வாழும் புலம்

தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!

3 months 2 weeks ago

(நா.தனுஜா)

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

உங்களது பிரம்டன் நகர கவுன்சில் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்ததையும், இலங்கையில் சுமார் 30 வருடகாலமாக நீடித்த யுத்தம் தொடர்பில் நாம் கலந்துரையாடியதையும் இப்போது நினைவுகூருகிறேன். 

அதன்படி கனேடியவாழ் இலங்கையர் குழுவொன்று உங்களது நிர்வாகத்தின்கீழ் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி எனக்கூறப்படும் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அதற்கு பிரம்டன் நகர கவுன்சில் அனுமதி அளித்திருப்பதாகவும் பல்வேறு கனேடிய இலங்கையர் அமைப்புக்கள் எமது அவதானத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. 

அதிலும் குறிப்பாக எவ்வித இன, மதபேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் இத்தகைய நினைவுத்தூபியை நிர்மாணிப்பது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவ்வமைப்புக்கள் கரிசனை வெளியிட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது கனேடிய இலங்கையர் சமூகத்தினிடையேயான இனநல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிலும், இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதேவேளை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களினாலும் வெளியிடப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களும், அரச கட்டமைப்புக்கள் இடையூறின்றி இயங்குவதற்கு அவசியமான நிதியும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ஏனைய அரச மற்றும் தனியார் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளடங்கலாக சகலராலும் சமத்துவமான முறையில் அனுபவிக்கப்படுகின்றன.  

சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்த போதிலும், யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, அதன் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றது. 

எனவே தமிழர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், கனேடியவாழ் இலங்கையர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழினப்படுகொலை நினைவுத்தூபி நிர்மாணம் போன்ற பிரிவினைகளை ஏற்படுத்தவல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உதவுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்! | Virakesari.lk

Checked
Wed, 12/04/2024 - 07:37
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed