கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 8 ரன்னில் வெற்றியைத் தவறவிட்டது.
டெல்லி கேப்டல்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு வந்து, 3 முறையும் தோல்வி அடைந்தது. 2023ல் மும்பை அணியிடம் தோற்றது, 2024ம் ஆண்டில் ஆர்சிபி அணியிடம் தோற்ற நிலையில் 2025ம்ஆண்டில் மீண்டும் மும்பை அணியிடமே டெல்லி அணி தோற்றுள்ளது.
அதிர்ச்சியளித்த டெல்லி அணி
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மேக் வேனிங் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் மட்டுமல்லாது முதல் 10 ஓவர்கள் வரை டெல்லி அணியின் பந்துவீச்சில் பட்டையக் கிளப்பியது. டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி திணறியது.
ஆட்டம் தொடங்கி 5வது ஓவருக்குள் தொடக்க வீராங்கனை யாஷிகா பாட்டியா(8), ஹீலி மேத்யூஸ்(3) இருவரின் விக்கெட்டுகளையும் காப் அருமையான பந்துவீச்சில் வீழ்த்தினார். 14 ரன்களுக்கு மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. காப் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி மும்பை அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
கேப்டன் ஹர்மன் பொறுப்பான ஆட்டம்
3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பர்ன்ட் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 10வது ஓவரில்தான் மும்பை அணி 50 ரன்களையே எட்டியது. டெல்லியின் பந்துவீச்சாளர்கள் காப், சதர்லாந்த், பாண்டே, ஜோனாசன் ஆகியோர் சேர்ந்து மும்பை ரன்ரேட்டை கட்டுப்படுத்தியதால் ஸ்கோர் உயரவில்லை.
ஆனால், நிதானமாக ஆடிவந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு கட்டத்துக்கு மேல் அணியின் நிலையைப் பார்த்து அதிரடி ஆட்டத்தில் இறங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். 38 பந்துகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதத்தை எட்டினார். 15-வது ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. பர்ன்ட் 30 ரன்கள் சேர்த்த நிலையில் சரணி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஹர்மன்ப்ரீத், பர்ன்ட் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு
ஜோனாசென் வீசிய 16-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்து தவித்தது. அமலி கெர்(2) ரன்னில் ஜோனாசென் பந்துவீச்சிலும், சஜீவன் சஜனா கால்காப்பில் வாங்கி ஜோனாசென் பந்துவீச்சில் டக்அவுட்டில் வெளியேறினார்.
ஹர்மன்ப்ரீத், கமலினி இருவரும் களத்தில் இருந்தனர். ஹர்மன்ப்ரீத் ஸ்கோரை உயர்த்தும் முடிவில் அடித்து ஆட முற்பட்டபோது, சதர்லாந்த் பந்துவீச்சில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
29 ரன்களுக்குள் 5 விக்கெட்
103 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி, அடுத்த 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிலும் 112 ரன்களில் இருந்து 118 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.
கடைசி நேரத்தில் அமன்ஜோத் கவுர்(14), சன்ஸ்கிரிதி குப்தா(8) இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்ததால், மும்பை அணி ஸ்கோர் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர், பிரன்ட் களத்தில் இருந்தபோது அணியின் ஸ்கோர் 170 ரன்களை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசியில் 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
டெல்லி அணித் தரப்பில் ஜோனாசென், சரணி, காப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
டெல்லி மோசமான தொடக்கம்
150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் களமிறங்கியது. ஷபாலி வர்மா, கேப்டன் லேனிங் இருவரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய லேனிங் இருபவுண்டரிகளை விளாசினார். ஆனால், பர்ன்ட் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் லேனிங் க்ளீன் போல்டாகி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஸ்மெயில் வீசிய 3வது ஓவரில் ஷபாலி வர்மா கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பவர்ப்ளே ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து, 37 ரன்கள் மட்டுமே டெல்லி அணி சேர்த்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
நம்பிக்கை தந்த ஜோடி
3வது விக்கெட்டுக்கு ஜோனாசென், ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை, ஜோனாசென் 13 ரன்கள் சேர்த்திருந்தபோது கெர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பாட்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சதர்லாந்த் 2 ரன்னில் இஸ்காக் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார், ஓரளவு நிலைத்து பேட் செய்த ரோட்ரிக்ஸ் 30 ரன்னில் கெர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் டெல்லி அணி 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. விக்கெட் கீப்பர் சாரா 5 ரன்னில் ரன்அவுட் ஆகவே மும்பை அணி ஆதிக்கம் செய்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
காப் - நிக்கி பிரசாத் ஜோடி சிறப்பான ஆட்டம்
காப், நிக்கி பிரசாத் ஜோடி 7-வதுவிக்கெட்டுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட் செய்தனர். கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. இஷ்காக் வீசிய 16-வது ஓவரை குறிவைத்து ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 17 ரன்கள் சேர்க்கவே ஆட்டம் விறுவிறுப்பானது.
17-வது ஓவரை வீசிய இஸ்மெயில் கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன.

பட மூலாதாரம்,GETTY IMAGES
திருப்புமுனை ஓவர்
பர்ன்ட் வீசிய 18-வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. இந்த ஓவரில் காப் 40 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். காப் இருக்கும் வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை இருந்தது, அவர் அவுட்டானதும் அந்த அணியின் நம்பிக்கையும் குலைந்தது. அடுத்துவந்த பர்ன்ட் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மினு மணி பவுண்டரி அடித்தார்.
டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. மேத்யூஸ் வீசிய 19-வது ஓவரில் மணி 4 ரன்னில் சஜானாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் நிக்கி பிரசாத் பவுண்டரி அடிக்கவே 9 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி.

பட மூலாதாரம்,GETTY IMAGES
திக் திக் கடைசி ஓவர்
கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. பிரசாத், சரணி களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை பர்ன்ட் வீசினார். முதல் பந்தில் பிரசாத் ஒரு ரன்னும், 2வது பந்தில் சரணி ஒரு ரன்னும் எடுத்தனர். 3வது பந்தை சந்தித்த பிரசாத் ரன் எடுக்கவில்லை, 4வது பந்தில் பிரசாத் ஒரு ரன்னும், 5வது பந்தில் சரணி ஒரு ரன் எடுக்கவே மும்பை அணி சாம்பியன் பட்டம் உறுதியானது.
கடைசி ஓவரை கச்சிதமாக வீசிய பர்ன்ட் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை மும்பை அணிக்கு பெற்றுக் கொடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 8 ரன்னில் தோல்வி அடைந்தது.
மும்பை அணித் தரப்பில் பர்ன்ட் 3 விக்கெட்டுகளையும், கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
வெற்றிக்கு காரணமானவர்கள்
மும்பை அணியின் வெற்றிக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்(66), பர்ன்ட்(30) இருவரும் பேட்டிங்கில் அளித்த பங்களிப்புதான் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியது இருவரின் பேட்டிங்தான். இருவரைத் தவிர மும்பை அணியில் வேறு எந்த வீராங்கனைகளும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.
ஹீரோவான பர்ன்ட்
பந்துவீச்சிலும் பர்ன்ட் அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இஸ்மெயின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, கெர் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. கடைசி நேரத்தில் காப், பிரசாத் இருவரும் வெற்றியை நோக்கி டெல்லி அணியை நகர்த்தினர். ஆனால் இஸ்மெயில் வீசிய 17வது ஓவர் டெல்லி அணிக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி, அடுத்தடுத்து விக்கெட் சரிய காரணமாக இருந்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி
டெல்லி அணிக்கு டாஸ் வெற்றி முதல் அனைத்துமே சாதகமாக இருந்தது. ஆனால் எதையுமே சரிவர பயன்படுத்தாததுதான் தோல்விக்கு காரணம். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் டாப்ஆர்டர் விக்கெட்டை சாய்த்து ஆட்டத்தை டெல்லி அணி கைக்குள் கொண்டு வந்தது.
ஆனால், அதன்பின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், ஹர்மன், பர்ன்ட் பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும் டெல்லி பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர். அது மட்டுமல்லாமல் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 45 ரன்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.
அதேபோல பேட்டிங்கிலும் டெல்லி அணியில் காப், ரோட்ரிக்ஸ் தவிர வேறு எந்த பேட்டரும் பங்களிப்பு செய்யவில்லை. கடைசிநேரத்தில் காப், பிரசாத்துக்கு துணையாக வேறு பேட்டர்கள் இருந்திருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். சீரான இடைவெளியில் டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்.
குறிப்பாக 37 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி. அடுத்த 50 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 123 ரன்களில் இருந்து 128 ரன்களுக்குள் அதாவது 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தேடிக்கொண்டது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
மதுரை வீராங்கனை ஏமாற்றம்
கமலினி ஒரு சிக்ஸர் உள்பட10 ரன்கள் எடுத்து சரணி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டுப் போட்டிகளிலும், 19வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு தொடர்களிலும் சிறப்பாக ஆடியதால் கமலினியை அந்த அணி வாங்கியது.
இந்த 2025 ஐபிஎல் தொடரில் அறிமுகமான கமலினி 9 போட்டிகளில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிகபட்சமாக ஆர்சிபி அணிக்கு எதிராக 11 ரன்கள் சேர்த்தார். கமலினி மீது மிகுந்த எதிர்பார்ப்பை மும்பை அணி வைத்திருந்த நிலையில் இந்த தொடரில் அவரது பேட்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c0kgr41r238o