கோவை: ஸ்கூட்டரில் 'ஜிபிஎஸ்' பொருத்தி ஆளை கண்காணித்து வீட்டை கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவையில் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டுள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வீட்டில் இருந்தவர்களின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆள் இல்லாத வீட்டில் நடந்த கொள்ளை பற்றி போலீசார் துப்பு துலக்கியது எப்படி? கொள்ளையடித்துவிட்டுச் சென்ற கும்பலை ஒரே வாரத்தில் போலீசார் பிடித்தது எப்படி?
கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு (வழக்கு எண்: 352/2024), கடந்த அக்டோபர் 21 அன்று பதிவானது. கிழக்கு சம்பந்தம் சாலையில், ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் குமார் என்பவர் தான் அந்த புகாரை அளித்திருந்தார். முதல் தகவல் அறிக்கையில், அந்த திருட்டு தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
குமார், ஆர்எஸ் புரம் விசிவி ரோட்டில் மளிகைக் கடையும், ஓர் உணவகமும் வைத்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும் காலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டைப் பூட்டி விட்டு, காலை பத்தரை மணிக்குக் கடைக்குப் போய் விடுவது வழக்கம். அதே வீட்டின் கீழ் தளத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குடியிருந்து வருகிறார்.
அக்டோபர் 21 அன்று, மதியம் இரண்டரை மணியளவில், குமாரை உடனே வருமாறு செல்வராஜ் அவசரமாக அழைத்துள்ளார். அங்கே சென்று பார்த்த போது, குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு, 60 சவரன் நகையும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இரண்டு பேர், மாடி வீட்டிலிருந்து ஹெல்மெட் உடன் இறங்கிச் சென்றதைப் பார்த்து, வீட்டு உரிமையாளர் செல்வராஜ், நீங்கள் யாரென்று கேட்டதும், இருவரும் நிற்காமல் ஓடிச் சென்று, வெளியில் நின்ற காரில் ஏறி, பூ மார்க்கெட் பக்கமாக வேகமாகச் சென்று விட்டனர். அவரும், அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண்ணும் சத்தம் போட்டும் காரை நிறுத்தவில்லை.
அதன்பின், மாடியில் சென்று பார்த்தபோது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்து செல்வராஜ் அதிர்ச்சியடைந்து, குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் யாவும் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிலிருந்த ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ஆட்களை அடையாளம் கண்டறிய முடியவில்லை.
ஆனால் ஏழே நாட்களில் இருவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஜாஹீர் உசேன், மோனிஸ் என்பதைக் கண்டு பிடித்தனர். இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையடிப்பதற்கு முன், கொள்ளையர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குப் பயன்படுத்திய அதிநவீன தொழில் நுட்பங்கள், அவர்களைக் கைது செய்வதற்கு மேற்கொண்ட புலனாய்வு முறைகள் பற்றிய பல சுவராஸ்யமான தகவல்களை, ஆர்எஸ் புரம் போலீசார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
‘‘திருட்டு நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. அதன்பின், அவர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்துத் தேடினோம். அதில் இருந்த கேரளா பதிவெண் போலி என்பது தெரியவந்தது. அதே நிறமுள்ள கார் அப்பகுதியில் உள்ள வேறு இடங்களில் வலம் வந்துள்ளதை வேறு சில சிசிடிவி பதிவுகளில் கண்டுபிடித்தோம். அந்த காரின் ஒரிஜினல் எண்ணைக் கண்டுபிடித்த போது, அது சேரன் மாநகரில் ஓரிடத்தில் தினசரி ரூ.1750-க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரியவந்தது.’’ என்று தெரிவித்த போலீசார், தொடர்ந்து விவரித்தனர்.
‘‘அந்த காரை வாடகைக்குக் கொடுக்கும் போது, ஒரு மெசேஜ் அனுப்பி, கார் எடுப்பவரின் எண்ணை உறுதி செய்கின்றனர். அதில் தரப்பட்ட எண்ணை வைத்து, அந்த நாளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த டவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்த மொபைல் போன் பயன்பாட்டில் இருந்தது என்று பார்த்தபோது, அவர்கள் எங்கெங்கு காரை நிறுத்தி, என்னென்ன வாங்கினார்கள் என்று தெரியவந்தது."
"பூட்டை உடைப்பதற்காக சுக்ரவார்பேட்டையில் ஒரு கடையில் நிறுத்தி, டூல்ஸ் வாங்கியுள்ளனர். அந்த சிசிடிவியில்தான் அவர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.’’ என்று போலீசார் கூறினர்.
