ஊர்ப்புதினம்

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா

1 week 2 days ago

26 Mar, 2025 | 05:29 PM

image

இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார்.

அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன்  பேச்சுக்களை நடத்தினோம்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும்.

நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம். 

அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும்.

வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும்.

இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல.

இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk

பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

1 week 2 days ago

New-Project-339.jpg?resize=750%2C375&ssl

பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் 69 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (25) பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என்பதுடன் அவர் கிரலோகம பிரதேசத்தில் உள்ள துறவி மடத்தில் வசித்து வந்தார்.

பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் பெயரில் முச்சக்கரவண்டி ஒன்றும் சாரதியும் இருந்ததாகவும், இந்த சாரதி தற்போது குறித்த பகுதியில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1426433

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடர்பான அப்டேட்!

1 week 2 days ago

New-Project-343.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடர்பான அப்டேட்!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஞாயிற்றுக்கிழமை (23) கம்பளை, அம்புலுவாவாவிற்கு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, சீனத் தூதர் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜயரத்னவை சந்தித்தார்.

சீனத் தூதருடன் கலந்துரையாடிய எம்.பி. ஜெயரத்ன, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக இப்போது யதார்த்தமாகி வருவதாகக் கூறினார்.

https://athavannews.com/2025/1426453

இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில்

1 week 2 days ago

New-Project-345.jpg?resize=750%2C375&ssl

இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில்

இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டெல்லியின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால், இலங்கை வளர்ச்சியடையாது, ஆனால் 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல.

எனவே இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும்.

இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்ய வேண்டும்.

அந்த நேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவில்லை என்றால், நமது நாடு என்னவாக இருந்திருக்கும்?” என்று அவர் பொருளாதார நெருக்கடியை நினைவூட்டி கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின் அதானி குழுமத்தின் முதலீட்டு முயற்சி இலங்கைக்கு மேலும் பல முதலீடுகளைக் கொண்டு வந்ததாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்தியா எங்கள் நட்பு நாடு. அவர்கள் எதற்கும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்.

எனவே இந்த ஆதரவைப் பற்றிக் கொள்வதே எங்கள் ஒரே தீர்வு.

முதலீட்டை முன்னுரிமையாகக் கொண்டு இலங்கை முன்னேற இதுவே ஒரே வழி.

இந்தியாவை நாம் நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம்,” என்று அவர் எச்சரித்தார்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், முன்னேற இந்தப் பாதையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

https://athavannews.com/2025/1426474

மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த!

1 week 2 days ago

New-Project-346.jpg?resize=750%2C375&ssl

மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த!

மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் அதற்காக தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

அரசியலில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்துள்ளதாக அரசாங்கம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறினார்.

இருப்பினும், பொது சேவைகளில் ஊழல் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1426478

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்

1 week 2 days ago

யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்தபோதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் okபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.samakalam.com/242043-2/

இஸ்ரேலுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக 22 வயது வாலிபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது !

1 week 2 days ago

மார்ச் 22, 2025 அன்று, கொம்பனித்தீவு பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காக 22 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளைஞன் அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு,காசாவில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக யாரோ ஒருவர் இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.இஸ்ரேல் ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு என இரண்டிற்காகவும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.தங்கள் சொந்தக் கருத்துக்கள் குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக உரிமை.

ஸ்டிக்கரை ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, யாரோ அந்தப் படங்களை கொம்பனித் தெரு காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட்டு, இந்த ஸ்டிக்கரை ஒட்டிய நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

22 ஆம் தேதி காலை அந்த இளைஞன் தனது பணியிடத்திற்கு வரும் வரை காத்திருந்து,அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவும், புலனாய்வுப் பிரிவும் அங்கு இருந்தன,மேலும் இந்த இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.அந்த இளைஞன் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

