பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சென்னை மாநகரம் தொடர்ச்சியாக நகர்ப்புற வெப்பத் தீவுகள், வெப்ப அலை, கடல் அரிப்பு, புயல், வெள்ளம் எனப் பல அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது.
கட்டுரை தகவல்
-
எழுதியவர், க.சுபகுணம்
-
பதவி, பிபிசி தமிழ்
-
16 ஆகஸ்ட் 2024
“இப்போ கடல் ரொம்ப வயலா இருக்கு (ஒரு சில அலைகள் மட்டுமே இருக்கும், பெரிய அலைகள் இல்லாத நிலை). இந்த மாதிரி இருக்கும்போது ராத்திரில கடலுக்குப் போனாதான் வரிப்பாறை, கருவாழை போன்ற மீன்கள் கிடைக்கும். கடல் இப்படி இருக்கும்போது தண்ணி ரொம்ப தெளிவா இருக்கும். காலையில போனா மீன் கண்ணுக்கு வலை நல்லா தெரிஞ்சு, சிக்காம தப்பிச்சுக்கும்.”
“இதையெல்லாம், அனுதினமும் கடலைப் பார்த்துதான் தெரிஞ்சுக்க முடியும். கடல்-ல இருந்து ரொம்ப தொலைவுல கொண்டுபோய் என்னைக் குடித்தனம் வெச்சா, நினைச்ச நேரத்துக்கு வந்து கடலைப் பார்க்க முடியுமா? எப்போ போனா மீன் கிடைக்கும், கிடைக்காதுனு தெரிஞ்சுக்க முடியுமா?”
நகரத்தைத் திட்டமிடும்போது அரசாங்கம் இப்படிப்பட்ட நடைமுறை சவால்களைக் கவனத்தில் கொள்வதில்லை என்று வருந்துகிறார் சென்னை அடையாறு அருகே இருக்கும் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த மூத்த மீனவரான பாளையம்.
சென்னை நகரின் சுமார் 7% நிலப்பகுதி 2040ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டில் பதிவான வெப்ப அலை இதுவரை இருந்ததைவிட அதிக பாதிப்புகளை சென்னையில் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பேரிடர்களை நகரின் ஒரு சில பகுதிகளாவது எதிர்கொள்வது வழக்கமாகி வருகிறது.
இந்தப் பேரிடர்களின்போது சென்னை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறக் காரணமே அதன் கட்டமைப்புதான் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன்.
“சென்னை ஒரு முறையாகத் திட்டமிடப்பட்ட பெருநகரமே இல்லை. அதுதான் இங்கு நகரக் கட்டமைப்பின் ஓர் அடிப்படைப் பிரச்னையாக இருக்கிறது.” என்கிறார் அவர்
இந்நிலையில், பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் சென்னையின் நகரத் திட்டமிடல் அந்தப் பேரிடர்களைக் கையாளும், மக்களின் வாழ்வியலைக் காக்கும் திறனைக் கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
கடலின் தன்மை மாறி வருகிறதா?
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
படக்குறிப்பு,ஆகஸ்ட் மாதம் நிலவவேண்டிய கடலின் தன்மை ஜூலை மாதத்திலேயே முடிந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஆடியில பெரிய பெரிய இறால் கிடைக்கும். இந்த மாசத்துல கடல் ஆக்ரோஷமா சொறப்பா இருக்குறதால, கடல் ஆழம் வரைக்கும் தண்ணிய நல்லா கலக்கிவிடும். அதனால, ஆழத்துல இருக்குற இறால், நண்டு, உடுப்பா, பன்னா, கருங்கத்தல மாதிரியான உயிரினமெல்லாம் கடலுக்கு மேல வந்து மேயும்.
இப்போ பாருங்க, ஆடி மாதம் முடிய 3 நாள்தான் இருக்கு. அலையே பெருசா இல்ல. கடல் சாதுவா இருக்குது.”
“ஆனால், ஜூலை மாசத்துல, அதாவது ஆணி மாசம் முழுக்க, கடல் ரொம்ப சொறப்பா இருந்துச்சு (ஆக்ரோஷமான அலைகளுடன், பனிக்கட்டி போன்ற குளிர் நீருடன்). அதிகாலையில கால்ல தண்ணி பட்டாலே ஐஸ் மாதிரி ஜில்லுனு இருக்கும். அதைத்தான் வண்டத் தண்ணினு சொல்லுவோம். இப்படி ஆடி மாசம் இருக்க வேண்டிய கடல், ஆணி மாசமே வந்துட்டு போயிருச்சு.”
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி என்னுடன் அடையாறு முகத்துவாரத்தை நோக்கிக் கடலோரமாக நடந்தபடியே வந்த பாளையம் தனது மீன மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்கினார். இந்த மாதத்தில் வீசவேண்டிய காற்றும் நிலவ வேண்டிய கடலின் தன்மையும், ஜூலை மாதத்திலேயே முடிந்துவிட்டதைத் தனது அவதானிப்புகளின் மூலமாக அவர் பதிவு செய்துள்ளார்.
இப்படியாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தனது மொழியில் விவரித்துக்கொண்டே அதிகாலை வேளையில் ஊரூர் குப்பம் கடற்கரையில் தொடங்கி அடையாறு முகத்துவாரத்தை நோக்கி என்னுடன் நீண்டநேரம் நடந்து வந்தார்.
பாளையம் சொல்வதுபோல், கடலின் தன்மை மட்டுமல்ல, சென்னை கடலோரத்தில் நிகழும் கடலரிப்பும் கடல்மட்ட உயர்வும் அஞ்சத்தக்க வகையில் திவிரமடைவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அடையாறு, பள்ளிக்கரணை கடலில் ஆபத்து
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
படக்குறிப்பு,அடையாறு முகத்துவாரத்தில் உள்ள நீரின் கழிவு மற்றும் மாசுபாடுகளால், மீன்கள் செத்துக் கரை ஒதுங்கியிருந்ததைக் காண முடிந்தது.
சென்னையில் 2040ஆம் ஆண்டுக்குள் சுமார் ஏழு சதவீத நிலம் நீரில் மூழ்கும் என்று கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான ஓர் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) மேற்கொண்ட இந்த ஆய்வில், இந்திய கடலோர நகரங்களுக்கான வெள்ள வரைபடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, பள்ளிக்கரணை சதுப்புநிலம், மெட்ராஸ் துறைமுகம் ஆகியவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “2040ஆம் ஆண்டுக்குள் சென்னைப் பெருநகரில் சுமார் 7.29% பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துவிடும் என்றும் 2060ஆம் ஆண்டில், 9.65% பகுதிகள் கடலில் மூழ்கும் எனவும், அதுவே 2100இல் 16.9%, அதாவது சென்னையின் பரப்பளவில் 207.04 சதுர.கி.மீ மூழ்கிவிடும் என்றும்” இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
இதேபோல், கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, 2050ஆம் ஆண்டுக்குள் தமிழக கடலோர பகுதியில் 19.2செ.மீ. அளவுக்கு கடல்மட்ட உயர்வு இருக்கலாம். இதனால் “சென்னை பெருநகரில் மட்டுமே சுமார் 6,120 ஹெக்டேர் நிலப்பகுதி கடலுக்குள் செல்லக்கூடும்” என எச்சரிக்கப்படுகிறது.
இவற்றின் விளைவாக ஏற்கெனவே பெருகிவரும் காலநிலை பேரிடர்கள், அதிதீவிர பருவநிலை நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறது சி.சி.சி.டி.எம்-இன் இந்த ஆய்வு.
நகரத் திட்டமிடலில் நிலவும் போதாமை
பட மூலாதாரம்,GETTY IMAGES
“விஞ்ஞானிகள் 2050ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கலாம் என்றுதான் எச்சரித்துள்ளார்கள். கண்டிப்பாக மூழ்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், அரசு இதைக் காரணம் காட்டி கடலோரத்தில் இருக்கும் மீனவர்களை நகரத்திற்குள் இடம் மாற்றுமே தவிர, இதன் விளைவாக இப்போது அதிகரிக்கும் பேரிடர் அபாயத்தில் இருந்து எங்களைப் போன்ற எளிய மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா?” என்று அச்சம் தெரிவிக்கிறார் பாளையம்.
பாளையம் போன்ற எளிய சமூகத்தினர் முன்வைக்கும் ஒரே கேள்வி, “இந்தப் பேரிடர்களைத் தாங்கி நின்று, எங்களை அச்சமின்றி வாழ வைக்கும் திறன் சென்னை பெருநகருக்கு இருக்கிறதா?”
“உண்மையில் இல்லை” என்பதே அதற்கான பதில் என்கிறார் கேர் எர்த் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும் மூத்த சூழலியல்வாதியுமான ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
“சென்னைக்கான இரண்டாவது மாஸ்டர் ப்ளான் வரையிலும், பெருநகர் எதிர்கொள்ளும் பேரிடர்களோ, சமூக சமத்துவமின்மையோ, சூழலியல் பாதுகாப்போ எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. உரிய வகையில் கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப்படவில்லை.
ஆனால், தற்போது உருவாக்கப்பட்டு வரும் மூன்றாவது மாஸ்டர் ப்ளானில் அத்தகைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அது போதவில்லை,” என்பதே அவரது கூற்று.
நகரத் திட்டமிடுதலைப் பொறுத்தவரை ஒரு போதாமை எப்போதுமே நிலவுவதாக ஜெயஸ்ரீ கூறுகிறார். அதாவது, காலநிலை நெருக்கடியின் ஆபத்துகளைப் பற்றி அதிகாரிகள், வல்லுநர்கள் மட்டத்தில் பரவலாக ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்தப் புரிதலை “நகரத் திட்டமிடுதலில் எப்படிக் கொண்டு வந்து பொருத்துவது? காலநிலை ஆபத்துகள் இருக்கின்றன சரி. அந்த அபாயங்களைக் கையாளத் தகுந்த நகரத்தைத் திட்டமிடுவது எப்படி?” இதில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார் அவர்.
‘வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம்’
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டுவதாக மக்கள் தொகை தரவுகள் தெரிவிக்கின்றன.
“பல்வேறு மீன்பிடிக் கிராமங்கள், பாக்கங்கள், பேட்டைகள், எனச் சுற்றியிருந்த பல பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கித்தான் சென்னை இப்போதைய நிலைக்குப் பெருத்துள்ளதாக” சுந்தர்ராஜன் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, பல நீர்நிலைகள், சதுப்புநிலங்களை அழித்துதான் இப்போதைய சென்னை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் நகர்புற வெப்பத் தீவுகள் (Urban heart Island), வெப்ப அலை, கடல் அரிப்பு, வெள்ளம் எனப் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
சென்னை, மும்பை போன்ற பெருநகரங்கள் மிகக் கடுமையான காலநிலை சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற நகரக் கட்டமைப்பு இந்த நகரங்களுக்கு இல்லை எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் நகர்ப்புற வெப்பத் தீவுகள், அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் இருந்தாலும்கூட, 50 டிகிரி அளவுக்கு மக்கள் வெப்பத்தை உணரும் நிலை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, கிழக்குக் கடற்கரையில் கடும் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் சென்னையின் ஆறுகளைத் தூர்வாருவதில் முறையான அறிவியல்பூர்வ அணுகுமுறை பின்பற்றப்படுவதில்லை எனவும் சுந்தர்ராஜன் எச்சரிக்கிறார்.
இதற்குச் சான்றாக, அடையாறு முகத்துவாரப் பகுதியைச் சுட்டிக் காட்டுகிறார் மீனவர் பாளையம். அவருடன் அடையாறு முகத்துவாரப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டபோது, முகத்துவாரம் மிகச் சிறிதாக, ஆழமற்று இருந்ததைக் காண முடிந்தது.
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
படக்குறிப்பு,நகரத்தைத் திட்டமிடும்போது அரசு நடைமுறை சவால்களைக் கவனத்தில் கொள்வதில்லை என்று வருந்துகிறார் மூத்த மீனவரான பாளையம்.
“முகத்துவாரத்தை நல்லா ஆழப்படுத்தி, கடல்நீர் உள்ள போய், வர ஏதுவா தூர்வாரணும். ஆனால், இங்கு மண்ணை எங்கே எடுக்க வேண்டும் என்ற திட்டமிடலே இல்லாமல் அகற்றி, முகத்துவாரப் பகுதியின் ஓரத்திலேயே மீண்டும் குவித்துவிடுகிறார்கள். இதனால், ஒரு மழை பெய்து ஆற்று நீர் வரும்போதோ, கடல் நீரோட்டத்தின்போதோ, அங்கு தேங்கியிருக்கும் மண்ணை அது மீண்டும் சேர்த்துவிட்டுச் செல்கிறது.”
இப்படிச் செய்தால், முகத்துவாரத்தில் எப்படி கடல்நீர் உள்ளே வந்து செல்லும், மீன்கள் எப்படி ஆற்றுக்குள் வரும், போகும் என்று ஆதங்கப்படுகிறார் அவர்.
மேலும், இத்தகைய அணுகுமுறையால் ஆற்றிலுள்ள கழிவுகள் வெளியேறாமல் கழிமுகத்திலேயே தேங்கியிருந்து, மாசுபடுத்துவதால் மீன்கள் செத்து மடிவதாகக் கூறுகிறார் மற்றொரு மீனவரான ரவிக்குமார்.
ஆனால், அடையாற்றின் தூர்வாரும் பணியில் முன்னேற்றம் இருப்பதாகவும் அடுத்தடுத்த பணிகளில் இந்தப் பிரச்னைகளுக்கும் திர்வு எட்டப்படும் எனத் தான் நம்புவதாகவும் கூறுகிறார் சென்னை ஐஐடியை சேர்ந்தவரும் வளம்குன்றா நகரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்தவருமான முனைவர்.கிருத்திகா முருகேசன்.
அவரது கூற்றுப்படி, அடையாற்றின் முகத்துவாரப் பகுதியிலுள்ள அடையாறு சூழலியல் பூங்கா பகுதியில் மீட்டுருவாக்கப்பட்டுள்ள அலையாத்திக் காடுகளின் செழிப்பே அதற்கான சான்று.
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
படக்குறிப்பு,"முன்பு ஆற்றையும் முகத்துவாரத்தையும் சார்ந்திருந்தவர்கள், இப்போது மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கிவிட்டோம்" என்கிறார் மீனவர் குப்பன்.
ஆனால் அடையாறு முகத்துவாரம் அருகே இருக்கும் உடைந்த பாலத்தின் கீழே வலைகளைப் பிரித்துக் கொண்டிருந்த மீனவரான குப்பன், “ஏற்கெனவே ஓரளவுக்கு நன்றாக இருந்த முகத்துவாரத்தை இப்போது மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்," என்கிறார்.
"சரியான அணுகுமுறை இல்லாமல், இப்போது ஆற்றையும் முகத்துவாரத்தையும் சார்ந்திருந்த நாங்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தொடங்கிவிட்டோம். ஏதேனும் செய்வதாக இருந்தால், அதை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மேலும் மோசமடையும்,” என்றும் அவர் வருந்துகிறார்.
மூழ்கும் அபாயத்தில் தாழ்வான கடலோர நகரங்கள்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வுப்படி, கடந்த 1987 முதல் 2021 வரையிலான காலகட்டத்தின்போது சென்னையில் 0.679 செ.மீ. கடல்மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது 'ஆண்டுக்கு, 0.066செ.மீ. அளவுக்கு உயர்ந்துள்ளது.'
இந்திய கடலோரங்களைப் பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச கடல்மட்ட உயர்வு மும்பையில் பதிவாகியிருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. அதன்படி, 'மும்பையின் கடலோரங்களில் ஆண்டுக்கு ஆண்டுக்கு 0.31 செ.மீ. என்ற விகிதத்தில் கடல்மட்ட உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.'
சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டுவதாக மக்கள் தொகை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருக்கும் தலைநகரில் அதிதீவிர நகரமயமாக்கல், கடற்கரை பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
படக்குறிப்பு,மீனவர் பாளையத்துடன் அடையாறு முகத்துவாரத்தை நேரில் சென்று பார்வையிட்டபோது, அது மிகச் சிறிதாக, ஆழமற்று இருந்ததைக் காண முடிந்தது.
காலநிலை நெருக்கடியை விரைவுபடுத்தும் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகளுடன் “சென்னை பெருத்துக் கொண்டிருப்பதற்கு” தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் கோ.சுந்தர்ராஜன்.
சென்னையின் பல பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து பத்து மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே இருக்கின்றன. சோலிங்கநல்லூர் (3மீ), பள்ளிக்கரணை (2மீட்டர்), ஒக்கியம் மடுவு (2மீட்டர்) உட்படப் பல பகுதிகள் மூன்று மீட்டருக்கும் குறைவான உயரத்தில்கூட இருக்கின்றன.
இப்படிப்பட்ட தாழ்வான கடலோர நகரங்கள், கடல்மட்ட உயர்வால் தீவிரமாகப் பாதிக்கப்படும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வில், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட 15 நகரங்களில், இத்தகைய நெருக்கடிகளால் எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் சென்னை, மும்பை நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
சென்னையைக் காக்க என்ன வழி?
இவ்வளவு பேரிடர்கள் தமிழகத் தலைநகரைச் சூழ்ந்திருக்கும்போதிலும், சென்னையை மேன்மேலும் விரிவுபடுத்திக் கொண்டே செல்வது ஏற்புடையதல்ல எனக் கூறும் சுந்தர்ராஜன், இந்த அதிதீவிர நகரமயமாக்கலை நிறுத்த வேண்டும் என்கிறார்.
இல்லையெனில், பெருகிவரும் மக்கள் தொகை அடர்த்தி, தீவிரமடையும் பேரிடர் நிகழ்வுகளால், சென்னை பெருநகரம் “சர்வதேச அளவில் வாழத் தகுதியற்ற, பேரிடர் சூழ் நகரமாகப் பார்க்கப்படும் அபாயம் இருப்பதாக” எச்சரிக்கிறார். இதன் விளைவாக, இங்கு வரும் முதலீடுகள் முதல் மக்களின் வளர்ச்சி வரை அனைத்துமே பெரிய அடியை எதிர்கொள்ளும் என்கிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
உண்மையில் “இப்போதைய சூழலில் காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு ஏற்படும் அபாயங்களைக் கையாள நம்மிடம் எந்த நடவடிக்கையும் இல்லை” என்கிறார் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
உடனடி நடவடிக்கைகளில் முதன்மையானதாக அவர் குறிப்பிடுவது, “அந்தந்த பகுதிகளில் இருக்கும் நீர்நிலையில் இருந்தே அங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு நீர்நிலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம், நீர்நிலைகளை மட்டுமே மீட்க முடியும். நகரிலுள்ள நீர்நிலைகளைச் சுற்றி பூங்காக்களை அமைப்பதால் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிடாது.”
சென்னை மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள அனைத்து பெருநகரங்களுமே காலநிலை பிரச்னையை துண்டு துண்டாக அணுகுவதாக விமர்சிக்கிறார் ஜெயஸ்ரீ.
அவர், “நீரியல், சூழலியல், நிலவியல் என அனைத்துத் துறைகளும் தனித்தனியாக இயங்குகின்றன. இதனால், அரசு நிர்வாகம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட புரிதலைப் பெறுவதிலும், அதன் அடிப்படையில் திட்டங்களை வகுப்பதிலும் ஒரு போதாமை நிலவுவதாக” கூறுகிறார்.
பட மூலாதாரம்,SUBAGUNAM/BBC
அதாவது, வெள்ளம் பற்றிப் பேசும்போது வறட்சி குறித்தும் பேச வேண்டும், வெப்பத் திட்டுகள் குறித்துப் பேசும்போது உயரும் வெப்பநிலையைப் பேச வேண்டும், கடல் அரிப்பைப் பற்றிப் பேசும்போது, அலைகளின் தன்மை மற்றும் முகத்துவாரம் பற்றியும் பேச வேண்டியது அவசியம்.
சென்னையின் நகரத் திட்டமிடுதலில் இந்த சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், தற்போது அதற்கான சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் முனைவர்.கிருத்திகா முருகேசன்.
“சென்னை மாநகராட்சி காலநிலை நிதியின்மீது கவனம் செலுத்தவுள்ளார்கள். இதன்மூலம், சமூக-பொருளாதார, காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளும் மக்களின் நலனில் இந்தத் திட்டத்தின் மூலம் கவனம் செலுத்த முடியும்,” என்கிறார் முனைவர்.கிருத்திகா.
மேலும், இதன்மூலம் காலநிலை அபாயங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டில் எவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பனவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கான ஆய்வுகளை உலக வள நிறுவனத்தின்கீழ் செய்துகொண்டிருப்பதாகவும் முனைவர்.கிருத்திகா தெரிவித்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
அதோடு, இத்தனை ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கும் பிரச்னைகள் அனைத்தையும் மொத்தமாகச் சரி செய்வது சாத்தியமே இல்லை எனக் கூறும் அவர், ஆனால் அதற்கான முதல் படியை சென்னை மாநகராட்சி இப்போது எடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அடையாற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஊரூர் குப்பத்தை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, “நகரத்தைச் சரியா திட்டமிட எல்லாரும் ஆயிரம் வழி சொல்றாங்க. என் அறிவுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே வழிதான்,” என்றார் மீனவர் பாளையம்.
“முதல்ல ஆறு சுத்தமா இருக்கணும். அப்பதான், கடல் தண்ணி அதுவழியாக உள்ள போய்கிட்டு, வந்துகிட்டு இருக்கும். அது சரியா நடந்தாலே ஊருக்குள்ள ஒரு கொசு இருக்காத்து, ஊரும் நல்லா இருக்கும். அப்புறம் தன்னால, எவ்வளவு பெருமழையா கொட்டுனாலும், அடிச்சுட்டு வந்து கடலோட சேர்த்து, சென்னை மூழ்காம ஆறும், கடலும் சேர்ந்து பாத்துக்கும். அதுக்கு முதல்ல அதை அழிக்காம இருக்கணும். நகரத்துக்குள்ள ஓடுற ஆற்றைப் பராமரிப்பதுதான் நகரத் திட்டமிடலின் மையப் புள்ளியா இருக்கணும்.”என்கிறார்