இருவரில் ஜாஹீர் உசேன் மீது ஏற்கெனவே கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் கார் திருட்டு, அன்னுாரில் ஒரு கூட்டுக் கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆர்எஸ் புரம் போலீசார், "மோனீஸ் மீது குனியமுத்துார் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்குப் பதிவாகியுள்ளது. இவர்களிடம் விசாரித்ததில், குமாரையும், அவரின் மனைவியையும் நீண்ட காலமாகக் கண்காணித்து, அவர்களின் வீட்டில் பெரிய அளவில் பணமும், நகையும் இருக்குமென்று திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.’’ என்று கூறினர்.
பட மூலாதாரம்,AMAZON
இந்த கொள்ளை நடப்பதற்கு முன்பாக, குமார், அவரின் மனைவி இருவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் கடைபிடித்த உத்திதான் இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று ஆர்எஸ் புரம் போலீசார் கூறினர்.
அதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘குமாரும், அவரின் மனைவியும் தனித்தனியாக டூ வீலர்கள் வைத்துள்ளனர். அவர்களின் கடைகளுக்கு அடிக்கடி சென்று வந்த கொள்ளையர் இருவரும், குமாருக்கும், அவரின் மனைவிக்கும் தெரியாமல், அவர்களின் டூ வீலர்களில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’ கருவியை, பொருத்தியுள்ளனர். அதை வைத்து அவர்கள் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டிற்கே சென்று பகலில் கொள்ளையடித்துள்ளனர்.’’ என்றனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்த வழக்கின் புகார்தாரரான குமாரிடம், உங்கள் டூ வீலரில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ் பொருத்தியது உங்களுக்குத் தெரியவில்லையா என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘கடைசி வரை எனக்கு அது தெரியவே இல்லை. போலீசார்தான் ‘என்னுடைய வாகனத்தில் அதைப் பொருத்தியிருப்பதாக குற்றவாளிகள் சொன்னதாகத்’ தெரிவித்து, அதை எடுத்துள்ளனர். எப்படிப் பொருத்தினார்கள், எப்போது பொருத்தினார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக எங்களை கண்காணித்துள்ளனர்’’ என்றார்.
இது போன்று ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’களை வாகனங்களில், உரிமையாளருக்குத் தெரியாமல் பொருத்த முடியுமா என்பது பற்றி, வனத்துறைக்காக ‘ஜிபிஎஸ்’ பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் மோகன் பிபிசி தமிழிடம் விளக்கியபோது, ‘‘இப்போது கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் வந்து விட்டன. அமேசானில் 1,400 ரூபாய்க்கு இவை கிடைக்கின்றன.” என்கிறார்.
மேலும், “வாய்ஸ் ரிக்கார்டர் உடன் ஜிபிஎஸ் கருவிகளே, 3000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த கருவிகள் வாகனத்தின் ஒரு பாகம் போலவே இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த காந்தத்துடன் வைத்து, வாகனத்தின் இரும்பு பாகத்தில் ஒட்ட வைத்துவிட்டால் யாராலும் எளிதில் கண்டறிய முடியாது. வாகனத்தைப் பற்றி சற்று தெரிந்தவர்களே இதைக் கண்டுபிடிக்க முடியும்.’’ என்று தெரிவித்தார்.
கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘‘இத்தகைய ‘ஜிபிஎஸ்’கள் செயல்பட பேட்டரி அவசியம். முன்பு கார்களில் உள்ள பேட்டரிகளில் இவற்றை இணைக்க வேண்டியிருந்தது. இப்போது மொபைல் போன்களில் உள்ள லித்தியம் பேட்டரியுடன் இயங்கும் கைக்கு அடக்கமாக ‘ஜிபிஎஸ்’ கருவிகள் வந்து விட்டன.” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “கார்களில் உள்ள பழுதுகளை சென்சார் மூலமாக ‘ஸ்கேன்’ செய்வதற்கு உதவும் ‘டயாக்னஸ்டிக் டிரபிள் கோடு கப்ளர்’ (Diagnostic Trouble Code coupler) இருக்கும். அதில் ‘ஜிபிஎஸ்’ பொருத்தினால் பேட்டரி தேவையில்லை. அதை மொபைலில் ‘ஆப்’ டவுன்லோடு செய்து, இணைத்துக் கொண்டால், வாகனத்தின் நடமாட்டத்தை, மொபைலிலேயே கவனித்துக் கொள்ளலாம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் இவற்றை கார்களில் பொருத்தியுள்ளனர்.’’ என்று விளக்கினார்.
‘‘இந்த ‘ஜிபிஎஸ்’ கருவிகள், நகருக்குள் இருக்கும்போது, வாகனத்தின் நகர்வைத் துல்லியமாகக் காண்பிக்கும். டவர்கள் அதிகமில்லாத பகுதியாக இருந்தாலும், அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை மட்டுமே தாமதமாகக் காண்பிக்கும். அதனால் இந்த கருவி பொருத்திய வாகனம், எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் இயக்கப்படுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும். வாகனதாரர்கள் விழிப்புணர்வாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் மோகன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு