ஊர்ப்புதினம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!

3 months ago
PE_23491.jpg?resize=750,375 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர்
மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்
ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

01. திலித் சுசந்த ஜயவீர
02. சரத் மனமேந்திர
03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
04. ஏ. எஸ். பி. லியனகே
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
07. அஜந்தா டி சொய்சா
08. பத்தரமுல்லை சிரலதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவன் சஞ்சீவ போபகே
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
13. கே.கே. பியதாச
14. மையில்வாகனம் திலகராஜா
15. சிறிபால அமரசிங்க
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. கே. ஆனந்த குலரத்ன
19. நாமல் ராஜபக்ஷ
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷன்
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ச
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. முகமது இல்லயாஸ்
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
29. ஆண்டனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்கிரமரத்ன
31. சஜித் பிரேமதாச
32. ரணில் விக்கிரமசிங்க
33. மரக்கலமான பிரேமசிறி
34. லலித் டி சில்வா
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா
37. அனுரகுமார திஸாநாயக்க
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான

https://athavannews.com/2024/1395854

யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

3 months ago
f2fe6181-0e74-41c8-b7bb-176b426cc870-sca யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்.

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்தார். இந் நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395807

மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு!

3 months ago
24-65b81a06bcf62.jpg?resize=600,375 மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன் மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1395736

சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!

3 months ago
images-1-5.jpg?resize=290,174 சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் நிறைவிற்கு  வந்துள்ளது.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமானது

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குறிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது

பாதுகாப்பு கடமைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேலதிக ஒருமணித்தியால காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 40 வேட்பாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளனர்.

அதேநேரம், தமிழ்ப் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பென்சேகா, மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்டோரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்தார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும்.

தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395836

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது - சிறிதுங்க

3 months ago
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது - இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி தடுமாறவில்லை - சிறிதுங்க

Published By: RAJEEBAN  15 AUG, 2024 | 11:34 AM

image

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய இந்த விடயத்தில் கட்சி ஒருபோதும் ஏனைய கட்சிகளை போல தடுமாறியதில்லை என தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது சிறுபான்மை இனத்தவர்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக கருவியாக 13 வது திருத்தம் பயன்படுத்தப்படுகின்றது.

பார்வையாளர்களின் மனவிருப்பத்திற்கு ஏற்ப அரசியல்வாதிகள் அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவருகின்றனர்.

எனினும் ஐக்கிய சோசலிச கட்சியை சேர்ந்த நாங்கள்  நிலையான உறுதியான கொள்கையை கொண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

எங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு நாட்டின் சில பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் இது நியாயமானது நீதியானது என நாங்கள் கருதுகின்றோம்.

தற்போதைய 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வடக்குகிழக்கு மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என நாங்கள் கருதவில்லை.

அவர்களின் கரிசனைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால தீர்வே அவர்களிற்கு அவசியம்.

தமிழ்மக்களிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவது  நாட்டை பிளவுபடுத்தும்  என நாங்கள் கருதவில்லை. மாறாக அது மேலும் ஐக்கியப்பட்ட  நாட்டை உருவாக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் இதுவே வரலாறு.

இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி  தடுமாறவில்லை.

உதாரணத்திற்கு ஜேவிபி ஒரு காலத்தில் 13 வது திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது அதற்கு  எதிராக வன்முறைகளை கூட பயன்படுத்தியது.

ஆனால் அவர்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர். தாங்கள் முன்னர் எதிர்த்த கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என தற்போது  தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையான தன்மையின்மை  அரசியல்கட்சிகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/191132

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனு தாக்கல்

3 months ago

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரர், எனவே இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/307921

ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு.

3 months 1 week ago

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும் ரணிலை நாம் நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை தெரிவித்துள்ளன.

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

குறித்த கட்சிகள் மேலும் தெரிவித்தாவது,

“ரணிலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு நீங்களும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார்.

நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஒரு தனிக்கட்சி. அவர் யாரை ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு | Wigneswaran Agrees To Support Ranil

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவிப்பது அவருடைய சுதந்திரம். நாம் அப்படியான முடிவுகள் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் சந்தித்தது எமது மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பதற்கும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அவருடைய அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்குமாகவே.

ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு | Wigneswaran Agrees To Support Ranil

 

மாறாக அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கு நாம் தெளிவாக தெரிவித்தோம்." என தெரிவித்துள்ளன.

https://tamilwin.com/article/wigneswaran-agrees-to-support-ranil-1723667811

வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

3 months 1 week ago

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த 6 நபர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்களின் படகில் ஏறி நான்கு பேரையும் வாள்களை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்புப் பைப்புகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். அத்துடன், படகில் இருந்த 700 கிலோ வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த நான்கு மீனவர்களும் இன்று மதியம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். அவர்களின் முதுகின் பின்புறத்தில் இரும்பு பைப்பால் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை தமிழ் மீனவர்களால் தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/1295336-sri-lankan-tamil-fishermen-chased-away-the-vedaranyam-fishermen-by-beating-them-with-iron-pipes.html

யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் - ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை

3 months 1 week ago

யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும்

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை


தென்னிலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சிகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போனது போல, தமிழர் பரப்பிலும் கட்சிகளின் சின்னங்கள் காணாமற்போகும் நிலைவரும். ஆதலால், தூயதமிழ்த் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்று  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது:
தென்னிலங்கையின் பழம்பெரும் கட்சிகளின் சின்னங்களான யானையும், கையும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போயுள்ளன. அதுபோன்று தமிழர் பரப்பிலும் சின்னங்கள் காணாமற்போகும் நிலை விரைவில் வரலாம். தூயதமிழ் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும். அதனைக் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மூதவை வழிநடத்த வேண்டும்.


தமிழர்கள் புதிய செல்நெறியில் தமது அரசியல் பாதையை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளர் களத்தை எம்மினம் சரியாகப் புரிந்து கொள்ள உச்சப்பட்சப் பரப்புரைகளை எல்லாத் தளங்களிலும் முன்னெடுப்போம். எதிர்கால வரலாறு நிச்சயம் சுயநலங்களை கடந்து குறும்கட்சி அடையாளங்களை துறந்து, தமிழ் தேசிய திரட்சிக்காக  அர்ப்பணித்த மனிதர்களை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை - என்றுள்ளது. (ச)

யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் (newuthayan.com)

ஒரே பெயரில் வேட்பாளர் ; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்கின்றார் நாமல்

3 months 1 week ago
14 Aug, 2024 | 10:47 AM
image
 

ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை  எதிர்கொள்கின்றார்.

நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில்  இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார்.

செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர்.

இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது.

ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்தகாலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம்.

2015 இல் அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக  போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களை குழப்புவதற்காக ராஜபக்சாக்கள் சிறிசேன என்பவரை நிறுத்தினர் . மைத்திரிபால சிறிசேன போன்ற தோற்றமுடையவராக அவர் காணப்பட்டார்.

இந்த ஏமாற்று வேலையால் பலர் ஏமாறாத போதிலும் ராஜபக்சக்காள் நிறுத்திய ஏஆர் சிறிசேன 18174 வாக்குகளை பெற்றார்.

தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றைய நாமல் வாக்குகளை சிதறடிப்பதில் பெயர் பெற்றவர்.

அவரது பெயரை சி;ங்களத்தில் எழுதினால் அது ராஜபக்சாக்களின் வாரிசின் பெயரை ஒத்ததாக காணப்படும்.

எனினும் ஆங்கிலத்தில் எச் என்ற எழுத்து மேலதிகமாக காணப்படுவது ஒருசிலரின் பார்வைக்கே அகப்படும்.

2015 இல் இந்த நாமல் ராஜபக்ச மகிந்த  ராஜபக்சவின் வாக்குகளை சிதறடிக்க முயன்றார்.போலி சிறிசேனவிற்கு அடுத்ததாக நான்காவதாக வந்தார்- 14000வாக்குகளை பெற்றார் எனினும் 2019 தேர்தலில் அவரால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அதிக வாக்குகளை பெற முடியவில்லை.

2015 இல் நாமல்ராஜபக்சவின் சின்னம் சுமார் முப்பது நாற்பது வருடங்களிற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி.தற்போது அது ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம்.நாமல் ராஜபக்சவின் சின்னம் தபாலுறை.

ஒருகாலத்தில்  ஏகபோக கட்சியாக காணப்பட்ட தனது கட்சிக்குள் காணப்படும் கருத்துவேறுபாடுகளை எதிர்த்து போராடவேண்டிய நிலையில் உள்ள இளவரசர் நாமல் ராஜபக்ச தவறாக வழிநடத்துதல் , ஏமாற்றுதல், குழப்பம் போன்றவற்றையும் எதிர்த்துப்போராடவேண்டிய நிலையில் உள்ளார்.

இவை ஒரு வெற்றிகரமான இலங்கை அரசியல்வாதியின் முக்கிய பண்புகள் 

ஒரே பெயரில் வேட்பாளர் ; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்கின்றார் நாமல் | Virakesari.lk

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? - சந்திரசேகரன் கேள்வி!

3 months 1 week ago
14 Aug, 2024 | 05:41 PM
image
 

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார்.

இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்  தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. 

இந்த உருவாக்கத்தின் பின்னணியில் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் பலர் பங்காற்றிய நிலையில் அவர்களுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பில்  கையப்பமிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் ஓடிச் சென்று பேசிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. 

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்த நோக்கத்தை தாண்டி அதன் கட்டமைப்பை சிதைத்து தற்போதைய ஜனாதிபதியும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க வை சந்தித்ததன் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும். 

1983 கலவரம், அவசரகால சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம், மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மற்றும் யாழ் பொது நூலக எரிப்பு போன்றவற்றில் தமிழ் மக்கள்  படுகொலை செய்யப்பட்ட போது இரசித்துக்கொண்டிருந்தவர் வேறு யாரும் இல்ல ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க.

இவற்றையெல்லாம் மறந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் காலை நக்கி அரசியல் பிளைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பணப்பெட்டி அரசியலை மேற்கொள்வதற்காகவா பேச்சுக்கு சென்றார்கள் என சந்தேகம் எழுகிறது.

ரணில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறேன் எனக்கூறி 83 பில்லியனாக இருந்த நாட்டின் கடனை சுமார் 100பில்லியனாக  மாற்றிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவை சாரம்.

ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேசிய மக்கள் சக்தியுடன் நாட்டில் உள்ள மக்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர். 

ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் கட்சிகள் உறவை மேற்கொள்வது பொது வேட்பாளரை பாதுகாக்கவா அல்லது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? - சந்திரசேகரன் கேள்வி! | Virakesari.lk

இன, மத ரீதியாக பயணிக்க முற்படும் எதிரணி ரவுப் ஹக்கீமின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - ஜீவன் தொண்டமான் விசனம்

3 months 1 week ago

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அடுத்து தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கில் மத ரீதியாக ஒரு ஆளுனரைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மத ரீதியாக ஒரு அமைச்சர் கிடைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது அரசாங்கத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதிலேயே சிந்திக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எம்மிடம் இல்லை. இலங்கையராக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை கணிப்பிட முடிகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோல்விடைவார் என்றும் அவருக்கு வெற்றி பெறத் தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர். மத மற்றும் இன ரீதியான தீமானங்களை எடுப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை செயற்பட இடமளிக்கவில்லை. தற்போதுள்ள எதிரணியினருடம் நாம் இருந்தால் அனைவரும் புத்தர். அவ்வாறில்லை என்றால் அனைவரும் கல்வர் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர் என்றார்.

இன, மத ரீதியாக பயணிக்க முற்படும் எதிரணி ரவுப் ஹக்கீமின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - ஜீவன் தொண்டமான் விசனம் | Virakesari.lk

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேரம் பேசுவதே சிறந்த அணுகுமுறை - சுமந்திரனிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: Vishnu

14 Aug, 2024 | 06:13 PM
image
 

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களுடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசிய விடயங்களை சுமந்திரன் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

மூன்று பிரதான வேட்பாளர்களும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதாகக் கூறியிருக்கும் பின்னணியில், அதில் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் விடயங்கள், அவற்றை அமுல்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரிடம் (ரணில் விக்ரமசிங்கவிடம்) கையளித்த ஆவணம், 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கையளித்த ஆவணம் என்பன பற்றி உயர்ஸ்தானிகரிடம் விளக்கிக்கூறிய சுமந்திரன், அவரிடம் அந்த ஆவணத்தையும் காண்பித்தார்.

 அதேபோன்று இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்தும், 13 ஆவது திருத்தத்தில் இருந்த மற்றும் அதிலிருந்த எடுக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் விளக்கமளித்த சுமந்திரன், அவ்வாறு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கும் நிலையில் அதற்கான நடைமுறைகள் பற்றியும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

அதில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் மற்றும் 'திவினெகும' உள்ளடங்கலாக சட்டங்களின் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்கள் பற்றி எடுத்துரைத்த சுமந்திரன், இவற்றில் நிர்வாக ரீதியாகப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தற்போது வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாகவும், அது செயல்வடிவம் பெறுவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

 அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் யார் என சுமந்திரனிடம் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேரம்பேசுமாறுதான் ஏனைய கட்சிகளுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேரம் பேசுவதே சிறந்த அணுகுமுறை - சுமந்திரனிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு | Virakesari.lk

யாழ். சேந்தாங்குளத்தில் மோதல்; வாடிகள், படகுகளுக்கு தீ வைப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2024 | 02:02 PM
image
 

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளன. 

படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, ஊரவர்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

மோதலில் ஈடுபட்ட  இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/191082

இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2024 | 03:00 PM
image
 

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள்  நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

இதேவேளை, மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191090

பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு தென்னிலங்கை தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்

3 months 1 week ago

பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள்.

குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். இவர்கள் கடந்த காலங்களில் 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை அனுப்பியவர்கள்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை வலியுறுத்திய தரப்புக்கு விளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மக்கள் மத்தியிலிருந்து வேறுபடாமலிருப்பதற்காகவும் அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான செய்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிற்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனிற்கு யாழ் மாவட்டத்திற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடைய அடிமையாக இருக்கக்கூடியவரும் இந்தியாவின் கைக்கூலியாக இருக்கின்ற சுரேன் குருசாமி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியினை சார்ந்தவர்களும் குறித்த சந்திப்பிற்கு சென்றிருக்கிறார்கள்.

மேலும் இச்சந்திப்பின் போது 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியினை பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும்.

இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் தமிழர்கள் இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்து, ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு தேர்தலைப் புறக்கணித்து தேர்தலில் ஒதுங்கி இருக்கின்ற நிலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதற்கான நாடகம் தான் பொது வேட்பாளர்.

தற்போது பொதுவேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அரியநேந்திரன் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்து சம்மந்தர்,

சுமந்திரனோடு இணைந்து, குறிப்பாக சுமந்திரனின் அனைத்து துரோகமான செயற்பாடுகளுக்கும் முழுமையாகத் துணை நின்றவர்.

2012 ஆம் ஆண்டு ஜெனிவா உள்ளக விசாரணையின் போது சுமந்திரனுடைய முழு துரோகமான செயற்பாடுகளுக்கும் துணை நின்றவர். மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகளிற்கு எதிராக சர்வதேச விசாரணை இடம்பெறாமல் தடுத்து உள்ளக விசாரணை என்ற போர்வையில் இலங்கையை மீட்டெடுக்கின்ற விடயங்களுக்கு அவர்களிற்கு முழுமையாக துணை நின்றார்கள்” என்றார்.

https://thinakkural.lk/article/307838

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச சேவை சம்பளத்தில் திருத்தம்

3 months 1 week ago
13 AUG, 2024 | 09:13 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச சேவையில் சம்பளம் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்துகையில்,

அதற்கிணங்க, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது. அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் முன்மொழிவுகளுக்குக் கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், குறித்த முன்மொழிவுகளை 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி அமுல்படுத்துவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி ஒவ்வொரு வகுதிக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப்பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களைக் கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை  வகைப்படுத்தல்.

ஆரம்பநிலை சேவை வகுதிகளுக்கும் ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவைத் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறைமையைப் பின்பற்றுதல். ஏனைய அனைத்துச் சேவை வகுதிகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்;ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல்.

அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்கு விதிகளைத் துரிதமாகத் திருத்தம் செய்தல். 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்கல்.

அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக் குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக 55,000 ரூபா வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கல். அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல்.

2030ஆம் ஆண்டாகும் போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல். அதற்கமைய, 2025ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் தன்னியக்க முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்குதல்.

அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களும் உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது 1000 ரூபா மாதாந்தப் பங்களிப்புடன் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.

இயன்றவரை வெளியகச் சேவைகள் போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் உயர்வான வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல். அடையாளம் காணப்பட்ட திணைக்களங்கள் அல்லது கூட்டுத்தாபனங்கள் அல்லது நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்துதல்.

தகுந்த வேலை ஆய்வை மேற்கொண்டு, ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல். அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல்.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்.

ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்துக்கு சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்.  

தற்போது காணப்படுகின்ற வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவத்தி, இச்சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025.01.01 தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தல் என்பனவாகும்.

https://www.virakesari.lk/article/191009

முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல்

3 months 1 week ago
14 AUG, 2024 | 10:50 AM
image

முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

2006.08.14 அன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில்   இன்றைய தினம் நினைவேந்தல்  உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி  நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்துகொண்டனர். 

IMG_20240814_07182685.jpeg

IMG_20240814_07200226.jpeg

IMG-20240814-WA0011.jpg

IMG-20240814-WA0024.jpg

IMG-20240814-WA0023.jpg

IMG-20240814-WA0028.jpg

IMG-20240814-WA0039.jpg

IMG-20240814-WA0042.jpg

https://www.virakesari.lk/article/191050

இலங்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர்- இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?

3 months 1 week ago
  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 13 ஆகஸ்ட் 2024

இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.

ஆனால், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பொன்றை உருவாக்கி, அதனூடாக சுயேட்சை வேட்பாளராக பா.அரியநேத்திரன் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

''வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குரலால் சர்வதேசத்திற்குச் செய்திகளைச் சொல்ல வேண்டும். சிதறி இருக்கின்ற கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைய வேண்டும்," பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''கடந்த காலங்களில் ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தும் இருக்கின்றோம். எதிர்த்தும் இருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அதனால், இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. வடகிழக்கில் ஒரு பிரச்னை இருக்கின்றது. அவர்களுக்கான ஒரு உரிமை கொடுத்தால் மாத்திரம்தான், இலங்கையின் பொருளாதாரம் மீண்டு, வெற்றியளிக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இதை உணர்த்துவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன்," என அவர் கூறினார்.

இலங்கையின் ஜனாதிபதியாக தான் போட்டியிடவில்லை என கூறிய அவர், மாறாக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான விடிவை எதிர்நோக்கிய ஒரு குறியீடாகவே போட்டியிடுகின்றேன் எனவும் அவர் கூறுகின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி தான் போட்டியிடுவதாக பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

மலையக தமிழரின் ஜனாதிபதி வேட்பாளர் என்ன சொல்கின்றார்?

தமிழ் பொது வேட்பாளர் என்ற விஷயத்தில், இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார்.

நாட்டின் பிரஜாவுரிமை அற்ற சமூகமாக வாழ்ந்த மலையக சமூகம் பாரிய போராட்டங்களின் பின்னர் அந்த உரிமையை பெற்றதாக கூறிய அவர், மலையக மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு வாழும் சமூகம் குறித்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக அவர் கூறுகின்றார்.

''இலங்கையில் மலையக மக்கள் போராடியே வாக்களிக்கும் உரிமையை பெற்றார்கள். பல வருட காலத்தில் வாக்களிக்கும் உரிமை மாத்திரம் இல்லாது போகவில்லை. மறுக்கப்பட்ட காணி உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. ''

''இலங்கையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்டது போல, சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தினாலேயே சட்டரீதியாக பிற்படுத்தப்பட்ட இந்த சமூகத்தின் குரல் சர்வதேச அளவில் வெளிப்பட வேண்டும்." என எம்.திலகராஜ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''தமிழ்ப் பொது வேட்பாளர் என கூறிக் கொள்வோரும் மலையக தமிழர்கள் தொடர்பில் பேசவில்லை. அந்த எண்ணம் கூட அடிப்படையில் வரவில்லை. கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை. இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்," எனவும் அவர் கூறினார்.

காணி உரிமை

பெருந் தோட்ட தமிழர்களுக்கான காணி உரிமை மறுக்கப்பட்ட நிலையில், அதனை வழங்குவற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்ட போதிலும் அது இதுவரை முழுமை பெறவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை தேயிலை, ரப்பர் உற்பத்திகளுக்காக குத்தகை அடிப்படையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியது.

இந்த நிலையில்,மலையக தமிழர்களின் வாழ்வாதாரம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளை அண்மித்து காணப்படுகின்ற நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த காணிகளை மக்களுக்கு வழங்க மறுத்துள்ளன.

இன்றும் அந்த மக்கள்,பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கீழ் வாழ்கின்றமையினால், இன்றும் லயன் அறைகளில் வாழ்கின்றனர்.

பெருந்தோட்ட பிரதேசங்களில் லயன் அறைகள் காணப்படும் பகுதியை மாத்திரம் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று, காணி உரிமையுடன் கூடிய கிராம முறையொன்றை உருவாக்கும் யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் முன்வைத்திருந்தார்.

பொது வேட்பாளர் விவகாரத்தில் மலையக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?

வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் போது, மலையக மக்களையும் இணைத்ததாகவே தீர்வை பெற்றுக்கொள்வோம் என தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கின்றார்.

மலையக மக்களைப் புறக்கணித்து, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''மலையகத் தமிழர்களை முன்னிறுத்தியே வடகிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் எப்போதும் செயற்பட்டுள்ளன. மலையக மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் நான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்.'' என்றார்.

மேலும், “எமது சகோதரர் திலகராஜ் அவர்கள் இந்த விஷயத்தை தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பிடம் கேட்டிருக்கலாம். அவரும் யாரோ திட்டமிட்டு ஒரு பேரினவாத ஜனாதிபதி வெற்றி பெறுவதற்காக போடப்பட்ட ஒரு கருவியே தவிர, அவர் சொல்கின்ற காரணமும் யாரோ ஒருவர் சொல்லி கொடுத்து சொல்கின்றாரே தவிர, அவரிடமிருந்து அது வரவில்லை. அது எங்களுக்கு தெரியும். எங்கள் விடுதலை போராட்டம் என்பது இன்று நேற்று நடைபெறவில்லை.''

“ஆகவே, நாங்கள் மலையக மக்களைப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு தீர்வை எடுக்க மாட்டோம். மலையக மக்களை மாத்திரமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கு ஒரு தீர்வு வருகின்ற போது, அவர்களையும் இணைத்துக்கொள்வோம்," என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மக்களால் விமர்சிக்கப்படுகின்ற பா.அரியநேத்திரனின் எந்தவொரு கருத்திற்கும் இப்போது பதிலளிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என எம்.திலகராஜ் கூறுகின்றார்.

அரசியல் பார்வயாளர்கள் சொல்வது என்ன?

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொண்டு வந்தால், மலையக தமிழ் சமூகத்திற்கு அது பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு எண்ணியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார்.

''ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது, எனினும், தமது கோரிக்கைகளை தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துரைக்கும் நோக்கிலேயே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ் பொது வேட்பாளர் முயற்சி அரசியல் ரீதியில் அக்னிப் பரீட்சையாகும். அதில் தோல்வி மற்றும் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் அது தமிழர்களின் ஒற்றுமைக்கும் விடுக்கப்படும் பெரும் சவாலாகும்,” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை வடக்கு, கிழக்குக்கு வெளியில் கொண்டுவந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையக தமிழர்களுக்கு பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், சில வேளை இனவாத தேர்தல் பிரசாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மலையக தமிழர்களின் நலன்கருதி அவர்கள் வடக்கு, கிழக்குக்குள் இந்த கோஷத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம்,” என்றார்.

“அதேபோல வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழ் பொது வேட்பாளர் கோஷத்தை கொண்டுவர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துவிட்டன. எனவே, தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் கருதியும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்." என்கிறார்.

ஜனாதிபதி தேர்தலென்பது தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரம் பேசுவதற்கு இருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்று கூறியவர், மக்கள் போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கை அரசியல் களமும் மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுக் கூட்டணி அமைத்து, பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான வேட்பாளர்களிடம் பேச்சு நடத்தி இருக்கலாம் என ஆர்.சனத் கூறுகிறார்.

மேலும், "ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பொதுவேட்பாளர் அணுகுமுறையை பின்பற்றியது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் அதேவேளை, அவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வந்து அது தொடர்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்காமல் இருக்கும் அணுகுமுறை சிறந்ததே.'' என்கிறார்.

''மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் உறுதியளித்துள்ளனர். இது நெடுநாள் கோரிக்கை, எனவே, பிரதான வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுடன் பேரம் பேசுதலே மலையக மக்களுக்கு நன்மை பயக்கும்." என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை மலையகத் தமிழர்கள் புறக்கணித்தது ஏன்? - BBC News தமிழ்

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…

3 months 1 week ago

இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி. ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது.

ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது.

ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை.

கிழக்கின் இனப்படுகொலைகள்

கிழக்கின் இனப்படுகொலைகள் ஈழத்தின் கிழக்கில் பல இனப்படுகொலைகள் நடந்தேறி உள்ளன. சிறிலங்கா அரசின் இனவழிப்புச் செயற்பாடுகளால் அதிக பாதிப்புக்களை சுமந்த இடமாக கிழக்கு இருக்கிறது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்கள் இனப்படுகொலையின் குருதியால் நனைந்த இடங்களாகவே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்துள்ளன. ஆகஸ்ட் மாத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சில இனப்படுகொலைகள் தமிழ் இனத்தின் நினைவுகளில் இருந்து அகல மறுகின்றன.

இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தின் 6ஆம் திகதி நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியே வருகிறது.

மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும். இக் கிராமம் எங்கும் பரவியிருக்கும் சைவ ஆலயங்கள் இந்தக் கிராமத்தின் தொன்மைக்கு ஆதாரமாயிருக்கும் சான்றுகளாகும்.

பேரினவாத ஆக்கிரமிப்பு

இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதனைப் போன்றே அம்பாறையின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட வேண்டும் என்றும் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள்

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த இனவழிப்பாளர்கள், அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

அத்தோடு அந்த இனவழிப்பு அட்டகாசத்தை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை. திராய்க்கேணி கிராமத்தின் வீடுகளினுள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் முதியவர்கள் பலரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். அந்த முதியவர்கள் தீயில் துடிதுடித்து இறந்து போயினர்.

அத்தோடு பதின்மூன்று வயதான சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சித்திரவதைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் இதன்போது நிகழ்த்தப்பட்டது. கிராமம் எங்கும் இனப்படுகொலையின் வேட்டை பரவியது.

நீதி

கிராமம் எங்கும் உலவிய இனப்படுகொலையாளிகள் தமிழ் மக்களின் வீடுகள் மீது தீயை பற்ற வைத்து வீடுகளை அழித்தனர். இதனால் 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய நாளில் காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. நாள் முழுவதும் படுகொலையின் ஓலம் பரவிக் கொண்டிருந்தது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

இப்படுகொலைகளைத் தொடர்ந்த அக்கிராமத்தில் இருந்து சனங்கள் வெளியேறினார்கள். மக்கள் வெளியேறினார்கள் என்பதைவிட துரத்தப்பட்டார்கள் என்பதே பொருத்தமானது. அன்றைக்கு ஊரைவிட்டுச் சென்ற மக்கள் காரைதீவில் அகதி முகாங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

அந்தளவுக்கு அந்தப் படுகொலை திராய்க்கேணி மக்களை பாதித்திருந்தது. இந்தப் படுகொலைக்கான நீதியை மக்கள் கோரி நின்றார்கள். 90களில் நடந்த இப் படுகொலைக்கான நீதியை மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திராய்க்கேணி இனப்படுகொலை குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றொரு பேரிடியாக நிகழ்த்தப்பட்டது.

இதற்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர்.

திராய்க்கேணி இனப்படுகொலை

இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்த வலியுறுத்திய போதும் அரசினால் அது கண்டுகொள்ளப்படவில்லை.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அந்த எச்சங்களும் அந்த சாட்சியங்களும்கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்தப் படுகொலையினால் சுமார் 40 பெண்கள் விதவைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. திராய்க்கேணி இனப்படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வு ஆண்டு தோறும் அந்தக் கிராமத்தில் நடந்து வருகின்றது.

அந்த வகையில் நடந்த ஆண்டு நடந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் முக்கிய விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, ‘திராய்க்கேணி தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் உயிராபத்துக்கு முகம்கொடுத்தனர்.

அவர்கள் இப்போது கூட பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 33 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்கவில்லை.

ரணத்தின் நீட்சி

அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்…” என்று அவர் கூறியிருப்பது இப்படுகொலையின் ஆறாத ரணத்தின் நீட்சியாகும். இதுவேளை திராய்க்கேணி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் காரியங்கள் தொடர்வதாகவும் கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அன்று திராய்க்கேணி மக்கள் கொல்லப்பட்டது அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவே என்பதும் இன்றும் அதுவே அங்கு தொடர்கின்றது என்பதையும் கலையரசனின் கருத்து எடுத்துரைக்கின்றது. அத்துடன் தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறியது போன்று துர்ப்பாக்கிய நிலைக்கு திராய்க்கேணி மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கவலையுடன் கூறிய விடயம், வடக்கு கிழக்கின் பெரும்பாலான கிராமங்கள் எதிர்கொள்ளும் அவலத்தையே காட்டுகிறது.

பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Checked
Thu, 11/21/2024 - 23:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr