ஊர்ப்புதினம்

”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” - இராமலிங்கம் சந்திரசேகர்

2 weeks 4 days ago

”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்”
 

சுமந்திரன் போன்றோர் எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் அநுர ஜனாதிபதி தேர்தலின் போது மிக தௌிவான கொள்கை பிரகடனம் ஒன்றை வௌியிட்டு இருந்தார்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாங்கள் கூறியுள்ள பல்வேறு விடயங்கள் இருக்கும் நிலையில் இங்கு இருக்கும் தமிழ்க்கட்சிகள் எங்கள் மீது பல்வேறு போலியான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்காது அதை பரிசீலனை போகிறார்கள் என தெரிவிக்கிறார்கள், அத்தோடு அநுரவின் அரசாங்கத்திலும் இவ்வாறான போக்குகளை காணக்கூடியதாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் முன்னிலை வகிக்கின்றார். எங்களுக்கு அவர் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் நாங்கள் தெரிவிக்கும் விடயங்களை நீங்கள் உங்களது வாயால் திரிபுபடுத்துதல் உங்களுக்கு நல்லது கிடையாது என தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/சுமந்திரன்-போன்றோர்-போல/

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு!

2 weeks 4 days ago
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு!

2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசல் திருப்பிச் செலுத்துதலுக்காகவும், 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டி செலுத்துதலுக்காகவும் ஒதுக்கப்பட்டது.

2022 ஏப்ரல் 12 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் இடைக்காலக் கடன் நிறுத்தக் கொள்கைக்கு இணங்க, இருதரப்பு மற்றும் வணிகக் கடனாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்ட கடன்களுக்கான வெளிப்புறக் கடன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2024 ஜூன் மாத நிலவரப்படி, செலுத்தப்படாத கடன் சேவையானது 5.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வட்டி 2.53 பில்லியன் டொலர்களாகவும் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1406915

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல்

2 weeks 4 days ago

மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர்.

வாக்குவாதம் 

இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல் | Candidate Being Attacked In Batticaloa

அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியே வந்தபோது, அவருக்கும் ஆதரவு கேட்டு வந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

இந்தநிலையில், வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல் | Candidate Being Attacked In Batticaloa

இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://tamilwin.com/article/candidate-being-attacked-in-batticaloa-1730586528?itm_source=article

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது

2 weeks 4 days ago

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (02.11.2024) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது | One Arrested In Jaffna With Illegal Alchohol

மேலதிக விசாரணைகள்

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://tamilwin.com/article/one-arrested-in-jaffna-with-illegal-alchohol-1730592459

கன்னி வரவு - செலவு திட்டத்தை மார்ச் மாதம் சமர்பிக்க அரசு தீர்மானம்

2 weeks 4 days ago
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான நிதி மூலாதாரத்தை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்த இல்லை. அதே போன்று உரம் நிவாரணம் வழங்கியமை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார சூழல், ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும், மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்த விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் அண்மைய மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் வளர்ச்சியை காட்டுகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக மூன்று தவணைகள் அதிகரிப்பை காட்டியுள்ளதுடன் குறைந்த பணவீக்கம், அதிகரித்த அரச வருவாய் சேகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி  கையிருப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்பதில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197745

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

2 weeks 5 days ago

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
adminNovember 2, 2024
IMG-20241102-WA0038-1170x658.jpg

கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது.   இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது.

 இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.  எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது.

IMG-20241102-WA0039-800x450.jpgIMG-20241102-WA0040-800x450.jpgIMG-20241102-WA0042-800x450.jpg
 
 

முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்

2 weeks 5 days ago
IMG-20241102-WA0223.jpg?resize=750,375&s முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு  நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம் துப்பரவு செய்யும் பணி தற்போது நடைபெற்றன.

இந்நிலையில், தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்ததனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தார்கள்.

https://athavannews.com/2024/1406884

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

2 weeks 5 days ago

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது.

நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை

முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல் | Jaffna Kangesanthurai Nagapattinam Ferry Service

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. 

https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1730548573

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

2 weeks 5 days ago

யாழில், பிரான்ஸ் (France) நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பண மோசடி விசாரணையில் சிக்காமல் 7 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நேற்றுமுன்தினம் (31.10.2024) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட, ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு குடியகல்வு சட்டம் 

யாழ். விசேட குற்றவிசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த ஏழாம் மாதம் ஒருவரும், பத்தாம் மாதம் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேகநபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது! | Fraud By Claiming To Ship Abroad Jaffna

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றில் பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கபட்டிருந்ததுடன், வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் ரூபா மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக காணப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடப்படும் சந்தேக நபராகவும் இவர் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

https://ibctamil.com/article/fraud-by-claiming-to-ship-abroad-jaffna-1730547518

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர் உயிரிழப்பு; பிரதி பொலிஸ் மா அதிபர்

2 weeks 5 days ago
image

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 676 பேர் பாதசாரிகள் ஆவர்.

1,818 வீதி விபத்துக்களில் 730 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், 209 முச்சக்கரவண்டி விபத்துக்களும், 258 லொறி விபத்துக்களும், 146 பஸ் விபத்துக்களும், 118 வேன் விபத்துக்களும் அடங்குகின்றன.

மேலும், 42 வாகனங்களின் சாரதிகள் விபத்துக்களை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

எனவே, வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197740

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்

2 weeks 5 days ago

image

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (02) சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் முன்னோர்கள் சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றை அலங்கரித்தினர். 

ஆனால் அவர்கள் தாம் முன்வைத்த விடயத்த்தின் இலக்கை அடையச் செய்வதற்கான பொறிமுறையை துளியளவும் கொண்டிருக்கவில்லை. அதேபோன்றுதான் அவர்கள் வழி வந்து போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் பொறிமுறையற்றதாக இருக்கின்றது.

நான் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரை போன்று நாடாளுமன்றை அலங்கரிக்க 23 ஆசனங்களை கேட்கவில்லை. குறைந்தது 4 முதல் 5 ஆசனங்களையே எனக்க தாருங்கள் என கோருகின்றேன்

அதுமட்டுமல்லாது நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ அல்லது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல, தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். எனது மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது

அதுமட்டுமல்லாது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் எமது கொள்கை வலுவானது. நடைமுறை சாத்தியமான வழிநடத்தல் எமது கொள்கை இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலுவாக்கப்பட்டுவிட்டது.

இதேநேரம் நான் அரசியல் பயத்தால் அல்லது தோற்கடிக்கப்பட்டு விடுவேன் என்ற பயத்தால் ஒருபோதும் ஒதுங்கவும் போவதில்லை.

எமது கொள்கையின் மீது எமக்கிருக்கின்ற பற்றே, எமது கொள்கை மீது எமது அதீத நம்பிக்கைக்கு காரணம். எமது இந்த வலுவான கொள்கையை இன்று எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20241102-WA0060.jpg

IMG-20241102-WA0058.jpg

https://www.virakesari.lk/article/197738

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விசேட கலந்துரையாடல்

2 weeks 5 days ago

யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (02.11.2024) நடைபெற்றுள்ளது.

இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் 

இக்கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விசேட கலந்துரையாடல் | Discussion Palali Jaffna High Security Zone

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் விரிவான தகவல்களை இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநரால் மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது.

பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

GalleryGalleryGallery

https://tamilwin.com/article/discussion-palali-jaffna-high-security-zone-1730538371

அரச சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

2 weeks 5 days ago
image

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும்.

இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும். 

மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும்.

போதைப்பொருள் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் கடந்த ஜூலை மாதம் அறிமுகம்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற்து.

தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/197713

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம்

2 weeks 5 days ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம்
November 1, 2024

2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற  தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது.

இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள ,மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற  சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறி;த்து உங்கள் கவனத்தை  ஈர்க்க விரும்புகின்றோம்.

2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம்,ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது. இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள்.

இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை  மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து  சுட்டிக்காட்டிவந்துள்ளன.

அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம்,நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம்.

மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள்  வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ,நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்;ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும்,புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதி;ப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும்.மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகி;ன்றோம்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்-

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்குஅறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம்.

இதில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்-

நிறைவேற்றதி;கார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13 வது திருத்தத்தை முழுமையாக  நடைமுறைப்படுத்தவேண்டும்-

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும்.

தற்போதுள்ள அரசியலமைப்பு  ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம்.

சட்ட சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும்,சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம், கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் – இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல் ,ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தி;ற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும்.

 
 

https://www.ilakku.org/பயங்கரவாத-தடைச்சட்டத்த-5/

சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக கவனம்

2 weeks 5 days ago

image

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம்  என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/197689

யாழில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் பலி

2 weeks 5 days ago
image

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார்.

சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் செவிப்புலனற்றவர் ஆவார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/197695

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜனநாயக ஆடை இன்னும் பொருந்தவில்லை - ரணில்

2 weeks 5 days ago
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ஆடை அணிந்தாலும் அந்த ஆடை இன்னும் அவர்களின் உடலுக்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை தயாரித்த உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை பொய் என பிரதமர் ஹரிணி உறுதிப்படுத்த தவறினால் சம்பிரதாய பிரகாரம் பிரதமர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் சவால்களை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த சவால்களை வெற்றிகொள்ள உதவியாக இருந்தவர்களே இன்று காஸ் சிலிண்டரில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பது அரசாங்கத்தினால் அல்ல, ஊடகங்களால் ஆகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். பழைய அடிமைத்துவத்தை கைவிட முடியாத சில ஊடகங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக  ஆடையை அணிந்துகொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

இந்த கதையை சொல்வது யார்? அழுக்கான ஆடையை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகும். ஆரம்பமாக பணம் அச்சிட்டதாக தெரிவித்து, பின்னர் பணம் அச்சிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார். 

பணம் அச்சிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும்போது பணம் அச்சிடவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

திரவத்தன்மையை பாதுகாத்துக்கொள்வதற்காக பணம் அச்சிட்டதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது. வங்கி திரவத்தன்மை தொடர்பில் அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஊடகங்களுக்கு எவ்வாறு குற்றம் தெரிவிக்க முடியும். 

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கூட இந்த திரவத்தன்மை தொடர்பில் பேசியிருந்தார். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் 3 பேருக்கும் அது தெரியாது. இவர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால்தான் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கிறேன். 

இவர்கள் ஜனநாயக ஆடை அணிந்தாலும் இன்னும் அது அவர்களுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

அதேபோன்று பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதாக அச்சுறுத்துகின்றனர். அவர்களால் எப்படி பாராளுமன்றத்தை துப்புரவுபடுத்த முடியும்?  பாராளுமன்றம் ஊழல் நிறைந்தது என நீங்கள் தெரிவித்ததற்கு நாட்டு மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.  யாருக்காவது ஊழல் குற்றச்சாட்டு இருக்குமானால் மக்கள் அவர்களை தேர்தலில் நிராகரிப்பார்கள். 

அத்துடன் மின்சார கட்டணம், எரிபொருள் கட்டணத்தை குறைத்ததாக தெரிவிக்கிறார்கள். நாங்கள் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த வருடம் இறுதி வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணம் குறையவேண்டும். ஆனால், அவர்கள் தெரிவித்த பிரகாரம் தற்போது இந்த விலைகள் குறைந்திருக்கிறதா?

அதேபோன்று நாட்டின் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பவர் பிரதமராகும். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை ஒன்று இல்லை என அவர் தெரிவிக்கிறார். பல அதிகாரிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்களின் கையெழுத்தை திருட்டுத்தனமாக வைத்ததா என அந்த அதிகாரிகளிடம் பிரதமர் கேட்கவேண்டும்.  பிரதமர் அல்லது அமைச்சர் பொய் சொன்னால் பதவியை இராஜினாமா செய்யும் சம்பிரதாயம் இருக்கிறது. அவ்வாறு என்றால் பிரதமர்  உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டு, அவர் தெரிவித்தது பொய் என்றால் பதவி விலகவேண்டும்.

இவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் அரசியல் அமைப்பு தொடர்பில் இவர்களுக்கு தெரியாது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கும்போது அது போதாது 20ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என  ஆரம்பத்தில் தெரிவித்தது திசைகாட்டியாகும். அதன் பிரகாரம் உதய செனவிரத்ன குழுவை நியமித்து இரண்டு சந்தர்ப்பங்களில் 20ஆயிரம் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்காக நாங்கள் நிதி ஒதிக்கி இருக்கிறோம். ஆனால் அந்த பணத்தை வழங்குவதற்கு அவர்கள் இன்னும் இணங்கவில்லை. அரச ஊழிர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியுமா முடியாதா என அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். 

அதனால் அரசாங்கம் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கும் வரை இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/197652

மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறை மேம்பாடு டிஜிட்டல் மயமாக்கல்; இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி

2 weeks 5 days ago

image

இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விரிவான மீளாய்வு செய்யப்பட்டதுடன்,  அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும்  வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு  மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம்  நீண்டகால தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடமாகாண கடல் பிரதேசத்தில் நிலவும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கை மீனவ சமூகத்தின் நலன்களை  பாதுகாப்பதில் தான் எப்போதும்  அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவும் கலந்துக் கொண்டார்.

https://www.virakesari.lk/article/197691

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன்

2 weeks 6 days ago

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன்

நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் (G. Sirinesan) தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சுமந்திரன் (M. A. Sumanthiran) இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) - செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (31.04.2024) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமாதான தேவதை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”புதுக்கடைகள் ஆரம்பித்து விட்டால் அந்த கடைகளுக்குள் சென்று கொள்வனவு செய்து பார்ப்பதும், அது ஒரு உணவகமாக இருந்தால் அங்குள்ள உணவுகளை உண்டு பார்ப்பதும் வாடிக்கையாக இருக்கின்றன.

இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற அந்த கடைக்குள் தமிழர்கள் சென்று அதனை பார்ப்பதற்கு அல்லது அதை சுவைப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன் | Itak Issue Candidate Sirinesan Slams Sumanthrian

ஆனால் அதற்கு முன்பாக நான் சொல்லக்கூடிய ஆலோசனை என்னவெனில், நடைபெறப் போகின்ற தேர்தலில் நாங்கள் ஏமார்ந்து விடாமல் தமிழ் தேசிய பிறப்பில் சோடை போகாமல், சோரம் போகாமல், பயணிக்க கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமாக அதனை ஒரு பலமான சக்தியாக மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பேரினவாத கட்சிகள் எங்களை ஏமாற்றாமல் நாங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வழி கூற வேண்டும், என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறி வைக்கின்றேன்.

கடந்த காலத்தில் சமாதான தேவதையாக வந்த சந்திரிக்கா (Chandrika Kumaratunga) பற்றி தப்பான கணக்கு போட்ட பின்னர் ஆறு மாதத்தில் அவருடைய சுய ரூபத்தை, விகார முகத்தை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது.

பேரம் பேசுகின்ற ஒரு சக்தி

அதேபோன்றுதான் இப்போது சொல்லுகின்றேன் இந்த தேசிய மக்கள் சக்தி என்கின்ற விடயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களது நடத்தைகளை போக்குகளை அவதானிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பாக வாக்குகளை அளித்து ஏமாந்து போகாமல் தமிழ் தேசியத்தை, தமிழர் உரிமையை, தமிழரின் ஒரு இனப்பிரச்சினை தீர்க்கக்கூடிய விதத்தில் செயற்பட்டு வருகின்ற தமிழரசுக் கட்சிக்கு சாதகமாக வாக்களியுங்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன் | Itak Issue Candidate Sirinesan Slams Sumanthrian

இதன் மூலமாக கீரை கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும் என்று சொல்வது போன்று தென்னிலங்கையில் பாரிய சக்தியாக விளங்குகின்ற இந்த ஆளுங்கட்சிகளுக்கு நாங்கள் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக இருந்து தமிழர்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

சர்வதேசத்தின் பொருளாக நாங்கள் இருக்க வேண்டுமே ஒழிய அந்த அமைச்சரவையில் இருந்து கொண்டு நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக கூறி வைக்க விரும்புகின்றோம்.

