கட்டுரை தகவல்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் இருக்கும் பல கோவில்களுக்குள் சென்று வழிபடுவதில் பட்டியல் சாதியினர் இன்னமும் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் இருக்கும் உண்மை நிலையைக் கண்டறியவும், இந்தப் பிரச்னையைக் களைய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அறியவும் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
இந்தக் கள ஆய்வில், இன்றளவும் கோவிலுக்குள் சென்று வழிபடுவதில் மாநிலத்தின் பல கிராமங்களில் பட்டியல் சாதியினர் பல சவால்களை எதிர்கொள்வதை அறிய முடிந்தது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இத்தகைய பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஆனாலும், தமிழ்நாட்டின் பல கிராமங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களிலும் பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்?
"அரசாங்க கோவில்தான். அதுக்காக நீங்க எல்லாம் சாமி கும்பிட வரலாமா?"
"உன் தாத்தா கோவிலுக்குள்ள வரல. உன் அப்பாவும் வரலை. நீ மட்டும் வரலாமா?"
"தனியா கோவில் கட்டி கும்பிடுங்க.. எங்க கோவிலுக்கு ஏன் வரணும்?"
சாதிதிருவண்ணாமலை, தென்முடியனூர் கிராமத்தில் கோவில் வழிபாட்டு உரிமையைக் கோரியபோது பட்டியல் சாதியினர் இந்த வார்த்தைகளை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்களில் உள்ள கோவில்களில் இதே நிலை நீடிக்கிறது. "பழைய வழக்கத்தை மாற்றுவதற்குச் சிலர் முயல்வதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக" ஆதிக்க சாதியினர் கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு ஊராட்சியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
சின்ன வழுதலம்பேடு, பெரிய வழுதலம்பேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் 200 பட்டியல் பிரிவு குடும்பங்களும் 600க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி குடும்பங்களும் வசிக்கின்றன.
விவசாயக் கூலிகள் நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் பொதுமக்கள் வழிபடுவதற்கு எட்டியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பட்டியல் பிரிவு மக்கள் தரப்பில் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,
-
தாங்கள் வசிக்கும் காலனிக்குள் அம்மன் வரவேண்டும்
-
கோவிலில் அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும்
-
மண்டல அபிஷேகம் செய்வதற்கு அனுமதி
-
கும்பாபிஷேகத்திற்கு தங்களின் காணிக்கைப் பணம் இடம்பெற வேண்டும்
கோவிலுக்கு சீல்
'கோவிலுக்கு உங்க காசு தேவையில்லை' என அவர்கள் (ஆதிக்க சாதியினர்) கூறியதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை" என்கிறார் வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.
இதையடுத்து இரு தரப்பையும் அழைத்து கும்பிடிப்பூண்டி டி.எஸ்.பி கிரியாசக்தி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டது. மறுநாள் (ஆகஸ்ட் 9) கோவிலுக்குச் சென்ற பட்டியல் பிரிவு மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
'பட்டா நிலத்துக்குள் பட்டியல் பிரிவு மக்கள் வரக்கூடாது' எனக் கூறி ஆதிக்க சாதியினர் தகராறு செய்துள்ளனர். இதைக் கண்டித்து பட்டியல் பிரிவு மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் வழுதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவி மணிமேகலை உள்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக, வழுதலம்பேடு கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் நேரில் சென்றது. இரு தரப்பிலும் பாதுகாப்புக்கு தலா இரண்டு காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். கோவிலின் முன்பு எஸ்.ஐ ஒருவர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
20 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்
கடந்த 20 ஆண்டுகளாகவே எட்டியம்மனை வழிபட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதியினர் இடையூறு செய்வதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.
கடந்த 1997ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்த பிறகு 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அப்போது, 'எங்கள் காலனியில் சாமி ஊர்வலம் வர வேண்டும்' என பட்டியல் பிரிவு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"இதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் கோவிலுக்குள் சென்று பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது."
மீண்டும் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு 2011ஆம் ஆண்டு திருவிழா நடத்தப்பட்டது. அப்போதும் இதே பிரச்னை ஏற்பட்டு கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறுகிறார் சிவக்குமார்.
"அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் இருப்பதால், அது பொதுவானது, ஒரு சாதியினர் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது என அதிகாரிகள் கூறியதை ஆதிக்க சாதியினர் ஏற்கவில்லை" என்கிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கணபதி.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கும்பாபிஷேக நிகழ்வைக் காணச் சென்ற தங்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த மாலதி.
அதுகுறித்துப் பேசிய மாலதி, நாங்கள் சாமி கும்பிடச் சென்றபோது, சாதியைச் சொல்லித் திட்டினார்கள். எட்டியம்மனை கும்பிட்டால் போதுமென்று வேறு வழியில் சென்றோம். அதிலும் விட மறுத்து அவமானப்படுத்தி அடிக்க வந்தார்கள். அதன் பிறகு சாலையில் உட்கார்ந்து விட்டோம். போலீசார் வந்து சமாதானப்படுத்தி கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்கள்," என்றார்.
பட்டியலின மக்கள் கூறும் தகவல்களை வழுதலம்பேட்டில் வசிக்கும் ஆதிக்க சாதி மக்கள் முழுமையாக மறுக்கின்றனர்.
கோவில் திருவிழாவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே சாதியை முன்னிறுத்தி பட்டியலின மக்கள் தகராறு செய்வதாகக் கூறுகிறார், செங்கேணி என்ற பெண்.
அவர்களுக்கென தனி மருத்துவமனை, பள்ளிக்கூடம் இருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம்கூடத் தனியாகத்தான் செய்கிறார்கள். கோவிலில் மட்டும் உரிமை இருப்பதாகக் கூறிக்கொண்டு ஏன் வரவேண்டும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் செங்கேணி.
"பழைய வழக்கத்தின்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்தனர்," எனக் கூறும் ஊர்ப் பெரியவர் முனியசாமி, அவர்கள் அதன்பிறகு வேண்டுமென்றே பிரச்னை செய்வதாகக் கூறுகிறார்.
"அவர்கள் கேட்டதையெல்லாம் செய்வதாகக் கூறினோம். காணிக்கைப் பணத்தை பூசாரியின் தட்டில் போடுமாறும் கோவிலுக்குத் தனியாகக் கொடுக்க வேண்டாம் என்றும் சொன்னோம். கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில், பொதுவெளியில் வராமல் பட்டா நிலம் வழியாக அவர்கள் வந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்," என்றார் முனியசாமி.
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
இதன்பின்னர், இரு தரப்பிலும் சுமூகத் தீர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இரு தரப்பிலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே நாளில் பட்டியல் பிரிவு மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினார். ஆனால், இந்த நிகழ்வை பிற சமூகத்தினர் முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிட்டனர்.
இதன்மூலம் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறுகிறார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.
‘அனைவரும் சமம்’ என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதை உறுதிப்படுத்தும் வேலையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
"இரு தரப்பினரையும் ஒன்றாக வழிபட வைக்கும்போதுதான் நிரந்தரத் தீர்வு ஏற்படும். எளிய மக்களின் பக்கம் மாவட்ட நிர்வாகம் நிற்க வேண்டும். அதேநேரம், சட்டம் சொல்வதை பிற சமூகத்தினரிடம் எடுத்துக் கூறியுள்ளோம்" என்கிறார்.
படக்குறிப்பு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
கோவில் பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்
திருவள்ளூரைப் போலவே திருவண்ணாமலையிலும் இதே சிக்கலை பட்டியல் பிரிவு மக்கள் எதிர்கொண்டுள்ளனர். தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூர் கிராமத்தில் கடந்த ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்போது அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்தினர்.
இதனால் ஏற்பட்ட மோதலில், தங்களுக்கென தனி கோவிலைக் கட்டும் முடிவை ஆதிக்க சாதியினர் அறிவித்தனர். தற்போது தென்முடியனூர் கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் சென்றது.
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட கிராமத்தில் 6500க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினரும் 1500க்கும் மேற்பட்ட பட்டியல் பிரிவு மக்களும் வசிக்கின்றனர். நாம் சென்ற நேரம் கோவில் பூட்டப்பட்டிருந்தது.
வாரம் ஒருமுறை மட்டும் பூட்டைத் திறந்து பூசாரி பூஜை செய்வதாகவும் பிற சமூகத்தினர் யாரும் கோவிலுக்குள் வருவதில்லை என்றும் கூறுகிறார் தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகன்.
"இங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியல் பிரிவு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 1997ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் சென்றுவிட்டாலும் பொது வழிபாட்டுக்குரிய கோவிலாக இன்னும் மாறவில்லை" என்றார் அவர்.
தென்முடியனூர் - தற்போதைய நிலவரம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கடந்த ஆண்டு நடந்த கோவில் நுழைவு சம்பவத்துக்குப் பின்னர், வெளியில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாககக் கூறுகிறார், தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன்.
"கோவிலுக்குள்ள போய் நாங்க சாமி கும்பிட்ட பின்னாடி, 'கோவிலை விட்டு போயிருங்க'னு அவங்க சொல்றாங்க. இது அரசாங்க கோவில்னு சொன்னா, 'அதுக்குன்னு ஒரு வரைமுறை இல்லையா... உன் தாத்தா கோவிலுக்குள்ள வரல. உன் அப்பாவும் வரலை. நீ மட்டும் வரலாமா?'ன்னு கேட்கறாங்க" என்கிறார் சத்தியசீலன்.
தென்முடியனூர் கிராமத்தில் சுடுகாடு உள்பட அனைத்திலும் சாதிப் பாகுபாடுகள் தொடர்வதாகவும் பட்டியல் சாதி மக்கள் பிற சமூகத்தினரின் தெரு வழியாகச் சென்றாலே தீட்டு பட்டுவிட்டதாகக் கூறி தண்ணீர் ஊற்றுவதாகவும் கூறுகிறார் சத்தியசீலன்.
கோவில் நுழைவு சம்பவத்துக்குப் பிறகு பட்டியலின மக்கள் 20 பேர் மீதும் ஆதிக்க சாதியினர் மூன்று பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார், தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகன்.
“கடந்த ஓராண்டாக பட்டியல் பிரிவு மக்களுக்கு சலூன் கடைகளில் யாரும் முடி வெட்டுவதில்லை” என்கிறார் ஆசிரியர் முருகன்.
கோவில் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னின்று பேசியதற்காகத் தனது பெட்டிக்கடை கொளுத்தப்பட்டதாக கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த இந்திராணி.
"என் கடையை எரித்தது யாரென்று போலீசாரிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்ணாமலையார் கோவில், திருப்பதி கோவில்களுக்கு மட்டும் அனைவரும் செல்கிறார்கள். இங்கு மட்டும் ஏன் தடுக்கிறார்கள்?
'கோவிலுக்குள் சென்றது தவறு என எழுதிக் கொடுக்குமாறு கேட்டார்கள். 'உயிரே போனாலும் கையெழுத்து போடமாட்டேன். 'நீ நீயாவே இரு. கோவில் கோவிலாகவே இருக்கட்டும்' எனச் சொல்லிவிட்டேன்" என்றார் இந்திராணி.
இவரின் கடை கொளுத்தப்பட்டது தொடர்பாக சாதி வன்கொடுமை சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தனிக் கோவில் கட்டப்பட்டதா?
படக்குறிப்பு, இந்திராணியின் கடை கொளுத்தப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், தங்களுக்கென மாரியம்மன் கோவில் ஒன்றை ஆதிக்க சாதியினர் கட்டியுள்ளனர். அங்கு அவர்கள் மட்டும் வழிபாடு நடத்தி வருவதாகவும் புதிதாக ஒரு கோவிலைக் கட்டும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் ஆசிரியர் முருகன் கூறுகிறார்.
பிபிசி தமிழ் அங்கு சென்றபோது, சிறிய அளவிலான அந்தக் கோவில் பூட்டப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியினர் பேச முன்வரவில்லை.
ஆதிக்க சாதியினர் தரப்பில் அ.தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லதம்பி, தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் லோகேஸ்வரியின் கணவர் ஏழுமலை ஆகியோரிடம் பேசியபோது, "நாங்கள் எதையும் கூற விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத பிற சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இத்தனை ஆண்டுகளாக எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லை. கோவில் விவகாரத்தைச் சிலர் பெரிதாக்கி விட்டார்கள். இதனால் ஊருக்குத்தான் கெட்ட பெயர். அவர்களுக்கென தனியாகக் கோவில் இருக்கும்போது இந்தக் கோவிலில் ஏன் உரிமை கேட்க வேண்டும்?" என்றார்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மனது வைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
"இரு தரப்பிலும் சுமூகத் தீர்வை எட்டுவதற்குக் காலம் தேவைப்படும். தென்முடியனூர் கிராமத்தில் கோவில் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என பிபிசி தமிழிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
தொடரும் சாதிக் கட்டுப்பாடுகள்
பழங்காலங்களில் வழிபாட்டு முறைகளில் என்ன மாதிரியான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்ததோ, அதே கட்டுப்பாட்டுகள் தற்போதும் தொடர்வதாகக் கூறுகிறார், திருவள்ளூரில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் கோபி நயினார்.
"எல்லா காலங்களிலும் பொது சமூக வழிபாட்டுக்கான இடங்களாக கோவில்கள் இருந்ததில்லை" எனக் கூறும் கோபி நயினார், "சிறு குழுக்கள், சில சமூகத்தினர், குறிப்பிட்ட நில எல்லைகள் ஆகியவற்றுக்குள் வசிப்பவர்களுக்கானதாக கோவில்கள் இருந்தன.
பிற்காலத்தில் சாதி தீண்டாமையின் மையமாக அது மாறிவிட்டது. கோவில் வழிபாட்டு முறைகளைப் பொருத்தவரை ஜனநாயகபூர்வ சூழல்களை உருவாக்காத வரையில் சண்டை தொடர்வதை நிறுத்த முடியாது" என்றார் கோபி நயினார்.
படக்குறிப்பு, திரைப்பட இயக்குநர் கோபி நயினார்
பெரும்பாலான கிராமக் கோவில்களில் அர்ச்சனை உள்படப் பல்வேறு விதங்களில் 25 வகையான பாகுபாடுகள் பட்டியல் சாதி மக்கள் மீது காட்டப்படுவதாகக் கூறுகிறார் மதுரையிலுள்ள எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.
திருவண்ணாமலையின் போளூர், சேலம் மாவட்டம் திருமலைகிரி, விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆழம்பள்ளம், விருதுநகர் சேதுபுரம் ஆகிய கிராமங்கள் உள்படக் கடந்த 20 மாதங்களில் தமிழ்நாட்டில் 17 குற்ற வழக்குகள் கோவில் நுழைவு தொடர்பாகப் பதிவு செய்யப்படுள்ளதாகக் கூறுகிறார் எவிடென்ஸ் கதிர்.
எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சொல்வது என்ன?
இதை ஆமோதிக்கும் மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவர் புனிதபாண்டியன், கோவில் நுழைவு தொடர்பான புகார்களின் அடிப்படையில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறினார்.
மதுரையில் பாப்பாகுடி கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டபோது, நேரடியாக அங்கு சென்று, மனக் கசப்புகளை மறந்து சரிசமமாக வழிபாடு செய்வதற்கு ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறுகிறார், புனித பாண்டியன்.
"விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளிட்ட சில கோவில் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டதால், ஆணையத்தால் விசாரணை நடத்த முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
படக்குறிப்பு, மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையத் துணைத் தலைவர் புனிதபாண்டியன்
அறநிலையத்துறை அமைச்சரின் பதில்
அறநிலையத்துறை கோவில்களில் பட்டியல் சாதியினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
அவர், "கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு கிராமத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் சுமூகமாகப் பேசி மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாகவும், இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு காணப்பட்டதாகவும்" கூறினார்.
அதோடு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் தற்போது வரை பிரச்னை நீடிப்பதையும் பிபிசி தமிழின் கள ஆய்வில் காண முடிந்தது. இதுதொடர்பாகக் கேட்டபோது, அமைச்சர் சேகர்பாபு, தென்முடியனூர் கிராமத்தில் நிலவும் சாதிப் பாகுபாடு தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
தீண்டாமையின் அனைத்து வடிவங்களும் அரசமைப்புச் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் மாநில எஸ்.சி, எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் புனிதபாண்டியன், "இதுபோன்ற சமூகச் சிக்கல்கள் நேரும்போது, அதை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளை அனைவரும் சமமாக அனுபவிக்கும் வழிவகைகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இருப்பதாக" தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு