நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…
October 28, 2024
வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது)
‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’
எம்.ஜி..சமரவிக்கிரம,
சமூக செயற்பாட்டாளர், கண்டி.
இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.இத்தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பாராளுமன்றத்தில் அதிகரித்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் முனைப்புடன் காய் நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.இது ஒரு வரலாற்று சாதனை என்றால் மிகையாகாது.’நாடு இக்கட்டான தருணத்தில் இருக்கும் போது எனது சகோதரர் ஒருவர் ஆட்சிக்கு வரு வார்” என்று நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மக்கள் விடுதலை முன்னணி யின் முன்னாள் தலைவர் றோஹண விஜேவீர கூறிய கருத்து இன்று மெய்ப் பிக்கப்பட்டிருக்கின்றது.இது ஒரு நல்ல சகுனமாகும்.ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில் ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் என்பன ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் என்று நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இந்த நம்பிக்கை பலன் தரும் என்று கருதுகிறேன்.
இதனடிப்படையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பரவலாக எதிரொலிக்கின்றது.இதற்கேற்ப சுமார் 130 ஆசனங்களை அக்கட்சி பெற்று அளப்பரிய சாதனை படைப்பது திண்ணமாகும்.இந் நிலையானது நாட்டில் பல சாதக விளைவுகள் ஏற்படுவதற்கு அடித்தளமாகும்.பாராளுமன்றம் சிறந்த பல சட்டமூலங்களை உருவாக்கி நாட்டில் நிலவும் தீய கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கான வரப்பிரசாதங்கள் குறைக்கப்படும் நிலையில் மக்கள் இதனால் நன்மையடைவார்கள்.நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு கடன் சுமையும் குறைவடையும் என்று திடமாக நம்பலாம்.
‘சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் மண் கவ்வும்’
எஸ்.எஸ்.குடாபண்டார,
ஓய்வு பெற்ற தலைமைக் கணக்காளர், நுவரெலியா.
நான் ஒரு பெரும்பான்மை இனத்தவனாக இருக்கின்றேன். இலங்கை நாட்டில் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன். இந்நிலையில் பெரும் பான்மை மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு நிகராக சிறுபான்மை மக்களும் உரிமைகள் சலுகைகள் எனப் பலவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.எந்தவொரு இனத்துக்கும் பாரபட்சம் காட்டப்படலாகாது.எல்லோரும் ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் நோக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எனினும் இம்முறை தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.இத்தேர்தல் சிறுபான்மை கட்சிகளை மண் கவ்வச் செய்யும் நிலையே மேலோங்கி காணப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தியின் அலை இப்போது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்த அலைக்கு ஏற்ப வாக்கு வங்கியிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் தேசிய மக்கள் சக்தி 57,40,179 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சாவை சார்ந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு 45,30,902 வாக்குகள் கிடைத்தன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் 22,99,767 வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை தெரிந்ததாகும்.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் வாக்குகள் பல மடங்கு சரிவடையக் கூடும் என்று நம்பப்படுகின்றது.அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் அதிகரிக்கும்.இது பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பிற்கும் வழிசமைக்கும்.
எவ்வாறெனினும் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற்றுக் கொள்ளக் கூடாது.அப்படி பெற்றுக் கொள்ளுமிடத்து இது பாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாக அமைந்துவிடும்.சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு நிற்கின்றனர்.தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக் கொண்டு பிழையான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த முரண்பாட்டு நிலையானது பெரும்பான்மை கட்சிகளுக்கு வாய்ப்பாக போய் விடுகின்றது.
இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றனர்.பன்மைக் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது.ஒரு கொத்தில் தனி ஒரு மலர் இருப்பதைக் காட்டிலும் பல மலர்கள் சேர்ந்திருப்பதே அழகாகும்.இந்த வகையில் இலங்கை மாதாவிடத்தில் எல்லா இனங்களும் பல்வகைமை கலாசாரத்தோடு இணைந்து வாழ்வதே அழகாகும்.இதற்கு அடித்தளமிடும் வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்.இனவாதம் மற்றும் மதவாதத்தால் ஏற்கனவே இலங்கை தேசத்தின் தேகத்தில் தழும்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதனை எவரும் மறந்து செயற்படுதல் கூடாது.
‘கடனால் சூழப்பட்ட தீவு’
கே.கே.என்.நந்தகுமார,
செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர், பொலன்னறுவை.
கடந்தகால ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற அரசியல் நடவடிக்கைகள் காரணமாக நாடு இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது.இதற்கும் மத்தியில் இரண்டு தேர்தல்கள் இந்த ஆண்டில் நடக்கின்றன.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2025 ம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.அத்தோடு இந்தியா அதிகாரப்பகிர்விற்கு வலுவூட்டும் வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.எனினும் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
‘ கடலால் சூழப்பட்ட இலங்கை இப்போது கடனால் சூழப்பட்ட’ ஒரு நாடாக மாற்றம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் மேலெழுந்து வரு கின்றன.இதற்கும் மத்தியில் அடிக்கடி தேர்தல்கள் இடம்பெறுவது நாட்டிற்கு உகந்ததல்ல.நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்வதாகவே இது அமையும்.எனவே தேர்தல்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததன் பின்னர் மக்களின் தேவைகளை புறந்தள்ளி அவர்களை கைகழுவி விடும் நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதனாலேயே பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்று பொதுமக்களின் குரல் கடந்த காலத்தில் ஓங்கி ஒலித்தது.
இம்முறை தேர்தலில் இது முழுமையாக சாத்தியமாகாவிட்டாலும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் இம்முறை பாராளுமன்றத்தில் புதிய முகங்களாகவே இருக்கப்போகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும்.அத்தோடு முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் பலர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளனர்.88 வருட தேர்தல் வரலாற்றினைக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் எவரும் இத்தேர்தலில் போட்டியிடாததும் ஒரு சிறப்பம்சமாகும்.
அத்தோடு சமகாலத்தில் நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை 1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் அமைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது.விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறு பான்மையினரின் பிரதிநிதித்துவ இருப்பினை பாதுகாத்துள்ளது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுமிடத்து புதிய அரசியல் யாப்பினை முன்வைக்கப் போவதாக கூறிவருகின்றது.
இதன் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்.புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கும் ஏதுவாகலாம்.இதனை புரிந்து கொண்டு சகல சிறுபான்மை கட்சிகளும் புரிந்துணர்
வின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.முரண்பாடுகளையும் சுயநலவாதங் களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு சமூகநலன் கருதி ஐக்கியத்துடன் எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலை சந்திக்க சகலரும் முன் வருதல் வேண்டும்.
‘அரசியலில் திருப்பு முனை’
ஏ.ஜே.ஆர்.அழகக்கோன்,
அரகலய போராட்டக்காரர், கொழும்பு.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரகலய போராட்டத்தினை நாம் மறந்தோ அல்லது மறுத்தோ செயற்பட முடியாது.இப்போராட்டம் பல்வேறு விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தது.இதேவேளை அரகலய போராட்டத்தின் காரணமாக பல கூட்டுக் கட்சிகளின் இணைப்பான தேசிய மக்கள் சக்தி தன்னை பலப்படுத்திக் கொண்டது.இதன் எதி ரொலியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பக்கபலமானது.
அரகலய என்னும் இளைஞர் எழுச்சியில் கவரப்பட்ட இளைஞர்கள் கொள்கைக்காக போராடினர்.இந்தப் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரும் களமிறங்கியுள்ளனர்.இவர்கள் இத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு வாய்ப்பாகவும் திருப்பு முனையாகவும் அமையும்.
இளைஞர்களிடத்தில் ஒரு தூரநோக்கு காணப்பட்டது.ஒளிமயமான நாட்டை கட்டி யெழுப்பும் நோக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கை கோர்த்திருந்தனர்.இது சகலரிடத்திலும் அவர்கள் குறித்து ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஈர்ப்பின் வெளிப்பாட்டினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காண முடியும்.நாட்டின் இளைஞர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.மலையக இளைஞர்களும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.இந்நிலையானது கணிசமான மாற்றத்தை சகல துறைகளிலும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நடை முறையில் உள்ளது.இது சாதக மற்றும் பாதக விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது.இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்துகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து இதற்கான அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் பொறுத் திருக்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பலமான எதிர்க்கட்சி ஒன்று உருவாக வேண்டும்.இது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு உந்துசக்தியாக அமையும்.இதை விடுத்து தனியொரு கட்சி பெரும்பான்மையை பெற் றுக் கொள்ளுமிடத்து அது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதோடு சர்வாதிகாரம் மேலோங்குவதற்கும் வழிகுப்பதாகவே அமையும்.கூட் டுக் கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியமைக்கப் படுவதே சிறந்ததென கருதுகின்றேன்.
https://www.ilakku.org/நாடாளுமன்றத்-தேர்தல்-ச/