எமது கட்சியிலிருந்து எவராவது அமைச்சர் பதவி எடுக்க வேண்டும் அதன் மூலமாக ஒரு கௌரவத்தை பெறவேண்டும் அதிகாரத்தை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்க முடியாது. என்றுதான் நான் கருதுகின்றேன்.

மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்

அதைவிட எங்களுடைய யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரான சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். அதாவது சிறீதரன், மற்றும் சிறிநேசன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட வேண்டும் என்கின்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை, அவர்கள் களமிறக்கப்பட்டு இருப்பதை தான் விரும்பவில்லை என்ற பாணியில் கூறியிருக்கின்றார்.

ஒரு முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கூறுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்று நான் கூறுகின்றேன்.

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன் | Itak Issue Candidate Sirinesan Slams Sumanthrian

மக்கள் விரும்புகின்ற வேட்பாளர்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறக்கப்பட வேண்டுமே தவிர சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர்கள் களத்தில் இறக்கப்பட வேண்டும் என்று கனவு காண்பது ஒரு விபரீதமான சிந்தனை அல்லது வெறுப்பு சிந்தனை அல்லது பழி வாங்குகின்ற சிந்தனையாக இருக்க முடியும். 

தயவு செய்து சுமந்திரன் அவர்களே தேர்தல் காலத்தில் இப்படியான தவறான கருத்துக்களை வெளியில் விடக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது மக்களின் பார்வை எப்படி இருக்க போகின்றது ஒரு குறித்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பற்றி நாங்கள் எந்த பேச்சும் பேசவில்லை.

மக்களை குழப்புகின்ற செயற்பாடு

அப்படி இருக்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அல்லது விபரீதமான ஒரு கருத்தினை வெளியிடுவதற்கு அவருக்கு அப்படியான உரிமை இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இயன்ற வரைக்கும் நாங்கள் ஒரு கட்டுக்கோப்பாக இருந்து தேர்தலை முகம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது சுமந்திரன் விபரீதமான கருத்துக்களை விமர்சன ரீதியான கருத்துக்களை இவ்வாறு கூறிக் கொண்டிருப்பது ஒரு மாவட்டத்தில் தீர்மானத்தை அல்லது ஒரு மாவட்டத்தின் தேர்தல் போக்குகளை தேர்தல் கணிப்புகளை மக்களின் தீர்ப்புகளை மாற்றி விடுகின்ற ஒரு செயற்பாடு போன்று நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன் | Itak Issue Candidate Sirinesan Slams Sumanthrian

தேவையற்ற கருத்து உழறினால் நாங்களும் அதற்குரிய பதில்களை அளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றோம். குறிப்பாக எங்களிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்கின்றார்கள்.

எனவே மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு வேட்பாளரை, மட்டக்களப்பு மக்களை குழப்புகின்ற செயற்பாடுகளில் எவரும் செயற்படக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

புதிய ஆட்சியில் இணைந்து அமைச்சரவையை பெற்றுக்கொண்டு நடாத்துகின்ற ஒரு இணக்க அரசியல் என்று ஒன்று காணப்படுகின்றது. அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதனை ஆதரித்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
 

https://ibctamil.com/article/itak-issue-candidate-sirinesan-slams-sumanthrian-1730449441

அரசாங்கத்தின் பயணத்தை பார்க்கும்போது மீண்டும் ரணில் பிரதமராகும் சாத்தியம் - ராஜித சேனாரத்ன

2 weeks 6 days ago
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால்  ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய்சவடால்  அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்து. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் செய்வதை மக்களுக்கு தற்போது கண்டுகொள்ளலாம்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால்  அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு தாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை.  அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது கண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார்.

https://www.virakesari.lk/article/197682

Checked
Thu, 11/21/2024 - 20:53
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr