ஊர்ப்புதினம்

ஜனாதிபதி அநுர தலைமையில் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத்திட்டம் எதிர்வரும் புதன்று ஆரம்பம்

3 hours 11 minutes ago

Published By: DIGITAL DESK 2 03 APR, 2025 | 04:53 PM

image

(இராஜதுரை ஹஷான்)

2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு காலப்பகுதில் அமுல்படுத்தப்படவுள்ள ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும்  புதன்கிழமை (09) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழிப்பு என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு  மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது அந்தப் பொறிமுறையை வலுப்படுத்தும் முதன்மையான அரச கட்டமைப்பாக காணப்படுகிறது.

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் வலுவான ஊழலுக்கு எதிரான தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் முதன்மைப் பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஊழல் எதிர்ப்புக் கொள்கை உருவாக்கம் மற்றும் கண்காணித்தல் வரையான ஆணைக்குழுவின் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் உட்பட ஊழலுக்கு எதிரான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊழலுக்கு எதிரான  ஐக்கிய  நாடுகளின் சமவாயத்தின் 5ஆவது பிரிவின் கீழான கடப்பாடுகளுக்கு அமைவாக  இலங்கையில் தயாரிக்கப்பட்ட  முதலாவது தேசிய செயற்திட்டம் (2019-2023) 2019.02.05 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது.

2019-2023 காலப்பகுதிக்கான தேசிய செயற்திட்டத்தின் அடைவுகள் மீளாய்வுக்கு உட்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட விடயங்கள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் ஒழிப்பு எதிர்ப்பு செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில்  தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரின் பங்களிப்புடன் 2025-2029 வரையான காலப்பகுதிக்கான  புதிய ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் இறுதி வரைவு, 2025.01.21 ஆம் திகதியன்று தொடர்புடைய தரப்பினரின் பரிசீலனைக்காக ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்  அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211043

மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம் - ஏறாவூர்பற்றில் உதவித்திட்டம்

3 hours 17 minutes ago

03 APR, 2025 | 08:13 PM

image

"மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில் ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்.

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 850 மாற்று திறனாளிகள் உள்ளனர்.

இவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை ஏர் முனை மாற்று திறனாளிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இன்றை கூட்டத்தில் ஏறாவூர் பற்று மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட நிதியுதவியை வழங்குவதற்கு சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் முன் வந்ததோடு அதனை ஆரம்பிக்கும் முகமாக முதல் மாதத்திற்கான காசோலையை சங்க நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார். அத்துடன் ஒரு வருடத்திற்கான நிதியுதவியையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு  தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

ஏறாவூர் பற்றில் உள்ள மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான நிரந்தர பந்தல், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதற்கான உதவிகளை புலம்பெயர் சமூகம் ஊடாக பெற்றுத் தருவதாகவும், மாற்று திறனாளிகள் குடும்பத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தேவைப்படும் உதவிகளை பெற்று தருவதற்கும், விசேட தேவையுடைய குடும்பங்களின் சில சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், திடீர் அனர்த்தங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படும் போது மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கான ஒரு தொகை நிதியை திரட்டுவதற்கான உதவிகளை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக அங்கு இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது அடுத்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து மாற்று திறனாளிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-04-03_at_4.12.04_PM.

WhatsApp_Image_2025-04-03_at_4.12.01_PM_

WhatsApp_Image_2025-04-03_at_4.12.01_PM.

WhatsApp_Image_2025-04-03_at_4.11.59_PM_

https://www.virakesari.lk/article/211062

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடக்கிறது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 hours 22 minutes ago

03 APR, 2025 | 06:55 PM

image

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குரியது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (03) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனை கூறினார்.  

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.  

ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என்றார். 

https://www.virakesari.lk/article/211061

மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

7 hours 7 minutes ago

அபு அலா 

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், அவருக்கு    குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து புதன்கிழமை (02) தீர்ப்பளித்தார்.

 கிண்ணியா கட்டையாறு  மதரஸா வீதியில் வசித்து வரும்  38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

கிண்ணியா கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே  30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (02) திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 

மதரஸாவுக்குசென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilmirror Online || மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம் - ஆழியவளையில் முறுகல் நிலை!

7 hours 9 minutes ago

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; கடந்த 2024ஆம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆயினும் பொதுச்சபையினதும், நீரியல்வளத் திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் அடாத்தாக உழவு இயந்திரத்தை பாவித்து தொடர்ந்து கரைவலை தொழில் புரிந்துவருவது மீனவர்கள் இடையே முறுகல் நிலையை உண்டுபண்ணி வருகின்றது.

பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமான முறையில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதியது அம்பலமாகியுள்ளது.

செயற்பாட்டில் இருந்த ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து விலகிச் சென்றதால் கடந்த பொதுச்சபை கூட்ட தீர்மானத்தில் செயலாளர் ஒருவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் காலமாக இருப்பதால் தேர்தல் முடியும்வரை தற்பொழுது தெரிவு செய்யப்பட்ட செயலாளருக்கு  படகு பதிவு செய்தல், படகு விற்பனை, அங்கத்தவர்களுக்கு வங்கி கணக்கு பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு கடிதம் வழங்கவே பொதுச்சபையால் அனுமதிக்கப்பட்டது 

ஆயினும் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மிக இரகசியமான முறையில் மீனவர்களின் தீர்மானத்தை மீறி உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி நீரியல்வளத் திணைக்களத்திற்கும், பாதுகாப்பு கோரி மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினரின் அண்மைக்கால செயற்பாடுகள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நிர்வாகம் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர் 

அப்பகுதி மீனவர்களின் தீர்மானத்தை மீறி இரகசியமான முறையில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி கடிதம் எழுதிய ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர், தலைவர் ஆகியோர் மீனவர்கள் இடையே இடம்பெறும் முறுகல் நிலைக்கு பொறுப்பென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி இரகசிய கடிதம் - ஆழியவளையில் முறுகல் நிலை!

தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம்

7 hours 20 minutes ago

03 Apr, 2025 | 05:20 PM

image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விலங்குகள் நலனுக்கு எதிரானது, நெறிமுறையற்றது, விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது மற்றும் நீண்டகால மனித - நாய் மேலாண்மை திட்டங்களை மீறுகிறது என்று தெரிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் குழுவான RARE Sri Lanka, இன்று வியாழக்கிழமை (03) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம் | Virakesari.lk

மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

7 hours 20 minutes ago

2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 722,276 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 118,315 ஆகும்.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து 93,568 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 69,705 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 50,201 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 39,513 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 43,366 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 27,353 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை | Virakesari.lk

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

7 hours 33 minutes ago

New-Project-60.jpg?resize=750%2C375&ssl=

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என்றும் குறிப்பிட்டார்.

பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ’இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த UNESCO உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர உபாய மார்க்கங்களை கலந்துரையாடும் வகையில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.

எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம்.

கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.

கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

https://athavannews.com/2025/1427318

இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

7 hours 35 minutes ago

IMG-20250403-WA0068.jpg?resize=750%2C375

இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

இலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதுடன் இலங்கையின் கடலடிப் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆராயும் உரிமையை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து பிரதமர் மோடி விவாதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது இந்திய விஜயத்தின் போது இது குறித்து ஆதரவு தெரிவித்திருந்தார்

பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார மீது அழுத்தம் செலுத்தி இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க வேண்டும் என சங்க சந்திம அபேவர்தன இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பித்த கடிதத்திலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பத்தில் அந்தக் கடிதத்தை ஏற்க மறுத்த நிலையில் சுமார் ஒரு மணி நேர காத்திருப்பின் பின்னர் கடிதத்தை வழங்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427326

ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!

7 hours 37 minutes ago

New-Project-58.jpg?resize=750%2C375&ssl=

ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!

16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிட இன்று (03) வழங்கினார்.

2019 பெப்ரவரி 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸில் நடத்தப்பட்ட சோதனையின் போது 16.88 கிராம் ஹெராயினுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஹெராயின் வைத்திருந்தமை, கடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதன்படி, 47 வயது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

https://athavannews.com/2025/1427311

நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா?; சி.ஐ.டியில் விசாரணைகள் ஆரம்பம்!

7 hours 40 minutes ago

03 APR, 2025 | 04:16 PM

image

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/211035

இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு

11 hours 26 minutes ago

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் இலங்கைச் சட்டப்படி அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

அந்த விசைப் படகுகளை மீன் பெருக்கத் திட்டத்தின் கீழ் நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று மூழ்கடிக்க கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்து

இதற்காக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்டு, மாவட்டக் கடற்றொழில் திணைக்களங்கள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட படகுகளே நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விசைப் படகுகள் சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும் கடல் நீரும் உட்புகுந்து காணப்படுவதனால் அவற்றை அவை தரித்துள்ள கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு | Government Decides To Sink Indian Boats

மயிலிட்டித் துறைமுகத்தில் காணப்படும் இத்தகைய படகுகளை அகற்றுமாறு கடற்றொழிலாளர்களுடன் துறைமுக அதிகார சபையும் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இவற்றைச் சீர்செய்யும் வகையிலும் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள படகுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நேரில் பயணித்து அவதானித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார்.

மேலும் விரிசல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து திரும்பியதும் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவரை இது தொடர்பில் இரகசியம் காக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இலங்கை போக்குவரத்து சபையால் கை விடப்பட்ட 15 பேருந்துகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன.

இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு | Government Decides To Sink Indian Boats

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமது படகுகளை மீட்டுத் தருமாறு இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோது, நடுக்கடலில் அவற்றை மூழ்கடிக்கும் இலங்கையின் திட்டம் இந்திய கடற்றொழிலாளர்களின் மனநிலையில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகின்றது.

ஏனெனில், இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், 2022ஆம் ஆண்டு இதேபோன்று ஏலம் விடப்பட்ட சமயம் இந்தியாவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது யாழ்ப்பாணத்தில் 57 படகுகளும், மன்னாரில் 7 படகுகளும், கிளிநொச்சியில் 10 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளாக உள்ளன.

இவற்றையே நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கிடையில் இந்தப் படகுகளில் சிலவற்றைத் தங்கள் பாவனைக்குத் தருமாறு இலங்கைக் கடற்படை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றது என்று மற்றொரு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 

https://tamilwin.com/

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம் - ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர

13 hours 12 minutes ago

03 APR, 2025 | 11:57 AM

image

இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார். 

தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உவிந்து விஜேவீர மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்கின்றோம். இதற்காக எதிர்வரும் காலங்களில் எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் எடுப்போம். 

ஏனென்றால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியம் என நாம் நம்புகின்றோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாம் பாரிய மாற்றங்களை கண்டோம்.  

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான கட்சிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த கால அரசியலில் இடம்பெற்ற போலி வாக்குறுதிகள் மற்றும் திருப்தியற்ற செயற்பாடுகள் குறித்து மக்கள் அனைவரும் நன்கு சிந்தித்து புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த பின்னணியில் இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என உவிந்து விஜேவீர மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/211005

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை!

13 hours 46 minutes ago

1000352186.jpg?resize=750%2C375&ssl=1

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற நிலைமையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமருக்கான மகஜரொன்றை யாழ் இந்திய தூதரகத்தில் இன்று கையளித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர்

2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது.

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம்.

அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை திர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டது

அத்துடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும். எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்ளொரு மட்டுப்படுத்தலாகும்.

ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது “செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்” எனப் பிரகடனப்படுத்தியது.

இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும்.

13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டவ இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவற்றது.

போரின் போதும் போர் முடிவுற உடனடிக் கால கட்டத்திலும் பொது மக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பயிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவமயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர் அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபலங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும்.

எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம்.

அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்றுன் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427280

அருண் தம்பிமுத்து கைது

13 hours 54 minutes ago

அருண் தம்பிமுத்து கைது

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் பாசிக்குடாவில் வைத்து சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Thinakkural.lk
No image previewஅருண் தம்பிமுத்து கைது
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் […]

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை!

13 hours 56 minutes ago

New-Project-44.jpg?resize=750%2C375&ssl=

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை!

2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட கண்டுபிடிப்புகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பல்வேறு அளவுகளில் 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிதியைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

அதன்படி, நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விவரங்களைப் பெறுவதற்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் நேற்று (2) சிஐடி அதிகாரிகள் உத்தரவு கோரியிருந்தாகவும் கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1427254

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

13 hours 58 minutes ago

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

03 Apr, 2025 | 11:16 AM

image

எதிர்வரும்  தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இம்மாதம் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக  ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதம் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களுக்கு முதலாம் கட்டமாக விசேட  ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள  புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் கொழும்புக்குத் திரும்புபவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரண்டாம் கட்ட விசேட ரயில் சேவைகள்  முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை,  பண்டிகைக் காலத்திற்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு வசதியாக  9 ஆம் திகதி முதல் 500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/210995

தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் - றஜீவன் எம்பி

14 hours 1 minute ago

தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் - றஜீவன் எம்பி

03 Apr, 2025 | 11:11 AM

image

நீண்ட காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு  தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாகத்தை நவாலிப் பகுதியில் புதன்கிழமை (02) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பயிரை விதையிட்டு வளர்த்து பின்னர் பூத்து காய், கனி தரும் வரை மக்கள் அந்த பயிரை பாதுகாத்து பலன் பெறுவர். அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் கனிகளைப் பெறும் வரை மக்கள் ஆதரவு தந்து அதன் பயனைப் பெற வேண்டும்.

இந்த முறையும் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து கிராமங்களை எம்முடன் இணைந்து மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நவாலி பிரதேச சபை வேட்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

43__1_.jpg

43__2_.jpg

https://www.virakesari.lk/article/210997

மன்னார் தீவு ; சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியமான உணர்வுபூர்வமான பகுதியை பாதுகாப்பது அவசியம் - சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

14 hours 7 minutes ago

மன்னார் தீவு ; சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியமான உணர்வுபூர்வமான பகுதியை பாதுகாப்பது அவசியம் - சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

03 Apr, 2025 | 11:34 AM

image

காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை  அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என சூழல்;  பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னார் தீவு 126.5 சதுரகிலோமீற்றர் அளவு பகுதியை கொண்டது,அதனை சுற்றி பாதுகாக்கப்பட்ட பல பகுதிகள் உள்ளன.மேலும் இங்கு சுமார் 70,000 மக்கள் வசிக்கின்றனர்,பிரதானமாக மீன்பிடித்தொழில் ஈடுபட்டுள்ளனர்.

சூழல் நீதிக்கான  நிலையம், வனவிலங்கு  மற்றும் இயற்கை  பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம் உட்பட்;ட அமைப்புகள உத்தேச 250 மெகாவோட்  காற்றாலை மின் திட்டம் இந்த தீவில் அமைவதை   தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தன.

அதானிகிறீன்ஸ் எனேர்ஜி லிமிடட் இலங்கை முதலீட்டு சபைக்கு இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து ,சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்;றத்தின் முன்னிலையில் இதனை அறிவித்ததை தொடர்ந்த  மனுக்களை சம்மந்தப்பட்ட தரப்பினர் விலக்கிக்கொண்டனர்.

மீள்சக்தியை  பிரதான சக்தியாக கொண்டு  நீண்டகால மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தி;ன் திட்டத்தை மேற்குறிப்பிட்ட தரப்புகள் முழுமையாக வரவேற்கும் அதேவேளை மின்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான எந்த இடத்தை தெரிவு செய்வதற்கு முன்னர் மூலோபாய மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

486191559_1028036099187545_5499200086533

மன்னார் தீவின் முக்கியத்துவம்

மணல்மேடுகள்,கடல்புற்கள்,சேற்று உப்பு நிலம், பவளப்பறைகள்,உலர் மண்டல புதர்க்காடு,மற்றும்  வனதிணைக்களம் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியன முக்கியமான சுற்றுசூழல் அமைப்பு  சேவைகளை வழங்குவதுடன்,அபூர்வமான, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களிறகு( இவற்றில் பல  சர்வதேச அளவில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளவை) பாதுகாப்பை அளிக்கின்றன.

மத்திய ஆசிய பறக்கும்பாதைக்குள் உள்ள வலசப்பறவைகளிற்கு முக்கியமான தளமாக சர்வதேச அளவில் மன்னார் தீவு  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் 15 மில்லியன் வலசப்பறவைகள் வருகின்றன.

இலங்கையின் அமைவிடம் இலங்கையை உலகின்  மிக முக்கியமான பறவை வாழ்விடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இலங்கை  வலசப்பறவைகள் பாதுகாப்பு தொடர்பான சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் மூலம் இதன் அதன் முக்கியத்துவத்தை  ஏற்றுக்கொண்டுள்ளது.

சூழல் விவகார  அமைச்சு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு மன்னார் தீவை சூழல் அடிப்படையில் உணர்வுபூர்வமான பகுதியாக இனம்கண்டுள்ளது.

52 காற்று விசையாழிகள்  220 மீற்றர் உயரத்தில்  இந்த தீவில் கட்டப்பட்டுள்ளமை இந்த பகுதியை பொறுத்தவரை அளவுகதிகமானது என்பதுடன்  பலவீனமான சுற்றுசூழலிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

உள்ளுர் மக்களின்  சமூக பொருளாதார  தாக்கம்

இந்த உத்தேசதிட்டம்70,000 மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது,குறிப்பாக மீனவசமூகத்திற்கு பெரும் பாதிப்புகளை  ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே  மீனவசமூகத்தினை ஏற்கனவே கரைக்கு வெளியே தள்ளியுள்ளன என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர், பாரம்பரிய மீன்பிடிமுறைகளில் தொடர்வதை கடினமான விடயமாக்கியுள்ளன.

46 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், தங்கள் எதிர்ப்புகளை மனுக்கள், மூலம் வெளியிட்டனர்,விசையாழி அதிர்வுகள் மீன்களை ஆழ்கடலை நோக்கி தள்ளிவிடும் என தெரிவித்தனர்.இது அவர்களது  வருமானத்திற்கு மாத்திரமல்ல பாதுகாப்பிற்கும் ஆபத்தான விடயம்.

மன்னாரில் காணப்படும் வெள்ளநிலைமைக்கும் இந்த விசையாழிகளே காரணம்.மேலும் பல விசையாழிகள் அமைக்கப்பட்டால், பல சமூகங்கள் வாழமுடியாத  பகுதியாக மன்னார் தீவு மாறும்.

சுற்றுசூழல் சுற்றுலா

சுற்றுசூழல் நிபுணர்கள் மன்னார் தீவில் சுற்றுசூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கவேண்டும் என பரப்புரை செய்கின்றனர்.சர்வதேச வலசப்பறவைகளின்  தளம் என்ற மன்னார் தீவின் முக்கியத்துவத்தை பயன்படுத்தவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அணுகுமுறை தீவின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதேவேளை நிலையான வருமானத்தை கொண்டுவரும்.

சர்ச்சைக்குரிய காற்றாலை மின்திட்டம் போல அல்லாமல், சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது  சூழல் பாதுகாப்பு  மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின்  அர்ப்பணிப்புடன் தொடர்புபட்ட இணைந்த விடயமாகும்.

முன்னோக்கி நகருதல் -  மூலோபாய  திட்டமிடலிற்கான அழைப்பு

மன்னார் தீவை பாதுகாப்பது குறித்த அரசாங்கத்தின்  அர்ப்பணிப்பு,  சமநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.இது வலுசக்திதிட்டங்களால்  இலங்கையின் இயற்கை சூழல் மற்றும்  சமூக நலன் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்கின்றது.

சூழல் நீதிக்கான  நிலையம், வனவிலங்கு  மற்றும் இயற்கை  பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம்  ரொகான் பெத்தியாகொட ஆகியோர் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்திற்காக மன்னார்தீவிற்கு பதில் வேறு இடத்தை ஆராயவேண்டும்; வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முன்னைய அறிக்கைகளில்  காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதற்கு மன்னாரே மிகவும் பொருத்தமற்ற இடம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புணர்வு  மீள்சக்தி திட்ட திட்டமிடல் சூழல் மற்றும் உள்ளுர் வாழ்வாதாரங்களை பலிகொடுக்காமல் பேண்தகு முன்னேற்றத்தை அடைவதற்கு   முக்கியமானது.

நாங்க்ள மீள்சக்தி திட்டங்களை உருவாக்கும்  அரசாங்கத்தின் முயற்சிகளை  முழுமையாக வரவேற்கின்றோம்.

அதேவேளை மன்னார் தீவை விட பொருத்தமான  இடங்களை  அரசாங்கம் ஆராயவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை  அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/211004

இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!

14 hours 17 minutes ago

இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!

US President Donald Trump delivers remarks on reciprocal tariffs as US Secretary of Commerce Howard Lutnick holds a chart during an event in the Rose Garden entitled "Make America Wealthy Again" at the White House in Washington, DC, on 2 April, 2025.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார்.

உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ததுடன், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 346 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://www.samakalam.com/இலங்கை-பொருட்களுக்கு-வரி/

Checked
Thu, 04/03/2025 - 17:46
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr