அரசியல் அலசல்

புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!

2 days 4 hours ago

புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!

on November 18, 2024

GettyImages-2173117833.jpg?resize=1200%2

Photo, GETTY IMAGES

நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168  ஆசனங்களில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி அந்த அத்தகைய ஒரு வெற்றிபை பெற்றபோது பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக எந்தவொரு அரசியல் கட்சியுமே இதுவரை பெற்றிராத நிலையில், தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெருப்பான்மைக்கு மேலதிகமான ஆசனங்களுடன் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் 2010ஆம் ஆண்டிலும் கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சியில் 2020ஆம் ஆண்டிலும் அவர்களின் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் குறைவான நாடாளுமன்ற ஆசனங்களைத் தேர்தல்களில் பெற்ற அவர்கள் பிறகு கட்சித் தாவல்களை  ஊக்குவித்து அந்தப் பெரும்பான்மையை உறுதி செய்து கொண்டார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி தனியாக இந்தத் தடவை தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதித்துக்  காட்டியிருக்கிறது.

நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களினால் நிரப்புமாறு தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி திசாநாயக்கவும் அமைச்சர் விஜித ஹேரத்தும் சபையில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால், அதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

பிறகு தேர்தல் பிரசாரங்களின் இறுதிக் கட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) வேறு தலைவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த கடந்த கால அரசாங்கங்கள் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டதை சுட்டிக்காட்டி தங்களுக்கு அத்தகைய பெரும்பான்மை தேவையில்லை என்றும் ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு உறுதியான பெரும்பான்மையைத் தந்தால் போதும் என்றும்  கூறினார்கள். ஆனால், அவர்களின் வேண்டுகோளை மீறி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் ஆணையைக்  கொடுத்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் அவர்களினால் பொருளாதார விவகாரங்களை கையாளமுடியாது என்பதால் தங்களது அணிகளைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், மக்கள் அதை அறவே பொருட்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் நாடாளுமன்றத்தை பெருமளவுக்கு  நிரப்பியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சித்திறன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களை எல்லாம் நிராகரித்த மக்கள் அவர் மீதும் அவரது கட்சி மீதும் வியக்கத்தக்க முறையில் மீண்டும் நம்பிக்கையை  வெளிப்டுத்தியிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் இந்தச்  சந்தர்ப்பம் தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று நாடாளுமன்றத்தின் மூலமாக ஆட்சிக்கு வருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வைக் குறித்து நிற்கிறது.

கடந்த நூற்றாண்டில் ஒரு மூன்று தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது அதன் அரசியலில் முக்கியமான உருநிலை மாற்றமாக அமைகிறது. ஜே.வி.பியின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் வரலாற்றிலும் இது ஒரு மைல்கல்லாகும்.

சுமார் 60 வருடகால வரலாற்றில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சிகளின் விளைவான பயங்கர அனுபவங்களுக்குப் பிறகு ஜனநாயக அரசியல் மூலமாக ஒரு முழுமையான அரசியல் வட்டத்தை சுற்றிவந்து நிறைவு செய்திருக்கிறது. அதனால், அதன் மகத்தான தேர்தல் வெற்றி இலங்கையின் இடதுசாரி அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட முக்கியமான நிகழ்வாகும்.

ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்றதை அடுத்து இலங்கையின் ஆட்சியதிகாரம் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து அந்த வர்க்கத்துக்கு வெளியில் உள்ள சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஒருவரின் கைகளுக்கு வந்தது. தேசிய மக்கள் சக்தியின் அதிகப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றம் அந்த அதிகார மாற்றத்தை முழுமை பெறச்செய்வதாக அமைகிறது.

புதிய பாராளுமன்றம் இன்னொரு காரணத்துக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது.

எந்தவொரு தேசிய கட்சியுமே இதுகாலவரை செய்திராத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தென்னிலங்கையில் மாத்திரமன்றி நாடு பூராவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் கணிசமான ஆசனங்களை அது கைப்பற்றியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து அவரின் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. அந்த மக்கள் தங்களிடம் வாக்கு கேட்க வந்த தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே தங்களது அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியும் இருந்தார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் ஒரு தேசிய மக்கள் சக்தி அலையே வீசும் என்று எவரும் நினைக்கவில்லை.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமாக வடக்கை பிரதிநிதித்துவம் செய்துவந்த பாரம்பரிய தமிழ்க்கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் பிரபல்யமில்லாதவர்கள் என்றபோதிலும் கூட வியக்கத்தக்க வெற்றியை அவர்களால் சாதிக்கக்கூடியதாக இருந்தது.

தமிழ் மக்கள் இந்தளவுக்கு ஆதரவை வழக்கியதற்கு முக்கியமான காரணம் தேசிய மக்கள் சக்தியின் மீதான கவர்ச்சி என்பதை விடவும் தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் அரசியல் கட்சிகள் மீதான  வெறுப்பு என்பதே உண்மையாகும்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பதினைந்துக்கும் அதிகமான வருடங்களில் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒருமித்த  நிலைப்பாட்டுடன் ஐக்கியமாகச்  செயற்படத் தவறிய தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் காரணமாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுப்பட்டுக் கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெருவாரியான அரசியல் கட்சிகளும்  குழுக்களும் இதற்குச் சான்று. தங்கள் மத்தியில் உருப்படியான மாற்று ஒன்று இல்லாத நிலையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

தேர்தல் பிரசாரங்களின் இறுதி கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் மற்றைய சிங்கள கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் தமிழ் மக்களுக்கு கூறினார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். ஆனால், மக்கள் இந்த எதிர்ப்பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை என்பதை அவர்கள் வாக்களித்த முறை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து முன்னென்றும் இல்லாத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தங்களுக்கு அளித்த ஆதரவை ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்களோ தெரியவில்லை.

ஆனால், தங்களது கடந்தகால அரசியல் பாதையை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காமல் வெறுமனே உணர்ச்சிவசமான தேசியவாத சுலோகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நெடுகவும் ஏமாற்றி நாடாளுமன்றம் சென்று கொண்டிருக்கலாம் என்று நம்பியதன் விளைவை பல தமிழ்க்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

 

https://maatram.org/articles/11863

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள்

3 days ago

தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள்.

மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் 

 

பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் | Parliament Election 2024 Political Essay

 

அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு.  

ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும்.

இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை.

பெரும்பான்மை 

 

அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா?

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் | Parliament Election 2024 Political Essay

 

இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான்.

இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது.  

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் | Parliament Election 2024 Political Essay

அதேசமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால்,கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார்.

அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்வி போல.

எனினும், தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

தமிழ் தேசியப் பிரதிநிதித்துவம்

நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் | Parliament Election 2024 Political Essay

 

வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.

மேலும், தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி.

என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது.

ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு.

அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு, தேசத் திரட்சிக்கு எதிரானது.  

https://tamilwin.com/article/parliament-election-2024-political-essay-1731876493

"அவளும் அப்படியா?"

3 days 4 hours ago

"அவளும் அப்படியா?"

 

ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட  துணை- விளக்க உரையின் படி [According to the Tika]  கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும்  'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு  துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கட்டாயமாக கோணேஸ்வரமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். 

அப்படியான சிவ ஆலயம் ஒன்று அங்கு செல்வாக்குடன் இருந்தது எனறால், அதைச் சுற்றி பெருமளவு சைவத் தமிழர்கள் கட்டாயம் அன்றே அங்கு இருந்திருப்பார்கள். அப்படியான திருகோணமலையில், இன்று பல தசாப்த கால மோதல்கள் நிலத்திலும் அதன் மக்களிலும் வடுக்களை ஏற்படுத்தியது. தரணி குடும்பத்திற்கு, தமிழ் சமூகத்தில் உள்ள பலரைப் போலவே, அமைதியான திருகோணமலை பற்றிய அவர்களின் நினைவுகள் கசப்பானவை, ஏனெனில் நகரம் ஒரு காலத்தில் அவர்களுடையதாக இருந்தது - 1827 இல் 82% மக்கள் தமிழர்களாக இருந்தனர். ஆனால் 1946 வாக்கில், அந்த எண்ணிக்கை 44.5% ஆகக் குறைந்தது. இன்று அது வெறும் 32% அல்லது அதிலும் குறைவாக ஆக இருக்கிறது, 1827ல் வெறும் 1.3% ஆக இருந்த சிங்கள மக்கள் தொகை இப்போது கிட்டத்தட்ட 27% ஆக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை வீதங்கள் வேகமாக மாறிக் கொண்டிருந்தன, தமிழர்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் இன்று பெரும்பான்மையாக இல்லை.

தூரத்தில் உள்ள கடலைப் பார்த்துக் கொண்டு தோட்டத்தில் நின்றாள் தரணி. அவளது தாத்தா கந்தையா தாழ்வாரத்தில் அமர்ந்து, மறுநாள் வேலைக்காக மீன்பிடி வலைகளை திருத்திக் கொண்டிருந்தார். அவளது  அப்பா சுரேஷ், தன் அப்பா போலவே அவரது கண் முன்னே நிலம் பறிப்படுவதையும் கட்டாய குடியேற்றம் நடைபெறுவதையும் அதன் தாக்கங்களையும் நேராக அனுபவித்தவர். 

"திருகோணமலை முன்பு போல் இல்லை," அவர் முணுமுணுத்தார், அவரது கைகள் தந்தைக்கு உதவி செய்து கொண்டு சுறுசுறுப்பாக  இருந்தாலும், அவரது மனம் பின்னோக்கிச் சென்றது. "1827 இல் 16.9% மட்டுமே இருந்த முஸ்லிம்கள், இப்போது 41.9% ஆகப் பெரிய குழுவாக உள்ளனர். ஆனால், நாங்கள் தேய்ந்து தேய்ந்து கொண்டு போகிறோம்.  விரைவில், சிங்களவர்களும் எங்களை விட அதிகமாகி விடுவார்கள். பல்வேறு அரச அதிகாரிகளால் பொய்யான காரணங்களுடன் திணிக்கப்படும் அரச ஆதரவுடனான கட்டாயக் குடியேற்றங்களை, அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களும் தமிழ் மக்களுடன் ஒன்று சேர்ந்து தமது பாரம்பரியமான தமிழ் பேசும் நிலத்தை காப்பாற்றத் தவறியது ஏன் ?" என சிந்தித்தான்.   

தரணி இதற்கு முன் பலமுறை தமிழரின் இருப்பைப்பற்றி கேட்டிருந்தாள். தந்தையின் குரலில் சோகமும் கோபமும் கலந்திருந்தது. இந்த இனக்குழுக்களின் எண்கள் அவருக்கு வெறும் புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருந்தன - அவை இழப்பு, இடம்பெயர்வு மற்றும் இந்த பண்டைய நிலத்தில் அவர்களின் அடையாளத்தை மெதுவாக அழிக்கும் சின்னங்களாக இருந்தன.

"நாம் அருகருகே வாழ முடியாதா?" தரணி மீண்டும் வேறுவிதமாக மாற்றிக் கேட்டாள், அவள் குரல் மென்மையாக இருந்தாலும் ஆர்வத்தால் நிறைந்தது. "காணிகளை கட்டாயமாக பறித்தலை, கட்டாய குடியேற்றங்களை நிறுத்தி, அனைவரையும் எல்லா சமயத்தையும் சமமாக மதித்து, தொல்பொருள் ஆய்வுகள் முறையாக கையாண்டால், கல்வி, வேலை வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் உள்வங்கினால், கட்டாயம் நிலைமை மாறக்கூடும். இனவாத அரசும் இனவாதம் பேசும் மத குருமார்களே இவை எல்லாவற்றுக்கும் காரணம். ஆனால் சாதாரண மக்கள், யாராக இருந்தாலும் நல்லவர்களே!, " அவளின் தாத்தாவின் குரல் பதில் கொடுத்தது. 

சுரேஷ் முகத்தைச் சுளித்துக்கொண்டு வேலையிலிருந்து நிமிர்ந்து பார்த்தான். "நீ இளம்பெண் தரணி உனக்கு இப்ப தான் 16  வயது. உனக்குப் புரியவில்லை. மோசமானதை நீ பார்க்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் தாக்கிய காலங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதை நீ எளிதில் மறந்துவிடாதே." என்றார் அவளின் அப்பா. 

தரணி அமைதியாக இருந்தாள், ஆனால் அவள் இதயம் நிலைபெறவில்லை. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தெருக்களில் ஒன்றாக விளையாடுவதை அவள் பார்த்துள்ளாள். நிச்சயமாக, எல்லோரும் கடந்த கால வெறுப்பை சுமக்கவில்லை. என்றாலும் அவர்களால் புதிதாக ஆரம்பிக்க நம்பிக்கை வரவில்லை?

அந்த தருணத்தில், காலடிச் சத்தம் கேட்டு, அது தரணியின் எண்ணங்களில்  குறுக்கிட்டன. சமீபத்தில் அவளின் அயலில் குடியேறிய சிங்கள இளம் பெண் சந்துனி [sanduni] அவர்கள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு கூடை காய்கறிகளை சுமந்துகொண்டு 'பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் தொடிக் கை மகடூஉ' என யானையின் துதிக்கை போலத் தொங்கும் சடையினை பின்னிப் பின்புறம் தொங்க விட்டுக்கொண்டு, அது காற்றில் அசைந்து ஆட  அவள் ஒரு சிறு புன்னகையுடன் நடந்து வந்தாள். 

"ஹலோ" என்று சந்துனி தமிழில்  "என் அம்மா உங்கள் குடும்பத்திற்காக இதை அனுப்பினார்." என்று பேச, உச்சரிப்பு கொஞ்சம் வேறுபட்டு இருந்தாலும், அதை விளங்கிக் கொண்ட தரணி ஆச்சரியமாக கண் சிமிட்டினாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சில சிங்களக் குடும்பங்கள் அரசினால் குடியேற்றப்பட்டிருந்ததால், இரு தரப்பிலும் ஒரு நீடித்த சந்தேகம் ஒருவருக்கொருவர் இருந்தது. 

தரணி பதில் சொல்வதற்குள் அவள் அம்மா மீனா வாசலில் தோன்றினாள். அவள் ஏப்ரனில் [உடுப்பு அழுக்காகாமல் முன்புறம் கட்டும் துணியில் / apron] கைகளைத் துடைத்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்தாள். “நன்றி” என்று தமிழில் சொல்லி  கூடையை அவளிடம் இருந்து வாங்கினாள். ஆனால் சந்துனி கிளம்பத் திரும்பியவுடன் மீனா கூடையை சமையல் அறை மேசையில்  வைத்தாள், ஆனால் அதை அப்படியே விட்டு விட்டாள்.

தரணியால் தாயின் பதற்றத்தை உணர முடிந்தது. தன் புருவங்கள் சுருங்கி."ஏன் அம்மா ஏற்கவில்லை?" என்று கேட்டாள். தரணி திரும்பி பார்த்தாள், எல்லோருமே - தாத்தா, அம்மம்மா, அப்பா, அம்மா - கையை முகவாயில் அல்லது கன்னத்தில் வைத்தபடி எதோ யோசனையில் இருந்தனர். மற்ற மூவரும் அமைதியில் இருக்க, மீனா பெருமூச்சு விட்டாள். "இது காய்கறிகளைப் பற்றியது அல்ல. அவர்கள் சிங்களவர்கள், தரணி. அவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. இவ்வளவு நடந்த பிறகும், நாம் அவர்களை நம்பலாமா?" என்று கேட்டாள். "இன்று எம் அயலுக்கே குடிபெயர்ந்து விட்டார்கள், கட்டாயம் ஒரு புத்தர் வருவார், பின் விகாரை வரும், அதன் பின் ... ? அது தான் எம் பயமும் ஏக்கமும், மற்றும் படி தனிப்பட்ட சந்துனி அல்லது மரக்கறி அல்ல" என்று விளக்கம் கொடுத்தாள்.  

 "ஆனால், அம்மா, சந்துனி போரில் பங்கேற்கவில்லை. அவள் என்  வயது," தரணி நியாயப்படுத்தினாள். "அவள் அன்பாக இருக்க முயற்சிக்கிறாள் என்றே எனக்குத் தோன்றுகிறது, இப்ப புது கொள்கையுடன் புது ஜனாதிபதி, மாற்றத்திற்கான பொதுத் தேர்தலும் வருகிறது. இளைஞர்களில் மாற்றம் ஓரளவு தெரிகிறது." என்றாள். 

சுரேஷ் சிணுங்கினான், அவன் குரல் கடுமையாக இருந்தது. "அது அவ்வளவு எளிதல்ல. சுற்றிப் பாருங்கள். தமிழர்களாகிய நாம் இங்கு, எங்கள் சொந்த நிலத்தில் பெரும்பான்மையாக இருந்தோம். இப்போது, நாம் சுருங்கி வருகிறோம். சிங்களவர்கள் கைப்பற்றுகிறார்கள், மேலும் சில காய்கறிகள் அதை மாற்றும் என்று நினைக்கிறீர்களா?"

தன் அப்பா வலியிலும் பயத்திலும் பேசுவது தரணிக்குத் தெரிந்தது. அம்மம்மா தாத்தா இருவரும் கூட  அப்படியே குந்தில் இருந்தனர்.  திருகோணமலையில் தமிழ் சமூகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, இடம்பெயர்ந்து, பலவீனப்படுத்தப்பட்டது. தமிழ் சனத்தொகை குறையும் எண்கள் ஒரு வேதனையான கதையைச் சொன்னது - ஒரு காலத்தில் தமிழ் நிலம் அவர்களின் கைகளில் இருந்து மெதுவாக நழுவியது. ஆனால், கடந்த காலம் கனமானதாக இருந்தாலும், எதிர்காலம் வேறுவிதமாக இருக்குமா என்று ஆழ்மனதில் தரணி யோசித்தாள்.

அன்று மாலை தரணி வெளியே ஒரு படிக்கட்டில் அமர்ந்ததும் சந்துனியை மீண்டும் பார்த்தாள். அந்த நேரத்தில், அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற இளம் இளைஞன், இளைஞிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே தமிழ் மற்றும் சிங்கள குழந்தைகள் இருவரும் சிரித்துக் கொண்டே ஓடினர், அவர்களின் கவலையற்ற முகம்  தங்கள் பெற்றோரை வருத்தும் வரலாற்றை மறந்துவிட்டன.

அவர்களைப் பார்த்ததும் தரணிக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஒரு வேளை சந்துனி தன் மக்களுக்கு எதிராகப் போராடியவர்களைப் போல் "அதே மாதிரி" இல்லை. அது "அவளும் அப்படியா?" என்று கேட்டால்,  ஒரு வேளை அவள் வித்தியாசமாக இருந்திருக்கலாம்? கடந்த கால சுமைகளிலிருந்து விடுபட்டு, ஒன்றாக வாழ்வதற்கான ஒரு புதிய வழியை உருவாக்க விரும்பிய ஒரு இளம் பெண் போல் இருந்தது. 

மறுநாள் காலை, தன் உள்ளுணர்வைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்த தரணி, மேசையில் கை வைக்காமல் கிடந்த காய்கறிக் கூடையை எடுத்தாள். அவள் இதயம் நரம்புகளால் துடிக்க, பக்கத்து வீட்டு சந்துனியின் வீட்டிற்கு நடந்தாள். சந்துனி கதவைத் தட்டியதும் அவளைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.

தரணி சிரித்துக் கொண்டே கூடையை நீட்டினாள். "காய்கறிகளுக்கு நன்றி. நாம் ஒன்றாக இதை ஏதாவது கறியாக சமைக்கலாம் என்று நினைத்தேன்?" என்றாள். 

ஒரு கணம், சந்துனியின் முகம் பிரகாசித்தது, அவள் கண்கள் அன்பின் சூட்டில் பிரகாசித்தன. "நான் அதை விரும்புகிறேன்!" என்று அவளை கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அன்பாக அழைத்தாள். அறைக்குள் தையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த சந்துனியின் தாயும், கணணியுடன் இருந்த அவளின் அண்ணாவும் வெளியே வந்து தரணியை வரவேற்றனர். இது சாதாரண சிங்கள மக்களின் இயல்பு, அரசியல் காட்டுவதை விட வேறுபாடாக இருப்பதைக் அவள் கண்டாள். அவளின் தாத்தாவின் அன்றைய குரல் அவள் இதயத்தில் ஒலித்தது.

தரணி வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, அவள் தோள்களில் இருந்து எடை தூக்கப்பட்டதை உணர்ந்தாள். "அவளும் அப்படியா?" என்ற கேள்விக்கு விடையும் கண்டாள். அவளுடைய தாத்தாவும் அம்மம்மாவும் அப்பாவும் அம்மாவும் கடந்த காலத்தில் பல சிக்கல்களை கண்டவர்கள். கடுமையாக அனுபவித்தவர்கள், ஆனால் எதிர்காலம் எங்காவது தொடங்கியே ஆகவேண்டும் என்று அவளுக்குத் தெரியும். ஒருவேளை இது போன்ற நம்பிக்கையின் சிறிய செயல்களுடன் அது தொடங்கலாம்  என முணுமுணுத்துக்கொண்டு வீடு போனாள். 

அன்று மாலை, தரணியின் தந்தையும் தாத்தாவும் மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது, மீண்டும் இருவரிடமும் பேசினாள். "அப்பா, நம்மால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால், ஒருவேளை, சந்துனி போன்றவர்களுக்கும் வேறு ஏதாவது தேவைப்படலாம். சுதந்திரத்துக்கு  முன்பு நாம் தமிழர்களும் சிங்களவர்களும் இங்கு ஒன்றாக வாழ்ந்தோம். ஒருவேளை மீண்டும் முடியும்." என்று கூறினாள். 

முகம் கலங்கியிருந்தாலும் சுரேஷின் கண்கள் மென்மையாகிவிட்டன. "மன்னிப்பது எளிதல்ல, தரணி." இன்னும் இறுதி போரின் மனித உரிமை மீறல்கள் ஏற்கப்படவும் இல்லை, மன்னிப்பு கேட்கவும் இல்லை, வலிந்து காணாமல் போனோருக்கு எந்த நீதியும் வழங்கப்படவில்லை, இன்னும் காணி பறிப்பு தொடர்கிறது. இதற்கு மேல் என்னத்தை சொல்ல ?" தன் மகளை உற்றுப்பார்த்து கேட்டார்.   

"எனக்குத் தெரியும், அப்பா," அவள் பதிலளித்தாள், "ஆனால் நாம் மாற்றத்தை சிறு துளியாக காணும் பொழுது, அதை பெரிய துளியாக்க முயன்றால் அதில் தவறு இல்லைதானே" என்றாள்  

ஆனால் சுரேஷ் பதில் சொல்லவில்லை, ஆனால் தன் வார்த்தைகள் அப்பாவுக்குள் ஏதோ ஆழத்தை தொட்டது என்று தரணியால் சொல்ல முடிந்தது. போரின் காயங்கள் எளிதில் ஆறாது, அது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திருகோணமலை போன்ற பண்டைய   நகரத்தில், ஏன் அது முதலில் ஆரம்பிக்கக் கூடாது என்று அவள் தனக்குள் யோசித்தாள்.    

அன்று இரவு உறக்கம் கலைந்தபோது, சந்துனி வந்ததில் இருந்து தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை தரணி நினைத்துப் பார்த்தாள்: "அவளும் அப்படியா?"

நன்றி 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

466652920_10227243095405962_7333637787503092654_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=AlDIWMexBO4Q7kNvgH66k9i&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A9_HIR2MEp0TCH9NifdtDR9&oh=00_AYDO1js14iHwF_emEWmJ_0K_ndzIpR-hqJC2PhDSGW5u2Q&oe=6740CB45  466032787_10227243095685969_1711314259783440231_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=zaWi_i-3GWUQ7kNvgHSgdqa&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A9_HIR2MEp0TCH9NifdtDR9&oh=00_AYB-FrdPOix_pWeZX91jTuj71P5BWauqw2DtGGxjY0Jqqw&oe=6740DA34  

466104058_10227243097646018_8521854290891651505_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=TQHo_tLMcmIQ7kNvgENszAU&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A9_HIR2MEp0TCH9NifdtDR9&oh=00_AYBzKnEudFCssm7E8ikrbodq1frOIXd-qMqgTLu2Z0wXgQ&oe=6740B058

 

வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது

3 days 6 hours ago

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது

கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ) 1ஆசனத்தையும் கைப்பற்றிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திலேயே வன்னி மாவட்டமும் இருந்தது.

அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசு கட்சி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனத்தையும் திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் தேசிய காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன

இதற்கமைய 2020 பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்த 13 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 10 ஆசனங்களை கைப்பற்றியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்திலிருந்த 16 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தன

இந்நிலையில் தான் வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 5 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுத்துள்ளன.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 ஆசனங்களில் கடந்த முறை 4 ஆசனங்களை தமிழ் கட்சிகள் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சி தனியாக 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களைக்கைப்பற்றி தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துள்ளதுடன் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளதுடன் கடந்த முறை திகாமடுல்ல மாவட்டத்தில் பறிகொடுத்த தமிழர் பிரதிநிதித்துவத்தையும் இம்முறை தக்கவைத்துள்ளது.

https://thinakkural.lk/article/312222

ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீள முடியுமா?

3 days 20 hours ago
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ், இலங்கை

நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது.

இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல்

2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள். 2015ல் நடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன, இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கவில்லை.

மேலும், 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளும் மக்களிடம் பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தன.

இந்தப் பின்னணியில்தான், 2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர கூட்டமைப்பின் (Sri Lanka People's Freedom Alliance) சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ 69,24,255 வாக்குகளைப் பெற்று மகத்தான ஒரு வெற்றியைப் பெற்றார்.

 

அதற்கடுத்து 2020ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டமைப்பிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 68,53,690 வாக்குகளும் 145 இடங்களும் கூட்டமைப்பிற்குக் கிடைத்தன.

இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வெறும் 4,18,553 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தது. அதையொட்டி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்திக்கு நான்காவது இடமே கிடைத்தது. நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்று இடங்களே கிடைத்தன.

ஆனால், நான்கே ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றதோடு, இப்போது நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி

மாறாக ராஜபக்ஸக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. 225 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில், மக்களால் தேர்வுசெய்யப்படும் தொகுதிகளில் இரண்டும் தேசியப் பட்டியலில் ஒன்றுமாக மொத்தம் 3 இடங்களையே இக்கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 3,50,000 வாக்குகளே கிடைத்துள்ளன.

இந்த நிலையில்தான், ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் அவர்களது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

"பொதுஜன பெரமுன மீள்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. குறைந்தது 15 - 20 ஆண்டுகள் ஆகலாம். தற்போது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நல்ல பெரும்பான்மையை பெற்றிருக்கும் நிலையில், ராஜபக்ஸக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை, முறைகேடுகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடும். அப்படியான சூழலில் ராஜபக்ஸக்கள் மீதான அதிருப்தி மேலும் அதிகரிக்கலாம். அப்படி நடந்தால் அவர்கள் வெளியில் வந்து அரசியல் செய்வது மிகவும் கடினம். ஒருவேளை தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டால்கூட, அந்த அதிருப்தி இவர்களுக்கான ஆதரவாக உருமாறுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
இலங்கை அரசியல் வரலாற்றில் ராஜபக்‌ஸக்களின் பங்கு

இலங்கையின் அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1936லேயே இலங்கையில் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ ராஜபக்ஸ.

இவர் விரைவிலேயே காலமாகிவிட, இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்ஸ அரசியலில் களமிறங்கினார். 1947ல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு சென்றார் டான் ஆல்வின்.

இந்த டான் ஆல்வினுக்கு சமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள். இவர்களில் மூன்றாவது குழந்தையான மஹிந்தவும் ஐந்தாவது குழந்தையான கோட்டாபயவும் பிற்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியானார்கள்.

தன் தந்தை இறந்தவுடன் 21 வயதிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார் மஹிந்த. படிப்படியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியானார் அவர்.

அவரது சகோதரர் கோட்டாபய, பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, இந்த சகோதரர்களின் செல்வாக்கு உச்சத்தைத் தொட்டது. அதற்கு அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இந்தத் தருணத்தில், இலங்கையின் மிக சக்தி வாய்ந்த குடும்பமாக மஹிந்தவின் குடும்பம் உருவெடுத்தது.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த.
மீண்டு வந்த ராஜபக்ஸவுக்கு மீண்டும் தோல்வி

ஆனால், 2015ல் அவரது செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது.

இந்தத் தருணத்தில்தான், தான் சார்ந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கியிருந்தார் மஹிந்த. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்தாலும் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.

விரைவிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடு ஏற்பட, பிரதமராக நியமிக்கப்பட்டார் மஹிந்த. அந்த நியமனம் நீடிக்கவில்லையென்றாலும்கூட, அரசியலில் அவரது மறுவருகை தொடங்கிவிட்டதை இந்த நிகழ்வு உணர்த்தியது.

2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி கிடைக்க, தம்பி ஜனாதிபதியாக இருக்க அண்ணன் மஹிந்த பிரதமரானார்.

ஆனால், அதைத் தொடர்ந்த கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, அதையொட்டி கோட்டாபய எடுத்த சில அதிரடி முடிவுகள் நாட்டை மிகப் பெரிய நெருக்கடிக்கு தள்ளியது. இதையடுத்து உருவான மாபெரும் மக்கள் போராட்டத்தையடுத்து, மஹிந்தவும் கோட்டபயவும் பதவிவிலக நேர்ந்தது. இவர்களது செல்வாக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு, அன்றைய ஆளும் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது
மோசமான ஆட்சியே காரணம்

"இப்போது ராஜபக்ஸ என்ற பெயரே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்குரிய பெயராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் சொந்தத் தொகுதியான முள்கிரிகல தொகுதியிலேயே அவர்களது கட்சி படுதோல்வி அடைந்தது. இவர்களுடைய செல்வாக்கு இந்த அளவுக்கு சரிய, கோட்டாவின் ஆட்சிக்காலம்தான் மிக முக்கியக் காரணம். நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் அவர். ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்பட்டார்.

உதாரணமாக, ரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்த விவசாயிகளை நிர்பந்திக்கும் முடிவை யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்தார். அதேபோல, அரிசி ஆலை அதிபர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றார். இது நடக்கவில்லை. அங்கேதான் இந்தச் சரிவு ஆரம்பித்தது. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப் போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை. அதற்குப் பிறகு இப்போதுவரை மக்களை அவரால் நேரடியாக சந்திக்க முடியவில்லை. மக்கள் அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார்கள். அதிலிருந்து இவர்கள் மீள்வதற்கான சாத்தியமே இல்லை" என்கிறார் சிவராஜா.

கொரோனா பரவலை அடுத்து சுற்றுலா வருவாய் குறைந்து இலங்கையின் அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ரசாயன உரங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்தார் அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய.

இது விவசாயத்தைக் கடுமையாகப் பாதித்தது. உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இதனால், அந்நியச் செலாவணி மேலும் குறைய ஒரு கட்டத்தில் எரிபொருள் வாங்கக்கூட டாலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்க கோட்டாபய ராஜபக்ஸவும் மஹிந்தவும் பதவியிலிருந்து விலகினர்.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாட்டு மக்களின் மனநிலையை அறியாமல் முடிவுகளை எடுத்தார் கோட்டபாய. இலங்கையின் வரலாற்றிலேயே, அவர் விரட்டப்பட்டதைப்போல, ஒரு ஜனாதிபதி விரட்டப்பட்டதில்லை.
"பாரம்பரிய தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பு குறைவு"

இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவால் ஓரளவுக்கு நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்றாலும் பொருளாதார நெருக்கடியின் போது உயர்ந்த விலைவாசி அப்படியே நீடித்தது. வேலைவாய்ப்பின்மையும் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல பாரம்பரிய தேசியக் கட்சிகளைச் சேர்ந்த வேறு எந்தத் தலைவர்களுக்கும் இனி அரசியல் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதவில்லை என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியரான அகிலன் கதிர்காமர்.

"ராஜபக்ஸக்கள் மட்டுமல்ல, கொழும்பிலுள்ள மேட்டுக்குடி அரசியலிலேயே மொத்தமாக ஒரு பெரிய குழப்பம் வந்திருக்கிறது. இனி பழைய பாணியில் இவர்கள் மக்கள் அணுகுவது கடினமாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தி மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லாவிட்டாலும்கூட, கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளுக்கு மீண்டும் ஆதரவு கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. புதிதாக ஒரு வலதுசாரி சக்தி உருவாகலாம் என்றுதான் நினைக்கிறேன்" என்கிறார் அவர்.

 
இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ஜனாதிபதியாக வெற்றிபெற்றார்
ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

"ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குரியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் ராஜபக்ஸ குடும்பத்தினர் மீதும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவை நிரூபிக்கப்பட்டால், அவர்களது அரசியல் எதிர்காலம் பெரும் ஆபத்தில் சிக்கும். 2029ஆம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தல் மூலம் தனது மகன் நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதியாக்க வேண்டுமென நினைத்தார் மஹிந்த. ஆனால், இந்தத் தேர்தலில் அவர்கள் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், இது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. அநுரவின் ஆட்சியும் பொருளாதார நடவடிக்கைகளும் சிறப்பாக இருந்தால், பொதுஜன பெரமுனவின் அரசியலும் ராஜபக்ஸவின் குடும்ப அரசியலும் இல்லாமல் போகலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆ. நிக்ஸன்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவது என்ன?

ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூற்றுகளையெல்லாம் புறந்தள்ளுகின்றனர்.

"நாங்கள் இப்படி ஒரு பின்னடைவைச் சந்திப்பது இது முதல்முறையல்ல. 2015லும் இதே போன்ற பின்னடைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் பல தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால், நாங்கள் மிக வலுவாகத் திரும்பிவந்தோம். மேலும் இந்தப் பின்னடைவு எங்களுக்கு மட்டும் ஏற்பட்டதைப் போல சொல்வது சரியல்ல. எல்லா பழைய, பாரம்பரிய கட்சிகளுமே தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களித்தவர்கள் இந்த முறை அநுரவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்குகள் அப்படியே இடம் மாறியிருக்கின்றன. இலங்கையின் அரசியல் கலாசாரம் மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. அதனை தேசிய மக்கள் சக்தி விரைவிலேயே புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட்டனர். அதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம்" என்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரான மிலிந்த ராஜபக்ஸ.

இந்த தேர்தல் தோல்வியால் ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலைவிட்டு விலகிவிட மாட்டார்கள் எனக் குறிப்பிடும் மிலிந்த, மஹிந்த ராஜபக்ஸவும் சமல் ராஜபக்ஸவும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும் நாமல் ராஜபக்ஸ கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்கிறார். மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில் அரசியல் என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடப்பதைவிட, வெளியில்தான் அதிகம் இருக்கும். அதுவே இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

3 days 20 hours ago
நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்! திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

அனுரா எளிமையானவர்தான். சாதாரண சனங்கள் தொட்டுக் கதைக்கக்கூடிய ஒரு ஜனாதிபதியும்தான். அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த வாரம் பாசையூருக்கு வந்த பொழுது பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கவில்லை. சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் மிகக்குறைவாகவே இருந்தது. பதிலாக மாறுவேடத்தில் உலாவும் புலனாய்வுத் துறையினர் அதிகமாகக் காணப்பட்டார்கள். அனுர ஒரு காரில் வந்து இறங்கினார். அவர் அங்கிருந்த பௌத்த பிக்குகளின் காலில் விழுந்தார். ஏனைய மதகுருமார்களின் காலில் விழவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவரை வரவேற்ற முதிய அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறெல்லாம் தொட்டுப் பழகக்கூடிய அளவுக்கு அனுர எளிமையானவராக, எளிதில் கிடைக்கக் கூடியவராக, அணுகப்படக் கூடியவராகக் காணப்படுகிறார். இவையெல்லாம் மாற்றங்கள்தான். சந்தேகமே இல்லை. மேட்டுக்குடி ஜனாதிபதிகளின் மத்தியில் சாதாரண மக்களால் தொட்டுப் பழகக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார். நிச்சயமாக மாற்றம் தான். ஆனால் தமிழ் மக்கள் கேட்பது இந்த மாற்றத்தை மட்டுமல்ல.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அதைவிட ஆழமானது. அது இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றம். இப்போது இருக்கும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நீக்கி கூட்டாட்சிக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த மாற்றத்தைச் செய்யத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அவரிடம் உண்டு.எனவே இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களுக்கு அவர் போக வேண்டும். போவாரா?

உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பாதைகளைத் திறப்பது; பிரதான சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றுவது; குறிப்பாக, மன்னார் தீவின் நுழைவாயிலில் காணப்பட்ட சோதனை சாவடியை அகற்றியது; யாழ்ப்பாணத்தில் மண்டை தீவு, பூங்குடு தீவு ஆகிய இடங்களில் நுழைவாயிலில் காணப்பட்ட சோதனைச் சாவடிகளை அகற்றியமை.. போன்றவை மாற்றங்கள்தான். ஆனால் அதே மாற்றங்கள் முல்லைத்தீவின் உட்புறங்களுக்கு அல்லது கிழக்கின் உட்புறக கிராமங்களுக்குப் போகவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அங்கெல்லாம் சோதனைச் சாவடிகள் அகற்றப்படவில்லை.சில இடங்களில் வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் யாவும் தேர்தலுக்கு முன் செய்யப்பட்டவை.அதாவது தேர்தலை நோக்கமாகக் கொண்டவை.

சோதனைச் சாவடிகளையும் வீதித் தடைகளையும் அகற்றினால் மட்டும் போதாது. உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்ற வேண்டும். உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றுவது என்பது ராணுவ மயப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதைக் குறிக்கும்.அவ்வாறு படையினரை விலக்கிக் கொள்வதென்றால் படையினரின் ஆட் தொகையைக் குறைக்க வேண்டியிருக்கும். படையினரின் ஆட் தொகையைக் குறைப்பது பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு முக்கியமான முன் நிபந்தனைகளில் ஒன்று. ஆனால் அது தனிய பொருளாதாரத்தோடு மட்டும் சம்பந்தப்படவில்லை. அது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளோடு சம்பந்தப்பட்டது. பாதுகாப்பு என்று இங்கு கருதப்படுவது, தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு என்பதுதான் உண்மை. பயங்கரவாதத் தடைச் சட்டமும் அத்தகையதுதான். தமிழ் மக்களின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்ப்பது. அதாவது இந்த விவகாரங்கள் யாவும் ஒரே மூலகாரணத்தில் வந்து முடிகின்றன.அது என்னவெனில்,இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயத்தில் தனக்கு முன் இருந்த எல்லாச் சிங்களத் தலைவர்களையும் விட அணுர மாறுபட்டுச் சிந்திப்பாரா?அல்லது அதே பழைய மகாவம்ச மனோநிலையின் கைதியாக இருந்து சிந்திப்பாரா?

அவர் இப்பொழுது அரசுத் தலைவர்.அதை இன்னும் ஆழமான வார்த்தைகளிற் சொன்னால், சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தலைவர். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்புத்தான்.அது ஓரினத்தன்மை மிக்கது. பல்லினத் தன்மைக்கு எதிரானது. இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்டமைப்பு.அந்தக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அந்தக் கட்டமைப்பை மாற்ற அனுரவால் முடியுமா? அவரிடம் இப்பொழுது உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அந்த மாற்றங்களைச் செய்யப் போதுமானது.ஆனால் இங்கே பிரச்சனை,மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல. இதை இன்னும் ஆழமான அர்த்தத்தில் சொன்னால், மக்கள் ஆணை மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக,அதற்கு வேண்டிய அரசியல் திட சித்தம்-political will- இருக்க வேண்டும். அது என்பிபியிடம் உண்டா?

அமெரிக்க எழுத்தாளரும் அறிஞரும் ஆகிய மார்க் டுவைன் கூறியிருக்கிறார் “தேர்தல்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றால் அவர்கள்- அதாவது அரசுகள்- நாங்கள் அதைச் செய்ய மாட்டார்கள்”என்று. இதுதான் யதார்தம். தேர்தல்கள் மூலம் தலை கீழ் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மார்க்சிஸ்ட் களின் வார்த்தைகளில் சொன்னால், “புரட்சிகரமான மாற்றங்களை” ஏற்படுத்த முடியாது. இலங்கைத் தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பும் அவ்வாறு புரட்சிகரமான மாற்றங்களுக்குத் தயாரா? ஜேவிபி அல்லது என்பிபி இதுவரையிலும் அவ்வாறான அடிப்படை மாற்றங்களுக்குத் தேவையான அரசியல் திடசித்தத்தை வெளிக்காட்டியிருக்கவில்லை.

எம்பிபி நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால், உலகத்துக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் வரையறைகளை அல்லது விரிவுகளை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு என்று சொல்லலாம். விகிதரசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒரு தனிக்கட்சி அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பது அரிதானது.ஆனால் அதற்காக ஜேவிபியின் தமிழ் நண்பர்களான சில படிப்பாளிகள் கூறுவதுபோல, தமிழ் முஸ்லிம் மக்களுடைய ஆணையோடு வந்திருக்கும் முதலாவது அரசாங்கம் இதுவல்ல. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட மைத்திரி+ரணில் அரசாங்கமும் அவ்வாறு தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களின் ஆணைகளோடும் ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம்தான்.அதைவிட முக்கியமாக அந்த அரசாங்கத்திற்கு பிராந்திய மற்றும் அனைத்துலக ஆசீர்வாதங்களும் இருந்தன.அப்படிப்பட்ட அரசாங்கத்தாலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச் சதி மூலம் மஹிந்த அதை மைத்திரியின் துணையோடு குழப்பினார். இது நடந்து சரியாக 6 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் அதேபோல மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

என்பிபி அரசாங்கமானது பின்வரும் முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது முக்கியத்துவம்,மூன்று இனங்களின் ஆணை பெற்ற அரசாங்கம்.இரண்டாவது முக்கியத்துவம்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஓர் அரசாங்கம். மூன்றாவது முக்கியத்துவம், ஒரே கட்சி அரசாங்கம். தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் திருப்பகரமான முடிவுகளை எடுப்பதற்கும் எந்த ஒரு பங்காளிக் கட்சியிலும் தங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், அதாவது தமிழ் நோக்கு நிலையில் இருந்து பிரச்சனை எதுவென்றால்,கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு தேவையான அரசியல் திடசித்தம் இந்த அரசாங்கத்திடம் உண்டா என்பது தான்.

சுமந்திரன் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.முன்பு தாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒன்றாக உழைத்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற அந்தத் தீர்வின் இடைக்கால வரைபுவரை ஜேவிபி தங்களுக்கு முழுமையாக ஆதரவைக் காட்டியது என்று. அந்த தீர்வைதான் அவர்கள் மீண்டும் தூசுதட்டி எடுத்து மேசையில் வைக்கப் போகின்றார்களா?

அதை எதிர்ப்பதற்கு கஜேந்திரக்குமார் மக்கள் ஆணை கேட்டிருந்தார். அவருக்கு அந்த ஆணை கிடைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இரண்டு ஆசனங்களில் ஒன்றை அவர் இழந்து விட்டார்.

அதேசமயம், எக்கிய ராஜ்ஜியவுக்கு மீண்டும் ஒரு மக்களாணையை மறைமுகமாகக் கோரிய சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டு விட்டார். ஆயின், தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்வைக் கேட்கின்றார்கள்?

நிச்சயமாகத் தமிழ்மக்கள் இந்த முறை தீர்வுக்காக என்பிபிக்கு வாக்களிக்கவில்லை. என்பிபியும் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தருவேன் என்று கூறித் தேர்தலில் நிற்கவில்லை. 2015ஆம் ஆண்டும் தமிழ் மக்கள் ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தார்களே தவிர தீர்வுக்காக வாக்களிக்கவில்லை.இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கப் போகின்றோம் என்று கூறி ஒரு தீர்வை முன்வைத்து எந்த ஒரு சிங்களக் கட்சியும் சிங்கள மக்களின் ஆணையைப் பெற முடியாது என்பதுதான்.

ஜேவிபியின் தமிழ் நண்பர்கள் அடிக்கடி கூறுவார்கள், தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் பேரினவாதம் தணிந்து விட்டது அல்லது பலவீனமடைந்து விட்டது என்று.மேலும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இனவாதம் பேசப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.உண்மை.ஆனால் இனவாதம் பேசப்படவில்லை என்பதனால் இனவாதம் தணிந்து விட்டது என்று பொருளாகாது.பேசாமல் இருப்பதன்மூலம் இனவாதம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இலங்கையில் உதாரணங்கள் உண்டு. இனவாதம் தன்னை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சுதாகரித்துக் கொள்ளும். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஆட்சிகளை மாற்றுவதன்மூலம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும்.எனவே இனவாதம் பேசப்படாத தேர்தல் களம் என்பதை வைத்து நாட்டில் இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வருவது அப்பாவித்தனமானது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் இனவாதத்தை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வாக்களித்ததாக ஜேவிபியின் மூத்த தலைவர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.அது தவறு.தமிழ் மக்கள் இனவாதத்தைத் தூக்கி எறிந்து விட்டு வாக்களிக்கவில்லை.இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் வாக்களிக்கவில்லை.தமிழ் கட்சிகளின் மீது ஏற்பட்ட சலிப்பினால் வாக்களித்தார்கள்.வெறுப்பினால் வாக்களித்தார்கள்.தமிழ் மக்களைத் தமிழ்க் கட்சிகள் ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதனால் வாக்களித்தார்கள் என்பதே சரி.

மேலும் ரில்வின் சில்வா தமிழ் அரசியலை இனவாதமாக மதிப்பிறக்கம் செய்திருக்கிறார்.அது இனவாதம் அல்ல. சிங்கள மக்களின் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய வாதமும் ஒன்று அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது ஒடுக்கும் சித்தாந்தமாகும். தமிழ்த் தேசியவாதமானது-அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்-ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகும். தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகத்தான் போராடுகிறார்கள். தங்களுடைய இன அடையாளத்தை அழிக்கும் ஒரு பெரிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறார்கள்.தங்களை ஒரு தேசமாகவும் தேசிய இனமாகவும் நிலை நிறுத்துவதற்காக,தங்களுடைய தேசிய இருப்பை இலங்கைத்தீவில் பாதுகாப்பதற்காகவும் பலப்படுத்துவதற்காகவுந்தான் அரசியல் செய்கிறார்கள். அது இனவாதமாகாது. ஜேவிபி அதை இனவாதமாகக் கருதுமாக இருந்தால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் திடசித்தம் அவர்களிடம் இல்லை என்று பொருள். அதை விளங்குமளவுக்கு அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்குத் தெளிவு இல்லை என்று பொருள்.

https://athavannews.com/2024/1408855

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன்

4 days 2 hours ago

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன்
 

தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத்  தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன.

வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என் பி பி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர்.

என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது.

தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது.

அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு.

 

spacer.png

ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான  பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள்.

நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா? இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான்.

என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள்,தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும்.

அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது.

spacer.png

அதே சமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால், கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்விபோல. எனினும் தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த  வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு  தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.

மேலும் தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று  ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத்  தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு,தேசத் திரட்சிக்கு எதிரானது.

spacer.png

முன்னணி ஏற்கனவே இருந்த ஓர் ஆசனத்தை இழந்திருக்கிறது. சங்கிற்கு ஒரேயொரு ஆசனந்தான். மானும் மாம்பழமும் வெற்றி பெறவில்லை.சங்குச் சின்னதைப் பயன்படுத்துவதன்மூலம் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் மடை மாற்றலாம் என்ற எதிர் பார்ப்பு வெற்றி பெறவில்லை. செல்வம் அடைக்கலநாதனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் மொத்தம் 5695. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இம்முறையும் வெற்றி பெறவில்லை. தென்னிலங்கையில் இரண்டு தடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபிக்கு வடக்கில் 5 ஆசனங்கள். ஆனால் ஆயுதப் போராட்டத்தில் உறுப்புகளை இழந்தவர்களும் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் வெற்றி பெறவில்லை. சசிகலா எதிர்பார்த்த அனுதாப வாக்குகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தென்மராட்சியில், ரவிராஜ்ஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் கலகம் அதிக வாக்குகளை வென்றிருக்கின்றது.

அர்ஜுனாவுக்கு கிடைத்த வெற்றியை வைத்து சமூக வலைத்தளங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வெற்றியை சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுப்கள் உருவாக்கும் புதிய அரசியல் பண்பாட்டுக்கூடாகவே விளங்கிக்கொள்ள வேண்டும். யுடியூபர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பொருத்தமான உபாயங்களைக்  கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்தான் அர்ஜுனாவைப் போன்றவர்களின் வெற்றிகளுக்கு மூலகாரணம். அந்த வெற்றிடத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளே பொறுப்பு.

முடிவாக, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் வருமாறு.

முதலாவது பேருண்மை. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசத்தைத் திரட்டத் தவறினால்,தென்னிலங்கை மையக் கட்சிகள்  வாக்குகளைக் கவர்ந்து சென்று விடும்.

இரண்டாவது பேருண்மை, சமஸ்ரியை தேர்தல்மூலம் அடைய முடியாது. தேர்தல்களின் மூலம் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது.

மூன்றாவது பேருண்மை, சமஸ்ரியை அடைவதாக இருந்தால் ஈழத் தமிழர்கள் நாட்டுக்கு வெளியே அணிகளையும் கூட்டுக்களையும் உருவாக்க வேண்டும். அந்த அணிகளின் மூலம் தீர்வுக்கான பிராந்திய மற்றும் அனைத்துலகச் சூழலைக் கனியச்செய்ய வேண்டும். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் அதற்கு முதல் இங்கு தாயகத்தில் தேசத்தைத் திரட்ட வேண்டும். தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளை ஒரு பெருந்திரளாக்க வேண்டும். தேசத்தைத் திரட்டினால்தான் உலகத்தைத் திரட்டலாம். அவ்வாறு தமிழ் மக்களை ஒரு தேசமாகத்  திரட்டத் தவறினால் தென்னிலங்கையை மையக் கட்சிகள் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் படிப்படியாக அரித்துத் தின்று விடும்.

பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும்

4 days 4 hours ago

பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும்

— கருணாகரன் —

மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது. 

சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை. 

ஆனால், இந்தத் தடவை வடக்குக் கிழக்கிலும்  முதன்மையிடத்தை தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்றுள்ளது. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியற் கோட்பாட்டினதும் நடைமுறைகளினதும் வெற்றியா? அல்லது அதன் மீதான நாடளாவிய நம்பிக்கைகளின் விளைவா? என்பது ஆராய்வுக்குரியது. 

பல தசாப்தங்களாக சமூகப் பிராந்தியம்  (Social region) மற்றும் புவியியற் பிராந்திய (Geographical region) அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த தமிழ்த்தேசிய, முஸ்லிம் தேசிய, மலையகத் தேசியக் கட்சிகளையும் அவற்றின் அரசியலையும் கடந்து தேசியமக்கள் சக்தி (NPP) யை மக்கள் நெருங்கிச் செல்ல நேர்ந்தது எதற்காக அல்லது எதனால்? 

தேசிய மக்கள் சக்தி இந்த மக்களுக்கு இதுவரை ஆற்றிய நல்விளைவுகளினாலா?

நிச்சயமாக இல்லை. அதற்கான ஆட்சியதிகாரத்தை அது கொண்டிருக்கவுமில்லை. அதனுடைய ஐம்பது ஆண்டுகால அரசியற் செயற்பாட்டுப் பரப்பில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களோ, மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகப் பிராந்தியங்களோ உள்ளடங்கியிருக்கவுமில்லை. உதிரிகளாக சிலர் தேசிய மக்கள் சக்தியோடு அல்லது ஜே.வி.பியோடு இணைந்திருந்தனரே தவிர, சமூகப் பிராந்தியமாகவும் புவியியற் பிராந்தியமாகவும் இணைந்திருக்கவில்லை. 

ஆனால், தேசிய மக்கள் சக்தி (NPP) யை இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களும் நம்பியிருக்கிறார்கள். அதனுடைய இளைய தலைமுறை உறுப்பினர்களின் ஆற்றலையும் நேர்மையையும் மதிக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் – மதிப்பின் வெளிப்பாடே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் நாடளாவிய ரீதியில் பெற்ற மாபெரும் வெற்றியாகும். இது வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகிறது. அது உண்மையும் கூட. 

மாற்றத்தை அல்லது தாங்கள் விரும்புகின்றதொரு அரசியற் சூழலை –  தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே அதனை நோக்கி மக்களை நெருங்கிச் செல்ல வைத்தது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய வெற்றியாகும். 

அதேவேளை மக்கள் எதிர்பார்க்கின்ற – விரும்புகின்ற வெற்றியை தேசிய மக்கள் சக்தி வழங்கினால், அது மக்களுக்குக் கிடைக்கும் – மக்கள் பெறுகின்ற வெற்றியாக அமையும். 

இந்தப் பின்னணியில் மக்கள் தமக்குரிய – தமக்குப் பொருத்தமானதெனக் கருதுகின்ற – அரசியற் தெரிவைச் செய்வது அவர்களுடைய உரிமையும் தேவையுமாகும். அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. 

இந்தச் சூழலிற்தான் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் பிராந்திய அரசியலின் எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளைப் பலமாக்கியிருக்கிறது. இப்படித்தான் நடக்கும் என விடயங்களைக் கூர்மையாக நோக்குவோர் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தனர். அது நடந்திருக்கிறது. 

இதற்குக் காரணம் – 

1.    பிராந்திய (தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம், மலையகத் தேசியம்) அரசியற் கோட்பாட்டின் வீரியமின்மையும் நடைமுறைப் பலவீனங்களும். 

2.    ஆளுமைக் குறைபாடும் ஆற்றலின்மையும் கொண்ட  தலைமைகள்.

3.    கட்சிகளின் கட்டமைப்புப் பலவீனம்.

4.    செயற்பாட்டுத் திறனின்மை.  

5.    மக்களுடனான உறவுச் சிக்கல். 

6.    நேர்மையீனம்.

7.    ராசதந்திரப் போதாமை.

8.    சமூக, பொருளாதார அடிப்படைகளில் அக்கறையற்ற தன்மை

9.    அர்ப்பணிப்பின்மை

10. வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை.

11. பொறுப்புக் கூறல் – பொறுப்பெடுத்தல் – பொறுப்புணர்தல் ஆகியவை இல்லை.

12. ஜனநாயக விழுமியங்களைப் பொருட்படுத்தாக நடவடிக்கைகளும் நடத்தைகளும்.

13. பிராந்திய அரசியலையும் தேசிய அரசியலையும் கையாள்வது தொடர்பில் கொண்டுள்ள குழப்பங்களும் முரண்பாடுகளும். 

14. பிராந்திய மட்டத்திலும் தேசிய ரீதியிலும் காணப்பட்ட குறைபாடுகள், குற்றச் செயல்கள், அநீதிகள், மக்கள் விரோதச் செயல்கள், இயற்கை வளச் சிதைப்புகள்,  ஊழல் முறைகேடுகள், நிர்வாக துஸ்பிரயோகம் போன்ற எதைப்பற்றியும் பொருட்படுத்தாத அரசியல் தலைமைகளின் பொறுப்பின்மை.

இப்படியான பல காரணங்களால் பிராந்திய அரசியலின் அடித்தளம் பலவீனப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பினை பிராந்திய அரசியலை மேற்கொண்டு வந்த – வருகின்ற அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் நேர்மையோடு ஏற்க வேண்டும். அத்துடன், பிராந்திய அரசியலை ஆதரித்த – ஆதரிக்கின்ற –  ஊடகங்களும் அதை முன்னிறுத்தி எழுதும் பத்தியாளர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே அரசியல் நேர்மையும் அறமுமாகும். அப்படிச் செய்தால்தான் அடுத்த கட்ட அரசியலையாவது பொருத்தமானதாக – யதார்த்தமானதாக – முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். 

பிராந்திய அரசியல் வீழ்ச்சிக்கான காரணங்கள் வெளிப்படையாகவே தெரிந்தவை எனக் கண்டோம். இவை அனைத்தும் ஏற்கனவே பலராலும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டவை. ஆனாலும் அவை குறித்து எந்தக் கவனமும் கொள்ளப்படவில்லை. (இப்போதும் அதுதான் நிலைமை) பதிலாக அவை அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டன. மட்டுமல்ல, இந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டியோரையும் இவற்றின் மீதான விமர்சனங்களை வைத்தவர்களையும்  புறமொதுக்கி, துரோகப்பட்டியலில் சேர்த்ததே நடந்தது. 

விளைவு? 

இன்று பிராந்திய அரசியல் நெருக்கடிக்குள்ளானதேயாகும்.  

இதை உரிமைகளுக்கான அரசியல் எனச் சித்திரித்தாலும்  மறுபுறத்தில் குறுந்தேசியவாத அரசியலாகவே சுருக்கப்பட்டிருந்தது. குறுந்தேசியவாத அரசியலினால் ஒருபோதும் மக்களுடைய தேவைகளையோ பிரச்சினைகளையோ தீர்த்து வைக்க முடியாது. ஆனால், குறுந்தேசியவாதத்தினால் ஒரு எல்லைவரையில் மக்களுடைய உணர்வுகளைச் சீண்டிக் குவிமையப்படுத்த முடியும். 

அதுவே நடந்தது. 

ஆனால், மக்கள் எப்போதும் தங்களுடைய வாழ்க்கைக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் ஓரங்கட்டி விட்டு உணர்ச்சிகரமான அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியிருக்கவும் முடியாது. ஏற்கனவே இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்ட பலரும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து  வெளியேறிப் புலம்பெயர்ந்து விட்டனர். (அங்கே போயிருந்து கொஞ்சம் தங்களை வளப்படுத்திக் கொண்டு, பிறகு இந்த அரசியல் விளையாட்டில் ஈடுபடுகின்றவர்களும் உண்டு). மிஞ்சியோர் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டனர். சிலர் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஒரு தொகுதியினர் மட்டும் இதை ஒரு வியாபார உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

ஆகவே ஒரு சிறிய தரப்பைத் தவிர, ஏனையோர் ஏதோ ஒரு நிலையில் அல்லது வேறு சூழலில் தமது வாழ்க்கையையும் அதற்கான தேவைகளையம் முதன்மையாகக் கொண்டுதான் சிந்திப்பர். அதற்கான அரசியலையே அவர்கள் நாடுவர். இதுதான் உலகெங்கும் உள்ள பொதுவான இயல்பும் நடைமுறையுமாகும். இது தவிர்க்க முடியாதது. 

ஏனென்றால், எல்லாவற்றையும் விட முக்கியமானது வாழ்க்கை. வாழ்க்கைக்கே விடுதலையும் பொருளாதாரமும் அரசியலும். ஆகவே ‘வாழ்க்கையை விட்டு விட்டு நீங்கள் உங்களை முழுதாக ஒறுத்து, விடுதலைக்கான அரசியலுக்காக முன்வாருங்கள். வாழ்க்கையையும் விட விடுதலையே முதன்மையானது‘ என்றால் ஒரு எல்லை வரைதான் வருவார்கள். அதற்குப் பிறகு, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குவர். அதுவே இப்பொழுது நடந்திருக்கிறது. 

இதை –இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை – உணர்ந்து கொள்ளத் தயாரில்லாதவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் மக்களெல்லாம் தமது இன உணர்வையும் உரிமைக்கான அரசியற் பயணத்தையும் மறந்து விட்டனர் என்று சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் புலம்பத்தொடங்கி விட்டனர். தாங்க முடியாமற் துயரத்தைப் பகிர்கின்றனர். சிலர் இதற்கும் மேலே சென்று சனங்களைத் திட்டித் தீர்க்கின்றனர். எந்த வகையான உத்தரவாதத்தின் அடிப்படையில் NPP க்கான ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கலாம் என்று சிலர் கேட்கின்றனர். இதுவரையில் NPP யோ JVP யோ தமிழ்மக்களுக்குச் செய்த நன்மைகள் என்ன? என்றும் கேட்கிறார்கள். 

சனங்களைத் திட்டுவதற்கான உரிமையும் தார்மீக அடிப்படையும் யாருக்கும் இல்லை. சனங்கள் இவ்வளவு காலமும் பிராந்திய அரசியலை மேற்கொண்ட தலைவர்களின் கருத்துகளையும் அந்தக் கட்சிகளின் அரசியலையும் ஏற்றே நின்றனர். ஏறக்குறைய 75 ஆண்டுகள். 75 ஆண்டுகள் என்பது ஆறு தலைமுறையின் இளமை அழிந்த காலமாகும். இதற்குள் தங்களுடைய இளமையை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உறவுகளையும் வாழிடங்களையும் வளமான சூழலையும் இழந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் காலத்தில் மக்களை விடப் பன்மடங்கு மேலான வாழ்க்கையையே தலைவர்கள் வாழ்ந்தனர். அதேவேளை மக்கள் தமது சக்தியையும் மீறி இவர்களுடைய தலைமையை, அரசியலை ஏற்று நின்றனர். அதற்காகப் பெருந்தியாகங்களைச் செய்தனர். 

இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், தாம் எப்படி நடந்து கொண்டாலும் தமிழ்த்தேசியத்தின் பேராலும் இன உணர்வினாலும் அதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வர் என்ற திமிரோடிருருந்தனர். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டே இந்தத் தேர்தலில் கூட இந்தக் களைக் கூத்தாடிகள் கூத்தாடினர். 

இதைக் குறித்தெல்லாம் அதாவது இந்தத் தவறுகளைக் குறித்தெல்லாம் இவர்களில் எவரும் கவலைப்படவில்லை. இவர்களை ஆதரித்தோரும் கண்டு கொள்ளவில்லை, கண்டிக்கவில்லை. இவர்களைப் பொறுத்த வரையில் தாம் எப்படி, எதைச் செய்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மக்கள் மந்தைகளாகவே இருப்பர். அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாகும். 

ஆனால் மக்களோ வரலாறோ ஒரு போதும் அப்படியே இருப்பதில்லை. அதுவே இப்போது நிகழ்ந்திருப்பதாகும். தென்னிலங்கையிலுள்ள  மக்கள் விரோதச் சக்திகளுக்கு நடந்ததே வடக்குக் கிழக்குப் பிராந்தியத்திலும் நடந்திருக்கிறது. ஏறக்குறைய இதே காட்சிகள் மலையகத்திலும் முஸ்லிம் பிராயத்தியத்திலும் நடந்திருக்கிறது; சிற்சில வேறுபாடுகளுடன்.

பிராந்திய அரசியலினதும் அதை மேற்கொண்டு வந்த அரசியற் கட்சிகளின் தவறுகளுக்கான கூட்டுத் தண்டனையாகவே தற்போதைய தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. இது கூடச் சடுதியாக ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு முன் கடந்த தேர்தல்களின் போதே இந்த வீழ்ச்சியை – மாற்றத்தை மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். 

கடந்த தேர்தல்களில் யாழ்ப்பாணத்தில் டக்களஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் ராமநாதன் போன்றோரும் கிழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் போன்றோரும் இதற்கான அடையாளங்களாகும். 

அதைக்கூட இந்தத் தலைமைகள் எதுவும் கணக்கிற் கொண்டு திருந்திக் கொள்ளவில்லை. விளைவு இப்போது ஒட்டு மொத்தமாக ஒரு பாரிய வீழ்ச்சியையும் மாற்றத்தையும் சந்திக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.

ஆக பிராந்திய அரசியலைப் பலவீனப்படுத்தியதில் முக்கியமான பங்கு அந்த அந்த அரசியற் குறைபாட்டுக்கும் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தியோருக்கும் அதை மேற்கொண்டோருக்குமே உரியது. பழியை பிறரின் மீது போட்டுத் தப்பி விட முடியாது. 

இப்போது நிலைமை கையை மீறி விட்டது. 

இது பிராந்திய அரசியலைக் கடந்த தேசியவாத அரசியலின் காலம். மக்கள் இலங்கை முழுவதற்குமான பொதுப்பிரச்சினைகளில் ஒன்றிணையத் தொடங்கி விட்டனர். அவர்களை நேரடியாகத் தாக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல், அதிகார துஸ்பிரயோகம், சூழல் பாதுகாப்பு, சமத்துவமின்மை, பன்மைத்துவத்துக்கான இடம், வேலை வாய்ப்பு போன்றவற்றையே தமது அரசியற் பரப்பாகக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதனால் அதற்குரிய அரசியலையும் அரசியற் தரப்பையும் அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இதிற் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் ஒன்று உள்ளது – அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய புதிய தலைமுறை உருவாகி விட்டது. அதனுடைய உணர்நிலைகளும் பிரச்சினைகளும் வேறானவை. அந்தத் தலைமுறை முதல் தலைமுறையினரைப்போலவே சிந்திக்கும் என்றில்லை. 

ஆகவே இந்தப் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட தரப்பு (NPP) அதற்கான உத்தரவாதத்தோடு நடந்து கொள்ளுமா? அவர்களுடைய தேவைகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படும்? அவர்களுடைய பிரச்சினைகள் எவ்வளவுக்குத் தீர்த்து வைக்கப்படும் என்பதைச் சில ஆண்டுகள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

புதிய ஆட்சித் தரப்பு இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதது. ஆட்சியதிகாரத்துக்கு வெளியே இருந்து அதிகாரத் தரப்பின் தவறுகளையும் ஆட்சிக்குறைபாடுகளையும் கண்டு, விமர்சித்து வந்தது. 

அதனால் தன்னுடைய ஆட்சியையும் தான் பெற்றுள்ள அதிகாரத்தையும் முடிந்த வரையில் அது மிகப் பொறுப்புடன் நிர்வகிக்கும் என நம்பமுடியும். ஆனாலும் அதனுடைய ஆட்சி எவ்வாறு அமையும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், அவர்கள் (NPP) வந்த வழிகளின் சுவட்டைக் கொண்டு மதிப்பிடும்போது, மக்களுக்கான ஒரு நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதில் கூடுதலான அக்கறை கொள்ளப்படும் என நம்பலாம். 

இந்த நம்பிக்கை வெற்றியளிக்குமானால், பிராந்திய அரசியல் முடிவுக்கு வந்து விடும். அதாவது, தற்போது உருவாகியிருக்கும் தேசிய அரசியலே மேலும் வலுப்பெறும். குறுந்தேசிய அரசியல் இல்லாதொழியும். 

எந்த வழியிலாயினும் மக்கள் மீட்சியடைவதே அரசியற் சிறப்பாகும். 
 

 

https://arangamnews.com/?p=11449

இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

4 days 5 hours ago
இலங்கை - ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் வரலாறு காணாத அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது ஆட்சியின்போது எவ்வாறான சவால்களை எதிர்நோக்கப் போகின்றது?

இலங்கை, பல்லின சமூகம் வாழும் நாடு என்ற நிலையில், இந்த ஆட்சியைத் தீர்மானிப்பதில் என்றும் இல்லாதவாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், அதாவது 1931ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது.

அந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற 2020ஆம் ஆண்டு காலப் பகுதி வரை தமிழ், சிங்களம் எனப் பிரிந்த நிலையிலேயே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வந்தனர்.

 

எனினும், இலங்கை வரலாற்றில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும், மத்தியில் ஆட்சி நடத்தக் கூடிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, மத்தியில் ஆட்சியை அமைக்கக்கூடிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமை, பொருளாதாரம், மத சுதந்திரம், ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே, இந்த மக்களை வாக்களிக்கத் தூண்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்து, நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறான சவால்கள் காணப்படுகின்றன என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 
புதிய மக்கள் பிரதிநிதிகள்
இலங்கை - ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,NPP MEDIA

தேசிய பட்டியல் அடங்களாக 159 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், மொத்தமாக 160 மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இந்த 160 மக்கள் பிரதிநிதிகளும், தமது பணிகளுக்குப் புதியவர்கள் என்பது மிக முக்கியமான விடயம்.

அநுர குமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற அனுபவம் இருந்தாலும், ஜனாதிபதி பதவிக்கு அவர் புதியவர் என்பதுடன், ஹரிணி அமரசூரியவும் பிரதமர் பதவிக்குப் புதியவராவார்.

அதேபோன்று, அமைச்சராகத் தற்போது பதவி வகிக்கும் விஜித்த ஹேரத் உள்ளிட்ட புதிய அமைச்சு பொறுப்புகளை ஏற்கவுள்ளவர்களும், அமைச்சுப் பதவிகளில் செயற்பட்ட அனுபவம் இல்லாதவர்கள்.

அத்துடன், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 95 சதவீத தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமைக்கும் புதியவர்களாவர்.

இந்த நிலையில், ஒட்டு மொத்த புதிய மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எவ்வாறான சவால்களை எதிர்நோக்குவார்கள்?

 
இலங்கை  -அநுர குமார

பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சி பீடத்தில் ஏறியுள்ளமை தொடர்பில் பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் அ.நிக்சன், ''அநேகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தத் தெரிவிற்கு வந்திருக்கிறார்கள்" என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பாரம்பரிய கட்சிகள், மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மீதான வெறுப்புகளும் இந்தத் தெரிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நிக்சன்.

முக்கியமாக "மக்களின் வாழ்க்கைச் சுமை பிரச்னையானது, ஊழல், மோசடி, துஷ்பிரயோகங்களால்தான் வந்தது என்பதைத் தெரிவித்தே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள்தம் வாக்குகளைக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஊழல், மோசடி, கமிஷன் போன்ற விடயங்களை இவர்கள் அம்பலப்படுத்துகின்றார்கள்.

இதனால், கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்துள்ளனர். நிச்சயமாக பொருளாதார நெருக்கடிதான் இதற்கான முக்கியக் காரணம். இந்தத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தனியே ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம் என நினைக்கின்றார்கள். ஆனால், அப்படியல்ல," என்று குறிப்பிட்டார் நிக்சன்.

பொருளாதார நிபுணர்களுடைய கருத்துகளின் பிரகாரம், போர் இடம் பெற்ற காலத்தில்தான் இந்த ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயாகம் ஆரம்பித்ததாகக் கூறும் நிக்சன், பொருளாதார நெருக்கடி என்பது யுத்தத்தால் ஏற்பட்டது என்றும் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகவே, "சிங்கள மக்களைப் பொருத்த வரை, பொதுவாக இதைத் தங்களுடைய பொருளாதார நெருக்கடியாகவே பார்க்கின்றார்கள். உண்மையில் இன நெருக்கடிக்கான தீர்வொன்று வருமாக இருந்தால் மாத்திரமே இந்தப் பொருளாரதார நெருக்கடியைத் தீர்க்க முடியும். பொதுவாக ஊழல், மோசடி, கமிஷன், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றாலேயே இந்த நிலைமை உருவாகியது எனக் கருதி, மக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்," என்றும் தெரிவித்தார் அ.நிக்சன்.

ஓரளவிற்கு மக்களுடைய மாற்றம் நியாயமானதாகத் தெரிவதாகக் கூறும் நிக்சன், "ஆகவே, இன நெருக்கடிக்கான தீர்வைக் கொண்டு வந்துதான், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைக் காண முடியும். ஆனால், ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இதைக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், இன நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, எதிர் வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடி மற்றும் இன நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள்தான் காணப்படுகின்றன" என்று கூறினார்.

 
தேசிய மக்கள் சக்திக்கான தமிழர்களின் வாக்களிப்பு
இலங்கை - அநுர குமரா

பட மூலாதாரம்,NIKSHAN

படக்குறிப்பு, அரசியல் விமர்சகர் அ.நிக்சன்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி பல மடங்காக அதிகரித்து, நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கையும் தமிழ்க் கட்சிகளை விடவும் அதிகரித்துள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளைத் தாண்டி, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செறிந்து வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை காலம் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்தப் பிரதேசங்களில் இம்முறை மூன்று தமிழர்கள் தெரிவாகியுள்ளமை வரலாற்று சாதனை போல அவதானிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களித்ததை எவ்வாறு அவதானிக்கின்றீர்கள் என பிபிசி தமிழ், அரசியல் ஆய்வாளர் அ.நிக்சனிடம் வினவியது.

''தமிழ் மக்களைப் பொருத்த வரை அதை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுடைய பலவீனம். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், சரியான அரசியல் தலைமைத்துவம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருந்தும், 2010, 2015, 2020 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஆசனங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து இருந்தாலும், மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், இந்த முறை கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள பெரும்பான்மைக் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் தமிழர் பிரதேசங்களில் சரியான தமிழர்களை நிறுத்தியிருக்கின்றார்கள். இவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடி மற்றும் தமது வாழ்க்கைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற நோக்கம் இருந்திருக்கின்றது" என அவர் கூறுகின்றார்.

 
இலங்கை - அநுர குமார

பட மூலாதாரம்,NPP MEDIA

''தேசிய மக்கள் சக்தியை பொருத்த வரையில் வடக்கு, கிழக்கில் வழங்கக் கூடிய வாக்கு என்பது அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை ஸ்தாபித்தல் போன்றவற்றை நிறுத்துவோம் என்பதை உள்ளக ரீதியான உறுதிமொழியாக வழங்கியுள்ளதால் கிடைத்தது. அநேகமாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் வாக்களித்துள்ளார்கள் என்று சொன்னால், ஏதோவொரு வகையில் நிம்மதியான தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு தான் வாக்களித்துள்ளார்கள்" என அவர் குறிப்பிடுகின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையில் இந்தியாவால் இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையாக 13வது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது.

இந்த 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு, 8 மாகாணங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வடகிழக்கு மாகாணங்களாக இணைந்த வகையில், இந்திய - இலங்கை உடன்படிக்கை அமைந்திருந்தது.

எனினும், வடகிழக்கு மாகாணங்களைப் பிரித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என அப்போது மக்கள் விடுதலை முன்னணியாகச் செயற்பட்ட தற்போதைய தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து, வடகிழக்கு மாகாணத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகப் பிரித்திருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் போராட்டம், மாகாண சபை முறைமை உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்துரைத்தார்.

''அது நிச்சயமாக மிகத் தவறானதுதான். ஏனென்றால், மக்களைப் பொருத்த வரையில் தமிழர்களின் இன நெருக்கடித் தீர்வில் தேசிய மக்கள் சக்திக்கு அந்த நிலைப்பாடு இல்லை என்று தெரிந்தாலும், ஏதோவொரு வகையில் வாக்களித்துள்ளார்கள். வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களும், தமிழ் மக்களிடையே பிரபல்யமானவர்கள்."

 
இலங்கை - அநுர குமார

பட மூலாதாரம்,NPP MEDIA

ஆகவே "அவர்களை நம்பி வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை என்பது இதனூடாக வெளிப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம், தமிழ் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் புரிதலை வழங்கவில்லை. அரசியல் விழிப்புணர்வு செய்யப்படவில்லை. இதுதான் பிரதானமான காரணம்," என்கிறார் நிக்சன்.

அடுத்ததாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற பிளவுகளைக் குறிப்பிடுகிறார் அவர்.

"தனிப்பட்ட மோதல்கள் போன்ற அனைத்து விதமான விரக்தியிலும் இருந்துதான் மக்கள் இப்படியொரு நிலைமைக்குப் போயிருக்கிறார்கள். என்னை பொருத்த வரையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பலவீனத்தால் ஏற்பட்ட ஒரு விளைவுதான் இது. ஆனால், இது தற்காலிகமானது. இந்தத் தொடர்ச்சியான வாக்களிப்பு அடுத்து வரும் தேர்தல்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது.

சுயநிர்ணய உரிமை, போர் குற்ற விசாரணை என்று கோரிக் கொண்டிருந்த சமூகமொன்று, போருக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள கட்சிக்கு, வடகிழக்கு மாகாணத்தை பிரிப்பதற்குப் பிரதான காரணமாக இருந்த கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அந்த மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையும், மாற்றம் வரும் என்று நம்பிக்கையும்தான்," என்று கூறுகிறார்.

அதோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்குத் தற்போது பாரிய பொறுப்பு உள்ளதாகவும் குறைந்தது தமிழ் மக்களுக்குத் தற்போது வழங்கிய வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 
'அநுரவின் பூகோள அரசியலை இந்தியாவே தீர்மானிக்கும்'
இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையை மையமாகக் கொண்ட பூகோள அரசியல் விவகாரம் என்பது, இலங்கையை ஒவ்வொரு நொடியும் பாரிய சவால்களை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையில் தமது பூகோள அரசியலை நேரடியாக, பலமாகச் செய்து வருகின்றன.

இந்த மூன்று நாடுகளும் இலங்கையை மையப்படுத்தி, தமது அரசியலை போட்டித்தன்மையுடன் முன்னெடுத்து வருவதை நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே அவதானித்திருந்தோம்.

இந்த நிலையில், ஆட்சி அனுபவமில்லாத தேசிய மக்கள் சக்தி இந்த பூகோள அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்து தெரிவித்தார்.

''பூவிசார் அரசியல் மாற்றத்தை எடுத்துக் கொண்டால், அமெரரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர், இந்தியாவிற்கு தற்போது ஒரு நெருக்கடி வந்திருக்கின்றது. தெற்காசியாவில் வல்லரசாக வளரக்கூடிய இந்தியா, இப்போது ரஷ்ய - சீனாவை மையப்படுத்திய பொருளாதார கூட்டமைப்பில் இருக்கின்றது.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பாவை மையப்படுத்தி மேற்குலக நாடுகளுடன் இந்தியா ஒரு உறவைப் பேணி வருகின்றது. வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இரட்டை தன்மையைக் கொண்டிருந்த இந்தியா, டிரம்பின் வருகைக்குப் பின்னர் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ஒன்று பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இருக்க வேண்டும். அல்லது அமெரிக்கா சார்ந்த மேற்குலக ஐரோப்பிய நாடுகளுடன் பயணிக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது," என்று விளக்கினார்.

 
இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆகையால், இந்தியா எடுக்கின்ற இந்த முடிவோடுதான் இலங்கை பயணிக்க வேண்டிய தேவை இருக்கும் என்றார். அதோடு, இலங்கையைப் பொருத்த வரை இந்தியாவை கடந்து ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோன்று, இந்தியாவை கடந்து சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கவும் முடியாது என்றார் நிக்சன்.

ஆகவே இப்போது இருக்கக்கூடிய புவிசார் அரசியல் மாற்றம் தேசிய மக்கள் சக்திக்குப் பல சவால்களைக் கொண்டிருக்கின்றது. சர்வதேச சட்டங்கள், சர்வதேச அரசியலில் அனுபவமற்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு இதை எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பது கேள்வியாக இருக்கின்றது.

"நிச்சயமாக டிரம்ப் வருகைக்குப் பின்னர் உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள், இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள், இந்த நெருக்கடிகளில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வர போகின்றது, எப்படி கையாளப் போகின்றது என்பதைப் பொருத்துதான் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும். நிச்சயமாக இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்திக்கு வரக்கூடிய சவால் என்பது முக்கியமானதாக இருக்கும்," என்று குறிப்பிடுகிறார் நிக்சன்.

நிச்சயமாக இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாத நிலைமையொன்று வந்திருப்பதாகக் கூறும் நிக்சன், அதோடு சீனாவுடனும் அனுசரித்துப் போக வேண்டும், அமெரிக்காவுடனும் இயைந்து செல்ல வேண்டும், இந்தியாவுடனும் செல்ல வேண்டும் என்ற தேவை இலங்கைக்கு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால், "இந்தியாவின் நிலைப்பாட்டை பொருத்துதான், இலங்கையின் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் இருக்கிறது. நிச்சயமாக அநுர குமார திஸாநாயக்கவிற்கு இது பாரியதொரு சவால்" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கிறார்.

 
இலங்கை -  அநுர குமார

பட மூலாதாரம்,ANURA KUMARA DISSANAYAKE

இவற்றோடு, ஊழல், மோசடிகளை எவ்வாறு உடனடியாக இல்லாது செய்வது, உள்நாட்டிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றுகின்றபோது பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அவர் கூறுகின்றார்.

அத்துடன், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்று நாடுகளுக்கு இலங்கையில் கொடுக்கப் போகின்ற இடங்கள், அந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் கொடுக்கவுள்ள இடங்கள் போன்றவற்றில் தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. முக்கியமாக நட்டமடைகின்ற அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிடிவாதமான நிபந்தனை. இதை தேசிய மக்கள் சக்தி எதிர்க்கின்றது."

அவ்வாறு எதிர்த்த தேசிய மக்கள் சக்தி இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு வழங்காது, அதைக் கொண்டு நடத்த முற்பட்டால், நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடு ஏற்படும் என்று கூறுகிறார் நிக்சன்.

"நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் ரணில் விக்ரமசிங்கவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்ற கதை வெளிவரும்.

அப்போதுதான் தேசிய மக்கள் சக்தியின் முகத்தை மக்கள் கண்டு கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும். ஆகவே, இதுவொரு தேசிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாக அமையும்" என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

இலங்கை: தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன ஆகும்? பேராசிரியர் அமிர்தலிங்கம் நேர்காணல்

4 days 20 hours ago

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cd0g3ll9j27o

தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!

5 days 17 hours ago

தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!(வெளிச்சம்: 022)

— அழகு குணசீலன் —

 தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில்  தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து  நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்றினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. என்.பி.பி. அளிக்கப்பட்ட வாக்குகளில் வெறும் 25 வீதத்தை பெற்று ஆறு ஆசனங்களில் 50 வீதமான மூன்று ஆசனங்களை பெற்றிருக்கிறது. 

 அளிக்கப்பட்ட 60 வீதமான வாக்குகளில் அரைவாசிக்கும் குறைவாகவே என்.பி.பி பெற்ற வாக்குகள் உள்ளன.ஆனால் தமிழரசுக்கட்சி (19.5) , அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (8.6), சுயேட்சை குழு 17 (8.6) வீத வாக்குகளை பெற்று மிகுதி மூன்று ஆசனங்களில் தலா ஒரு ஆசனத்தை பெற்றுள்ளன. இந்த மூன்றும் பெற்ற வாக்குகள் 36.7 வீதம். இத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (சங்கு) பெற்ற (6.9) வாக்குகளையும் சேர்த்தால் இது 43. 6 வீதம்.  விகிதாசார தேர்தல் முறை சார்ந்த போனஸ் ஆசன ஒதுக்கீட்டின்  அரசியல் சட்ட இருட்டறை.

  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கினால் என்.பி.பி. பெற்ற 80, 830 வாக்குகளோடு  ஒப்பிடுகையில் மற்றைய மூன்று ஆசனங்களையும்,  ஆசனமற்ற சங்கு பெற்ற வாக்குகளும் சுமார் 1, 40,000க்கும் அதிகமானவை.  இந்த அடிப்படையில் நோக்கும்போது மக்கள் தமிழ்த்தேசிய அரசியலை , உரிமைக்கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள் என்று நாட்டில் வீசிய என்.பி.பி. அலையின் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவைக்கொண்டு சொல்ல முடியாது. ஏனெனில் கிழக்கில் மக்கள் தமிழ்த்தேசியத்தை காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை கட்சி ஒன்று இந்த வெற்றியை பெறுவதற்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்ட பின்னடைவு ஒரு முக்கியமான காரணம். அதேவேளை இணக்க அரசியல், அபிவிருத்தி பேசிய ஈ.பி.டி.பி, அங்கயன் அணி, மற்றும் தென்னிலங்கை கட்சிகளையும் அவர்கள் தமிழ்த்தேசிய கட்சிகளை விடவும் மிக மோசமாக நிராகரித்துள்ளனர், என்பதும் மறுப்பதற்கில்லை.

தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பேரில் சஜீத் பிரேமதாசவுக்கும், ஈ.பி.டி.பி.யின் கோரிக்கையின் பேரில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் கொள்கை அடிப்படையிலானதல்ல என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது. என்.பி.பி.யின்  தேர்தல் கால நடவடிக்கைகளும், வாக்குறுதிகளும் நீண்ட காலமாக  தமிழ்த்தேசிய, மற்றும் இணக்க மற்றைய தென்னிலங்கை கட்சிகளின் மீதான நம்பிக்கையை  இழக்கச்செய்து  புதிய ஒரு வாய்ப்பை என்.பி.பி. க்கு வழங்கிப்பார்க்க  முன்வந்ததன் ஒரு விளைவு. எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் இழந்த நம்பிக்கையை எப்படி மீளப்பெறப்போகின்றன என்பதும், வழங்கிய வாக்குறுதிகளை என்.பி.பி. எவ்வாறு காப்பாற்றப்போகிறது என்பதுமே யாழ்ப்பாணத்தில் இந்த கட்சிகளின் இருப்பை தீர்மானிப்பதாக அமையும். ஆனால் யாழ். தமிழ்த்தேசிய கோட்டைக்குள் என்.பி.பி. நடாத்தியிருக்கின்ற இந்த ஊடுருவல் தாக்குதல்  தமிழ்த்தேசிய அரசியலின் தற்காலிக நிராகரிப்பு என்று கொண்டாலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி சுமார் 30,000 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுமார் 21,000 வாக்குகளையும் பெற்று தலா ஒரு கதிரையை பிடித்துள்ளன. ஆறு ஆசனங்களில் என்.பி.பி.  இரண்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஒன்று, சிறிலங்கா தொழிற்கட்சி ஒன்று என மற்றைய நான்கு ஆசனங்களையும் பெற்றுள்ளன. இறுதி யுத்தத்தினால்  அதிகம் பாதிக்கப்பட்ட வன்னி நிர்வாக மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் இது தமிழ்த்தேசிய அரசியல் தோல்வியாக தோன்றினும் இங்கு வன்னியின் சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் வாக்காளர் பங்களிப்பு இந்த தேசிய கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவானது சகல எதிர்பார்ப்புக்களையும் நிராகரித்து தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிற்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்களா ?  என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. பிறந்த வீட்டில் தோற்ற தமிழரசு வளர்ந்த வீட்டில் வெற்றி பெற்றுள்ளது.  98,975(33.8) வாக்குகளை வழங்கி மூன்று ஆசனங்களுக்கு  வழிவகுத்ததன் மூலம் இலங்கையின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும்  என்.பி.பி. வகித்த முதன்மை நிலையை மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வழங்கி சாதனை படைத்திருக்கிறார்கள். 

இந்த சாதனையும், என்.பி.பி.யின் புதுவரவும், கவர்ச்சியும் ரி.எம்.வி.பி. யின் ஆசன இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. என்.பி.பி. தமிழ்த்தேசிய அரசியல் மீதான வெறுப்பை  வடக்கு கிழக்கில் அறுவடை செய்துள்ள நிலையில், மட்டக்களப்பில் அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஊழலுக்கு எதிராகவும், ரணில் -ராஜபக்ச ஆட்சியின் பங்காளராகவும்  மட்டக்களப்பில் என்.பி.பி பிள்ளையானை 55,498 (19.3) வாக்குகளை பெற்று தோல்வியடையச்செய்துள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் ரி.எம்.வி.பி. சுமார் 50 வீதத்திற்கும் அதிகமாக இழந்து 31, 286(10.9) வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தனியாக மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்திய ரி.எம்.வி.பி.க்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரும் சவாலாக இது இருக்கப்போகிறது. என்.பி.பி, தமிழரசுக்கட்சி அலைக்கு மத்தியிலும் முஸ்லீம் காங்கிரஸ் 40,139 (14.0)  வாக்குகளை பெற்று தனது பிரதிநித்துவத்தை காப்பாற்ற முடிந்துள்ளது.

திருகோணமலையில் என்.பி.பி., எஸ்.ஜே.வி. யினால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழரசுக்கட்சி 34,168 (17.0)  வாக்குகளை பெற்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.  எனினும் இது கடந்த தேர்தலிலும்  மூன்றாவது இடத்தில் சம்பந்தர் தலைமையில் பெற்ற வாக்குகளை விடவும் (39,570 /18.5 %) சுமார் 5,000 வாக்குகள் குறைவானது. அதுவும் சங்கு அணியுடன் போட்டி தவிர்ப்பு செய்து ஓரணியில் போட்டியிட்டதனாலேயே  திருகோணமலையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது. இல்லையேல் இது சாத்தியப் பட்டிருக்கவாய்ப்பில்லை. 

அம்பாறையில் வீடும், சங்கும் தனித்து போட்டியிட்ட போதும் தமிழரசுக்கட்சி 33,632 (9.27) வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி. சங்கு, படகு, கார் , சைக்கிள் வீணை போன்றவை அங்கு போட்டியிட்ட போதும்  தமிழரசுக்கட்சியின் வெற்றியை அவற்றால் தடுக்க முடியவில்லை. இவை தேசிய பட்டியல் வாக்குச் சேகரிப்பை இலக்காகக்கொண்டே போட்டியிட்டன. தமிழரசுக்கட்சி  கடந்த தேர்தலில் இழந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தமிழரசு, கருணா தரப்பு போட்டி பலமாக இருந்ததால்  தமிழர் வாக்குகள் ஏற்க்குறைய சமமாக பிரிக்கப்பட்ட  நிலையில் வெற்றி பெறமுடியவில்லை.  இம்முறையும் தமிழ் வாக்காளர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் தமிழரசு பெற்ற வாக்குகள் குறைவானவையே. காஸ் சிலிண்டர் 33,544 (9.24) வாக்குகளை பெற்றுள்ளது. ஆக, 80 வாக்குகளே தமிழரசுக்கட்சியின் வெற்றியை தீர்மானித்துள்ளன. இல்லையேல் 2020 கதையே 2024 கதையாகவும் இருந்திருக்கும்.

மொத்தத்தில் என்.பி.பி. அலையில் தமிழ்த்தேசிய அரசியல் அள்ளுண்டு போய்விட்டது என்று சொல்லுவதற்கு இந்த தேர்தல் முடிவுகள் மட்டும் போதுமானவை அல்ல. என்.பி.பி.யின் எதிர்கால செயற்பாடும்,வாக்குறுதிகளும், இனப்பிரச்சினைக்கான தீர்வு அணுகுமுறைகளுமே அதனை தீர்மானிப்பதாக அமையும். ஒப்பீட்டளவில்  பிராந்திய, சிறிய முஸ்லீம் கட்சிகளை விடவும்  குறிப்பாக அம்பாறையில் அதாவுலாலாவின் மக்கள் காங்கிரஸ் (மயில்) 33, 911(9.34) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.  இந்த நிலையில் ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. என்பனவற்றால்  அதனை சாதிக்க முடியவில்லை. 

தேசிய பட்டியல் கணிப்பீடு  தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்கியுள்ளது. தமிழரசு வடக்கு கிழக்கில் பெற்ற ஏழு ஆசனங்கள் இத்துடன் எட்டாகியுள்ளது . இதில் மூன்று மட்டக்களப்பு (3),  அம்பாறை(1), திருகோணமலை (1) ,  ஐந்து ஆசனங்கள். பாராளுமன்ற குழுவில் கிழக்குமாகாண உறுப்பினர்களே அதிகம் 5+2=7 ( 7:5)  

தமிழரசுகட்சிக்கு வடக்கு கிழக்கில் கிடைத்த மொத்த வாக்குகள் 2,57,000.

இதில் வடக்கில் 93,000. மட்டக்களப்பில் மட்டும் தமிழரசு பெற்ற 96,975 வாக்குகளையும் விடவும் இவை குறைவானவை. மொத்தமாக கிழக்கில் தமிழரசு 1,62, 000 வாக்குகளை பெற்றுள்ளது.  வடக்கு தமிழர்கள் அநுர அலையில் அள்ளுண்டு போன நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் காவலர்களாக கிழக்கு தமிழ் மக்களே உள்ளனர். 

இந்த நிலையில்…….!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி கிழக்கிற்கு – சாணக்கியனுக்கு வழங்கப்படுமா…?

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியலுக்கு காரணம் கிழக்கு மக்கள் அந்த ஆசனம் கிழக்கிற்கே வழங்கப்படுமா? 

தமிழரசுக்கட்சிக்கு கிழக்கு தலைமை தாங்குமா ….?

இந்த கேள்விக்கான பதிலே என்.பி.பி. பேசிய மாற்றத்திற்கான அரசியலை நெல்லுக்கிறைத்த நீராய் புல்லுக்கும் அங்கு புசியச்செய்யும்.
 

 

https://arangamnews.com/?p=11439

அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி? - தமிழ் கட்சிகள் வரலாறு காணாத பின்னடைவு

5 days 20 hours ago
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா. அதோடு, வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தான் கருதுவதாகக் கூறுகிறார் அவர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர் பிரதேசங்களில் எப்படி இருக்கிறது? தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன?

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது.

இதன்படி, 593,187 வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 358,079 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

அவர்களில் 325,312 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 32,767 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளைப் பெற்று, மூன்று ஆசனங்களைத் தன்வசப்படுத்தியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தையும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.

சுயேச்சைக் குழு 17க்கு, 27,855 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் குழுவிற்கும் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்
வன்னி மாவட்டம்

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில், வன்னி தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 306,081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 211,140 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 195,886 வாக்குகளே செலுப்படியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 39,894 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், 2 ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 32,232 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளையில், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

இதுபோக, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு மற்றும் இலங்கைத் தொழிலாளர் கட்சிக்குத் தலா ஓர் ஆசனம் கிடைத்துள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியை 15,007 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு மன்னார் தேர்தல் தொகுதியில் 7,948 வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 7,490 வாக்குகள் கிடைத்துள்ளன.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

வவுனியா தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு 19,786 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், வவுனியா தேர்தல் தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 5,575 வாக்குகள் கிடைத்துள்ளன. ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,886 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 6,556 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், இலங்கைத் தொழிலாளர் கட்சி வவுனியா தேர்தல் தொகுதியில் 8,354 வாக்குகளைப் பெற்றுள்ளது.

முல்லைத் தீவு தேர்தல் தொகுதியில் 14,297 வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது.

தேசிய மக்கள் சக்திக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 7,789 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,133 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

 
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது.

அடுத்தபடியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மூன்று ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.

மொத்தம் 449,686 வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 302,382 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 287,053 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,329 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

 
திருகோணமலை மாவட்டம்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

திருகோணமலை மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி, 87,031 வாக்குகளைப் பெற்று, இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளைப் பெற்றதோடு, ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 34,168 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

மொத்தம் 315,925 வாக்காளர்களை கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 218,425 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 204,888 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 13,537 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

 
திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை)
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றியீட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 146,313 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இரண்டாவது இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 46,899 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 33,911 வாக்குகளும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 33,632 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதுபோக மலையகத் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.

 
தேசிய மக்கள் சக்தி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளைக் கைப்பற்றியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மட்டக்களப்பு தவிர அனைத்து தமிழர் பகுதிகளை அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அநுர குமாரவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக, தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதுள்ள விரக்தியும் அதிருப்தியுமே காரணம் என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறினார்.

“தென்னிலங்கை மக்களைப் போலவே, வட, கிழக்கு தமிழ் மக்களும் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, ஐக்கிய மக்கள் சக்திக்குக் கணிசம் ஆன ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் சிவராஜா.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமாரவின் கட்சி தமிழர் பகுதிகளைக் கைப்பற்றியது எப்படி?

பட மூலாதாரம்,R.SIVARAJA

மேலும், தமிழர் பிரதேங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லா இடங்களிலும் பிரிந்து போட்டியிட்டதால், தமிழ் கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து, அதிலும் சுயேட்சை குழுக்கள் என பிரிந்து பல கோணங்களில் சென்றன. இதைப் பார்த்து அதிருப்திக்கு ஆளான மக்கள் தங்களுடைய கருத்தைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

“நாங்கள் உங்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம். வடக்கிற்கும், தெற்கிற்கும் வித்தியாசம் இல்லாத தீர்வை தருவோம்’ என்று ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மக்கள் மனதில் பெரிதாக எடுப்பட்டிருக்கின்றது.”

ஆகையால், ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாமே என்று மக்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா. மேலும், மலையகத்திலும் இதே நிலைதான் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

"ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை"

6 days 1 hour ago

"ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதமை"

 

தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருந்தது ஒற்றுமையின்மையே! அதை உணராமல், இன்னும் தொடர்ந்த  ஒற்றுமை அற்ற தமிழ் தலைமைக்கு இது ஒரு பாடமாகட்டும்!! ஆனால் இனியாவது திருந்துவார்களா ??


இன்று சமதர்ம சமுதாயம் மலர்வதற்கும் மக்களின் ஒருங்கிணைப்பும் மனங்களின் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவைகள். நாடு நன்னாடாகவும் வளத்தில் பொன்னாடாகவும் திகழ்வதற்கு முழுமுதற்காரணமாக விளங்குபவர்கள் அந்நாட்டு மக்களே ஆவர் இதைத் தான் ஔவையார்


"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்       
அவ்வழி நல்லை வாழிய நிலனே"


என்றாள்.  மலைநாட்டவர், கடல்பகுதியினர், மருதநிலத்தவர், காடுகளில் வாழ்வோர் என்று நான்கு நிலப்பகுதிளில் வாழ்ந்த இனமக்கள் தொழிலால் வேறுபட்டாலும் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்ததாக சங்க இலக்கியம் காட்டுகிறது என்பதை இனியாவது உணர்வார்களா ??


"நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்ஙனம் மொழிகோ, ஓங்குவாட் கோதையை"


[ மலை நாட்டவன் மற்ற மூன்று நிலத்திற்குக் கூட தலைவனாகி பெருமை பெறுகிறான் என்பது இதன் பொருள்]


பிற்காலத்தில் பாரதியின் வரிகளில் நம் நாட்டின் இன வழி ஒருமைப்பாட்டை உணர்கிறோம்.


"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்திற்கொரு புதமை"

நன்றி 

May be an image of text  465709224_10227168649544862_7310526190867706313_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=XJ9RjblSa1sQ7kNvgGJ88me&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A2PZQEhYUvzhRPWoXkRZ58K&oh=00_AYANen0uTjodHWqzjoWwgh9341WUCgUCa7x83aoNfJm0cA&oe=673D0A9E

 

இலங்கைத் தேர்தல்கள்: தமிழர்களுக்கும் பழையன கழிந்து, புதியன புகுந்து

6 days 18 hours ago

image

மரியோ அருள்தாஸ்

இலங்கையின் அரசியல் உயரடுக்கிற்கு வெளியே முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை என்பது இலங்கையின் “அரசியல் பூகம்பம்” என அழைக்கப்படுகின்றது. அனுர குமார திசாநாயக்கவின் தெரிவு என்பது, ஆளும் உயரடுக்கிற்கு வெளிப்படையான வருத்தம் மற்றும் சவாலாக இருந்த போதிலும், இலங்கை அரசின் சில உட்பொதிந்த, கட்டமைப்புசார் பிரச்சினைகளைப் பேணுவதற்கு உறுதியளிப்பதாகவே இருக்கின்றது.

எனினும், வடக்கு-கிழக்கின் வாக்களிப்பு பாங்கானது திசாநாயக்கவின் கட்சி மீதான தமிழ் மக்களின் சந்தேகத்தினை வெளிப்படையாக தெரிவிக்கின்றது. ஏனெனில், அவர்கள் சமகி ஜன பலவேகயவின் சஜித் பிரேமதாச மற்றும் சிவில் சமூகத்தினால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரான அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகியோருக்கே பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

இந்த இரு வேட்பாளர்களும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தமிழ் அரசியலில் உள்ள அரசியல் உயரடுக்கினரால் ஆதரவளிக்கப்பட்டிருந்தனர். இந்த முன்னாள் கூட்டணி பங்காளர்கள் மத்தியில் கசப்பான உட்பூசல்களின் மத்தியில் இந்த ஆதரவளிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த முஸ்லீம்களும் பெருமளவில் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பேரினவாத மற்றும் வன்முறை வரலாற்றைக் கொண்ட கட்சி ஒன்றின் நிரூபிக்கப்படாத தலைவர் ஒருவரினை வைத்து பரீட்சீத்துப் பார்க்கும் ஆசை ஒட்டுமொத்தமாக வடக்கு - கிழக்கிற்கு இல்லை என்பதனை இது காட்டுகின்றது. எவ்வாறாயினும், தெரிவு செய்யப்பட்ட நாள் முதல், திசாநாயக்கவின் சில நகர்வுகள், குறிப்பாக ஊழலை குறைப்பதற்கான நகர்வுகள் பொதுவாக ஆதரவினை வெளிப்படுத்தாத தமிழ் வாக்காளர் மத்தியிலும் அவருக்கு சில ஆதரவை பெற்றுள்ளது. ஆழமாக வேரூன்றிப் போயுள்ள விடயங்களை தமிழ் பிரதிநிதிகளால் அடையாளப்படுத்த முடியாத நிலையும், சிங்கள பிரதிநிதிகளால் அடையாளப்படுத்த விருப்பமற்ற நிலையுமே காணப்படுகின்றது.   

தற்போதைய நிலை தொடர்பில் தமிழர்கள் வெறுப்படைந்துள்ளனர். யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் உள்ள பன்னிரண்டு ஆசனங்களுக்கு எண்ணூறிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் தற்போதுள்ள கட்டமைப்புக்கு எதிரான உணர்வு  பிரதிபலிக்கின்றது. இந்த வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளாந்த பொருளாதார கவலைகள் போன்ற ஆகக் குறைந்த அடிப்படைத் தேவைகளை அடையாளப்படுத்துவது என்பது, பல தசாப்தங்களாக நிலையற்ற தன்மையினால் அழிவடைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளிற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரே போன்ற தேசிய (போலித்தேசிய) தளங்களில் வாக்குகளிற்காக போட்டியிடும் தமிழ்க் கட்சிகளிற்கிடையிலான பிளவு என்பது ஒவ்வொரு கட்சியினதும் வாக்குகளின் பங்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்களில் பாரம்பரியமாக வடக்கு - கிழக்கின் தமிழ் வாக்காளர்கள் பலமிக்க பகுதிகளில் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியினர் ஆசனங்களை வெல்லக் கூடும்.

இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும்.

ஏனெனில்:

தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.

யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ்த் தேசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகவும், அன்றாட நோக்கு நிலையாகவும் நீடித்தது. எவ்வாறாயினும், அடக்குமுறை மிக்க அரசினால் அது மிகவும் கீழே தள்ளப்பட்டது. இலங்கை அரசானது தமது நடத்தையின் காரணமாக சர்வதேசத்தின் மேற்பார்வையினால் அதிகளவில் கட்டுப்பாட்டுக்கு உள்ளானது. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை தமிழ் மக்கள் மெதுவாகப் பெற்றனர்.

வெளிப்படையான தேசியவாத பேரணிகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்ததுடன், நினைவுகூரல் நிகழ்வுகள் எல்.ரி.ரி.ஈயினரால் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளால் நிரம்பியிருந்ததுடன், குறிப்பாக 2015ஆம் ஆண்டில் கடும்போக்கு பேரினவாத ராஜபக் ஷ அரசாங்கத்தின் முதலாவது வீழ்ச்சியின் பின்னர் அது குறிப்பிடத்தக்களவில் அதிகரிப்பினைக் கண்டது.

“மிதமான” மற்றும் “தீவிரமான” தமிழ்த் தேசிய வடிவங்களுக்கு இடையில் வித்தியாசத்தைக் குறிப்பாட்டாலும், அது ஒரு பிழையான வகைப்படுத்தலாகும். சுமந்திரனின் இலங்கைத் தமிழரசுக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனோ, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரனோ, யாராயிருந்தாலும், தமிழ் வாக்குகளுக்காகப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எல்.ரி.ரி.ஈ மற்றும் தமிழ் தேசியவாத இயக்கத்திற்கு வெகு அருகிலேயே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மிக அண்மையில், பருத்தித்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில், எல்.ரி.ரி.ஈ தலைவர் வே. பிரபாகரனுடன் நேர்நிலையாக திசாநாயக்கவினை ஒப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களை அணுகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தேசியக் கோட்பாடுகளில் இருந்து தமிழர்கள் நகர்ந்துவிட்டனர், எல்.ரி.ரி.ஈயை வெறுக்கின்றனர் மற்றும் சுயநிர்ணயத்தில் ஆர்வம் இல்லை என சில விமர்சகர்கள் தொடர்ந்தும் வலியறுத்த முயற்சித்த வருகின்ற போதிலும், அதுதான் உண்மையாக இருப்பின், எல்.ரி.ரி.ஈயினரையும், தமிழ் தேசிய எண்ணங்களையும் வெளிப்படையாக விமர்சிப்பதே தேர்தல் பிரசாரங்களில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயமாக இருக்கும். அத்தகைய பாதையை எந்தவொரு பாரிய தமிழ்க் கட்சிகளும் பின்பற்றவில்லை என்பது இங்கு முக்கியமான விடயமாகும் – அவ்வகையான பிரசாரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், ஒரு காலப்பகுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி என்பவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, எல்.ரி.ரி.ஈயினரின் கடந்த கால ஒப்புதல்களைப் பின்பற்றியதால், பிரதான தமிழ் கட்சி என்ற நிலையைப் பேணியிருந்தது. தமது கொழும்பை மையப்படுத்திய ஈடுபாட்டின் ஊடாக மிதமான தொனியை அவர்கள் பின்பற்றிய போதிலும், வடக்கு-கிழக்கில் தமது தேர்தல் தொகுதிகளில் அவரகள் தயக்கமின்றி எல்.ரி.ரி.ஈ ஆதரவு மற்றும் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.

ஆனால், அது தமிழர்களின் கோரிக்கைக்கான கோட்பாட்டு சார் அர்ப்பணிப்புக்கானதாக இருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈயின் உண்மையான வாரிசுகள் என்ற அடிப்படையில், தீர்வு வருகின்றது என ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் வாக்குறுதியளித்தாலும், கொழும்பில் தமிழர் கோரிக்கைகளை பண்டமாற்று செய்தனர்.

அதேவேளை, அவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் மதுபானக் கடைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை உறுதியளித்து, மதுபான பழக்கத்திற்கு அடிமையாகிப் போயுள்ள ஆயுத மோதலுக்குப் பின்னரான சூழலில் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமது நண்பர்களுக்கு உதவுவதன் மூலம் தமது தேர்தல் தொகுதியில் ஒரு சாம்ராஜ்யத்தினை கட்டியெழுப்பியுள்ளனர்.

முன்னர் அரசுக்கு ஆதரவாக இருந்த துணைஆயுதக் குழுக்களான தமிழீழ விடுதலை அமைப்பு (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) மற்றும் ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் உறுப்பினர்களும் ஊழல் மற்றும் சலுகை அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்பு சேவைகளுடன் மிகவும் நெருக்கமானவர்களாக அவர்கள் பாரக்கப்படுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியானது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையாத போதும், பல விடயங்களில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியினை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அதன் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இவ்வருட ஆரம்பத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் பிளவுபட்டது. கட்சித் தலைமைத்துவத்திற்காக போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி. சிறீதரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் பூசல்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னிலைக்கு வந்தது.

கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தைக் காண்பிக்கும் ஒரு கேலிக்குரிய காட்சியில், அதன் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து அரியநேத்திரன், சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். சில தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறினர்.

பின்கதவு பேரம்பேசல்களின் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக வதந்திகள் வெளியாகின. இருந்தபோதிலும், இது குறித்த விபரங்கள் தெளிவற்றதாகவே இருக்கின்றது. இதே தேர்தல் பிரசாரத்தின் போது, “சங்கு” சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் சிவில் சமூக முயற்சிக்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் ஆதரவாக நின்றனர். “சங்கு” பிரசாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் பிரசாரம் செய்தமைக்கான காரணம், உத்தேச பாராளுமன்றத் தேர்தல்களில் சட்டப்பூர்வ தன்மையை உருவாக்குவதற்காகவே என கொழும்பில் இருந்த என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதியில், கடந்த மாதத்தின் (ஒக்டோபர்) ஆரம்பத்தில் தாம் சங்கு சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என அறிவித்து, பொது வேட்பாளரின் சின்னத்தை ஜனநாயகக் தமிழ் தேசிய கூட்டணி கையகப்படுத்திக் கொண்டது. இதில் இருந்து விலகி தமது சொந்த சின்னமான மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடுகின்றது.

ஈ. சரவணபவன் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படாதமையால் அதிருப்தி கொண்ட முன்னாள் உறுப்பினர்கள், தற்போது “மாம்பழ” சின்னத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இதேவேளை, எதிர்வரும் தேர்தலுக்காக தமக்குள்ளான போட்டியினை தற்காலிகமாக நிறுத்தி தமக்குள் இணக்கம் ஒன்றைக் கண்டு சுமந்திரனும், சிறீதரனும் ஒன்றாகவும், மகிழ்ச்சியாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலுவான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டைகளால், அண்மைய வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி என்பது, ஒவ்வொருவரும் தாமே உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் எனக் கோரும் அதேவேளை, கடந்த காலத்தில் தமது வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த சலுகைசார் அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கும், ஆனால் தமிழர்களின் கோரிக்கைகளுக்கான உண்மையான அரசியல் முன்னேற்றத்தை வழங்காத நிலையில் உள்ள பாரம்பரிய கட்சிகளின் வேட்பாளர்களால் தேர்தல் களம் நிறைந்திருக்கின்றது.

சிறந்த கல்வியறிவு கொண்ட பழமைவாத மூத்த யாழ் அரசியல்வாதியாக காண்பிக்கப்பட்ட விக்னேஸ்வரன் கூட மதுபானக்கடைக்கான அனுமதிப் பத்திர சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பில் ஊடகத்தில் செய்தி வெளியான போது, கஷ்டப்படும் தமிழ் பெண் ஒருவருக்கு தாம் உதவியதாக அவர் பதிலளித்தார். இது திட்டமிட்ட ஊழலாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர்களுக்கு உதவும் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. தமிழ் அரசியலில் இயக்கத்தில் உள்ள பலர் இந்த கலாசாரத்தைப் பின்பற்றுவதுடன், அரசியல் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி உதவிகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த ஊழல் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர்களுக்கு உதவும் கறை இல்லாத ஒரே பாரிய கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, தமது கவர்ச்சிகரமான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன், தமது உடனடி ஆதரவுத் தளத்திற்கு அப்பால் செல்லும் தமிழ் தேசியவாத கோட்பாடுகளுக்கு நேர்மையையும், அர்ப்பணிப்பையும் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கக் கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்கும் கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியைக் குறிப்பிடலாம். பொருளாதார நெருக்கடியின் போதும், கட்டாய தகனப் பிரச்சினையின் போது முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாகவும் என நாட்டினை பரந்தளவில் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் தமது வெளிப்பாட்டினை முன்வைத்து இனப் பிரிவுகளுக்கு அப்பால் இலங்கை மக்களை கவர்ந்தவராக பொன்னம்பலம் இருக்கின்றார். LGBTQ  உரிமைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முதல் தமிழ் அரசியல்வாதியாகவும் அவர் இருக்கின்றார்.

அவர் மீது ஊழல், சலுகைசார் அரசியல் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவுகளுக்கு உதவும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், அதன் சில உறுப்பினர்கள் ஏனைய தமிழ் தேசியவாதிகளை “ஒத்துழைப்பாளர்கள்” என விரைவில் தண்டிப்பதால், கொள்கைகளுக்கான கட்சியின் வலுவான அர்ப்பணிப்பு என்பது சில சந்தர்ப்பங்களில் முரண்பாடான மற்றும் பார்ப்பனியவாதத்திற்கு மாறுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் இது உண்மையாக இருந்தாலும், இவர்களின் முக்கிய இலக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியுற்றுள்ள சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சி அரசியலை நம்பியிருக்கும் ஒரு தளம் என்பது மாத்திரம் தமிழ் வாக்காளர்களை வெற்றிகொள்வதற்கு போதுமானதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்புக்கு போதியளவு பிரதிபலிப்பு கிடைக்காமை, அவர்கள் மக்களைக் கவரத் தவறியதற்கான சான்றாகும்.

அதாவது, அண்மைய தேர்தல்களில் அக்கட்சி கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தமிழ் கட்சி என்ற நிலையை அவர்களால் கைப்பற்ற முடியுமா என்பதனை முன்னணி சிந்திக்க வேண்டும்.

பாலின விடயம் தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் பின்தங்கியே இருக்கின்றன. கடைசி தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் புகுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன் இருக்கிறார். அவர் 2010ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் நிற்கவில்லை.

மேலே குறிப்பிட்ட நான்கு கூட்டமைப்புக்களும் பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிற்க வைத்துள்ள போதிலும், பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் காணி அபகரிப்புகள் போன்ற விடயங்களில் வடக்கு - கிழக்கில் தேசியவாத போராட்டங்களை முன்னின்று தலைமை வகிப்பவர்களாக பெண்கள் இருப்பதற்கு முற்றிலும் மாறாக, கட்சியின் மத்திய குழு மற்றும் பிரதான உறுப்புரிமை என்பன ஆணாதிக்கம் நிறைந்ததாகவே உள்ளது.

போராட்டங்களில், சிவில் சமூக நிறுவனங்களில் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்களாக, இலங்கை அரசிற்கு எதிராக அணி திரள்வதில் தமிழ் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். PEARL, தமிழ் இளையோர் அமைப்பு அல்லது தமிழர் உரிமைக்கான குழுமம் என்பன தொடரச்சியாக இளைய மற்றும் அதிக விகிதாசாரத்தில் அல்லது பெருமளவில் பெண்களைக் கொண்ட மாறும் உறுப்புரிமையை முன்னிறுத்துகின்றன.

இந்த முற்போக்கான குழுக்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதுடன், தமது தனிப்பட்ட இணைப்புக்களை வடக்கு-கிழக்கு முழுவதிலும் கொண்டிருக்கின்றன. தமிழ் கட்சி அரசியல் தளமானது குறிப்பிட்ட வயதையும், வகுப்பையும் சார்ந்த ஆண்களால் செல்வாக்கு செலுத்தப்படும் சந்தரப்பத்தில், இது மாறுபட்ட சமூக இயக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை.

எவ்வாறாயினும், அரசியல் தளங்களில் அவர்களது ஆதிக்கமானது முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்குபற்றுவதனை கட்டுப்படுத்துவதால், தமிழ் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு அது தடையாக மாறியுள்ளது.

அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் என்பது தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. உண்மையில் அது உலகெங்கிலும் உள்ள ஒரு பொதுவான இயக்கமாகும். இருப்பினும், தற்போதைய தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பிற்குள் பாலின பிரச்சினைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை கட்டியெழுப்புவதற்குத் தவறியுள்ளனர்.

கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் கட்சிகள் மிகமோசமாகத் தவறியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி போன்ற ஆகக் குறைந்தது சில விடயங்களையாவது அடையாளப்படுத்தக் கூடும் என கருதும் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்க தமிழ் வாக்காளர்களின் பகுதி ஒன்று தீர்மானிப்பது என்பது புரிந்துகொள்ளக் கூடிய விடயமாகும். இது புதியதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூடன் ஒப்பிடக் கூடிய இலங்கை சிங்கள இனவாதத்தின் தமிழ் வாடிக்கையாளர் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) இதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வன்முறை மிக்க துணைஆயுத குழு என்ற கடந்த காலத்துடன், தமது சலுகை அரசியலை முன்னெடுக்கும் தமக்கான வலுவான தொகுதிகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் தமிழர்கள், தமிழ் தேசியம் மீதான வெறுப்பால் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை, ஆனால் நடைமுறைக் காரணங்களுக்காக வாக்களிக்கின்றனர். உண்மையில், வடமாரட்சியின் கிராமம் ஒன்றில் நான் தங்கியிருந்த போது, எல்.ரி.ரி.ஈ நினைவுகூரல் நாளான, மாவீரர் நாளிற்கான அலங்காரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஈ.பி.டி.பி உறுப்பினருடன் நான் கதைத்தேன்.

தேர்தல் அரசியல் என்பது பரிவர்த்தனை அடிப்படையிலானது என்பதுடன் பிரதான தமிழ் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பேரழிவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் இந்த கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக யாழ் குடாநாட்டிற்கு வெளியே பின்தங்கிய பகுதிகளில் இருந்து விலகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செப்ரம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக, முந்தைய அரசாங்கத்தின் சொகுசு கார்களின் கைப்பற்றல் உள்ளடங்கலாக ஊழலுக்கு எதிரான அதிகளவில் பிரசுரிக்கப்பட்ட நகர்வுகளினால், தமிழர்கள் மத்தியிலும் திசாநாயக்க பேசுபொருளாகியிருந்தார்.

எவ்வாறாயினும், அந்த பிரகாசம் சிறிது சிறிதாக மங்கிப் போவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. போர்க் குற்றவாளிகளின் நியமனம், பொறுப்புடைமை செயற்பாட்டை மறுத்தல் என்பன தமிழ் ஊடகங்களில் பிரதான தலையங்கங்களாக மாறியுள்ளன. அதிகார பரவலாக்கத்தை மறுத்துவரும் கட்சியின் கடந்தகால கோரிக்கைகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கு மத்தியிலும் திசாநாயக்கவுக்கு வாக்களிக்கப் போகும் தமிழர்கள், இனப்படுகொலைக்கான பொறுப்புடைமை அல்லது தமிழ் தேசிய கோரிக்கை குறித்து அக்கறையற்று இருப்பதனால் அதனைச் செய்யப் போவதில்லை. இந்த விடயங்களை நிறைவேற்றக் கூடியவர்கள் தொடர்பான எதிர்பார்ப்பு மிகவும் குறைந்தளவில் இருப்பதால், ஆகக் குறைந்தது பொருளாதாரச் சிக்கல் போன்ற முக்கிய விடயங்களை அடையாளப்படுத்துபவர்களாக தேசிய மக்கள் சக்தி கருதப்படுகின்றது.

ஏனைய சிங்களக் கட்சிகளைப் போன்றே, தமிழ் தேசிய கோரிக்கையை ஒரு பொருட்டாகவேனும் திசாநாயக்க கருதவில்லை. தாம் தலைமை வகிக்கும் இனவாதத்திற்கு ஒரு கூட்டு எதிர்ப்பாக பார்ப்பதற்குப் பதிலாக தனிப்பட்ட மனிதாபிமான கரிசனையாக அதனைப் பார்க்கின்றார். அவரும், இலங்கையில் உள்ள எந்தத் தலைவரும் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை இதுதான் - ஈழத் தமிழ் மக்கள் கூட்டாக சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் ஆட்சியை நிராகரித்து வருகின்றனர். நாளாந்த விடயங்களை அடையாளப்படுத்தக் கூடிய நிலையானது, சில தேர்தல்களில் சில தமிழ் ஆதரவினை பெற்றுக் கொடுக்கும்.

ஆனால், உண்மையில், சிங்கள-பௌத்த இனவாதத்திற்கு அதிகாரத்தை மையப்படுத்தும் அரசியலமைப்பினை ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றனர். அரசின் நோக்கிலிருந்து பார்க்கும் போது, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதனையும் வழங்கா முடியாவிட்டால், அவர்கள் ஏன் அவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான கேள்வி.

ஆகக் குறைந்தது அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஆதரவினை வழங்கலாம். ஆனால், குறிப்பாக அண்மைக் காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியானது தென் பகுதி கட்சிக்கு ஆதரவினை வெளிப்படுத்தியது. இந்த ஆதரவு பயனற்றது. தமிழ் வாக்குகளிற்கான செல்வாக்கு இலங்கை தமிழரசுக் கட்சியிடம் இனியும் இல்லை. அதனால், இலங்கை அரசிற்கான அதன் பெறுமதியை இழந்துள்ளது. கொழும்பிடம் எவ்வித பேரம்பேசும் சக்தியும் இன்மையால், தமது தொகுதிக்கான அடிப்படை வாக்குறுதிகளையேனும் நிறைவேற்ற முடியாத நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளது.

திருப்தியற்ற மற்றும் தேக்கமடைந்த தமிழ் அரசியல் கட்சி அமைப்பின் சரிவு, தேர்தல் அரசியலின் கண்டிப்புகளுக்கு அப்பாற்பட்ட தமிழர் போராட்டத்தை உற்சாகப்படுத்தலாம். இது தமிழ் தேசியவாதத்திற்கு புதிதல்ல. 1976ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக தமிழ் விடுதலைக்கான தெளிவான கோரிக்கையை அடுத்து, இலங்கை அரசுடன் அதன் தலைமைத்துவமானது சலுகைக்குப் பின் சலுகை வழங்கி, இறுதியில் 1980களின் ஆரம்பத்தில் பொருத்தமற்ற ஒன்றாக மாறிப் போனது.

அதன் பின்னர் சிறப்பற்றதாகவும், துணை ஆயுதக் குழுக்களாலும், இலங்கை அரசுடன் இணங்கிப் போவதனைத் தவிர வேறு வழியில்லை எனக் கருதிய மிதவாதிகளினது ஆதிக்கம் நிறைந்ததாக தமிழ் கட்சி அரசியல் நிலவியது. தமிழர் விடுதலைப் போராட்டத்தின் திசையை நிர்ணயிக்கும் அரசியல் ஈடுபாடு அல்லது போரின் அளவுகோல்களை எல்.ரி.ரி.ஈயினரே நிர்ணயித்தனர்.

2000ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற முத்திரையின் கீழ் இந்தக் கட்சிகளில் சிலவற்றின் கூட்டணியை அமைப்பதற்கான சிவில் சமூக முன்முயற்சிக்கு எல்.ரி.ரி.ஈயினர் ஒப்புதல் அளித்தபோதுதான், தமிழ் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றதாக மாறின.

நல்லதோ அல்லது கெடுதியோ, இது கொழும்பினை மையமாகக் கொண்ட தமிழ் பாராளுமன்ற அரசியலுக்கு மீளுயிர் அளித்தது. ஆனால், இந்த துடிப்பான அடிமட்ட முன்முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், வளர்ந்து வரும் சமூக இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும், நிறுவனமயமாக்குவதற்கும், நிறுவனங்களையும் சிவில் சமூகத்தையும் மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்துவதற்காக கட்சி அரசியலில் இருந்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள புதிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் அரசியல்மயமான மக்கள் தொகையைக் குறிப்பதுடன், இதிலிருந்து புதிய அரசியல் தலைமைத்துவம் வெளிப்படும். இந்த அடுத்த கட்ட போராட்டத்திற்கு பழைய பாதுகாவலர் வழிவிட வேண்டும்.

https://www.virakesari.lk/article/198589

பரந்த கூட்டாட்சி குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியது அவசியம்

6 days 18 hours ago

image

கலாநிதி ஜெகான் பெரேரா

பொருளாதார நெருக்கடி மீண்டும்  ஏற்டக்கூடிய சாத்தியத்துக்கு மத்தியில் இலங்கை கடுமையாக பதிக்கப்படக்கூடிய நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கிறது என்பது எல்லோரையும் போன்று அரசாங்கத்துக்கும் தெரியும். கத்தி முனையில் நாடு இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கும் நிலையில் தேசிய நிபுணர்களும் சர்வதேச நிபுணர்களும் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 

இத்தகைய ஒரு நிலவரத்தின் ஊடாக நாட்டைக் கொண்டு செல்வதில் அரசாங்கம் மிகவும் கவனமாக எடுத்த நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட அதன் செயலும் அடங்கும். அந்த உதவித் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சி எதிர்த்தபோதிலும், முன்னைய அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தி அதைப் பெற்றுக்கொண்டது. அதை தனியொரு பெரிய வெற்றியாகவும் அந்த அரசாங்கம் கருதியது. முன்னைய அரசாங்கத்தைப் போன்று பாரிய விரய செலவினங்களுக்கு வழிவகுக்கக்கூடிய தன்னல நடவடிக்கைகளில்  இன்றைய அரசாங்கம் ஈடுபடவில்லை.

தேர்தல் நோக்கங்களுக்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்ததன் மூலமாக பெரிதும் மெச்சத்தக்க ஒழுங்கு முறையும் கட்டுப்பாட்டையும் அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது. இது சட்டத்துக்கு மேலானவர்களாக தங்களைக் கருதிச் செயற்பட்ட முன்னைய தலைவர்களைப் போலன்றி சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியை நடத்துவதில் கடப்பாடு கொண்டவர்களாக இன்றைய அரசாங்க தலைவர்கள் நடந்து கொள்வதை காட்டுகிறது.

நாட்டின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட முன்னைய தேர்தல்களில்  அரசாங்கங்கள் அரச வளங்களை அப்பட்டமான முறையில் துஷ்பிரயோகம் செய்ததை அந்த அமைப்புக்கள் நினைவுபடுத்தின.

ஹெலிகொப்டர்கள் உட்பட அரச வாகனங்களை அந்த அரசாங்கங்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தியதுடன் அபிவிருத்த நடவடிக்கைகள் என்ற அடிம்படையில் தங்களது கட்சிகளின் உறுப்பினர்கள் செலவு செய்வதற்கு பெருமளவு நிதியையும் அவை ஒதுக்கீடு செய்தன.

முன்னைய அரசாங்கங்களில் இருந்து தெளிவான முறையில் வேறுபட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடந்துகொள்வதுடன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதை விரும்புகிறது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதில் மற்றைய கட்சிகளுடன் கைகோர்ப்பதற்கு காட்டும் வெறுப்பின் மூலமாக  முன்னைய அரசாங்கங்களில் இருந்து தங்களது அரசாங்கம் வேறுபட்டது என்பதை தேசிய மக்கள் சக்தி தெளிவாக வெளிக்காட்டுகிறது.

அரசாங்கத்தின் மேன்மையான திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அதற்காக அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாகவும் முண்டியடித்துக்கொண்டு  கூறுகின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எவருக்கும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் கொடுக்கப் போவதில்லை என்று அரசாங்கத்தின் முன்னணி பேச்சாளர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய அரசாங்கத்தை அமைக்கும்போது ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கு மாத்திரமே அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தெளிவாகக் கூறியிருக்கிறார்.

போதுமான பிரதிநிதித்துவம் 

அழைப்பு விடுக்கப்பட்டால் அமைச்சர்களாக அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தயாராயிருப்பதாக மற்றைய கட்சிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலளிக்குமுகமாகவே ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான தங்களது விருப்பத்தை  ஜனாதிபதி திசாநாயக்கவே ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூட மற்றைய கட்சிகளைச் சேர்ந்த சிலர் கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், உடனடியான கடந்த காலத்தில் பதவியில் இருந்த இரு அரசாங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் எந்தவொருவரையும் தனது அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரத்தியேகமாக கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. வாய்ப்புக்கள் வரும்போது ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுகின்ற நடைமுறையை நிராகரிப்பதே ஜனாதிபதியின் அந்த அறிவிப்பின் அடிப்படையாகும்.

தங்களுக்கு பெருமளவு ஆற்றல் இருப்பதாக உணருகிறவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவர்கள் தங்களது பணிகளின் தாக்கத்தை பெருக்குவதற்கு அரசாங்கத்தில் இணைய விரும்புகிறார்கள். மறுபுறத்தில்,  அதே அரசியல் தலைவர்கள் ஆட்சிமுறையைப் பொறுத்தவரை மிகவும்  மோசமான கடந்த காலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊழல்வாதிகளாகவும் குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூறாதவர்களாக தண்டனையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் போன்று செயற்பட்டதுடன்  நிர்ணயிக்கப்பட்ட செயன்முறையை பின்பற்றி நடக்காதவர்களாகவும் இருக்கிறார்கள்.

அதனால் அவர்களுடனும் பழைய தலைமுறை அரசியல்வாதிகளுடனும் ஒரு தூரத்தை பேணுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரும்புகிறது. அனேகமாக அவர்களில் சகலருமே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாகவும் அவர்களில் கூடுதல் பலம் பொருந்தியவர்கள் கொலையைச் செய்துவிட்டுக்கூட தண்டனையில் இருந்து தப்பி வாழக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால், நாட்டுக்கான  தீர்மானங்களை எடுப்பதற்கு சொந்த கட்சியில் தங்கியிருப்பது உசிதமானதல்ல. இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி மற்றும் பல்சாதிகளைக் கொண்ட ஒரு சமூகமாகும்.  தேசிய மக்கள் சக்திக்குள்   தீர்மானத்தை எடுக்கும் மையக்குழு அவர்களை நேரடியாக பிரதிநிதித்துவம் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இந்த மையக்குழுவில் இருப்பவர்கள் பெருமளவுக்கு வெளியில் தெரியாதவர்களாகவும்  பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

கோட்பாட்டு அடிப்படையில் அவர்கள் சகலரும் சமத்துவமானவர்கள் என்ற மார்க்சிய நம்பிக்கையை கொண்டவர்களாக இருந்தாலும் கூட  இன, மத சிறுபான்மைச் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவர்களா என்ற கேள்வி எழுகிறது. ஒரு குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய குழுமங்களைச் சேர்ந்தவர்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் முழுமையாக விளங்கிக் கொள்வது சிரமமானது என்பதால் தீர்மானங்களை மேற்கொள்வதில் போதுமான பிரதிநிதித்துவம் அத்தியாவசியமாகிறது.

நிலைத்திருக்கும் வல்லமை

இன்னமும் தீர்வு காணப்படாமல் இருக்கும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான கால வன்முறை இனமோதலை அனுபவித்த ஒரு நாடு என்ற வகையில் அரசாங்கத்தில் இன, மத சிறுபானமைச் சமூகங்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் விவகாரம் முதல்நிலை முக்கியத்துவத்துக்கு உரிய ஒன்றாக கையாளப்பட வேண்டியது அவசியமாகும். 

அதே போன்றே, பெண்களுக்கான குறைந்தது 25 சதவீத ஒதுக்கீடு அரசியல் விவாதத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் நிலையில் அரசியலில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் விவகாரமும் அக்கறையுடன் கையாளப்படவேண்டியது அவசியமாகும்.  

அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கவனிக்கவேண்டிய வேறு பல பிரச்சினைகள்  இருக்கும். ஆனால், இன,மத சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் உயர்மட்டத்தினால் தெரிவு செய்யப்படுவதாக இல்லாமல் மக்களினால் தெரிவு செய்யப்படுவதாக இருக்கவேண்டியது அத்தியாவசியமானது.

உறுதியானதும் சுதந்திரமானதுமான சிறுபானமைப் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில ஒப்பனை நடவடிக்கைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. யாழ்ப்பாண விமானநிலையப் பகுதியில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த வீதி ஒன்று அண்மையில் திறக்கப்பட்டது.

ஆனால்,  அந்த பகுதியில் வாழும் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கிறார்கள். குன்றிய அபிவிருத்தியைக் கொண்டதாகவும் அந்த பகுதி இருக்கிறது. இந்த பிரச்சினைகளை தணிப்பதற்கு அந்த வீதி திறப்பு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.  அந்த வீதி அதன் முடிவில்  விசேடமான எந்தவொரு இடத்தையும் இணைக்கவில்லை. தங்களது வாழ்க்கை முறையில்  எந்தவிதமான முன்னேற்றத்துக்கு  அல்லது வாழ்க்கை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக அந்த வீதியை வடக்கில் உள்ள மக்கள் பார்க்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது தொடர்பிலான அதன்  நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி மறுதலையாக்கியது, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களுக்கு மனச்சோர்வைக் கொடுத்திருக்கிறது.  அதன் கடுமை காரணமாக கொடூரமான சட்டம் என்று அழைக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை தங்களை துன்புறுத்துவதற்கும் அடக்கியொடுக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் பார்க்கிறார்கள்.

சிங்கள மக்கள் வேறுவிதமாக இந்த பிரச்சானையைப் பார்க்கிறார்கள். அதாவது அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டினதும் மக்களினதும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் பயனுடைய ஒரு ஏற்பாடாக பயங்கரவாத தடைச்சட்டத்தை கருதுகிறார்கள். இதன் காரணத்தினால்தான் வேறுபட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு அத்தியாவசியமாகிறது.  அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் உள்ளக விவாதங்களை அடிக்கடி நடத்தி நாட்டையும் அதன் சட்டங்களையும் பற்றி அவர்களால் மீள்சிந்தனையைச் செய்ய்க்கூடியதாக இருக்கும்.

https://www.virakesari.lk/article/198549

"சிரிக்க மட்டும் ..."

6 days 21 hours ago
"சிரிக்க மட்டும் 😂😂😂"
 
 
*தேர்தலுக்கு முன்பு.*
 
 
*தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.
 
*மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?
 
*தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.
 
*மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?
 
*தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..
 
*மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?
 
*தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.
 
*மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?
 
*தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!
 
*மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?
 
*தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...
 
*மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?
 
*தலைவர்* : ஆம்..
 
*மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர்.
 
 
( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...)
 
 
மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்..
 
 
சிரிக்க மட்டும் ...
 
No photo description available.

தேசியமும் ஈழத் தமிழர்களும்; ஒரு விமர்சனக் குறிப்பு

1 week ago

ரூபன் சிவராஜா

பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ்
சொல்லி னாகும் என்மனார் புலவர்
’ (தொல். 158)

‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது.

அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை,
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157)
என்கிறது தொல்காப்பியம்.

சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றது. சொற்கள் பொருள் உணர்த்துகின்ற தன்மையை விளக்குகின்ற இயல், சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (Semantics) என்று வழங்கப்படுகின்றது. அதாவது மொழியின் உள்ளடக்கத்தில் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவற்றின் பொருள் அல்லது பொருள் பற்றிய ஆய்வு பொருண்மையியல் ஆகும்.

இந்தக் குறிப்பின் தலைப்பிற்கு இந்த விளக்கம் ஏன் அவசியப்படுகிறது என்று சிலர் நினைக்கலாம். ஒரு சொல்லின் உள்ளார்ந்த அர்த்தம், அதன் பயன்பாடு, நடைமுறை, விளைவு குறித்த புரிதலுக்கு இந்த விளக்கம் உதவக்கூடியது.

நடைமுறையிற் பல தமிழ்ச் சொற்கள் அதன் உண்மையான பொருளிலிருந்து நழுவி முற்றிலும் வேறான அர்த்தத்தை அழுத்தமாக மனங்களிற் பதியச் செய்துள்ளன. உதாரணமாகக் ‘கற்பு’ என்ற சொல்லைக் குறிப்பிடலாம். கற்பு என்பதற்கு ‘நிறுமனமயப்பட்ட’ ஒழுங்கிற்கு இணங்கி நடத்தல் என்ற பொருளைத் தொல்காப்பியம் தருகின்றது. அடிப்படையில் கடப்பாடு, உறுதிப்பாடு போன்ற சொற்களே அதற்கு நெருங்கி நிற்கக்கூடியவை.

‘கற்பு’ என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் ‘சொல் வழுவமை’, கொடுத்த வாக்கிற்கு ஒழுக நடத்தல் (commitment ) என்பதாகும். அதாவது கடப்பாட்டுடன் உறுதிப்பாட்டுடன் ஒரு நிறுவன ஏற்பாட்டுக்குள் ஒழுகுவதைக் குறிப்பது. அச்சொல் நடைமுறை அர்த்தத்தில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் ‘உடல்’, ‘ஒழுக்கம்’ சார்ந்ததாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. புனிதம் என்ற போர்வையிற் பெண்ணை ஒடுக்குவதற்கான ஆணாதிக்க விளைவாக அதன் பயன்பாடு ஆக்கப்பட்டிருக்கின்றது. கற்பைப் பெண்ணின் பிறப்புறுப்பிற் கொண்டுபோய் வைத்த பெருமை ‘தமிழ்ப்பெருங்குடி’யின் ‘வழித்தோன்றல்’களைச் சாரும்.

இது இப்படியிருக்க தமிழ்ச் சூழலில் உள்ளடக்கப் பெறுமதி இழக்கச் செய்யப்பட்ட ஒரு அரசியற் சொல்லாகத் ‘தேசியம்’ ஆக்கப்பட்டிருக்கின்றது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வலியுத்தல் – விடுதலை வேணவா – சமூகத்திரள் மற்றும் மொழி, கலை, பண்பாட்டு வாழ்வியலின் முற்போக்கான அம்சங்களைக் கருத்து ரீதியாகவும் செயல்பூர்வமாகவும் தொலைநோக்கு ரீதியாகவும் சுட்டிநிற்க வேண்டிய சொல் அது. ஆனால் அது எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்பது இலகுவாகக் கடந்து செல்லக்கூடியதல்ல.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் பின்-கொலனித்துவ இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதிவழி எதிர்ப்புகள் – ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் – பின்-முள்ளிவாய்க்கால் எனவான காலப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இக்காலங்கள் அனைத்திலும் தேசம், தேசியம் என்பன பிரயோக முக்கியத்துவம் கொண்ட சொற்களாகவும் இருந்திருக்கின்றன, இருந்தும் வருகின்றன.

இலங்கையின் வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்பது உரிய கோட்பாட்டுருவாக்கதுடன் முன்னெடுக்கப்பட்டதா என்பது ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியது. பின்-முள்ளிவாய்க்கால்’ ஒன்றரைத் தசாப்பங்களைக் கடந்துவிட்டது. சமகாலத்தில் ஈழம், புலம்பெயர் சூழலில் அதிகம் மலினப்படுத்தப்பட்ட சொல்லாடலாக தேசியம் என்பது ஆக்கப்பட்டிருக்கின்றது. அச்சொல்லைத் தமிழர்களைப் போன்று அர்த்தமற்றதாக ஆக்கிய மக்கள் உலகில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை.

இன்று தமிழ்ச் சூழலில் தேசியம் என்பது
முதன்மையான வெற்றுக் கோஷமாக,
– வெறும் கோறையாக,
– பிற்போக்குத் தனமாக,
– அதிகாரத் துஸ்பிரயோகக் கருவியாக,
– சுயவிமர்சனங்களை மறுப்பதற்கான முலாமாக,
– தவறுகளை மூடிமறைக்கும் ஆயுதமாக ,
– தேர்தல் முதலீடாக,
– அரசியல்வாதிகள், கட்சிகளின் இருப்பினை தற்காத்துக் கொள்கின்ற துருப்புச் சீட்டாக,
– உணர்ச்சிக் கொந்தளிப்பு

என்பவையாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தருணங்களில் தமிழ் இனவாதம் என்று சொல்லக்கூடிய வடிவத்திற்கூட அது வெளிப்படுகின்றது.

தேசம், தேசியம் என்பவற்றை உரிய உள்ளடக்கக் கனதி- செயல்வலு- உரிய-உகந்த திட்டங்களுடனும் தொலைநோக்குடனும் முன்னிறுத்தவும் முன்னெடுக்கவும் அரசியல்வாதிகளும், கட்சிகளும், சிவில் சமூகம் உட்பட்ட சமூக – கலை-பண்பாட்டு நிறுவனங்களும் அங்கு இல்லை என்பதே அடிப்படையான சிக்கல். நிலவும் போதாமைகளின் பட்டியலில் ‘கல்வியாளர்களையும்’/Think tanks, ஊடகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அரசியல் உரையாடல், கோரல், நிர்ப்பந்தித்தல், ஜனநாயக வழிமுறைகளில் இயங்குதல் முதலான தொலைநோக்குப் பார்வையுடனான அரசியற் செயற்திட்டம் தமிழர் தரப்பிடம் போதாமையாகவுள்ளது. நிலவும் அரசியல் வெளி, வாய்ப்புகளை எவ்வாறு மாற்றத்தை நோக்கிய சாத்தியம்மிக்க கருவிகளாகக் கையாள்வது – அறிவார்ந்த தளத்தில் இயங்குவது – வசப்படுத்துவது – செயற்திட்டங்களை வகுப்பது – நிறைவேற்றுவது – இலக்கை நோக்கி நகர்வது போன்ற சிந்தனைகளின்றி முட்டுச்சந்தியில் நிற்கின்றது. உள்ளடக்கமற்ற, செயலற்ற, தொலைநோக்கற்ற தமிழ்த் தேசிய வெற்றுக் கோஷங்களை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

உள்ளடக்கம், நடைமுறை சார்ந்து அதிகம் மாற்றம் கோரிநிற்கின்ற சொல் அதுவாகத்தான் இருக்கும். இன்றுள்ள தேர்தல் அரசியல், கட்சி அரசியல் வெளிகளுக்கூடாக அத்தகைய மாற்றம் சாத்தியமில்லை. மக்கள்சார் சமூக, கலை, பண்பாட்டு இயக்கம், அறிவு,கல்விசார் இயங்குதல்களுக்கு ஊடாகவே அது சாத்தியமாகும்.

https://thinakkural.lk/article/311995

எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு

1 week 1 day ago

எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு
sudumanalNovember 13, 2023
political-culture.jpg?w=500

கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் என நான்கு தேசிய இனங்கள் இருப்பதாக தற்போது பல அரசியலாளரும் வரைபு செய்கிறார்கள். இந்த தேசிய இனங்கள் தங்கள் மொழி, பண்பாடு, நிலப்பரப்பு சார்ந்த தனித்துவங்களை பேணும் ஓர் அரசியல் கட்டமைப்பு அரசு (state) வடிவத்துள் பேணப்படுகிறபோது, அமைதியான வாழ்வை தரிசிக்க முடியும். அப்போதான் சகலரும் இத் தனித்துவங்களோடான பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கையராக தம்மை முழுமையாக உணர முடியும். ஜனநாயக சோசலிச குடியரசு என பெயர்ப்பலகை தொங்கவிட்ட நாடான இலங்கை இந்த திசையில் கடந்த 70 வருடமும் பயணிக்கவில்லை. வெள்ளையர்கள் வெளியேறியபின் அது பெருந்தேசிய, பௌத்த மேலாதிக்க அரசுக் கட்டமைப்புடன் உருப்பெற்று, அதன்வழி பயணித்ததால் இன்று நாம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறோம்.

போரும், போராட்டத்தின் தோல்வியும், தமிழ் விடுதலை இயக்கங்களினது பிழையான அரசியல் போக்குகளும் தீர்மானங்களும் கூடவே கொலைக் கலாச்சாரமும் எல்லாம் சேர்ந்து தமிழ் மக்களை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்குள் தள்ளி 15 வருடங்களுக்கு மேலாகிறது. அரசுக் கட்டமைப்பானது இன்னும் இறுக்கமடைந்து விட்டது. அதை நிகழ்த்திய அரசாங்கங்களின் யுத்தச் செயற்பாடுகள் அவர்களது ஊழல் மோசடிகளுக்கான கதவுகளை மேலும் அகலத் திறந்து, எல்லா இன மக்களையும் பின்கதவால் பிச்சைப் பாத்திரத்துடன் துரத்தியது. இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்து, அதன் எதிர்ப்புப் போராட்ட வடிவமாக 2022 இல் அரகலய எழுச்சி தோன்றியது. அது ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்தது எமக்கு கிடைத்த ஓர் அரசியல் படிநிலை வெற்றியாகும்.

அது அரசாங்கத்துக்கு எதிராக “மாற்றம்” (அதை அரசியல் பண்பாட்டு மாற்றம் எனலாம்) என்ற கோசத்தை மட்டுமல்ல, நிலவுகிற அரசுக் கட்டமைப்புக்கும் (state structure) எதிராக “முறைமை மாற்றம்” என்ற மிக காத்திரமான முழக்கத்தையும் முன்வைத்துப் போராடியது. இதற்குக் காரணம் அரகலயவை நடத்திய இளஞ் சத்ததி பேரினவாத கட்சிகளுக்கு வெளியில் இருந்தவர்களாக மட்டுமல்ல, சோசலிசம் சமத்துவம் போன்ற சிந்தனைப் போக்கை கொண்டவர்களாகவும், இனவாதத்துக்கும் போருக்கும் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாகவும் இருந்தது முக்கிய காரணம். அத்தோடு 30 வருட போரின் தாக்கத்தை -வெவ்வேறு அளவுகளில்- எல்லா இன மக்களும் அனுபவித்ததும் களைப்படைந்ததும் இன்னொரு காரணம்.

அரகலயவை முன்னின்று நடத்திய “முன்னிலை சோசலிசக் கட்சி” ஆனது ஜேவிபியின் இனவாதப் போக்கு, போர் ஆதரவு நிலைப்பாடு, அதிகாரப் பகிர்வின் மீதான ஒவ்வாமை என்பவற்றுக்கு எதிராகவும், அதன் சோசலிச நழுவல் போக்குக்கு எதிராகவும் அதிலிருந்து வெளியேறியவர்களால் 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னணியாகும். இவர்களோடு சேர்ந்து பல முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்களும், உதிரிப் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரகலவை முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டத்தில் இடையில் வந்து சேர்ந்த ஜேவிபியானது அரகலய இடைக்காலத்தில் பலவீனப்பட்டிருந்தபோது அதிலிருந்து விலகிக் கொண்டது. பின் மீண்டுமான அரகலய புத்தெழுச்சியின் பின் திரும்பவும் அதற்குள் வந்து இணைந்து கொண்டது.

நாடு முழுவதும் அரகலய ஏற்படுத்திய சிந்தனைத் தூண்டலானது அரசியல் பண்பாட்டில் ஒரு பண்பு மாற்றத்தைக் கோரியது. அந்தக் கோரலை அல்லது முழக்கத்தை ஏற்கனவே பெரும் அமைப்புக் கட்டுமானமாக இருந்த ஜேவிபி தன்வசமாக்கியது. 2019 இல் 3 வீத வாக்குகளைப பெற்ற ஜேவிபி 2024 இல் 42 வீத வாக்குகளைப் பெறுமளவுக்கு வளர்ச்சியுற -கட்சி என்ற அடிப்படையில்- எந்த புரட்டிப் போடலையும் செய்ததில்லை. எதுவும் வெளித் தெரியவுமில்லை. அநுரகூட தனது வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வளர்ச்சியின் இயங்கியலை எப்படி விளக்க முடியும். ஆக, அரகலய மக்கள் போராட்டத்தின் விளைவு இது. எனவே இன்று அரகலய அவர்களை நிறுத்தியிருக்கிற இடத்திலிருந்து அவர்கள் முன் செல்ல விழைவதே அவர்களது இருத்தலுக்கான ஒரே வழி. அதுவே அவர்கள் அரகலயவிடமிருந்து தமதாக்கிய முழக்கமான “மாற்றம்” என்பதும் “முறைமை மாற்றம்” என்பதுமாகும். எது எப்படியோ இது ஒரு நல்ல மாற்றம். மிக ஆரோக்கியமான மாற்றம். அது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (சந்ததி அரசியலின் வேரை புரட்டிய ஒரு மூன்றாவது சக்தி என்றளவிலும், ஒரு கிராமியப் பின்னணியிலிருந்து, ஓர் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வெளித்தோன்றிய தலைமை என்றளவிலும் இந்த மாற்றம் மிகக் காத்திரமானது).

அரகலய போராட்டம் சம்பந்தப்பட்ட மேற்கூறிய உண்மையை என்பிபி யோ அனுரவோ எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. பழைய அரசியல் பண்பாட்டிலிருந்து புதிய அரசியற் பண்பாட்டுக்குள் மாற்றத்தை நிகழ்த்துவோம் என சொல்லும் அவர்கள் பழைய அரசியற் பண்பாட்டில் தாம் -புரிந்தோ புரியாமலோ- அரசாங்க பங்காளிகளாக இருந்ததை சுயவிமர்சனம் செய்து, இந்த புதிய காலடியை வைக்கவுமில்லை. போரின் விளையை பரிவுபட பேசும் அநுர அந்தப் போருக்கு தமது கட்சி ஆதவளித்ததை சொல்ல முன்வருவதாயில்லை. 2004 இல் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்து போரை நடத்த பங்களித்தவர்கள். ஓர் இனப்படுகொலையை நாட்டின் இராணுவ வெற்றியாகக் கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். 2015 இல் மைத்திரி ஆட்சியின் புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளை எதிர்த்தவர்கள் அவர்கள். அதற்கான சுயவிமர்சனமும் இல்லை. வடக்கு கிழக்கு பிரிப்பை அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேர்வு மூலம் தீர்மானிப்பதைக் கோருவதற்குப் பதிலாக நீதிமன்றத்தை நாடியவர்கள்.

மாகாண சபை (காணி,பொலிஸ்) அதிகாரங்களை எதிர்த்து அதிகாரப் பரவலாக்கலை உப்புச்சப்பற்றதாக ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது. மாகாணசபை தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலாக்கலை அடுத்து நிகழ்த்தப் போகிறோம் என இப்போது சொல்லும்போது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. (மிகச் சிறந்த அதிகாரப் பரவலாக்கல் முறைமையைக் கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் கன்ரோன் முறைமையில் இந்தவகை -காணி, பொலிஸ்- அதிகாரங்கள் பகிரப்பட்டு செழுமையாகச் செயற்படுகின்றன. மத்தியில் நாட்டின் அரசியல் அதிகாரம் 7 பேர் கொண்ட சபையாக பகிரப்பட்டு உள்ளது).

இவையெல்லாம் குற்றப் பத்திரிகை அல்ல. விமர்சனங்கள். நிகழக்கூடிய அரசியல் தவறுகள் என்றளவில் அதை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனத்துடன் அதை தாண்டிவந்து தெளிவாகப் பேச வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தவறிழைப்பதல்ல பிரச்சினை. அது தவறு என்று காலம் உணர்த்துகிறபோதாவது அதை ஏற்றுக்கொண்டு தம்மை புதுப்பித்து வெளிவருவது நல்ல தொடக்கமாக இருக்கும். இது அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்குமேயொழிய எதிராக அமையாது. பேசாமைதான் சந்தேகத்தை தேக்கி வைத்திருக்கும்.

அதுவே சிறுபான்மை இன மக்களிடம் புகாராக படிந்திருக்கிறது. அதனாலேயே சிறுபான்மை தேசிய இனங்கள் தமது பிரதிநித்துவத்தை தனித்துவமாக பேணும் நியாயமான முயற்சியை தவிர்க்க முடியாமல் பழைய அரசியற் பண்பாட்டில் பழசாகிப்போன கட்சிகளினூடாகவோ சுயேச்சைக் குழுக்களினூடாகவோ பேண வழிவகை தேடுகிறார்கள். தமது உரிமைகளை நிலைநாட்டுதல் என்பதற்குப் பதிலாக, அது கேட்டுப் பெறப்பட வேண்டிய ஒரு பேரம் பேசும் (deal) அரசியலாக கொண்டுள்ள அவலம் சிறுபான்மையினர் தரப்பில் தொடர்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ் மக்களின் இந்த கையறுநிலையை தீர்க்கும் வகையிலான எந்த முன்மொழிவும் வைக்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே அநுரவின் பேச்சு இருந்தது. இன மத மொழி கடந்த இலங்கையர் என மொத்தத்துவப் படுத்துவதையும் அப் பேச்சு குறிவைத்திருந்தது. “நாங்கள் இலங்கையர்… ஒற்றுமையாக வாழவேண்டாம்.. இல்லை வாழவேண்ண்டும்..டும்” என மகிந்தவும்தான் அழுத்தி திருத்தி செல்லத் தமிழில் பேசியது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மையின பிரச்சினைக்கு தீர்வாக சுயாட்சியை வெளிப்படையாக முன்வைப்பதைப் போலவோ, அன்றி வேறேதும் வழிமுறையையோ அநுர முன்வைக்கவில்லை. அதை புகார் படிந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார். அவரது பேச்சு இதில் வெளிச்சம் எதையும் பாய்ச்சவில்லை. எதிர்காலத்தில் என்பிபி அரசாங்கத்தினதும் அரசினதும் புத்துணர்ச்சியான மாற்றம் கொண்ட செயற்பாட்டினூடு இதை சாதிக்க கால அவகாசம் தேவை என்பது உண்மை. ஆனால் அதுவே அதை இப்போ ஒரு வகைமாதிரியாகக் கூட முன்மொழியாமல் தவிர்ப்பதற்கான நியாயமாகக் கொள்ள முடியாது. 

பாரம்பரிய தேசியக் கட்சிகளின் வாக்குறுதிகளை 70 வருடமாக நம்பி ஏமாந்த சிறுபான்மை இனங்களை முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் -முதன்முதலான- வாக்குறுதிகளை நம்புங்கோ..வாங்கோ என அழைப்பது “இயேசு வருகிறார்… எமது மீட்பர் வருகிறார்” என ஜெபிப்பதற்குச் சமம். அதற்குள்ளால் ஓடும் மான் மாய மானா அல்லது நிஜ மானா என்பதை புதிய அரசாங்கம் செயலின் மூலம்தான் காட்ட வேண்டும்.
(குறிப்பு: இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது சிறுபான்மை இனங்களை உட்படுத்திய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க என்பிபி தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்ததாக செய்தி வந்திருக்கிறது. உண்மையெனில் நல்ல ஆரம்பம் இது)

இதே ஜேவிபி யினூடாகத்தான் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். இப்போ அதன் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா தடாலடியாக தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என அண்மையில் ஒரு போடு போட்டார். இவர்களைப் போன்றவர்கள் உருவாவதற்கான சூழலைக் கொண்ட கட்சியாக ஜேவிபி இருக்கிறதா என்று ஒருவர் எண்ணத் தலைப்படுவதில் தவறு இல்லை. ஆட்சியதிகாரத்துக்கு வரமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக பேசிய என்பிபி இப்போ பயங்கரவாதத் தடைச்சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதுதான் தவறு என்கிறார்கள். வேட்டையனில் ரஜனி என்கவுண்டருக்கு கொடுத்தது போன்ற விளக்கம் இது.

எனவே பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளான பாரம்பரிய கட்சிகளை அகற்றி புதிய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளை அரசாங்கத் தரப்பு மட்டுமல்ல, வலுவான எதிர்க் கட்சியும் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. இது சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட நோக்குநிலை மட்டுமல்ல, மாற்றத்துக்கு வித்திட்ட -மக்கள்நலன்சார் அரசியலை உயர்த்திப் பிடித்து போராடிய- அரகலய சக்திகளும் சமூகப் புத்திஜீவிகளும் சம்பந்தப்பட்ட நோக்குநிலையும் கூட. இவற்றினூடுதான் பழைய அரசியற் பண்பாட்டு நீக்கத்தை பாராளுமன்றத்துள் முயற்சிக்க முடியும். எனவே தேர்தலில் வாக்களிப்பதன் மூலமான மக்களின் பங்கு புதிய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல புதிய பலமான எதிர்க்கட்சி அதிகாரத்துக்குமானதாக இருக்க வேண்டும். இதில் ஏற்படக்கூடிய தோல்வியானது சஜித் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு கதிரையை இழுத்துப் போடுவதாக அமையும். அதாவது பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநித்துவத்துக்கான இடத்தை முன்னரைப்போலவே அங்கீகரித்ததாகப் போய்விடும். (எனது கணிப்பில் அதுவே நடக்கும் வாய்ப்பு உள்ளது). இது பற்றி சிந்திக்காமல் என்பிபியை மட்டுமே தேருங்கள் என கோருவதைத்தான் அலையில் மூழ்குதல் என்பது.

அதிகமான சுயேச்சைக் குழுக்கள் வடகிழக்கு மலையகப் பகுதிகளில் இத் தேர்தலில் நிற்பது என்பது வாக்குகளை பிரிக்கும் என்ற கணிப்பில் ஓரளவு உண்மை இருக்கிறபோதும் அதன் பாதிப்பு சிறுபான்மையின பாரம்பரிய கட்சிகளுக்குத்தான் இருக்குமேயொழிய என்பிபி க்கு அல்ல. என்றபோதும் அத்தோடு இவளவு சுயேச்சைக் குழுக்கள் தோன்றியிருக்கிறது என்பது ஒருவகையில் அரசியலானது மக்கள்மயமாவதின் அறிகுறி எனவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாற்றம் ஏற்கனவே இருந்த பழைய அரசியல் பண்பாட்டின் சிதைவை கோரிய அரகலயவுக்கும், அதைத் தோற்றுவித்த அனுரவுக்குமான வெற்றி என எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான சிதைவுகளின் போது அரசியல் தளத்தில் இவ்வாறான குழுக்கள் தோன்றுவதும் மறைவதும் தவிர்க்க முடியாதது. அதுவும்கூட புதிய அரசியல் பண்பாட்டிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு, இலங்கை பூராகவும் ஆணாதிக்க நிலையில் அரசியல் சீவியம் நடத்திக் கொண்டிருந்த கட்சிகளிலும், அதைத் தாண்டி சுயேட்சை குழுக்களிலும் பெண்கள் அரசியல் களத்துள் பிரவேசிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இது இன்னொரு சாதகமான மாற்றம் ஆகும். எனவே சிறுபான்மையினங்களின் பழைய அரசியற் பண்பாட்டுக் கட்சிகளினுள் புதிய அரசியற் பண்பாட்டு மாற்றம் நிகழாவிடின், அவர்களது பிரதிநித்துவம் குறைய நேரும். சுயேச்சைக் குழுக்கள் புதிய வீரியமான அரசியலாளர்களை அடையாளம் காட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளது.

அநுர நல்லவராக இருக்கலாம். அடுத்து வரப்போகிறவரும்கூட நல்லவராக இருக்கலாம். அதிகாரமற்றவர்களாக இருக்கும்போது நல்லவர்களாக இருப்பவர்கள் அதிகாரம் கிடைக்கிறபோது ‘நல்லவர்களாக’ தொடர்வார்கள் என்பது அரசியல் தர்க்கமற்றது. சிக்கலான அகமுரண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிற மனிதஜீவியை நல்வர் கெட்டவர் என இருமையாக மட்டும் புரிந்துகொள்வது முழுமையற்றது. மனிதஜீவி ஓர் அரசியல் மிருகம் என்பது முக்கியமானது. இதனடிப்படையில் அதிகாரம் அவர்களை மாற்றியமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மிகக் குறைந்த முன்னுதாரணங்களே உலக வரலாற்றில் காட்டப்படக் கூடியதாக உள்ளன.

அரசு (state) கட்டுமானத்தின் இனவாத, பெரும்பான்மைவாத, பௌத்த மேலாதிக்க கருத்தியலை மாற்றியமைப்பதில் எதிர்நோக்க முடியாத இறுக்கமான நிலை ஏற்படும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் பண்பு மாற்றங்கள் நிகழும். அத்தோடு பூகோள அரசியல் சதிகளும் நலன்களும், (கடன் மூலமான) பொருளாதார தங்குநிலைகளும் அவர்களின் நிபந்தனைகளும் நெருக்கடிகளும், இடதுசாரியத்துக்கு எதிரான மேற்குலகின் வன்மங்களும் நெருக்குதல்களும் என பல சவால்களை ஒரு சிறிய நாடு எதிர்நோக்க வேண்டி வரும். இவற்றை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பணி கட்டாயமானது. இப் புறக் காரணிகள் தவிர்க்க முடியாதபடி அரசாங்கத்தை பண்புரீதியில் மாற்றியமைக்கலாம். (சோவியத் இல் மட்டுமல்ல, எமது விடுதலை இயக்கங்களிலும் இவ்வாறான அதிகாரத்துவ பண்பு மாற்றம் நடந்து நாசமாய்ப் போனது ஞாபகமிருக்கும்). இவை நிகழாதபடி அரசாங்கத்துக்கு பக்கத் துணையாக நின்று பாராளுமன்றத்தினுள் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பலமான மாற்று எதிர்க்கட்சி தேவை. அப்போதான் புதிய அரசியல் பண்பாடு அரசியல் தளத்தில் உதயமாகும். இதை சமூகத் தளத்தில் நிறுவி முன்னேறிச் செல்ல பலமான அறிவுசார் சிவில் சமூக நிறுவனங்கள் தேவை. இது மக்கள் சார்பான பொறுப்பு.

மாற்றத்துக்கான முயற்சியின் நிலையை தக்கவைக்க என்பிபி க்கு பெரும்பான்மைப் பலம் (113 ஆசனங்களுக்கு மேல்) தனிப்பட கிடைக்க வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சிறுபான்மையின பிரதிநித்துவங்களின் தேவையும், -அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களின் கூட்டணியாக தேர்தலில் நிற்கும்- “மக்கள் போராட்ட முன்னணி” இன் பிரதிநித்துவத் தேவையும் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிய வேண்டியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்தை எதிர்ப்பது அல்லது அவர்களின் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்ப்பது என்ற பொருளில் அல்ல!
 

https://sudumanal.com/2024/11/12/எதிர்க்கட்சி-அரசியல்-பண்/

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 1

1 week 1 day ago

இந்த கட்டுரை ஒருவருடத்துக்கு முன் வந்தது காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கபடுகிறது .

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடந்தபடி இருந்தன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்பார்த்தபடி எந்தவித உடன்பாடுகளையும் எட்ட முடியவில்லை. எனினும், தீர்வொன்று கிடைத்தால், தமது ஆட்சிக்கு உட்படப்போகும் பிரதேசங்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உடன்பட்டார்கள்.

இதன் பின்னணியில் பல பொருளாதார நலன்களையும் மற்றும் சில தொடர்புச் சாதனங்களையும் அதற்கான கருவிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நோர்வேயின் மேற்பார்வையில் பல நாடுகள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதற்காக முதலீடுகளைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில், அந்த அபிவிருத்திகளின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், அவை தொடர்பான துல்லியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நோர்வே தயாரிப்புகளில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் நோர்வேயைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி சம்பந்தமான வரைவுகளை மேற்கொண்டன. இந்த வகையில் இரு ஆய்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அவையாவன,

  1. போர் நடக்கும் பிரதேசங்களில் தமிழ் இளையோரும் தற்கொலையும்,
  2. வடக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலின் இன்றைய நிலையும் அதன் சவால்களும்,

என்பவையாகும்.

இதில், முதலாவது தவிர இரண்டாவது ஆய்வு முற்றுமுழுதாக முடிக்கப்படவில்லை. ஆய்வின் தரவுகளை சேகரிப்பதற்கான களவேலைகள் மட்டுமே முடிந்து விட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டதனால் அது நிறுத்தப்பட்டது. ஆனால் கிடைத்த தரவுகளை அடிப்படையாக் கொண்டு 2011 இல் தமிழில் இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகளில் அரைகுறை கட்டுரைத் தொடர்களை எழுதி வெளியிட்டேன். இதன் திருத்திய மறு வெளியீடு (17.05.2018) தமிழரங்கம்.com மற்றும் ndpfront.com இணையங்களில் வெளியிடப்பட்டன. அவை இன்றுவரை பலரால் அவரவர் அரசியலுக்கேற்ப பாவிக்கப்படுகிறன. அவ்வாறு எழுதிய கட்டுரையில் ஒன்றே இங்கு வெளியாகின்றது. இந்தக் கட்டுரை எழுதிய காலம் சில வருடங்களுக்கு முன்பு என்றாலும், இதன் பேசுபொருள், உள்ளடக்கம், மற்றும் தரவுகள் அனைத்தும் இப்போதும் எம் மீனவர் சமுதாயத்தின் தீர்க்கப்படாத, எரிந்து கொண்டிருக்கும் சமுதாயத் தீயின் வெளிப்பாடாகவே உள்ளன.

அறிமுகம்

முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறைப் போர் இராணுவ ரீதியில் முடிவுக்குவந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகின்றது. ஆனாலும், தமிழ்பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மையிலோ, உக்கிரத்திலோ எந்தவித காத்திரமான மாற்றங்களும் நிகழ்ந்து விடவில்லை. இனவாத ஒடுக்குமுறையானது பல புதிய வடிவங்களில் இன்னும் தொடர்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் பாரம்பரிய விவசாய நிலங்களும், காடுகளும், கரம்பைகளும் அபகரிக்கப்படுகின்றன. சர்வதேசப் பொருளாதார உதவி மற்றும் முதலீடு என்ற பெயரில் மேலாதிக்க நாடுகளுக்கு எமது தேசத்தின் (ஒட்டுமொத்த இலங்கையின்) வளங்களை, ஆளும் இனவாத சக்திகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளென தம்மைக் கூறிக்கொள்வோரும் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் விற்கின்றனர். இது ஒரு புறமிருக்க, நம் தேசத்தின் கடல் வளங்கள் கேட்க எவருமின்றி கொள்ளையடிக்கப்படுகிறன. இந்தக் கொள்ளைகள் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாயில்லை.

தமிழ் மொழிப் பாரம்பரியத்தில் நிலங்களையும் அல்லது பாரம்பரிய வாழ்நிலைப் பிரதேசத்தை – அதாவது தேசத்தின் நிலத்தை – அவற்றின் அமைப்புக்கு ஏற்பவும், உபயோகத்திற்கு ஏற்பவும், அதன் கலை – கலாசாரம், வாழும் பண்பாடு  சார்ந்தும் முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என வகைப்படுத்தி உள்ளனர். ஆனாலும், பொதுப் புத்தியின் ஆதிக்கத்தால் மக்கள் தேசம் என்பதை நிலம் என்று மட்டுமே விளங்கிக் கொள்கின்றனர். இங்கு, கடலும்-கடல் சார்ந்த பிரதேசமாக வகைப்படுத்தப்படும் நெய்தல் நிலத்தின் அரைப்பகுதியான கடல் சார்ந்த நிலப் பகுதி (கரையோர நிலங்கள்) மட்டுமே தேசமென்ற வரையறைக்குள் மக்களால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள கடற் பிரதேசமும் அதன் வளங்களும் ஏதோ அந்நியமானதொன்றாக – எடுப்பார் கைப்பிள்ளையாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், சமூகப் போராளிகளும், தேசியவிடுதலைப் போராளிகளும் கூட “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற அரைகுறைப் புரிதலைக் கொண்டிருந்தால், அந்தத்தவறான புரிதல் பாரிய எதிர்மறைத் தாக்கத்தை அந்தத் தேசத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்தும்.

இலங்கையைத்  தமது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ள சிங்களமொழி பேசும் மேலாதிக்க இனவாத சக்திகள் முதல், தமிழ்பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் போராடுபவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற வரையறைக்குள் நின்று கொண்டே அரசியல் செய்கின்றனர். மேற்கூறிய சக்திகள் ஏதோ விளங்காத்தனமாக இப்புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இப்புரிதல் இவர்களின் அரசியற் கொள்கை மற்றும் பொருளாதாரச் சிந்தனையை சார்ந்ததாகும். சந்தர்ப்பவாத அரசியற் பாதைகளையும், ஆதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து, அவர்களின் அடிவருடி, அவற்றில் தங்கிவாழும் அரசியலை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின் வெளிப்பாடுகளேயாகும். மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து, அவர்களை நிரந்தரப் பொருளாதார அடிமைகளாக்கும், தமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் சக்திகளான, விதேசியவாதிகளான இவர்களிடம் வேறு எந்த வகையான ‘தேசியப்’ புரிதலை எதிர்பார்க்க முடியும்?        

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பது போல, இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியக் கடற்பிரதேசம் இன்று இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கின் மீன்பிடிச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் எல்லாவகை செயற்பாடுகளும், முயற்சிகளும் இவ் இந்தியக் கடற்கொள்ளையால் மூர்க்கமான முறையில் கருவிலேயே சிதைக்கப்படுகிறன. இந்தியாவின் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், ஏன் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும் கூட இந்தியக் கடற்கொள்ளையை எல்லா வகையிலும் ஆதரிக்கின்றனர். பொதுவாக இந்தியர்கள் தமது தேசநலன் சார்த்த விடயத்தில் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவாத அரசியலைத் தோற்கடித்து, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறப் போராடுவதாக ‘தமிழ்த் தேசியத் தலைவர்கள்’ கூறுகின்றனர். தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அரசியற் சக்திகளான இவர்கள், மேலாதிக்க இந்திய அரசுக்கு வால்பிடிக்க முயல்வதுடன், தென்னிந்திய தமிழ் இனவாதிகளான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற சீரழிந்த மூன்றாந்தர அரசியல்வாதிகளை இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.

மறுபுறத்தில், இடதுசாரிகள் எனவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்பவர்கள் எனவும் தம்மைக் கூறும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர், இந்தியக் கடற் கொள்ளைக்குத் துணைபோகும் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) போன்ற ‘இடதுசாரித்துவம்’ பேசும் இந்திய அமைப்புக்களை, எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் புரட்சியின் நட்புச் சக்திகளாகவும், பங்காளிகளாகவும் மதித்து, அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி அரசியல் செய்கின்றனர்.

மேற்படி காரணங்களினால் இலங்கைத் தமிழினவாதிகளும், புலம்பெயர் ‘புரட்சிக்காரர்களும்’ இலங்கையின் கரைகளில் நடைபெறும் இந்தியர்களின் நாசகார மீன்பிடியை மூடி மறைத்து, இந்திய மீன்பிடிசார் பெரும் மூலதனக்காரர்களுக்கு சார்பாக நடாத்தும் அரசியலைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாய் உள்ளனர். புலிகளின் பின், ஏகப்பிரதிநிதித்துவம் கதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியக் கடற்கொள்ளைக்கு எதிராக இது வரை ஓர் அறிக்கை கூட விடவில்லை. இந்த நிலைமை ஏன்?

இந்தச் சந்தர்ப்பவாத, மெளன அரசியலானது இந்திய ‘நாசகார மீன்பிடியால்’ பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களில் பெரும் பகுதியினரின் நாளாந்த சீவியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகளுடன் நின்று கடைசி வரை போரிட்ட பல போராளிகளும், அவர்கள் சார்ந்த சமூகங்களும் என்பதுதான். இலங்கை இனவாத அரசுக்கும், அதற்கு ஆதரவான அரசியல் சக்திகளுக்கும் எதிரான மனப்பான்மையுடன், ‘தமிழ் தேசிய உணர்வையும்’ கொண்டதாக இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் நின்றார்கள். ஆனால் இன்றுள்ள தமிழ்த் தரகுகளுக்கும் இனவாதிகளுக்கும் திடீர் அரசியல்வாதிகளுக்கும் இன்று இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் தேவையில்லாத பொருளாகப் போயுள்ளனரா?   

சிறு மனிதாபிமான தளத்தில் நின்று கூடவா இவர்களால் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதுள்ளது?

வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை
red blue border line

இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1970 – 1977) பதவிக் காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடித் தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டன. இந்தக்கடன்கள் மூலம் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மர வள்ளங்களும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களும், வலைகளும் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டன.

அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித் தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள், சிறு வள்ளங்களுக்கும் கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கியது.

அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரைகடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலன்களை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கியமான காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம் : 

  • தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைந்த தனிநபர்களுக்கு இடையிலான வட்டிக்கு வழங்கும் முறை இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தமை.
  • பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர்கள் மரப்படகு கட்டும் தொழில் நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தான் பிற்காலத்தில் ஜா-எல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்களத் தொழிலாளர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.)
  • நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனமானது காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடி நார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களைப் பெற முடிந்தமை.

(இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும், தொழிலாளர்களும் தென் இலங்கையருக்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக ஜா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடி நார் இழைப் படகுகளை தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் பயன்படுத்தின. அந்தப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி, புளொட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம், புளொட் இயக்கத்தாலும் புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.)

continental shelf

மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் (Continental Shelf) ஆழ்கடலுக்கும் பரவைகடல் / களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றரில் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே, இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தள மேடை கேரளக் கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கியமான மீன்பிடிப் பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் வாழ்வதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.

வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டன.

இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி, வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது.1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்திருந்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்தச் சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
fibre boat

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 1983 ஆம் ஆண்டில் மொத்தமாக,  உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 உம், வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2,600 உம், மரவள்ளங்கள் 3,865 உம் இருந்தன. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப் படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மர வள்ளங்களாலேயுமே பிடிக்கப்பட்டன. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தம் காரணமாக வடபகுதி ரோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. வடபகுதியில் இருந்த ரோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.

maravallam

வடபகுதியின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல, வலைப்படுதலேயாகும். இவ்வலைகளின் கண்கள் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீற்றர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீற்றர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தன. கண்ணாடி இழைப் படகுகளில் தொழில் செய்தோர், 3 இஞ்சி கண்விட்டத்திலிருந்து 5 இஞ்சி கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாகச் செய்யப்பட்டது.

இவ்வாறு ஒப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடித் துறை, 1983 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்த காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக, சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், 1995 இறுதியில் போர் காரணமாக மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வன்னிக்குச் சென்றபோது, யாழ். மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உட்கட்டுமானமும் முற்றாக அழிக்கப்பட்டன. மன்னாரின் நிலையும் அதேபோன்று, படகுகள் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.

இன்று வடக்கின் மீன்பிடித் துறையானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும்,1800 மர வள்ளங்களையும்,120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக் கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் ரோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

தமிழ்நாட்டின் மீன்பிடி : சிறு வரலாற்றுப் பார்வையும் சில தரவுகளும்

தமிழ்நாட்டின் மீன்பிடி, உள்நாட்டு உணவுக்காகப் பயன்தரும் வளமாகவே பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் இந்திய மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின்படி அது சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில், நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன், அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப் படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான நவீன பொறிமுறையைப் பாவிப்பதன் மூலம், உற்பத்தித் திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது.

1972 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 ஆம் ஆண்டளவில் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித் திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72,644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18,131.4 மில்லியன்) இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளன. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடித் துறையானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.

ஆனால், மீன்பிடியால் பெறப்படும் செல்வம் முக்கியமாக யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் இந்திய அரச திட்டத்தில் கூறப்பட்டதோ, அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடித் துறை மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள், இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமே. அரச மீன்பிடித் திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச இயந்திரத்தின் இலஞ்சக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானது எனலாம்.

நோர்வே அரசினால் ரோலர் இழுவைப் படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்க்கை, பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியைத் தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர்கள் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்குத் துணைபோன நோர்வே அரசு, தனது கேரள அபிவிருத்திச் செயற்திட்டத்தை ஆய்வுசெய்தது. அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கை வள அழிவுக்கும் வழிவகுத்ததென, ஐக்கிய நாடுகள் சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத் தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ‘ஒரு நாட்டில் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளக்கூடாது’ என்பதற்கு சிறந்த உதாரணமாகவுள்ளது.

ஆனால், இவை எவற்றையும் கணக்கில் எடுக்காது, இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும், கேரளாவில் சமூகப் பாதிப்பையும் இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி, ஒரு சில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தின. அதன் விளைவு, பஞ்சத்திலும்கூட அடுத்தவருக்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமை மிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரப் படகுகளில் நாட்கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

மேற்கூறப்பட்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும்.

மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடித் தளமேடையில், நாகப்பட்டினம் வடக்கில் இருந்து இராமேஸ்வரம் தெற்கு வரையாக, சுமார் 480 கிலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களே இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து, நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கரையோரப் பிரதேசத்தில் சுமார் 43 சதவீதமாகும்.

Indian boats

அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1,465 ரோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 ரோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1,865 ரோலர்களில் 980 ரோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றன.) – அதாவது மொத்தமாக 3780 இந்திய ரோலர்கள் – பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்தத்தகவல் 2002 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதிக் கொம்பனிகளுக்கும் சொந்தமானவையாகும்.

இதைவிடவும் இந்தப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12,500 மரவள்ளங்களும், 19,500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறன. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளைப் பாவித்தே மீன்பிடிக்கின்றனர்.

தொடரும். 

 

 

newton-150x150.png
About the Author
மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

https://www.ezhunaonline.com/surpassed-of-indian-fishermen-into-sri-lankan-boarder/

இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது பாராளுமன்ற சோதனையை எதிர்கொள்கிறார்

1 week 1 day ago

image

BY AMAL JAYASINGHE
AFP-JIJI

இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமார திசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால்  சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க பெற்றார். இலங்கை வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான்  முன்வைத்துள்ள திட்டங்கள் ஜேவிபியின் சோசலிஸ நிகழ்ச்சிநிரல் போன்று காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

திசநாயக்கவின் கீழ் நாடு சீனா அல்லது வியட்நாமின் பொருளாதார  மாதிரியை பின்பற்றக்கூடும் என வர்த்தக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுரகுமார திசநாயக்கவின் கட்சி அதன் சின்னமாக சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் சுத்தியல் மற்றும் அரிவாளை கொண்டுள்ளது.

திசநாயக்கவின் முதல் பதவிக்காலத்தில் முழுமையான ஜனநாயக அமைப்பை கொண்டிருப்பதில் அவர்கள் வியட்நாமை விடசிறந்தவர்களாகயிருப்பார்கள் என அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட புவிசார் அரசியல் இடர்பகுப்பாய்வு நிறுவனமான ட்ரென்சிக்கின் இம்ரான் புர்கான் தெரிவிக்கின்றார்.

நீண்டகாலமாக கம்யுனிஸ ஆட்சியை கொண்டிருக்கும் வியட்நாமை விட இலங்கையில் ஜனநாயகம் ஆழமாக வேருன்றியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

வியாழக்கிழமை தேர்தலில் திசநாயக்கவின் கட்சி இலகுவாக வெற்றிபெறும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன் திட்டத்தின்படி  முன்னயை வலதுசாரி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த மக்கள் ஆதரவற்ற சிக்கன நடவடிக்கைகள் உட்பட சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தான் கருதுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

சுமார் 80,000 பேர் பலியான இரண்டு கிளர்ச்சிகளை 1971, 1989 இல் முன்னெடுத்த ஜேவிபி தொழில்சார் குழுக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தன்னை தேசிய மக்கள் சக்தி என அழைக்கின்றது.

விக்கிரமசிங்க இணங்கிய கடன் உடன்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியதன் மூலம் திசநாயக்க அவர் சீர்திருத்தங்களை கைவிடமாட்டார் என்ற வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என தெரிவிக்கின்றார் பர்ஹான்.

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானது முதல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைசுட்டி 16.65 வீதம் முன்னோக்கி நகர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய அயல்நாடான இந்தியா இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய சீனா ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுகளை இலங்கை ஜனாதிபதி பேணியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள 22 மில்லியன் மக்களை கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் ஆதரவை செல்வாக்கை  பெறுவதற்கு இந்தியாவும் இலங்கையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்புகள் 7 மணிக்கு ஆரம்பமாகும். 225 தேர்தல் ஆசனங்களிற்காக 8880 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தல்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் வாக்காளர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்டதை விட(80) வாக்களிப்பு குறைவாக காணப்படலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

சில எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்க்கும்போது முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தோன்றுகின்றது என்கின்றார் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கட்சிக்கு கடந்த தேர்தலில் மூன்று ஆசனங்களே கிடைத்தன. ஆனால் இம்முறை சிறிய சவாலை கூட அந்த கட்சி எதிர்கொள்ளவில்லை.

எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என தெரிவிக்கும் ரோகன ஹெட்டியாராச்சி தேர்தல் பிரச்சாரம் கடந்த காலங்களை போல இல்லாமல் மிகவும் அமைதியானதாக காணப்பட்டது என  குறிப்பிடுகின்றார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவ  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதுடன் மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் என்ற கௌரவ பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகின்றார் என துமிந்த குலங்கமுவ  தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின்படி நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீர்திருத்தவேண்டும் மானியங்களை வரிச்சலுகைகளை நிறுத்தவேண்டும்.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி நுண்பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் கொள்கை  என தெரிவிக்கும் துமிந்த குலங்கமுவ  அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கு ஜனாதிபதி விரும்புகின்றார் என தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/198526

Checked
Thu, 11/21/2024 - 10:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed