சாடையாக வந்தது.
அன்று பின்னேரம், அருந்ததி வழக்கம் போல் தனது வயது வந்த இரண்டு ‘குழந்தைகளையும்’ அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அன்று அவர்களின் நலவாழ்வுக்கு அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டாள்.
கோயிலில் ஐயர், அருந்ததி கொடுத்த அர்ச்சனைச் சீட்டை கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். கண்ணன் தாயின் சொற்படி மிகவும் பக்தியுடன் கோயிற்சிலையைப் பார்த்துக் கொண்டு நினறான்.
ஐயர் கண்ணனின் பெயருடன் ஆரம்பித்து நமஹா,ஸ்வாஹா என்ற சில வார்த்தைகளைப் பாவித்து, தட்டத்தில் வைத்த தீபத்தால் கடவுளை ஆராதித்து, கண்ணனின் தரகராகக் கடவுளிடம் பேசிவிட்டுத் தாயிடம் தட்டத்தை நீட்டியபோது, தாயார் தீபத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிய பின், அவள் அர்ச்சகருக்காகத் தட்டிற் பணம் போட்டாள். அதைத் தொடர்ந்து, தட்டிற்கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனைப் பொருட்களாக ஒரு வெற்றிலையில் ஒரு பழமும் திருநிறும் தாயிடம் கொடுத்தார் ஐயர்.
அதைத் தொடர்ந்து, அங்கு நடந்தவை கண்ணன் மனதில் சில கேள்விகளை எழுப்பியது.
வீட்டுக்கு வரும் வழியில், தாயிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வி கேட்டான் அவள் மகன் கண்ணன்.
“அம்மா, அந்த ஐயர் எனக்காக் கடவுளிடம் என்ன கேட்டார்.’’
“உனது மேன்மைக்கும், உயர்வுக்கும் ஆசி அளிக்கும்படி கடவுளை வேண்டினார் ஐயர்’’ என்றாள் அருந்ததி.
“அவர் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா’’ மகனின் இந்தக் கேள்வி தாயைத் திடுக்கிடப் பண்ணியது.
“அவர் எனக்குத் தெரியாத கடவுள் மொழியில், எங்களுக்காகக் கடவுளிடம் கேட்பதை நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது மகனே” என்றாள்.
‘’அப்படி என்றால் வாழ்க்கை பூராகவும் விரதம் படித்துக் காலையில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’’ என்று கண்ணீர் மல்கத் தமிழிற் பாடி உருகுகிறாயே அதைப் பற்றிக் கவலைப் படாத கடவுள், அன்னிய மொழியில் நீ தரகர் மூலம் பேசினாற்தான் அருள் புரிவார் என்று ஏன் நினைக்கிறாய்’’ என்று கேட்டான். தங்களின் நன்மைக்காகத் தாய் படும் துயர்கள் அவனால் புரிய முடியாதிருந்தது.
“மகனே அப்படி எல்லாம் கடவுளைப் பார்க்காதே. கோயிலில் ஐயர் பேசுவது தெய்வ மொழி. அதன் மகிமை வேறு’’ என்று படபடப்புடன் சொன்னாள்.
“அம்மா நீ எனக்கு அன்பு தரத் தமிழிற்தான் என்னைத் தாலாட்டினாய். எனது அறிவு வளர, எனது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் படிப்பித்தார்கள். எனக்கு கடவுள் ஆசிர்வாதம் தருவதாயிருந்தால் எனது மொழியில் அவருடன் தொடர்பு கொள்கிறேன். ஏனென்னால கடவுள்தான உலகத்து உயிரினங்கள் அத்தனையையும் படைத்தவர் என்றால் அவருக்குத் தனது குழந்தைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.’’
அருந்ததிக்கு மகன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.
அவன் தொடர்ந்தான், “அம்மா, இன்று பல கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின தலைவர் போப் ஆண்டவர் 1968ம் ஆண்டில், உலகக் கத்தோலிக்க மக்கள் அனைவரும் தங்கள் மொழியிற்தான் இயேசுவை வழிபடவேண்டும, பழைய பாரம்பரிய முறைப்படி லத்தின் மொழியில பிரார்த்தனைகளைக் கேட்கத் தேவையில்லை என்று கட்டளையிட்டார். எங்களை மாதிரி ஐயர் சொல்லும் கடவுள் மொழியைத் தெரியாத தமிழர்கள் உலகமெல்லாமிருக்கிறர்கள். இவர்கள் தங்கள் மொழியிற்தான் கடவுளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று உங்கள் மதத் தலைவர் யாரும் சொல்லவில்லையா?”
“மகன் மற்றவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று நாங்கள் ஏன் எடுக்கவேண்டும், எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம், அதில் ஒன்றும் குறை கண்டு பிடிக்காதே” என்றாள்.
“அம்மா, தயவு செய்து எனக்காக வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையம் வீணாக்கவேண்டாம். எனக்கு இப்போது இருபத்தியொரு வயது. இன்னும் சில வருடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை எடுக்கப் போகிறேன். எனக்குத் தேவையானால் கடவுளிடம் எனக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கிறேன். தயவு செய்து இனி என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லிக் கூப்பிடாதீர்கள்’’ என்றான்.
அருந்ததி என்ற தமிழ்த்தாய் திகைத்துப் போய் நின்றாள். ஆனாலும், அவள் நாளைக்கு இன்னொரு விரதம் இருப்பாள். தனது பிள்ளைகளுக்கு நல்ல புத்தியும் கடவுள் நம்பிக்கையும் தொடரவேண்டும் என்று பிரார்த்திப்பாள்.