
Columnsஜெகன் அருளையா
கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்புவளரும் வடக்குஜெகன் அருளையா
ஜெகன் அருளையா
திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை செய்ண்ட் பட்றிக்ஸ் கல்லூரியில் படித்தார். யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரி யாழ் கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருக்கிறது. இனப்போர் உக்கிரமாக இருந்த காலத்தில் ஞானேந்திரன் பிலிப்பைன்ஸில் இருந்த அவரது தந்தையின் சகோதரருடன் வசிப்பதற்காகச் சென்றுவிட்டார். இங்கு தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவர் 2002 இல் தாயகம் திரும்பினார். போரிலிருந்து தப்பிக்கவும், புதிய சந்தர்ப்பங்களைத் தேடியும் பெரும்பாலான இளையோர் வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த காலமது. இப்போது போர் முடிந்து விட்டது ஆனாலும் புதிய சந்தர்ப்பங்களைத் தேடி மத்திய கிழக்கு பாலைவனங்களையும், உடல் விறைக்கும் ரொறோண்டோவையும், மாசடைந்த காற்றைச் சுவாசிக்கவென லண்டனை நோக்கியும் இளையோர் இன்னும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஞானேந்திரனுக்கோ இலங்கை இன்னும் ஒரு சந்தர்ப்ப பூமியாகவே விளங்குகிறது. அவர் ஒரு வியாபாரிகள் குடும்பத்திலிருந்து வந்தவரல்ல; முதலீடு செய்வதற்கான பணமும் அவரிடம் இருந்திருக்கவில்லை. எனவே அவருக்கு இருந்த ஒரே வழி வேறு நிறுவனங்களில் பணியாற்ற இணைந்து கொள்வதே. முதலில் அவர் இணைந்தது வியாபார சாதனங்களைச் சந்தைப்படுத்தும் ‘சிலோன் பிஸினெஸ் அப்பிளையன்ஸெஸ்’ (Ceylon Business Appliances (CBA)) என்ற நிறுவனத்தில். அதைத் தொடர்ந்து ஒரு பயண நிறுவனத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றினார்.
முதல் வியாபார முயற்சிக்கான ஞானேந்திரனின் அதிரடிப் பிரவேசம் சொந்தமானதொரு பயண நிறுவனம். கொழும்பு, வத்தளையில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்திற்குப் பெயர் ‘ஸ்கைவே இண்டர்நாஷனல்’ (Skyway International). துரதிர்ஷஷ்டவசமாக இணையவழி மூலம் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கும் பழக்கம் இக்காலகட்டத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. பயணச் சீட்டுகளை விற்று வருமானம் சம்பாதிக்கும் உலகின் பல பயண முகவர்களது வயிற்றிலடிக்கவென வந்த இத் தொழில்நுட்பம் ஞானேந்திரனையும் இத் தொழிலிலிருந்து துரத்தி விட்டது. 2014 இல் ஞானேந்திரன் ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் இணைந்தார். விற்பனை நிர்வாகியாக இங்கு ஒரு வருடம் கடமையாற்றிய காலத்தில் இன்னுமொரு சந்தர்ப்பம் அவரைத் தேடி வந்தது. அதை அவர் இறுகப்பிடித்துக்கொண்டார்.
த் தோழன் ஒருவர் லண்டன் நகரின் அழகிய தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் போல்ஸ் தேவாலயத்துக்கு அருகே ஒரு யப்பானிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். லண்டன் நகர மையத்தில் சட்ட, வியாபார, சுற்றுலாத் துறைகள் சங்கமிக்கும் சதுக்கத்தில் இருந்தது இந்த உணவகம். சிறந்த செலவாளிகள் எனப்படும் பணம் படைத்தோர் உலாவும் இடம் இது. யப்பானியரின் சிறந்த தெரிவாக இருப்பது கடலுணவு. ஞானேந்திரனும் அவரது சகாவும் லண்டன் வாழ் மேற்தட்டு வாசிகளின் சுவையறிந்து அவர்களுக்கு ‘யாழ்ப்பாணக் கடலுணவைத்’ தயாரித்து விருந்தோம்பினார்கள்.

விளைவு யாழ்ப்பாணத்து குருநகர் மீன்பிடித் துறமுகத்தை ஆரம்பமாகவும் லண்டன் உணவகத்தை முடிவாகவும் கொண்ட உணவுச் சங்கிலியைப் பாதையாகக்கொண்டு ஞானேந்திரனின் ஏற்றுமதி வர்த்தகம் கருக்கொண்டமை. இருப்பினும் அதற்குத் தேவையான ஆரம்ப முதலீடு அவரிடம் இருக்கவில்லை. இதை நிவர்த்திக்க வழமையாக யாழ்ப்பாணத்தார் எதைச் செய்வார்களோ அதையே தான் ஞானேந்திரனும் செய்தார். மனைவியின் தங்க நகைகள் அடைவுகடைகளில் முடங்கிக்கொண்டன. எனது சில வருட கால யாழ்ப்பாண வாழ்வில் நகை அடகு பற்றி நான் கற்றுக்கொண்டது அதிகம். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத, தனது பெறுமதியை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒரு பண்டம் தங்கம். அவ்வப்போது பணமுடை ஏற்படுவதிலிருந்து தப்புதல் முதல், முட்டை, அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது வரை, சிதைந்துபோன கூரையைச் செப்பனிடுவது முதல் வியாபார முதலீடுகள் வரை யாழ்ப்பாணத்தாருக்குக் கைகொடுத்து வருவது இந்த நகை அடகு சமாச்சாரம்.
முதலீட்டுக்குப் பணம் கிடைத்தமை மட்டும் ஞானேந்திரனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை; இவ்வியாபாரம் பற்றிய அறிவும் அவருக்குத் தேவையாகவிருந்தது. உலகமெங்கணும் வணிகர்கள் தேடுவது ஏமாறக்கூடிய வாடிக்கையாளரையே. ஒருவரது அறியாமை இன்னொருவரின் சட்டரீதியாகப் பணம் பண்ணும் சந்தர்ப்பம். தமிழ் பேச முடியாமையினால் யாழ்ப்பாணத்து வணிகர்களால் நான் பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தாலும் என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதலாகவே கறந்துகொள்ளும் சாதுரியத்தை வணிகர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள்.
ஞானேந்திரன் சுமார் ஆறு மாதங்களாக, காலை வேளைகளில், 5 மணி முதல் 9 மணி வரை, குருநகர் மீன்பிடித் துறைமுகத்தில் உட்கார்ந்திருப்பார். படகுகள் கரையேறுவதையும் மீன் சந்தை பேரம் பேசுதல் கலகலப்படைவதையும் அவதானிப்பார். வலைஞர்களும் வணிகர்களும் சங்கமிக்கும் இம் மீனுலகத்தில் பணத்தைக் கைமாற்றும் அற்புத வித்தையை அவர் அங்குதான் கற்றுக்கொண்டார். புதிதாகச் சிக்கிய மீனுக்கும் இதர கடலுயிரினங்களுக்குமிடையேயான வித்தியாசங்களை அவர் புரிந்து கொண்டார். வெறுமையான படகுகளும் நிரம்பிய படகுகளும் கரைசேரும் நாட்களில் கால நிலை, பருவக்காற்று விலை என ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் வித்தைகள் இப்போது அவருக்கு அத்துபடியாகியது. கடலுயிரினங்களின் கண்களைப் பிதுக்கிப்பார்த்து அவற்றின் நிறங்கள், உடல் மென்மையைக் கொண்டு அவற்றின் தராதரத்தைப் பிரித்துப்பார்க்க அவர் கற்றுக்கொண்டுவிட்டார். லண்டன் செயிண்ட் போல்ஸ் உணவக விருந்தினரது நாவுக்குச் சுவையளிக்கவல்ல சிறந்த கடலுணவைத் தரம்பிரித்தறிய அவரால் இப்போது முடிந்தது.
மீன் இப்போது வான் வழியாக ஏற்றுமதி செய்யப்படவேண்டும். ஒரு தொன் எடைக்குக் குறையாமல் ஏற்றுமதி செய்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்ற நிலை. ஆனால் லண்டனின் பிரத்தியேக உணவகத்திற்க்கு இது தேவைக்கதிகமானது. இதனால் லண்டனில் வாழும் தரகர் ஒருவருடன் ஞானேந்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். இத்தரகர் பெரும் தொகையான கடலுணவை இறக்குமதி செய்து லண்டனிலுள்ள சிறிய கடைகளுக்கு விநியோகம் செய்பவர். சிறிது காலத்தில் இந்த வியாபார உறவு கசப்பாகி முறிவில் முடிந்தது. ஆனால் இவ்வுறவின் போது ஞானேந்திரன் இன்னுமொரு வாடிக்கையாளரைச் சந்தித்தார். பிரித்தானியாவில் 4 கடைகளுக்குச் சொந்தக்காரரான ஒரு இந்தியரே அவர். 2017 இல் ஆரம்பித்த இந்த வணிக உறவு இப்போதுவரை தொடர்கிறது. வளர்ச்சியடைந்த ஞானேந்திரனின் வணிகம் மேலும் பல ஏற்றுமதி வணிகர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்தது.
காசாகும் கடலட்டை
கடலுணவு வியாபாரம் காத்திரமான இலாபத்தை ஈட்டிக்கொடுக்கவும் ஞானேந்திரனது பார்வை கடலட்டைப் பண்ணை மீது தாவியது. இது ஞானேந்திரனுக்கு முற்றிலும் புதிய சமாச்சாரமல்ல. 1970 களில் அவரது தாத்தா உள்ளூர் மீனவர்கள் மற்றும் சுழியோடிகளிடமிருந்து கடலட்டைகளை வாங்கி உலரவைத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தவர். சிறு வயதுகளில் ஞானேந்திரனும் அவரது நண்பர்களும் உலர்ந்த கடலட்டைகளால் ஒருவருக்கொருவர் எறிந்து விளையாடுவது வழக்கம். இக்கடலட்டைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவையல்ல. யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள ஏறிகளிலும் குளங்களிலும் இவை சாதாரணமாகக் கிடைக்கின்றன.
யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரமாக இருக்கும் தீவுகளில் ஒன்றான லைடன் தீவிலிருக்கும் அல்லைப்பிட்டி கிராமத்தில் ஒரு கடலட்டை பண்ணை இருக்கிறது. தனது கடலட்டை வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஞானேந்திரன் இப்பண்ணையை வாங்கிக்கொண்டார். இரண்டு வருடங்களாக அதை நடத்தி ஓரளவு இலாபத்தையும் ஈட்டிக்கொண்டார். இதன் மூலம் வியாபார நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டபின் அவர் முற்றிலும் புதியதொரு பண்ணையை உருவாக்கத் தீர்மானித்தார். இதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கும் மண்டைதீவிற்குமிடையில் இருக்கும் ஒரு சிறிய தீவான சிறித்தீவு இவரது கண்ணில் சிக்கிக்கொண்டது.
இரண்டு வருட பிரயத்தனத்தனத்தைத் தொடர்ந்து 2019 இல் ஞானேந்திரனுக்கு இக்கடற் பண்ணைக்கான அனுமதி கிடைத்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமென எதிர்ப்புகளும் கிளம்பின. கடலிலோ அல்லது கரைப்பகுதிகளிலோ நிறுவப்படும் எந்தப் பண்ணையும் ஏன், வீட்டு நிர்மாணம் முதற்கொண்டு அனைத்து தொழிற்சாலைகளுமே சூழல் பாதிப்புக்குக் காரணமாகின்றன. இச்சூழல் பாதிப்பு பொருளாதார இலாபத்தை மீறிவிடுகிறதா என்பதே இங்குள்ள கேள்வி. கடற் பண்ணைகளுக்காக எடுக்கப்படும் இடங்கள் குறிப்பாக சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா அல்லது இவ்விடங்கள் அப்பிரதேசத்தின் சூழல் சமநிலையைப் பேணுகின்றனவா? வலைகள் நீர்மட்டத்தில் இருக்கத் தேவையில்லை காரணம் கடலட்டைகள் கடலினடியில் வாழ்பவை. இதனால் மீன்கள் வலைகளுக்குள் சிக்காமல் இலகுவாகத் தப்பிச் செல்ல முடியும். சூழலை மாசுமடுத்தும் உணவுகள் பண்ணையில் சேர்க்கப்படுவதில்லை காரணம் தேவையான போஷாக்கை அட்டைகள் கடல் மண்ணிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன என்கிறார் ஞானேந்திரன். கடலட்டை வியாபாரம் பற்றி அரசாங்க அதிகாரிகளே அப்போது அறிந்திராத காலம். யாழ்ப்பாணத்தில் அப்போதுதான் இத்தொழில் பிரபலமாகிக்கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் இழுபறியின் பின்னர் 2021 இல் தான் ஞானேந்திரனுக்கு அனுமதி கிடைத்தது. சிறித்தீவுக்கு அருகில் சுமார் 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஞானேந்திரன் தனது பண்ணையை ஆரம்பித்தார். திருடர்களைக் கண்காணிக்க காவற் கோபுரம் நிர்மாணித்தல், வலைகளை நிறுவுதல், பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், அட்டைகளைப் பதனிடுவதற்கேற்ற சூரிய வெளிச்சமுள்ள கட்டிடமொன்றை நிறுவுதல் என அனைத்துப் பணிகளும் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. இந்த வருடம், 2025 இல், இப்பண்ணையில் மூன்றாவது அறுவடை நடைபெறுகிறது. இப்போது பல பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. கடற்கரை எங்கும் திட்டு திட்டாக இப்போது அட்டைப் பண்ணைகளால் நிரம்பியிருக்கிறது. சிலவேளைகளில் இவை மித மிச்சமாகவோ இல்லாமலோ இருக்கலாம். அதைத் தீர்மானிக்கும் தகுதி எனக்கில்லை.
கோவிட் தொற்றுக் காலத்திலும் இப்பண்ணை தொடர்ச்சியாக இயங்கியது. உற்பத்திகளையும் பணியாளர்களையும் இடத்துக்கிடம் நகர்த்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டது. கோவிட் தொற்றுக் காலத்தில் இப்பண்ணை 35 பேருக்கு வாழ்வாதாரத்தை அளித்தது. யாழ்ப்பாணத்திற்கும், வட மாகாணத்திற்கும் ஏன் முழு இலங்கைக்குமே இத்துறை வருமானமீட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இக்கடலட்டைகளைப் பதனிட்டு ஏற்றுமதிப் பண்டமாக்கும் தொழில் பெரும்பாலும் வடக்கிற்கு வெளியே நடைபெறுவதால் இத்தொழில் சார்ந்த உபதொழில்களுக்கான சந்தர்ப்பத்தை வடக்கு இழக்கிறது என்பது உண்மை. உலரவைக்கப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி பசுமையான அட்டைகளைவிடப் பன்மடங்கு அதிகம்.
செலவுஅனுமதிப் பத்திரம் கிடைத்ததிலிருந்து 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஒரு பண்ணையை, ஆரம்பம் முதல் இயங்குநிலைவரை கொண்டுவருவதற்கு சுமார் ரூ.20 மில்லியன் (2024 ஆண்டு விலை) செலவாகிறது என்கிறார் ஞானேந்திரன். கடந்த சில வருடங்களில் யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஏகப்பட்ட அட்டைப்பண்ணைகள் முளைத்திருக்கின்றன. ஆனால் இவற்றில் வெகு சிலவே இவ்வட்டைகளைப் பதனிடும் வேலைகளைச் செய்கின்றன. பெரும்பாலானவை தமது அட்டைகளைப் பதனிடாமலேயே மிகவும் குறைந்த விலைக்கு வெளியாருக்கு விற்றுவிடுகின்றனர். ஞானேந்திரன் தனது சொந்தமான பதனிடும் தொழிற்சாலையை நிர்மாணித்து வருடமொன்றுக்கு 800 கி.கி. உலரட்டைகளைத் தயாரிக்கிறார். இதைத் தயாரிக்க சுமார் 25,000 கி.கி. பசும் அட்டைகள் தேவையாகவிருக்கின்றது.
கடலட்டை விலைகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. நாணய மாற்று வீதம் மற்றும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான (சீனாவே பிரதான நுகர்வோராகவும் விநியோகிஸ்தராகவும் இருக்கிறது) பாதைகள் ஆகியவற்றைப் பொறுத்து விலையின் ஏற்ற இறக்கம் தீர்மானமாகிறது. ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் ஊழல் கோலோச்சுகிறது. இதர பல தொழில் துறைகளைப் போலவே இத்துறையின் நன்மைகளையோ அல்லது சமூகத்தின், நாட்டின் நன்மைகளையோ விட சுய இலாபம் தேடும் மாஃபியாக்களினதும் ஊழல் பெருச்சாளிகளினதும் நன்மைகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதை இம் மாஃபியாக்கள் தடுத்து நிறுத்துவதன் மூலம் அனைத்து பண்ணைக்காரரும் உற்பத்திகளைத் தமக்கே விற்கவேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். இதன் மூலம் கடலட்டை ஏற்றுமதி வாணிபம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் இம் மாஃபியாக்கள் வைத்திருக்கின்றன. இதற்குள் சீன நிறுவனங்களும் தமது குறுக்கு வழிகளைப் பிரயோகித்து விலை நிர்ணயத்தை தீர்மானிக்கின்றன. நேரடியாகச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் ஹொங் கொங்கினூடாகப் பண்டங்களைக் கடத்துவதால் சீன அரசின் கெடுபிடிகளுக்குள்ளாகி இதனால் அட்டையின் விலை குறைக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்து அட்டையின் உயர் தரம்கடலட்டைகளில் யாழ்ப்பாணத்தின் உற்பத்திகளுக்கு மவுசு அதிகமாகவிருக்கிறது. இங்குள்ள மாசற்ற கடல் நீரும் அதன் போஷாக்கு வளங்களும் இவ்வட்டைகளின் தரத்தைப் பேணுகின்றன. செயற்கை உணவுகளின்றி வளர்க்கப்படும் இவ்வட்டைகள் முற்றிலும் இயற்கையானவை. இதனால் உற்பத்திச் செலவுகளும் குறைவாகவிருக்கிறது. 90% மான உற்பத்திச் செலவு கோபுரமமைத்தல், காவலர் சம்பளம், மின்சார வெளிச்சம் போன்ற பாதுகாப்பு செலவுகளுக்கே போகிறது என்கிறார் ஞானேந்திரன்.
பெரும்பாலான திருடர்கள் யாரென்பது தெரிந்த விடயம் தான். இவர்களில் சிலர் போதை வஸ்து பாவனையாளர். போதை இவர்களுக்கு அதிக நீச்சல் பலத்தைக் கொடுக்கிறது. திருடப்பட்ட கடலட்டைகளை இவர்கள் அரை விலைக்கு விற்கிறார்கள். இவற்றை வாங்குபவர்கள் மேலும் சந்தை விலைகளைச் சரியவைத்துவிடுகிறார்கள். திருடர்களைப் பிடித்து பொலிஸில் கையளித்தால் இவர்களது குற்றம் வன்முறை சாராமையால் அவர்கள் மீது தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது எனப் பொலிசார் கைகளை விரித்து விடுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்ட திருடர்கள் மீண்டும் திருட்டில் ஈடுபடுகிறார்கள். காவற் கோபுரத்திற்கு மின்சார வழங்கிகளை தருபவர்களுக்கும், டீசல் போன்ற எரிபொருள் வழங்குபவர்களுக்குமே இலாபம் அதிகரிக்கிறது.
சந்தர்ப்பம்
கடலுணவு மற்றும் கடலட்டை உற்பத்திக்கு வடக்கில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இலாப நோக்கைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கும், வியாபார முகவர்களுக்கும், தரமான உற்பத்திகளைக் கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் வடக்கு அரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இத்தொழில் பற்றிய பூரண அறிவை வளர்த்துக்கொண்ட முகவர்களும் அவர்களது திறமைகளில் நம்பிக்கை வைக்கக்கூடிய முதலீட்டாளர்களும் இணையும்போது தான் இத்தொழிலுக்கான உண்மையான வெகுமதி கிடைக்கும். இத்தரமான யாழ்ப்பாண உணவை உலகின் தரமான உணவகங்களில் பரிமாறுவதற்கு ஏதுவாக இருக்கும் உணவகங்களுக்கும், அங்காடிகளுக்கும்கூட இது ஒரு வகையில் வெகுமதியாகவே அமையும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வின்படி இலங்கையின் 40% மான கடற்கரை வடமாகாணத்தில்தான் இருக்கிறது. மீன்பிடி, சுற்றுலா, விளையாட்டு எனப் பல சந்தர்ப்பங்களை வழங்கக் காத்திருக்கும் பாவிக்கப்படாத வளங்கள் இங்குதான் இருக்கின்றன. இலங்கையின் மிக வறுமையான மாகாணங்களில் ஒன்றான வடக்கில் தான் இவ்வாய்ப்பு இருக்கிறது என்பது அதிசயமானதே.
ஞானேந்திரனுடனான தொடர்புகளுக்கு:
Mobile and WhatsApp: +94 77 293 7949
Email: Victoria.aquapvt@gmail.com
ஞானேந்திரனின் நிறுவனங்கள்:
Sea food: Victoria International (Pvt) Ltd
Sea cucumber: Victoria International Aqua Pvt Ltd
இக்கட்டுரை March 27, 2025 இல் வெளியான லங்கா பிஸினெஸ் ஒன்லைன் பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. தமிழாக்கம் த.சிவதாசன்
|

கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்...
வளரும் வடக்கு ஜெகன் அருளையா திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம்...