நவீன கவிதை / "விடுதலையின் வித்து"
"சரியான நேரத்தில், சரியான மண்ணில்
சரியான விதை போட்டால், உரம் இட்டால்
கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும்
பூ பூத்து பயன் தரும்!
ஆனால் வித்து
மண்ணோடு மண்ணாக போய்விடும்!!"
"நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல்,
எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம்
சற்று சிந்தி
உன் வரலாறு புரியும்
உன் பெருமை தெரியும்
உன் இன்றைய வாழ்க்கைக்கான
விடுதலையின் வித்து அறிவாய்!"
"உலகத்தை தூக்கத்திலிருந்து
ஒரு வித்து கிழித்தெறிந்தது
அனைத்து உண்மை இதயங்களிலும்
இரத்தம் சிந்தியது
ஒருமுறை போராடி
தெருவுக்கு கொண்டு சென்றான்
விதையை விதைத்தான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
இவன் தான் மாண்டு
தன் இனத்துக்கு
மனிதனுக்கு
தினை கொடுத்தான்!
விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!"
"ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தீர்கள்,
பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள்
அது தேர்தல் காலம்!
ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும்
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்
அது அரசு அமைத்த காலம்!!
அச்சமும் வெறுப்பும் எங்கும் கூத்தாடுகிறது!
விதை விதைக்க
விடுதலையின் வித்தாக
இனி யார் வருவார்?"
"நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம்
அது கனவாகி விட்டது
நாங்கள் முடிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்
இன்னும் சிலர் எரிகின்றனர்
இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!"
"நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன்
ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது?
என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக
பசியோடு வருகிறேன்
ஆன்மீக அம்சங்களுக்காக
திறமையான வாழ்க்கை முறைக்காக
விடுதலை உணவுகளுக்காக
துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன்
இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும்
விதையாக
விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!"
"சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக
சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக
உடைந்த இணைப்புகளுக்கு பூணாக
உங்கள் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிகிறது
உங்கள் வேதனையும்
உங்கள் கண்ணீரும்
என்னை மண்ணுக்கு இழுக்கிறது
விடுதலையின் வித்தாக!!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]