காசாவில் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிராக ஸ்டிக்கரை ஒட்டியதற்காக அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.அந்த ஜனநாயக உரிமைகள் பயங்கரவாதச் செயலா? காவல்துறையிடம் புகார் அளித்தது யார்? ஷாப்பிங் மால் நிர்வாகமா அல்லது கடை உரிமையாளரா அல்லது ஷாப்பிங் செய்ய வந்த ஒருவரா? மால் நிர்வாகம் இந்த மோசமான செயலைச் செய்தால்,முஸ்லிம்களும் பாலஸ்தீன உரிமைகளுக்காக நிற்கும் மக்களும் இந்த மாலுக்கு வருவதைப் புறக்கணிக்க வேண்டும்,ஏனெனில் அவர்கள் இந்த விஷயத்தை காவல்துறையிடம் எடுத்துச் சென்றிருக்கக்கூடாது. அவர் அந்த ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு வியாபார நிலைய ஊழியர் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க அவர்கள் ஒரு உள் விசாரணையை நடத்தியிருக்க வேண்டும்.

இது இஸ்ரேலியர்கள் எங்கள் மத விவகார அமைச்சின் எந்த ஒப்புதலையும் பெறாமல் வணிக விசாக்களில் தங்கள் மதக் கட்டமைப்புகளை அமைத்துக்கொள்வதைத் தெளிவாகக் காட்டுகிறது, ஆனால் இலங்கையர்களாக, கைக்குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சி, அவர்களின் தீய மனதைத் தளர்த்த இலங்கைக்கு வரும் ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகள் மூலம் கோபத்தைக் காட்ட எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

முஹீத் ஜீரன்

சர்வதேச மனித உரிமைகள் ஆர்வளர்

https://madawalaenews.com/17562.html

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவை முட்டுக்கட்டைகள்

1 week 2 days ago

Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM

image

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

0__2_.jpg

வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார்.

கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில், அவர் இந்த விடயத்தை விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உயர்மட்ட குழுக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பவற்றால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரவைகள், குளங்கள், வயல்கள், மக்கள் மீள்குடியமர்வுக்கான காணிகள் என்பன எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மாவட்ட ரீதியாக விவரங்களை தயாரிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதன்போது அரச காணிகள் மாத்திரமே, ஒதுக்கக் காணிகளாக அரச திணைக்களங்களால் அறிவிக்க முடியும் எனவும் தனியார் காணி எனின் அதனைச் சுவீகரித்தே ஒதுக்க காணிகளாக அறிவிக்க முடியும் என்றுமே சட்ட ஏற்பாடு உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன அதனைப் பின்பற்றாமல் வர்த்தமானியை வெளியிட்டுள்ளன என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலஅளவத் திணைக்களத்தின் வரைபடத்துக்கு அமைவாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்தன என்றும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அந்தத் திணைக்களங்கள் நேரடியாக தமக்குரியதாக அடையாளப்படுத்தும் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளன என்ற தகவலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வடக்கில் சில மாவட்டங்களில் வனவளத் திணைக்களத்துக்குரிய காணிகள், வனவளத் திணைக்களத்துக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் என்பனவற்றை விடுத்து மக்களின் வயல்காணிகளாக உள்ளவற்றுக்குள்ளும் வனவளத் திணைக்களத்தின் எல்லைக் கல்லுகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினர்.

அதேநேரம் சில இடங்களில் வனவளத் திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் ஒரே காணிகளையே தமக்குரியதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கடந்த ஆண்டு வடக்கின் 5 மாவட்டங்களில் விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கிய காணிகளின் அளவுகளை விட புதிதாக தமது திணைக்களத்துக்கு கோரும் காணியின் அளவு அதிகம் என்றும் ஆளுநரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

வனவளத் திணைக்களத்தால் சில இடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டபோதும் அங்கு மக்கள் மிக நீண்டகாலமாக வசித்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களோ, வீட்டுத்திட்ட உதவிகளோ முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும், அதேபோன்று சட்டபூர்வமான ஆவணங்கள் உள்ள ஒருதொகுதி மக்கள் வர்த்தமானி அறிவித்தலால் தமது வசிப்பிடங்களில் குடியேற முடியாத நிலைமை இருப்பதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அரச அதிகாரிகள் அபிவிருத்தித் தேவைக்காக காணிகளை விடுவிக்குமாறு வனவளத் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்தால் அது நிராகரிக்கப்படும் அதேவேளை, தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுவதாக அதிகாரிகள் ஆளுநரிடம் குறிப்பிட்டனர்.

இதேநேரம், இந்தத் திணைக்களங்களின் பாகுபாடான செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அந்தத் திணைக்களங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலோ வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பினால், மேற்படி இரண்டு திணைக்களங்களின் உயர் அதிகாரிகளால் அவமரியாதை செய்யப்படுவதாகவும் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினர்.

இந்த விடயங்களைக் கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்வரும் 9ஆம் திகதி கலந்துரையாடலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் விவரங்களை உரிய வகையில் தயார் செய்யுமாறும், கடந்த காலங்களில் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இரு திணைக்களங்கள் தொடர்பிலான விடயத்தை அணுகுவோம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மேலதிக மாவட்டச் செயலர்கள் - காணி, வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம் - வடக்கு, ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/210197

இலங்கை - சீன நட்புறவு என்றும் தொடரும்; சீனத் தூதுவர் கீ சென்ஹொங்

1 week 2 days ago

Published By: VISHNU 25 MAR, 2025 | 06:26 PM

image

இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த நட்பு என்றும் தொடரும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை நினைவு கூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் , நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 

நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.

கடந்த இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/210190

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

1 week 2 days ago

25 MAR, 2025 | 06:33 PM

image

(எம்.நியூட்டன்)

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.

எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/210186

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது

1 week 3 days ago

25 Mar, 2025 | 12:36 PM

image

போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் - 225 விமானத்தில் துபாய்க்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். 

இதன்போது, சந்தேக நபர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். 

அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

கைதான 11 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களுடன் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த தரகர் ஒருவரும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட தரகரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மற்றுமொரு தரகரின் உதவியுடன் தலா 45 இலட்சம் ரூபா அடிப்படையில் இந்த போலி கனேடிய விசாக்கள் தயாரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தரகர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது | Virakesari.lk

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்

1 week 3 days ago

25 Mar, 2025 | 01:46 PM

image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.


19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந்

1 week 3 days ago

25 Mar, 2025 | 04:57 PM

image

பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மக்களிற்கு சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள்.

அதில் நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் முக்கியமானது  ஒன்று.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ,தொடர்ச்சியாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசியல் கைதிகள் பல்வேறு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்,இன்று 30 ஆண்டுகளிற்கு மேல் இந்த சிறைச்சாலைக்குள் பல அரசியல் கைதிகள் உள்ளனர்,

நான் அவர்களில் ஒரு சிலரை பார்ப்பதற்காக இங்கு வந்தேன். கிட்டத்தட்ட 19 வயதில் கைதுசெய்யப்பட்ட, பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பாக விஜித ஹேரத் அவர்களிடம் ஒக்டோபர் மாதம் நான்,வலியுறுத்தியிருந்தேன் அதற்கு பதிலளித்த அவர் விடுதலை இடம்பெறுகின்றது அதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பின்னர் பிரதியமைச்சர் ஒருவரின் ஊடாக ஹர்சநாணயக்கார அவர்களிற்கு எடுத்துக்கூறியிருந்தேன்.அதற்குரிய பதில் எனக்கு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தேன்,செய்திகளை அனுப்பியிருந்தேன், எத்தனையோ  ஊடக சந்திப்புகள் ஊடாக அரசியல் கைதிகள் தொடர்பாக,அவர்களின் கஷ்டங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி,மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது அவர்களின் விடுதலை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை தொடர்ச்சியாக எடுத்துக்கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இன்றுவரை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களிற்கு முதுகெலும்பு இருந்தால் அரசியல்கைதிகளின் விடுதலையின் பின்னர் இவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிராமல் இந்த சித்திரவதையை இத்துடன் நிறுத்தி அவர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கவேண்டும்.

இதற்கு முன்னர் விடுதலையான எந்தவொரு அரசியல் கைதியும் இந்த சமூகத்திலே எந்தவொரு பிழையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கிலே இந்த அரசாங்கம் நகரக்கூடாது.

அவர்களின் விடுதலைக்கு எந்த காரணமும் தடையாகயிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாற்பத்தெட்டு பேர் இருந்தனர்,38 பேரின் விடுதலை இடம்பெற்றுள்ளது அதேபோல மிகுதி பத்துபேரின், விடுதலை நிச்சயமாக  இடம்பெறக்கூடிய ஒன்றுதான்,

ஏனென்றால் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியினால் அவர்களிற்கான பொதுமன்னிப்பை வழங்க முடியும்,சட்டமா அதிபர்அவர்களிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடிசெய்து அவர்களை விடுதலை செய்யலாம்.ஏனென்றால் போதுமான வாக்குமூலங்கள் கிடையாது , சிங்களத்தில் பதியப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டுதண்டனை வழங்கப்பட்டுள்ளது,

தண்டனையாகயிருந்தால் கூட அவர்கள் இரண்டு ஆயுள்தண்டனையை அவர்கள் எதிர்நோக்கி முடித்திருக்கின்றார்கள்.

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந் | Virakesari.lk

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை

1 week 3 days ago

25 Mar, 2025 | 05:09 PM

image

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான்  திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள  இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை  | Virakesari.lk

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

1 week 3 days ago

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk

நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம்

1 week 3 days ago

நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம்

2032211517.jpeg

மறுக்கின்றது பொலிஸ் தரப்பு

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மாடு ஒன்றை இறைச்சியாக்கிய விசாரணைகளுக்காக பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போதே, அவர்கள் தம்மைத் தாக்கினார்கள் என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், இந்தத் தகவல்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 'நாங்கள் எவரையும் தாக்கவில்லை. சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கிய நபர் வீட்டுக்குள் மறைந்திருந்தார். அவரைக் கைதுசெய்ய முற்பட்டபோது அந்த வீட்டிலிருந்த பெண்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்.

சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக வீட்டின் கதவையே உதைத்தோம். ஆனால் நாங்கள் எவரையும் தாக்கவில்லை' என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/article/நெல்லியடியில்_பெண்கள்,_சிறுவர்களை_தாம்_தாக்கவில்லையாம்

தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை வரும் இந்திய குழுவினர்!

1 week 3 days ago

New-Project-332.jpg?resize=750%2C375&ssl

தமிழக மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை வரும் இந்திய குழுவினர்!

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு புறப்படவுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினத்தந்தி செய்தியின்படி,

ராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (25) திருச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 2 மணிக்கு விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டுள்ளது.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஆய்வு செய்யவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரவும் இந்தக் குழு திட்டமிட்டது.

திட்டமிட்டக் கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி தமிழகம் திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

https://athavannews.com/2025/1426374

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

1 week 3 days ago

New-Project-323.jpg?resize=750%2C375&ssl

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குழு, நேற்யை தினம் (24) கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இவர்கள் அனைவரும் பெப்ரவரியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தனர்.

வருகை விசா முறையின் கீழ் பெறப்பட்ட சுற்றுலா விசாக்களில் அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் அவர்கள் நாட்டில் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளில், இந்தக் குழு இலங்கையில் இருந்து துபாய்க்குப் பயணம் செய்து, பின்னர் எகிப்துக்குள் நுழைந்து, இறுதியில் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும், தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள இந்தக் குழு வெலிசரா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்படி, நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அவர்கள் தடுப்புக் இருப்பார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

https://athavannews.com/2025/1426321

தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல்

1 week 3 days ago

dengue_1-1231307-750x375-1.jpg?resize=75

தீவிரமடைந்து வரும் டெங்கு நோய்ப் பரவல்.

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, கொழும்பு நகரப் பிரிவு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறித்த பகுதிகளில் டெங்கு பரவக்கூடிய 37 இடங்களை அடையாளம் கண்டு, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு களத் திட்டத்தை நடத்தவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் எனவும், இதன்போது, வீடுகள், பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுஇடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் உள்ள பிற வளாகங்கள் கள ஆய்வுக் குழுக்களின் பங்கேற்புடன் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426373

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 week 3 days ago

court-order.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். பத்தரமுல்லைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் சமூக ஊடகங்களில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபருக்கு மனநல பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய, மனநல மருத்துவ அறிக்கையைக் கோருவதற்கான விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

https://athavannews.com/2025/1426338

Checked
Fri, 04/04/2025 - 11:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr