அரசியல் அலசல்

வில்லியம் கோபல்லாவ முதல் ரணில் விக்ரமசிங்க வரை - இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்கள்

2 months 3 weeks ago
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

பட மூலாதாரம்,SLPP

படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்டோர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி நடக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

 
சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாறு
ஜே.ஆர்.ஜெயவர்தன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன

பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இலங்கை, 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் தேதி சுதந்திரமடைந்தது.

எனினும், பிரித்தானியாவின் நாடாளுமன்ற கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு டொமினியன் அந்தஸ்துடைய அரசாங்கமாகவே 1972ம் ஆண்டு வரை இலங்கை செயற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், 1972ம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்டதை அடுத்தே, இலங்கையில் முதலாவது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கோபல்லாவ நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 1978ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன நியமிக்கப்படுகின்றார்.

இலங்கையில் 1978ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக, ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982ம் ஆண்டு நடைபெற்றதுடன், அந்த தேர்தலின் ஊடாக ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஜனாதிபதியாக தேர்வானார்.

 
சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க

1988ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் 1992ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்.

2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு, இரண்டு முறை ஆட்சிபீடம் ஏறினார்.

அதனைத் தொடர்ந்து. 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவும் தெரிவானார்கள்.

இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்த இடத்திற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தல்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

1982ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் அடங்கலாக ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், லங்கா சமசஜ கட்சி மற்றும் நவ சமசஜ கட்சி ஆகியன போட்டியிட்டன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அப்போது போட்டியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய ஆகிய கட்சிகள் மாத்திரமே போட்டியிட்டன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட முதல் இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, 1993ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தனித் தலைமைத்துவத்தின் கீழ் நாடு நிர்வகிக்கப்பட்ட காலம் 1994ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

 
ரணசிங்க பிரேமதாஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரணசிங்க பிரேமதாஸ

இந்த நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு 1994ம் ஆண்டு வெளியிடப்படுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி பீடத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில், இரண்டாவது பெரிய கட்சியாக அப்போது திகழ்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முதல் முறையாக கூட்டணியாக தேர்தலை எதிர்நோக்கியது.

அதுவரை கை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் நாற்காலி சின்னத்தில் 1994ம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கியது.

1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்வசப்படுத்தினார்.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலிலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூட்டணியாக ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றியை தன்வசப்படுத்தினார்.

அதன்பின்னர் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உருவாக்கப்பட்டு, வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டு மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.

2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 கட்சிகள் போட்டியிட்டன.

2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஸ களம் இறங்கினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை முறியடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பல கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டார்.

 
கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம்,SLPP

படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னணியிலேயே இந்த தேர்தல் நடைபெற்றது.

போரை முடிவுக்கு கொண்டு வர தலைமைத்துவம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் களம் கண்டார். போரை களத்திலிருந்து வழிநடத்திய ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறங்கினார்.

சரத் பொன்சேகா பொது வேட்பாளராக பொது சின்னமான அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியை தன்வசப்படுத்தினார்.

போர் வெற்றியை மையப்படுத்தியே 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது முறையாகவும் 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

2005, 2010 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தி 2015ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வெற்றிலை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து வெளியேறி, அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

 
மைத்ரிபால சிறிசேன

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன

பொதுச் சின்னத்தில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய நிலையில், 'இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம்' என்ற பெயரில் கூட்டணி ஆட்சியொன்று அமைக்கப்பட்டது.

பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேன வசமானதை அடுத்து, ராஜபக்ஸ குடும்பம் அந்த கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபித்தது.

கூட்டணி அரசின் தலைமை பொறுப்பு அதாவது ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், பிரதமர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வசப்படுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட, ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியை ரணிலிடமிருந்து பறித்து மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளித்தார்.

 
ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க

இதையடுத்து, இலங்கையில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையொன்று ஏற்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

2019ம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது.

அதேபோன்று, எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியிருந்தனர்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டது.

பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் 2019ம் ஆண்டு தேர்தலில் இல்லாது போனது. கூட்டணியாகவே கட்சிகள் அப்போது போட்டியிட்டன.

இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார்.

எனினும், கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி என பல்வேறு சவால்களை கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கை எதிர்நோக்கியது.

இதையடுத்து, நாடு முழுவதும் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியை துறந்தார்.

அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவ்வாறான பின்னணியில், 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

சாம்பல் மேட்டு அரசியல்!

2 months 3 weeks ago

சாம்பல் மேட்டு அரசியல்!
 

— கருணாகரன் —

இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். 

“ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். 

“ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன்.

“அதைப்பற்றிச் சரியாத் தெரியாது. ஆனால், நம்மட்ட வாற ஆக்கள் ரணிலைப்பற்றியும் சஜித்தைப் பற்றியும்தான் கதைக்கினம்” என்றார். 

“அப்பிடியெண்டால் நீங்கள் என்ன முடிவில இருக்கிறியள்?” எனக் கேட்டேன்.

“இன்னும் நாட் கிடக்குத்தானே! பொறுத்துப் பாப்பம்” எனச் சொன்னார்.

நானும் விடவில்லை. “தமிழ்ப்பொது வேட்பாளர் எண்டு ஒருத்தர் நிறுத்தப்பட்டிருக்கிறாரல்லோ! அதைப்பற்றி ஆட்கள் என்ன கதைக்கினம்? நீங்கள் என்ன சொல்லுறியள்?” தொடர்ந்து கேட்டேன்.

“அதைப்பற்றிச் சிலர் கதைக்கினம்தான். ஆனால், நான் என்ன சொல்லிறது? உங்களுக்கு ஒண்டைச் சொல்லட்டே. உங்களிட்டக் கொஞ்சக் காசிருக்கெண்டு வையுங்கோ. அந்தக் காசை என்ன செய்வீங்கள்? ஏதாவது உருப்படியான வேலையைச் செய்யப் பயன்படுத்துவீங்கள். அல்லது தேவையான பொருள் எதையும் வாங்குவீங்கள். இல்லாவிட்டால், சொந்த பந்தங்களுக்குக் குடுத்து உதவுவீங்கள். அதுமில்லாவிட்டால், ஆராவது உதவி தேவைப்படுகிற ஆட்கள், கஸ்ரப்பட்ட சனங்களுக்குக் குடுப்பீங்கள். ஒண்டுமில்லையெண்டால் கோயில் உண்டியல்லயாவது போடுவீங்களல்லோ. சும்மா றோட்டில போட மாட்டீங்கள்தானே..!” என்றார்.

இதற்கு மேல் நான் எதுவும் கேட்க வேண்டியிருக்கவில்லை. 

00

தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. அதற்காக நேரத்தைச் செலவழிப்பது வீண். இருந்தும்  அதைப்பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்றால் –

“பொதுவேட்பாளர் வந்து விட்டார்” 

“தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” 

“நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேந்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்”

“தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்”

“தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்”

 “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” 

போன்ற கருத்துகளை முன்வைத்துச் சனங்களைத் திசைதிருப்ப  முற்படுவதை காணும்போது பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. காரணம், அத்தனையும் தவறான புரிதலின் அடிப்படையிலானவை. 

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூடப் பார்க்கலாம். 

1.      “பொதுவேட்பாளர் வந்து விட்டார்” என்றால் அவரென்ன வானத்திலிருந்து குதித்தாரா? அல்லது வாராது வந்த மாமணியா? (இப்படித்தான் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தமிழ் மக்களின் மீட்பர், தமிழ்ச்சமூகத்துக்கு வராது வந்த மாமணி என்றார்கள்! இறுதியில் அரசியலில் அரிச்சுவடியே தெரியாதவர் என்பதை அவரே நிரூபித்தார்). அரியநேந்திரனைப் பொது வேட்பாளராக நிறுத்தியதற்குத்தான் இந்தப் பெரிய அமர்க்களமா? மலையகத்தில் மல்லியப்பு திலகர் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜூம்தான் போதுவேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவரும் மலையக மக்களை, அவர்களுடைய பிரச்சினையை வெளிப்படுத்துவதற்காகவே போட்டியிடுகிறார். இரண்டையும் சமப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சிங்களவரல்லாத தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையும் அது சார்ந்த பிரச்சினையும் உண்டு. அப்படியென்றால், தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகள் இணைந்து ஏன் ஒரு பொது வேட்பாளரை அடையாளமாக முன்னிறுத்தவில்லை. அதற்கு ஏன் முடியாமற்போனது? மெய்யாகவே சிங்களத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவும் சர்வதேச சமூகத்துக்கு சிங்கள ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தால் அதைத்தான் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, இப்படி அரியநேந்திரனைக் கொண்டு வந்து நிறுத்துவதல்ல. பொதுவேட்பாளர் என்பதற்கான அர்த்தம் ஓரளவுக்கு அப்பொழுதுதான் பொருந்தும். இது பொதுவேட்பாளரேயல்ல. தமிழ் வேட்பாளர். அதிலும் ஒருசாராருடைய தரப்பின் வேட்பாளர். அவ்வளவுதான். 

2.      “தமிழ்ப் பொதுவேட்பாளர் யாருக்காக?” என்றால் நிச்சயமாக பொதுச்சபையினருக்கும் பொதுச்சபையினரின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பினருக்கும்தான். அவர்களுக்குப் பின்னின்று இயங்கும் சக்திகளின் விருப்பத்துக்குமாக. அதாவது இந்தத் தரப்பினருடைய தேவைக்காகவே தமிழ்ப் பொது வேட்பாளரும் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடும். இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்குள் தங்களுடைய செல்வாக்கு மண்டலத்தை விஸ்தரிப்பதற்கு பொதுச்சபையைச் சேர்ந்தவர்களிற் சிலர் கடந்த காலத்திற் கடுமையாக முயற்சித்தனர். இதற்காக இவர்கள், ஒரு கட்டம் வரையில் மறைந்த சம்மந்தனுடன்கூட நெருக்கமாகப் பழகியதுமுண்டு. அவருடைய மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தம்மைப் பகிர்ந்ததுண்டு. ஆனால், என்னதான் நெருக்கம் காட்டினாலும் எப்படி அறிவுரை சொன்னாலும் எதற்கும் மசியாத சம்மந்தனுடைய நிலைப்பாட்டினால் இறுதியில் கசப்படைந்தனர். 

அந்தக் காய்ச்சலில் சிறிது காலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சம்மந்தனையும் வழிக்குக் கொண்டு வருவதற்காக – பழிதீர்ப்பதற்காக  தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கினர். இரண்டாண்டுகளில் பேரவை சத்தமில்லாமற் படுத்து விட்டது. பிறகு, கஜேந்திரகுமார் – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு சமரசத்துக்கு முயற்சித்தனர். ஒரு எல்லைக்கு அப்பால் இவர்களை உள்ளே நுழைவதற்கும் தலையீடுகளைச் செய்வதற்கும் கஜேந்திரகுமார் அனுமதிக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரனைச் சாரத் தொடங்கினார். விக்னேஸ்வரனும் இவர்களுடைய கட்டுக்குள் நிற்கும் ஆளாகத் தெரியவில்லை என்றவுடன் தொடங்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையானது  தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பேரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து (தமிழரசுக் கட்சியிலிருந்து) பிரிந்து சென்ற ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது. ஏற்கனவே இந்தக் கட்சிகள் பொதுச்சபையினரின் கட்டுப்பாட்டுக்குள் பாதிக்குமேல் வந்து விட்டனர். வரும்நாட்கள் இதை மேலும் நிரூபிக்கும். ஏனென்றால், சம்மந்தன், சுமந்திரன்போலச் சுயாதீனமாகச் சிந்திக்கக் கூடிய, தலைமைத்துப் பண்புடைய  ஆளுமைகளாக குறித்த கட்சியினர் இல்லை. என்பதால் பொதுச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் நிற்பது தவிர்க்க முடியாமற்போகும். 

3.      “நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய இரண்டு (ரணில் – அரியநேத்திரன்) சுயேட்சை வேட்பாளர்கள்” என்பது. இதைப்படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் என்பது சரியானதே. ஆனால், இருவரையும் சமனிலைப்படுத்திப் பார்ப்பது தவறு. அநேகமாக வடக்குக் கிழக்கில் அரியநேத்திரனை விட ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவும் கூடும். அப்படியென்றால் நிலைமை? ரணில் தேர்தலில் தோற்றுப்போனால்? அதற்குப் பிறகு நாட்டின் தலைவிதி? சரி, அரியநேத்திரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால், அதற்குப் பிறகு என்ன அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாம் நடக்கும்? அதைத் திட்டவட்டமாக பொதுச்சபையினரோ, பொதுக்கட்டமைப்பினரோ, அரியநேத்திரனை ஆதரிப்போரோ சொல்வார்களா? 

இந்த மாதிரி மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளோடு தமிழ்ச்சனங்களை உச்சிக் கொப்பில் ஏற்றிய கதைகள் பலவுண்டு. ஒவ்வொரு தடவையும் கொப்பு முறிந்து விழுந்து இடுப்பு உடைந்ததே மிச்சம்.

4.      “தமிழ் மக்கள் தாங்கள் யாரென்பதைக் காட்டுவார்கள்” என்பது. நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் அப்படித்தான் ஆக்கப்பட்டுள்ளனர். இல்லையென்றால் தங்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத, மக்களிடத்திலும் சூழலிலும் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத, எந்த நெருக்கடியையும் தீர்க்காதவர்களையெல்லாம் இன்னும் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து கொண்டிருப்பார்களா? அடுத்தது, தமிழ் மக்களிடத்தில் புதிதாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தெடுப்போரை விட, பழைய பாதையில் பயணிப்போரையே அவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கிறது. என்பதால் இனரீதியாக அடையாளப்படுத்தப்படும் எந்த விடயமும் அவர்களிடத்தில் சட்டெனப் பற்றி எரியும். தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது அப்படிப் பற்றி எரியக் கூடிய ஒரு சங்கதி. ஒரு பொருளே! ஆகவே தமிழ் மக்கள் அவரை ஆதரித்தோ கொண்டாடியோ தீருவர். அதன் விளைவுகள் எப்படியென்று பார்க்கவே மாட்டார்கள். காலம் கடந்த பிறகு வரும் ஞானத்தினால் பிறகுதான் கவலைப்படுவார்கள். ஆகவே வழமையைப்போலத் தாம் முன்னுணரக் கூடியவர்களில்லை என்பதைக் காட்டுவர். 

5.      “தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்” என்றால், யாருக்கு வழிகாட்டுவார்கள்? எதற்கு வழிகாட்டுவார்கள்? அந்த வழி எத்தகையதாக இருக்கும்? அது எங்கே செல்லதற்கானதாக இருக்கும்? இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுவார்களா? அப்படியென்றால் அது எத்தகைய வழி? அந்த வழியை சர்வதேச சமூகமும் இந்தியாவும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்களா? மனோ கணேசனே வெளிப்படையாகச் சொல்லி விட்டார், “உந்த விளையாட்டை எல்லாம் வடக்குக் கிழக்கிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். தெற்கிற்கோ கொழும்புக்கோ மலையகத்துக்கோ கொண்டு வரவேண்டாம். அது வேறு உலகம் என்று. ஆகவே தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள் என்று சொல்லித் தாம் தப்புவதற்கு பொதுச்சபையினரும் பொதுக்கட்டமைப்பிலுள்ள கட்சியினரும் முயற்சிக்கலாம். அது வரலாற்று நகைப்புக்குரிய ஒன்றேயாகும்.

6.      “1989 இல் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றியைப்போல இப்போதைய தமிழ்ப்பொது வேட்பாளரும் வாக்குகளை அள்ளுவார்!” என்பது. இவ்வாறு இப்பொழுது சொல்வோர், அன்று ஈரோஸ் அமைப்பையும் அதனுடைய அன்றைய நிலைப்பாட்டினையும் அது தேர்தலில் நின்றதையும் கடுமையாக மறுதலித்தோரே. சரி, அந்தத் தவறைப் பின்னாளில் உணர்ந்தவர்கள் என்றாலும் அந்தச் சூழலையும் அந்த அமைப்பையும் இன்றைய நிலையோடு தொடர்புறுத்திப் பார்ப்பது தவறு. அப்படிப் பார்க்கவே முடியாது. காரணம், அது போராட்டம் நடைபெற்ற காலம். போட்டியிட்டவர்களும் போராளிகள். என்பதால்தான் மக்களும் அந்த நெருக்கடிச் சூழலிலும் அன்றைய சுயேட்சைகளுக்கு வாக்களித்தனர். மக்களுடைய அந்த நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அடுத்து வந்த பொருத்தமற்ற சூழலில் தங்களுடைய பதவிகளைத் துறந்தனர் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள். இவர்களோ (அதாவது பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சியினரோ) நெருக்கடிகளை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல, இறுதிப்போர்க்காலச் சூழலில் தம்முடைய பதவியை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருந்தவர்கள். தவிர, இன்றைய சூழலானது பல தெரிவுக்குரியது மட்டுமல்ல, யார் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடியதுமல்ல. மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்தும் தரப்புகள் ஒன்றும் மக்களிடம் மாபெரும் செல்வாக்கைப் பெற்றவையும் அல்ல. அதில் உள்ள ஒரு தலைவராவது அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரு நிலைக்குக்  கொண்டு வரக்கூடிய ஒரு அறிவிப்பையேனும் செய்து காட்டட்டும் பார்ப்போம். ஆகவே இந்தக் கருத்தை ஏற்கவே முடியாது. ஆனால், சிங்கள இனவாதத்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் இயல்பாக வாக்களிக்க முற்படலாம். 

என்பதால் மேற்படி வார்த்தைகளைப் படிக்கும்போது பாரதியின் பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன.

“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த 

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்…” 

உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைத்தான். 

சொந்த மக்களையே வைத்துச் சூதாடுவதைக் கண்டு எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

இதற்கு இவர்களுடைய மேலுமொரு உதாரணத்தைச் சொல்லுவது பொருத்தமாகும்.

“2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு (1939 இல்) யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது.தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது” என்று ஒரு ஒப்புவமை சொல்லப்படுகிறது. போதாதென்று “அந்த பகிஷ்கரிப்பின் (2005 இல் மேற்கொள்ளப்பட்ட ) விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்தப் பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்” என்று வேறு சொல்லப்படுகிறது. 

ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்?

இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல்.

 

https://arangamnews.com/?p=11156

 

தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்

2 months 3 weeks ago

தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்

41YXHNKXUNL-cc.jpg

“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக இருந்தவர். 1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது. காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது.

அப்புறக்கணிப்பை  தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை.

யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால், அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும்.

அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும். ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது.

தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார். தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார்.

அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது. தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது.

அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்.

இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும்.

கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும். தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும். அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார்.

IMG-20240820-WA0056-c.jpg

அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள்.

அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள். தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம். ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை.

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய, அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள். அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை.

ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிறகெப்பொழுதும் தரப்போவதில்லை.

எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம். ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பகிஸ்கரிப்பும் உண்டு. அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார்.

கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார். இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும். தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும். எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான். ஒன்று, தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது. இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது.
 

https://www.nillanthan.com/6872/

புவிசார் அரசியல் தாக்கத்தில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்; நேரடி மதிப்பீடுகளில் அமெரிக்கா, இந்தியா, சீனா!

2 months 3 weeks ago
25 AUG, 2024 | 01:00 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்) 

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்தவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதி தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் குறிப்பிட்டது.   

உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப்பிடும் வகையில் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும்  முக்கிய நாடுகள் பல ஆர்வத்துடன் கொழும்பில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பிரதான கட்சிகளுமே கடந்த மே தினத்தை எதிர்கால தேர்தலின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தியிருந்தன. 

இந்த கூட்டங்களின் பிரதிபலிப்புகள் முக்கிய நாடுகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கும் சர்வதேச நாடுகள் உத்தேச ஜனாதிபதி தேர்தலின் அரசியல் முன்னேற்றங்களை அவதானிப்பது பொதுவான விடயமாகும். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரித்தானியா உட்பட பிற மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதி தேர்தலின் சாத்தியமான மக்கள் ஆதரவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன. 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சர் சன் ஹையானின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது நேரடியாக மக்கள் மத்தியில் சென்று கருத்து கணிப்புகளை மேற்கொண்டிருந்தார். அது மாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட அனைத்து  பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் உண்மையான நிலைப்பாட்டை அறியும் சீனாவின் ஆர்வமே இதன் மூலம் வெளிப்படுகின்றது. 

இதே போன்று ஜனாதிபதித் தேர்தலின் சாத்தியமான விளைவுகளை முன்கூட்டியே மதிப்பிடுவதில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மீதான ஈடுபாடு பொருளாதார முதலீடுகள் முதல் புவிசார் அரசியல் செல்வாக்கு வரை அந்தந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் வெளிப்பாடாகவே உள்ளது. 

இலங்கை தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் எப்போதும் இருந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு எதிரான நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மறைமுகமான சாடல்களும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்திகளுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இலங்கையை பொறுத்த வரையில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தேசிய அளவில் மாத்திரமன்றி பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்து ஈராண்டுகளை கடந்து இடம்பெறும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலானது, முக்கிய நாடுகளின் புவிசார் அரசியல் கரிசனைகளும் ஈடுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. பூகோள ரீதியில் இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவமே உலக நாடுகளின் தலையீடுகளுக்கு காரணமாகின்றன. குறிப்பாக அண்மைய காலமாக கொழும்பு வரும் பெரும்பாலான உலக நாடுகளின் போர் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு செல்லாது திரும்புவதில்லை. இதற்கு அந்த தறைமுகத்தில் உள்ள இயற்கையான சிறப்புகளே காரணமாகின்றது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் இலங்கை குறித்து பிராந்திய போட்டியாளர்களுக்கு காரணங்களாகியுள்ளன. 

எனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் கடனை மீள்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலங்கையின் வளங்கள் ஊடாக பயனடைதல்  போன்ற விடயங்களில் கூடுதல் அவதானம் செலுத்துகின்றன. இலங்கையின் பிரதான கடன் வழங்குனரான சீனா தனது கடன் தொகையை மீளப்பெற கூடிய சாதகமான சூழல் நாட்டில் உருவாவதை விரும்பும் அதே வேளை, இந்தியாவும் இலங்கையில் தனது நலன்களின் ஆர்வம் செலுத்தி இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் நில இணைப்புகளில் இலங்கையுடன் முனைப்புடன் செயல்படுகின்றது. இது சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்திற்கு நிகரான இந்திய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191921

பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன்.

2 months 3 weeks ago
gender-equality.jpg?resize=750,375 பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன்.

அண்மையில், தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள்.

அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகளில் மேல்நிலைப் பொறுப்புகளில் பெண்கள் இல்லை.

இவை விட முக்கியமாக அண்மையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த மொத்தம் 39 பேர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதே சமயம் சிவில் சமூகங்கள்,செயற்பாட்டாளர்கள்,மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய மக்கள் அமைப்புக்குள் ஒப்பிட்டுளவில் பெண்களின் தொகை அதிகமாக உள்ளது.அந்த அமைப்பு ஒப்பிட்டுளவில் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கின்றது.ஆனால் கட்சி அரசியல்வாதிகளின் மத்தியில் பால் சமநிலை மிக குறைவாகவே காணப்படுகின்றது.

வெளிநாட்டுத் தூதரகங்களின் சந்திப்புகளில் அல்லது வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போதெல்லாம் ஆகக்கூடியபட்சம் பால் சமநிலையைப் பேண முயற்சிக்கிறார்கள்.

தமிழ் அரசியலில் பெண்களின் வகிபாகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனலாம். உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. அந்தச் சட்டம் காரணமாகவே பெண்களை அதிகமாக உள்வாங்க வேண்டிய ஒரு தேவை கட்சிகளுக்கு ஏற்பட்டது. ஆனால் எத்தனை கட்சிகள் பொருத்தமான பெண் ஆளுமைகளை உள்வாங்கியுள்ளன? என்ற கேள்வி உண்டு. பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பு மிக்கவர்கள் குறைவு என்று யாராவது சொல்வார்களாக இருந்தால், திருப்பிக் கேட்கலாம் ஆண்கள் மத்தியில் மட்டும் அவ்வாறு தலைமை பண்புள்ளவர்கள் அதிகமாக உண்டா? அப்படி இருந்திருந்தால் ஏன் கட்சிகள் இப்படிச் சிதறிக் காணப்படுகின்றன? ஏன் கட்சிகள் நீதிமன்றம் ஏறுகின்றன?

ஆனால் 2009க்கு முன்பு ஆயுதப் போராட்டத்தில் கணிசமான அளவுக்கு பெண் போராளிகள் காணப்பட்டார்கள்.யுத்த களங்களில் பெண்கள் வீரதீரச் செயல்களைச் செய்தார்கள். பெருமளவுக்கு ஆண் மையச் சமூகமாகிய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அவ்வாறு துணிந்து முன்வந்தமையும் கற்பனை செய்ய முடியாத வீரத்தை வெளிக்காட்டியமையும் தியாகங்களை செய்தமையும் தமிழ் நவீன வரலாற்றில் ஒரு பெருந்திரூப்பம் என்றே கூறலாம். ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை தலைகீழாகிவிட்டது.

புனர்வாழ்வு பெற்ற ஒரு பெண் போராளி ஒரு முறை ஒரு கதிரையை வைத்து அதில் ஏறி,ஓரமாக நின்ற பப்பா மரத்தில் ஒரு பழத்தைப் பிடுங்க முயற்சித்திருக்கிறார். அவருடைய தாயார் அவரை எச்சரித்திருக்கிறார். “அயலில் இருப்பவர்கள் கண்டால் என்ன நினைப்பார்கள் இறங்கு, அதில் ஏறி நிக்காதே” என்று. அந்தப் பெண் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார் “இயக்கத்தில் இருந்த காலத்தில் தென்னை மரம் ஏறிதேங்காய் பிடுங்கியவர்கள் நாங்கள். ஆனால் கதிரை வைத்து மதிலில் ஏறி பப்பாப் பழம் பிடுங்க வேண்டாம் என்று எனது தாயார் கூறுகிறார்” என்று.

அவருடைய கவலை நியாயமானது. ஆனால் எந்தக் குடும்பங்களில் இருந்து பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்கு போனார்களோ,அதே குடும்பங்களில் பால் சமத்துவம் தொடர்பான விழிப்பு உருவாக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி இங்கு முக்கியம். குடும்ப மட்டத்திலும் அந்த விழிப்பு ஏற்படவில்லை. சமூகத்தின் ஏனைய எல்லா நிறுவன மட்டங்களிலும் அது பெருமளவுக்கு ஏற்படவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலக அரசு சார்பற்ற நிறுவனங்களில் பால் சமத்துவத்தைப் பேண வேண்டிய ஒரு நிலைமை உண்டு. ஏனென்றால் அவை அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்டு பால் சமநிலையை பேண வேண்டும். ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அந்த நிலைமை இல்லை.

பள்ளிக்கூடங்களில் பால் சமத்துவம் முழுமையாகப் பேணப்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிள்ளைகளை உருவாக்கும் பள்ளிக்கூடங்களில் பேணப்படாத பால் சமத்துவத்தை சமூகத்தில் ஏனைய மட்டங்களில் எப்படி எதிர்பார்ப்பது? சில முன்னணிப் பாடசாலைகளில் பெண்கள் முன்னிலையில் மிடுக்காகக் காணப்படுகிறார்கள்.ஆனால் அது எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக ஆசிரியைகள் பண்பாட்டு ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு வற்புறுத்துகிறது.அதற்கு கீழ் உள்ள திணைக்களங்கள் வற்புறுத்துகின்றன.பாடசாலை வேளை அல்லாத வேளைகளில் பிள்ளைகளுக்கு ஏதாவது பயிற்சியைக் கொடுப்பதற்காக பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியைகள் சேலை அணிந்து வருமாறு நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.
சேலையும் பிளவுஸும் ஒரு பண்பாட்டு உடுப்பா என்ற கேள்வி தனியாக ஆராயப்பட வேண்டும். ஆனால் கல்வித் திணைக்களம் பெண்களை பண்பாட்டு உடுப்போடு வருமாறு நிர்பந்திக்கின்றது.அதே சமயம் ஆண்கள் மேலைத்தே உடுப்புகளான சேட்,லோங்ஸ் என்பவற்றோடு வருகிறார்கள். அதை யாரும் பிரச்சினையாகப் பார்ப்பதில்லை.அப்படியென்றால் பெண்கள் மட்டுமா கலாச்சார காவிகள் ?இந்த விடயத்தில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.

இவ்வாறாக பிள்ளைகளின் ஆளுமையை உருவாக்கும் கல்விப் புலத்திலேயே பால் சமத்துவம் பேணப்படாத ஒரு நிலை. இங்கிருந்து தொடங்குகிறது எல்லாம்.. பிள்ளை படிக்கும் பொழுதே பால் சமத்துவத்தை கற்றுக் கொள்ள தவறுகின்றது. அது பின்னர் வளர்ந்து ஆளாகும் பொழுது தான் கற்றுக் கொண்டதை பிரயோகிக்கின்றது. குறிப்பாக அரசியலில் அதுவும் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான அரசியலில் பால் சமத்துவத்தைப் பேணுவதில், பால் சமநிலையை பேணுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

அதோடு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் எதிர்கொண்ட பாலியல் சார்ந்த இன்னல்கள் காரணமாகவும் பெண்கள் பெருமளவுக்கு பின்வாங்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.அது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் நேரடி விளைவு என்னலாம்.

எதுவாயினும், கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில் பெண் ஆளுமைகளை அரிதிலும் அரிதாகவே காண முடிகின்றது. அண்மையில் தமிழ் பொது வேட்பாளராகிய அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அது ஒரு சிநேக பூர்வமான சந்திப்பு. அதில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கேட்டார்… “இங்குள்ள ஊடகவியலாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவருமில்லை. உங்களுடைய பொதுக் கட்டமைப்பில் எத்தனை பேர் பெண்கள் ? ஒருவரும் இல்லை. உங்கள் மேடைகளில் ஏறும் பேச்சாளர்களில் எத்தனை பேர் பெண்கள்? ஒருவரும் இல்லை.” என்று.

அது நியாயமான கேள்வி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய மிதவாத அரசியலில் மங்கையற்கரசி போன்ற பெண் ஆளுமைகள் இருந்தார்கள். அவர்கள் மீதும் பெண்கள் என்ற காரணத்திற்காகவே அவதூறுகள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் பல பெண் பேச்சாளர்களை உற்பத்தி செய்தது. சமாதானப் பேச்சுவார்த்தை மேசைகளிலும் பெண்கள் காணப்பட்டார்கள். வெளிநாட்டு தூதுக் குழுக்களிலும் பெண்கள் காணப்பட்டார்கள்.ஆனால் ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடு பெண் ஆளுமைகளை அரசியலில் அரிதாகவே காண முடிகிறது.வடக்கில்,அனந்தி,வாசுகி கிழக்கில் ரஞ்சனி…போன்ற சிலரைத் தவிர.

இந்த விடயத்தில் உள்ளூராட்சி சபைகளில் 25% பெண்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. அதை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்தையும் அரசியலையும் அதை நோக்கிப் பண்படுத்த வேண்டும். எல்லாக் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் பால் சமநிலையை பேண வேண்டும் என்பதனை ஒரு விதியாக,பண்பாடாக பின்பற்ற வேண்டும். ஆளுமை மிக்க பெண்கள் இல்லை என்பதனை ஒரு சாட்டாகக் கூறாமல் பெண்களை ஆளுமை மிக்கவர்களாக எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும். ஆண் தலைவர்கள் மட்டும் என்ன ஆளுமையாகாவா இருக்கிறார்கள்? எனவே தலைமைத்துவ பண்பை வளர்த்தெடுப்பது என்ற விடயத்தில் பால் சமநிலையை பேணினால் அரசியல் கட்சிகளின் மத்தியில் அதனை ஒரு ஒழுக்கமாக உருவாக்கலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பார்த்து ஏன் உங்கள் மத்தியில் பெண்கள் இல்லை என்று கேட்கும் ஒரு நிலை தொடரக்கூடாது.

https://athavannews.com/2024/1397065

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்றுள்ள அதி முக்கிய செய்தி .

2 months 3 weeks ago

 

கோத்தபையனை விட கூடுதலான பிக்குகள் அனுராவுக்காக சேர்ந்துள்ளனர்.

கோத்தபையன் மாதிரி தனி சிங்கள வாக்காளரின்  வாக்குகளில் வெல்லாரா?

ஒருவேளை அனுரா வென்றால் சிங்கள இடங்களில் கலவரங்கள் நடக்கலாம் என்று ஆய்வாளர் கூறுகிறார்.

தமிழ் மக்கள் ஒருமித்த சக்தியானால் இனியும் எம்மை ஏமாற்ற முடியாது; அரியம் நேர்காணல்

2 months 4 weeks ago
ariyam-copy-300x233.jpg

 

தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் தமிழ் மக்கள்  சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக  வரலாற்று பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் சிங்கள தலைவர்களிடம் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக  பொது வேட்பாளராக என்னை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். இணைந்த வட – கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வை வழங்கியே ஆக வேண்டுமென்ற செய்தியை கொடுக்கின்ற அதேவேளை, இனியும் சிங்கள தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ந.லெப்ரின்ராஜ்

கேள்வி: தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து பொதுக் கட்டமைப்பினூடாக உங்களை பொது வேட்பாளராக வடக்கு - கிழக்கில் நிறுத்தியிருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த கருத்திட்டம் ஏற்பட்டதன் பின்னணி என்ன? இதனூடாக நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

பதில்:கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஐந்து ஜனாதிபதிகளுடன் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகள் சம்பந்தமாகவும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழர்களை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு செயற்பட்டார்கள். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாக இருக்கட்டும் பொது தேர்தலாக இருக்கட்டும் இந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணையை மதித்து தமிழ் மக்கள் தென்னிலங்கையின் தலைவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்றுக்கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக மதிக்காத நிலைமையே தொடர்ந்தது.

ஏற்கனேவே அரசியலமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு எந்த ஆட்சியாளர்களும் தயாராயிருக்கவில்லை. பேசி பேசி காலத்தை இழுத்தடித்தார்களே தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தீர்வை கொடுப்பதற்கு கூட அவர்கள் முன்வரவில்லை. 2015 இல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதிலும் கூட, குறிப்பாக அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்ட போதிலும் கூட தமிழர்களுக்கு ஒரு தீர்வை தர அவர்கள் முன்வந்திருக்கவில்லை.

எனவே தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் நாங்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக  வரலாற்று பாடத்தை நாங்கள் (தமிழர்கள்)கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள்.

இணைந்த வட-கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வை வழங்கியே ஆக வேண்டுமென்ற செய்தியை கொடுக்கின்ற அதேவேளை, இனியும் சிங்கள தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.
 
கேள்வி: மிகப்பெரியதொரு பொறுப்பு உங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 2009 இற்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையின் தலைவர்களுக்கே வாக்களித்து வந்த நிலையில், இந்த 15 வருடங்களில் புதியதொரு தெரிவாக இந்த பொது வேட்பாளர் விடயம் தற்சமயம் உதயமாகியிருக்கிறது. இந்நிலையில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் நீங்கள் இதனை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்?

பதில்: தமிழ் பொது கட்டமைப்பு மிகப்பாரியதொரு பொறுப்பை கையிலெடுத்திருக்கிறார்கள். அதில் என்னை ஒரு அடையாளமாக-குறியீடாக காட்டியிருக்கிறார்கள். ஆகவே இந்த தேர்தலில் ஏற்படவிருக்கின்ற முடிவுகள் அனைத்தும் எனக்கு மாத்திரம் உரியதல்ல, அது தமிழர் தேசம் முழுவதற்குமானது.

 
கேள்வி: உங்களுடைய தெரிவை கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

பதில்: கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியானவர்கள். தந்தை செல்வநாயகத்தின் காலம் தொடக்கம் அதேபோல், ஆயுதப்போராட்ட காலத்திலும் தற்பொழுதும் அவர்கள் (கிழக்கு மாகாண மக்கள்) தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பிளவுக்கு பின்னர் கிழக்கு மாகாண மக்களின் இந்த உறுதித்தன்மையை குலைப்பதற்காக பல சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதேசவாதத்தை முதலீடாக கொண்டு அரசியல் செய்யும் ஒரு மோசமான கலாசாரம் கிழக்கு மாகாணத்தில் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதனூடாக பல அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்துகொண்டு தங்களுடைய சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக மக்கள் எந்த நன்மையையும் பெற்றதாக இல்லை. பல வருடங்களாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையை மீட்பதற்காக அப்பிரதேச மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், கல்முனை பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாது அந்த போராட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இவ்விரு விவகாரங்களும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள். இவற்றைக் கூட தீர்த்துவைக்க முடியாது அரசாங்கத்துடன் தொங்கி கொண்டு இருக்கும் தலைவர்கள் தங்களுடைய அரசியல் பிழைப்பை நடத்துவதற்கு தேர்ந்தெடுத்த ஆயுதமே பிரதேசவாத அரசியல். இது தமிழினத்துக்கு ஆரோக்கியமான அரசியல் அல்ல. வடக்கு-கிழக்கு மக்கள் இவ்வாறான பிடிகளுக்குள் அகப்பட்டுவிடக்கூடாது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக சமஷ்டி தீர்வையே வேண்டி நிற்கிறார்கள். 13 ஆவது திருத்தம் என்பது ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரு விடயம். அதனை ஒரு இரவில் சர்வாதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியால் அமுல்படுத்த முடியும். ஆனால் 13 தான் தமிழ் மக்களுடைய தீர்வு என்றும் அதனை ஒரு பூதாகாரமான விடயமாக சிங்கள மக்களுக்கு காட்டி அதனை பேசி பேசியே அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களிடத்திலிருந்து தமிழ் மக்கள் எதனை பெற முடியும் என சிங்கள தரப்புகளின் பின்னால் செல்லும் தமிழ் தலைவர்கள் சிந்திக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகவே சிங்கள தலைவர்களின் இவ்வாறான பேச்சுக்களை நம்புவதற்கும் அவர்களுடைய அருவருடிகளாக இயங்கும் தமிழ் தலைவர்களின் பேச்சுக்களை, வாக்குறுதிகளை நம்புவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்களல்ல.

எனவே இனியும் தமிழ் மக்களை முட்டாள்களாக்க முடியாது என்பதை எதிர்வரும் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அந்த கடமையை ஒட்டுமொத்தமாக உணர்த்துவார்கள். அந்த கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். இன்று புதியதொரு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்கவிருக்கிறார்கள். அதாவது எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போராட்டத்தை செய்யவிருக்கிறார். அந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் வென்றே ஆகவேண்டுமென்ற ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.

இந்த தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்பவர் வென்றால் ஜனாதிபதி கதிரையில் அமரப்போவதில்லை. ஆனால், இந்த வெற்றி தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை கூறும் செய்தியாக இருக்கப்போகிறது. அதேபோல், அவர்கள் (தமிழர்கள்)தங்களுடைய உரிமை, அரசியல் தீர்வில் இன்றும் ஒருமித்த கொள்கையுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு ஆணித்தரமான செய்தியை கூறவிருக்கிறது. அதனூடாக எங்களுடைய (தமிழர்கள்)நகர்வுகளுக்கு சாதகமான சமிக்ஞைகள் உருவாகும்-உருவாக்கப்படும்.

2009 இற்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் சிதறுண்டு பரவிக்கிடக்கின்றன. ஒரு தலைமை என்ற நிலைமை மாறி பல தலைமைகள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது-உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் உருவாவதற்கான ஒற்றுமை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக ஏற்படும். அதேபோல் தமிழ் தேசிய அரசியலை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக தமிழ் தேசத்தின் பல தலைவிதிகள் மாற்றப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பொதுக்கட்டமைப்பின் தீர்மானத்துக்கு அமைய அணிதிரள்வது  அவசியமாகும்.

யுத்தம் நிறைவடைந்து  15 வருடங்கள் சென்றாலும், யுத்தம் தான் மௌனிக்கப்பட்டிருக்கிறது; ஆயுத போராட்டம் தான் மௌனிக்கப்பட்டிருக்கிறதே தவிர, தமிழர்களுடைய விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்படவில்லை, உரிமை போராட்டம் மௌனிக்கப்படவில்லை, தீர்வுக்கான போராட்டம் மௌனிக்கப்படவில்லை என்ற செய்தியை சர்வதேசத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மீண்டும் ஒரு தடவை உறுதியாக சொல்வதற்கான ஒரு களமாக இந்த தேர்தலை வடக்கு-கிழக்கு மக்கள்  பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

கேள்வி; ‘தமிழ் பொது வேட்பாளர்’ விவகாரம் தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் (தமிழரசு கட்சி) இதுவரை எந்த இறுதி முடிவையும் அறிவிக்காத ஒரு நிலையில்தான் தாங்கள் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன?

பதில்: தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவுகள் என்ற சூழல் ஏற்பட்டது. அண்மையில் நடந்த தலைமைக்கான போட்டியின் பின்னரே தலைமைக்கான தெரிவு தொடர்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்தவொரு முடிவையும் மத்திய குழுவில் ஒற்றுமையாக எடுக்கமுடியாத நிலைமை தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. தன்னிச்சையாக கருத்துக்களை கூறுகின்ற விடயம், தன்னிச்சையாகா முடிவுகளை எடுத்துவிட்டு அது கட்சியின் முடிவு என்று வெளியில் கூறுவது என தனிமனித போக்கு தமிழரசு கட்சிக்குள் அண்மைக்காலமாக இருந்துவருகிறது.

உண்மையில் நான் தமிழரசுக்கட்சிக்குள் இருந்து கொண்டு பொது வேட்பாளராக வரவில்லை. நான் பொதுவேட்பாளராக வந்ததன் நோக்கம் என்னவென்றால், தந்தை செல்வாவின் கொள்கையின்பால் -தந்த செல்வா என்ன நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அவருடைய நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் பொது வேட்பாளராக களமிறங்கியதை பார்க்கிறேன். அதேபோல், இதனை தமிழரசு கட்சிக்கு கிடைத்த பெருமையாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழரசு கட்சிக்குள் இருந்துகொண்டு நான் பொதுவேட்பாளராக களமிறங்கியது தவறு என்று அந்த கட்சி சார்ந்த சிலர் விமர்சித்தாலும் நான் அவ்வாறு பார்க்கவில்லை. தமிழரசு கட்சி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இந்த பொது வேட்பாளர் விடயத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இந்த தெரிவுக்கு நான் விரும்பி சம்மதித்தேன்.

கேள்வி: கட்சிக்கு தெரிவிக்காமல் இந்த முடிவை தங்கள் எடுத்ததால்  உங்கள் மீது அதிருப்தி கொண்டிருக்கும் தமிழரசு கட்சியின் தரப்பு தங்களிடம் விளக்கம் கேட்டிருப்பதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

பதில்: கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவர்கள் கூட இன்னும் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்கிறார்கள். அதேபோல், கட்சியை பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கிறார்கள். நீதிமன்ற செயற்பாடுகள் நிறைவடையும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளக்கூடாது என  தடைபோடவேண்டுமென்று கட்சியின் மத்திய குழுவில் நாங்கள் தீர்மானித்திருக்கமுடியும். ஆனால், எவரும் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில் வழக்கு போட்டவர்கள் தான் கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்கள் கட்சியை மலினப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் அவ்வாறு செய்யவில்லை. தமிழ் தேசியத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் எடுத்திருக்கின்ற முடிவுக்காக என்னிடம் விளக்கம் கோருவது எந்த அடிப்படையில் என்பதை தமிழ் மக்கள் தான் சிந்திக்கவேண்டும். கட்சியை சிதைத்தவர்களிடத்தில் எந்த விளக்கமும் கோராமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு தமிழ் தேசியத்துக்காக களமிறங்கியிருக்கும் என்னிடத்தில் விளக்கம் கோருகிறார்கள் என்றால் அவர்களுடைய திட்டம், மனநிலை எப்படிப்பட்டது என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் (மக்கள்)தான் இதற்கு தக்க பதிலை வழங்கவேண்டும்.

தமிழரசு கட்சி இதுவரை பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றோ ஆதரிக்க கூடாது என்றோ முடிவெடுக்கவில்லை. அல்லது சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவேண்டுமென்று முடிவெடுக்கவில்லை. இப்படியிருக்கையில் ஏற்கனவே ஒரு முடிவை கட்சி எடுத்துவிட்டு அதனை அறிவித்த பின்னர் நான் இந்த முடிவை எடுத்திருந்தால் அது தவறு என்று நான் ஏற்றுக்கொள்வேன்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்கமுடியாத ஒரு சூழலில்தான் இதுவரை தமிழரசு கட்சி இருந்துவருகிறது. நான் என்னமோ சிங்கள தரப்புடன் இணைந்து போட்டியிடுவது போன்று என்னிடம் விளக்கம் கேட்பது மிகவும் வருத்தம் தரும் விடயமாக இருக்கிறது. தமிழ் மக்கள் தான் இது தொடர்பில் உணர்ந்துகொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் இருப்பவன் என்ற அடிப்படையில் விளக்கம் கூற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனை நான் செய்வேன். ஆனால் சிலர் செய்யும் பெரிய தவறுகளை பொருட்படுத்தாமலும் என்னை போன்ற தவறே செய்யாத ஒருவருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதும் தமிழரசு கட்சிக்கு ஆரோக்கியமான விடயமாக இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி: பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு பின்னால் ஒரு சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் சதித்திட்டம் இருப்பதாக சில தமிழ் தேசிய கட்சிகள் கூறிவருகின்றனவே. இது தொடர்பில் உங்களுடைய விளக்கம் என்ன?

பதில்: தேர்தல் காலங்களில் வழமையாக வருகின்ற விமர்சனங்களாகவே இதனையும் நான் பார்க்கின்றேன். எதிர்வரும் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேர் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே தங்களுடைய வெற்றி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக இம்முறை தேர்தலில் தான் ஒரு கணிப்பை அல்லது இவர்களுக்கிடையில் தான் போட்டி என்ற முடிவுக்கு வரமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் கூறுவதை போன்று எந்த சிங்கள வேட்பாளரை வெல்ல வைக்க முடியும்? சிங்கள வேட்ப்பாளர்களுக்கிடையிலேயே ஒரு தெளிவான முடிவு இல்லாத நிலையில் நாங்கள் யாரை வெல்லவைப்பதற்கு இந்த பொது வேட் பாளர் விவகாரத்தை கையாள்கிறோம் என்பதை அவர்களே கூறவேண்டும்.

பொதுக்கட்டமைப்புக்கு எதிராக – தமிழ் தேசிய கொள்கையை மழுங்கடிப்பதற்காக – இந்த நோக்கத்தை குழப்பி திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு விமர்சனமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். என்னை  பொருத்தமட்டில் நான் வேட்பாளராக களமிறங்கினாலும் நான் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்கும் அதனை பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கும் பொது கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்குமான ஒரு அடையாளமாகவே நான் இருக்கிறேன். என்னுடைய பணி என்னவென்றால் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியாகவிருக்கின்ற மக்களின் ஆணையின் பிரதிபலிப்பை பொதுக்கட்டமைப்பிடம் கொடுப்பது மாத்திரமே. அதன்பின்னரான நடவடிக்கைகளை பொதுக்கட்டமைப்பு தான் தீர்மானிக்கும். நான் எடுத்துக்கொண்ட பணி என்பது செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மாத்திரமே.

கேள்வி: பொதுக்கட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தென்னிலங்கையின் வேட்பாளர்கள் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: பொதுக்கட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அழைக்கும்போது அவர்களை சென்று சந்திப்பது என்பது வளமையானதொன்று. அதனை பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை.
 
பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக உழைத்தவர்களும் இதில் இணைந்தவர்களும் ஒரு கொள்கையின் பால் இணைந்திருக்கிறார்கள். ஆகவே அந்த கொள்கைக்கு எதிராக எவரும் செயற்படமாட்டார்கள் என்பதில் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆகவே எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேசத்துக்கு மாத்திரம் தமிழ் மக்கள் ஒரு செய்தியை கூறப்போவதில்லை. பதிலாக பிரிந்து நிற்கின்ற தமிழ் தேசிய கட்சிகளுக்கும் ஆணித்தரமான செய்தியை கொடுக்கும்.
 
கேள்வி: தமிழரசு கட்சி இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மிகப்பெரும் பழமையான ஒரு கட்சி முடிவெடுப்பதில் தடுமாறிவருவது எவ்வாறான பாதிப்பை தேர்தலில்  ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழ் தேசிய அரசியலில் தாய் கட்சியாக இருப்பது தமிழரசு கட்சி. அந்த அக்கட்சி முடிவெடுக்காமல் திண்டாடுகிறதென்றால் அது கவலைக்குரிய விடயமாகும். விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னொருவர் கூறுகிறார் தேர்தலுக்கு முதல் நாள் முடிவை அறிவித்தாலும் பரவாயில்லை என்று. ஆகவே, இவ்வாறான தெளிவற்ற கதைகள்-பேச்சுக்கள் மக்களை குழப்புகின்ற மக்களை முட்டாள்களாக்குகின்ற கருத்தாகவே நான் பார்க்கிறேன்.

பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சி இந்த நிலைமைக்கு வந்திருப்பது பெரும் கவலைக்குரியது.

கேள்வி: பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

பதில்: விடுதலை போராட்டத்தை எடுத்துக்கொண்டால் புலம்பெயர்ந்த தமிழர்களும் அதில் பங்கெடுத்தவர்கள். அவர்கள் அச்ச சூழ்நிலைகளால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அதேபோல், ஈழத்திலும் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த பலர் இருக்கிறார்கள். அவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து இருக்கின்ற அதேவேளை, இன்றும் தங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் எங்களுக்கான உரிமை இதுவரை கிடைக்கவில்லை. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்கள் இழந்திருக்கிறார்கள். இத்தனை உயிர்களை காவுகொடுத்தும் எங்களுக்கான உரிமை, தீர்வு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

ஆகவே, எனவே எமக்கான தீர்வு என்பது சர்வதேசத்தின் ஊடாகவே அமையும் என்ற ஒரு முடிவுக்கு தமிழ் மக்கள் வந்திருக்கிறார்கள். எனவே காத்திரமான இராஜதந்திர முறையில் தான் எங்களுடைய தீர்வை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே அந்த இராஜதந்திர ரீதியான பங்களிப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களும் அதில் பங்காளர்களாக இருக்கவேண்டும். இதுவரை காலமும் எவ்வாறு தமிழர்களுடைய விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து பங்களித்தார்களோ அதே பங்களிப்பு இனியும் தொடர வேண்டும்.

ஆகவே ஈழத்தமிழர்கள் தங்களுடைய உரிமைகள் - தீர்வுத்திட்டத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா அல்லது சிங்கள ஆட்சியாளர்கள் பக்கம் சோரம் போய் விட்டார்களா என்ற செய்தியை இந்த தேர்தலின் ஊடாக காட்டவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய உறுதியான பயணத்தை மீண்டும் நிரூபித்துக்கொள்வதற்கும் இன்னும் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமையிலும் தீர்விலும் திடமாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பல குரலில் ஒரு செய்தியை கூறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன், புலம்பெயர்ந்த உறவுகளும் இந்த பயணத்தில் தங்களுடைய காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்கிறேன்.

https://thinakkural.lk/article/308029

ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

2 months 4 weeks ago
இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நிலவும் கடும் போட்டியால் இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காதுபோகும் நிலைமையே காணப்படுகின்றது.

இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளரராக அனுரகுமார திஸாநாயக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷவும் போட்டியிடுவதுடன், இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, வர்த்தகர் திலித் ஜயவீர ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேந்திரனும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனால் இம்முறை தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகலாம் என்பதுடன், இதனால் தேர்தலில் 2 ஆம் , 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

a-300x225.jpg

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போது 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை இது வரையில் உருவாகியிருக்கவில்லை. ஆனபோதும் இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முதலில் வாக்களிக்கும் முறை தொடர்பாக அவதானம் செலுத்துவோமாக இருந்தால், தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச்சீட்டில் அடையாளமிட முடியும்.

குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.

இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறைமை இவ்வாறாக இருக்கும் நிலையில், சிலருக்கு விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை தொடர்பாக குழப்பங்கள் காணப்படுகின்றன. ஏன் இந்த முறைமை காணப்படுகின்றது. அதனால் என்ன பிரயோசனம்? மற்றைய தேர்தல்களின் போது இப்படி இலக்கமிட்டு வாக்களிப்பதில்லையே என்ற கேள்விகள் அவர்களிடையே எழுகின்றன.

அதாவது ஜனாதிபதித் தேர்தல் என்பது முழு நாட்டிற்கும் ஒரு நபரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவே காணப்படுகின்றது. இதனால் அவர் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி அந்த நபர் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் தேர்தலின் போது அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது குறைந்தது 50 வீத வாக்குடன் மேலதிகமாக ஒரு வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்தை விடவும் அதிகமான வாக்குகள் கிடைக்காது போகும் பட்சத்தில் மீண்டும் தேர்தலை நடத்தாது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த விருப்பத் தெரிவு முறைமை பின்பற்றப்படுகின்றது.

குறிப்பாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வரையில் போட்டியிடும் நிலையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது அடுத்தக்கட்ட்டமாக  விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறானவொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் விருப்பத் தெரிவு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்பது தொடர்பாக உதாரணங்களுடனான விளக்கத்தைப் பார்ப்போம்.

தேர்தலில் A, B, C, D மற்றும் E என்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எடுத்துக்கொண்டால் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 100 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக கருதுவோம். இதன்படி A = 40 , B = 35 , C = 15 , D = 6 , E = 4 என்ற அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வைத்துக்கொள்வோம்.

இவ்வாறாக இவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கமைய எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  இதன்போது முதல் இரண்டு இடங்களை வகிப்பவர்களை தவிர்த்து மற்றையவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதப்படுவர். இதன்படி இந்த இடத்தில் A என்பவரும் B என்பவரும் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர். C , D , E ஆகியோர் போட்டியிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆனபோதும் C , D , E ஆகியோருக்குரிய 25 வாக்கு வாக்கு சீட்டுகளும் A மற்றும் B ஆகியோருக்கு கிடைத்துள்ள  2 ஆம் , 3 ஆம் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வேளையில் முதல் இரண்டு இடங்களை பெற்றுக்கொண்டுள்ள A என்பவருக்கும் B என்பவரினதும் முதலில் எண்ணப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணுவதற்கு எடுத்துக்கொள்ளப்படாது. அத்துடன் அந்த வாக்கு சீட்டுகளில் காணப்படும் விருப்பத் தெரிவு வாக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இதனைத் தொடர்ந்து 15 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். இதன்போது Cயிற்காக மாத்திரம் புள்ளடியிடப்பட்ட மற்றும் அவருக்கு 1 என்று குறிப்பிட்டு வேறு யாருக்கும் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்படாத வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படும். இதன் பின்னர் Cயிற்கு 1 எனவும் A அல்லது Bயிற்கு 2 எனவும் விருப்பத் தெரிவு வாக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் Aயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குரிய பெட்டியிலும் Bயிற்குறிய வாக்கு சீட்டு அதற்குறிய பெட்டியிலும் போடப்படும்.

இதேவேளை Cயிற்கு 1 என குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு சீட்டியில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கோ அல்லது Eயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் 3 ஆவது விருப்பு வாக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராயப்படும். அவ்வாறாக 3 ஆவது விருப்பு வாக்கு Aயிற்கோ அல்லது Bயிற்கோ குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வாக்கு சீட்டு A அல்லது B ற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த பெட்டியினுள் போடப்படும். ஆனபோதும் அந்த வாக்கு சீட்டில் 2 ஆவது விருப்பு வாக்கு Dயிற்கும் 3 ஆவது விருப்பு வாக்கு Eயிற்கும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது ஒதுக்கி வைக்கப்படும்.

இதேவேளை D மற்றும் E ஆகியோருக்குரிய வாக்குச்சீட்டுகளும் ஆராயப்பட்டு A அல்லது Bயிற்கு 2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய பெட்டிகளுக்குள் போடப்படும். இவ்வாறாகவே C , D , Eக்குரிய 25 வாக்குகளும் எண்ணப்பட்டு A , Bக்குரிய விருப்பு வாக்குகள் ஆராயப்படும்.

இவ்வாறாக 2ஆம் மற்றும் 3ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது  Aயிற்கு 3 மேலதிக வாக்குகளும் Bயிற்கு மேலதிகமாக 10 வாக்குகளும் கிடைத்துள்ளதாக கருதுவோமாகவிருந்தால் Aயிற்கு முதலில் கிடைத்த வாக்குகள் அடங்கலாக மொத்தமாக 43 வாக்குகள் ( A= 40+3 = 43) கிடைத்துள்ளன. அதேபோன்று Bயிற்கு 45 வாக்குகள் (B = 35+10 = 45)கிடைத்துள்ளன.  இதன்படி தற்போது 88 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக இருக்கின்ற நிலையில் அவற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற B என்பவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.

இதேவேளை 2 ஆம் மற்றும் 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்கு எண்ணும் நடவடிக்கையின் பின்னர் A என்பவரும் B என்பவரும் சமமான வாக்குகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு மூலம் மேலதிக வாக்கொன்றை வேட்பாளர் ஒருவருடன் இணைத்து அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால் மேற்கூறிய முறைமையே பின்பற்றப்படும்.

இதேவேளை இந்தத் தேர்தலில் 1 , 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு எண்ணியுள்ள வாக்காளர்கள் சில விடயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதாவது தேர்தலில் 39 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அவர்களில் நால்வருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இவ்வாறான நிலைமையில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 1 ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களுக்கு 2 , 3 ஆம் விருப்பு வாக்குகள் வழங்கப்படுமாக இருந்தால் இரண்டாவது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் போது அந்த வாக்குச்சீட்டு கவனத்தில் கொள்ளப்படாதவொன்றாகவே அமையும்.

குறிப்பாக யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2 ஆம், 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளை எண்ணும் போது அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டுகள் மீண்டும் வாக்கு எண்ணப்படும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்ப தெரிவு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் 2 , 3 ஆம் விருப்ப தெரிவு வாக்குகளே எண்ணப்படும்.

இதனால் விருப்ப தெரிவு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1 ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2 ஆவது விருப்பு வழங்கப்பட்டிருக்குமாக இருந்தால் பிரயோசமானதாக அமையும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

https://thinakkural.lk/article/307995

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும்

2 months 4 weeks ago

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?.

பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும்.

அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை.

மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே ஜனாதிபதியாகத் தெரிவாவார். . எவ்வளவு அதிகமாக வாக்களிக்கப்படுகின்றதோ அவ்வளவு வாக்குகளில் அவர் 50 வீதத்துக்கு மேல் பெறவேண்டும்.

ஆனால் பகிஸ்கரிப்பதன் மூலம் குறைந்த வாக்குகளே அளிக்கப்படும் என்பதால் குறைந்த வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் ஒருவர் குறைந்த அளவு வாக்குகளுடன் இலகுவாக ஜனாதிபதியாகிடுவார்.

எனவே, நாடளாவிய ரீதியாக பதியப்பட்ட மொத்த வாக்குகளில் ஈழத் தமிழர் கொண்டுள்ள பதியப்பட்ட வாக்குகளின் விகிதம் 11 சதவீதத்திற்கு மேலாகும். இந்தப் 11 சதவீதத்திற்கு மேலான ஈழத் தமிழரும் வாக்களிக்காது பகிஸ்கரித்தால் மிகுதி வாக்குகள் 89 வீதமாகும். இந்த 89 சதவீதத்தில் அளிக்கப்பட்டுச் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் என்ற வகையிலேயே முதலாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பு இருக்கும்.

வாக்கு வீதம் 

இதன்படி பகிஸ்கரிப்பதன் மூலம் எதிரி பதியப்பட்ட மொத்த வாக்குகளில் அளிக்கப்பட்ட குறைந்த வித வாக்குகளோடு இலகுவாக ஜனாதிபதியாக முடியும். அதன்படி பகிஸ்க்கரிப்பு என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க உதவியதாகவே அமையும்.

இதன் மூலம் தேர்தல்ப் பகிஸ்கிரிப்பானது வெல்லப்போகும் ஒரு சிங்கள ஜனாதிபதிக்கு திட்டவட்டமாக சேவை செய்யும் ஒரு முறையாகவே அமையும். உதாரணமாக பதியப்பட்ட மொத்த வாக்குகளை 100 என்று எடுத்துக்கொள்வோம்.

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் | Essay On Sri Lankan Election

நாடு தழுவிய ரீதியில் மொத்தத்தில் 80 வீதத்தினரே வாக்களித்தனர் என்று எடுப்போம். அப்படியாயின் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 80. இதில் இரண்டு வாக்குகள் செல்லுபடி அற்றவை என்று எடுப்போம். எனவே அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியான 78 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.

இதில் 50 வீதம் என்பது 39க்கும் மேற்பட்ட வாக்குகள் ஆகும். அதன்படி 39 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஜனாதியாவார். இந்த அழிக்கப்பட்ட மொத்தம் 80 வாக்குகளில் தமிழரின் வாக்குகள் 10 என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த 10 வாக்குகளையும் அளிக்காது பகிஸ்கரித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 70 ஆகும்.

இந்த அளிக்கப்பட்ட 70 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை. எனவே செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் 68. இந்த 68 வாக்குகளில் 50 வீதம் என்பது 34 வாக்குகளுக்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் முதலாவது சுற்றிலேயே ஜனாதிபதியாக தெரிவாவார்.

அதாவது 39 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வேண்டிய ஒருவர், பகிஸ்கரிப்பின் வாயிலாக 34க்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் இலகுவாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

அதேவேளை சிங்கள தரப்பில் பலம்வாய்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு அவருக்கு வாக்களிக்கப்படும் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளராலும் முதல் சுற்றில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியாது. அப்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட மாட்டாது. பின்பு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிகழும். இதிலும் யாரும் 50சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய சூழல் இல்லை.

ஏனெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்குகளை சிங்கள கட்சிகள் எதுவும் மக்களிடம் கோருவதும் இல்லை. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படி இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை அளித்த நடைமுறை அரசியல் வரலாறும் இல்லை. இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் எந்த ஒருவரின் வாக்கு அளவிலும் மாற்றமேற்பட இடமில்லை.

ஜனாதிபதி பதவி

அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்படுகின்ற முதலாவது சுற்று, இரண்டாவது சுற்று ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை (Absolute majority) பெறமுடியாது. அடுத்து அறுதிப் பெரும்பான்மையற்ற சாதாரண பெரும்பான்மை ( Simple majority ) வாக்குகளை மட்டும் கொண்ட ஒரு பலவீனமான ஜனாதிபதியே தெரிவாக முடியும்.

அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி என்ற அரசியல் யாப்பின் முதலாவது இரண்டாவது விருப்பங்களை இது தோற்கடித்து விடுகிறது. ஆதலால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அளிக்கப்படும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிங்கள அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதியை கொண்டுவர வழிவகுக்கும்.

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் | Essay On Sri Lankan Election

மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மலிந்திருக்கும் இலங்கை அரசியலில் ஓர் அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதி பதவிக்கு வருவது என்பது ஈழத் தமிழருக்கு சாதகமானது. எதிரி பலவீனம் அடைவது போராடும் இனத்துக்கு இலாபகரமானது. பகிஸ்கரிக்க கோருபவர்கள் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ளவேண்டும்.

அதாவது வேறு எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்காது சங்குக்கு மட்டும் வாக்களித்து கொள்வது பெரிய பகிஸ்கரிப்பாகும். தமிழ் வேட்பாளருக்கு முதலாவது வாக்கையளித்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகளை சிங்கள வேட்பாளருக்கு அளிக்காதுவிட்டால் அது சாதாரண பகிஸ்கரிப்பை விடவும் ஓர் உயர்ந்த கட்ட பகிஸ்கரிப்பாய் அமையும்.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் இரண்டாம் மூன்றாம் விருப்பத்தெரிவு வாக்குகளை அளிக்காது சங்கு சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கூறுகிறார். அதனால் சங்குச் சின்னத்தை ஆதரித்து அதற்கு மட்டுமே வாக்களித்து விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்காமல் விடுவது நேர்கணிய ரீதியான ஒரு பலம் பொருந்திய பகிஸ்கரிப்பாகும்.

இரண்டும் மூன்றும் கூட்டினால் ஐந்து ( 2 + 3 = 5 ), மூன்றில் இரண்டடை கழித்தால் ஒன்று ( 3 - 2 = 1 ) என்பது மூன்றாம் வகுப்பு எண் கணிதம் படித்த ஒரு குழந்தைக்குக்கூடப் புரியக்கூடிய கணக்கு.

இதனை தமிழ்த்தேசியம் பேசுவோர் புரியவில்லை என்றால் அவர்கள் சிங்களத்தடன் கள்ள உறவில் உள்ளார்கள் என்பதே அர்த்தம். இவற்றிற்கு அப்பால் தமிழர் தம்மை பலப்படுத்த பொது வேட்பாளர் பெரிதும் துணைபுரிகிறது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பேராதரவுடன் அத்தேர்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22 தமிழ் ஆசனங்கள் கிடைத்தன.

தமிழ் மக்கள் 

இப்பின்னணியில் விடுதலைப் புலிகள் வெறுனே ஓர் ஆயுத இயக்கம் மட்டுமல்ல அது பரந்த மக்கள் ஆதரவை கொண்ட ஒரு இயக்கம் என்பதும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியான தேசிய அபிலாசைகளை கொண்டவர்கள் என்பதும் புலனாகியது.

ஆதலால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தால் மட்டும் போதாது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அளிப்பதற்கு ஜனநாயக ரீதியான தமிழ் ஐக்கியத்தை சீர்குலைப்பதை தமது முதன்மையான இலக்காகக்கொண்டு முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் ஈழத் தேசிய ஐக்கியத்தை முதலில் கட்சி ரீதியாக சிதைக்கும் நடவடிக்கையை எதிரி மேற்கொள்ள தொடங்கினார்.

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் | Essay On Sri Lankan Election

தமிழ் தேசியத்திற்கு இருந்த 22 ஆசனங்களை சுமாராக அரைவாசியாக வெட்டித் தறிப்பதில் எதிர் வெற்றியீட்டியுள்ளதுடன் தமிழ் தேசியம் பேசும் இருக்கக்கூடிய ஆசனங்களையே எதிரி பல கூறுகளாக உடைத்துள்ளார். இதன் மூலம் பலமற்றதாய் காணப்படுவது மட்டுமல்ல அது அழிந்து கொண்டு போகிறது என்ற ஓர் அரசியல் அலையை உள்நாடாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்துவதில் எதிரிகள் அரைவழி வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தகைய சூழலில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி, அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான சட்ட சூழலை பயன்படுத்தி அவரது நிர்வாகத்தில் நடக்கும் தேர்தலையே எமக்கு சாதகமான ஒரு களமாக மாற்றுவோம். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு வரப்பிரசாதமாய் உள்ளது. ஈழத் தமிழரால் ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது.

களநிலையில் அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆனால் எதிரியின் தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்கள் அவாவுறும் தமிழ்த் தேசியம் - ஐக்கிய - ஒருமைப்பாடு என்ற மூன்றும் ஒன்று திரண்ட அரசியல் வாழ்வியல் பலத்தை வெளிக்காட்ட முடியும். நான் - நீ, அவன் - இவன், அது - இது என்று தன்முனைப்புக் கொண்டு எமக்கிடையே சண்டையிட்டுத் தமிழ் தேசியத்தை பலியிடாது, அது - இது என்று முட்டையில் மயிர்பிடுங்காது தமிழ்த் தேசியத்துக்கான ஒரு பொதுக் குரலாய் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமுகப்பட்டு சங்கச் சின்னத்தை முதன்மைப்படுத்தி பெருவெற்றி ஈட்ட வேண்டும்.

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் | Essay On Sri Lankan Election

எதிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பு. ஒன்றுமே பூரணத்துவமாய் ஆரம்பிக்கப்படுவதில்லை. குறைபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அந்த வளர்ச்சி போக்கில் குறைகளை கடந்த முன்னேறும்.

மேலும் ஒரு தத்துவார்த்த கோட்பாடு உண்டு. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு செயல்பாடு புள்ளியில் அவை இரண்டு அணிகளாகவே பிளவுண்டிருக்கும். இதில் நடுநிலை என்பதும் செயற்படு அர்த்தத்தில் வெல்லும் பக்கமாகவே அமையும். எனவே நடுநிலை என்பதற்கு இங்கு இடமில்லை.

பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது என்பது தமிழ் தேசியம் இல்லாவிடில் எதிர்பக்கம் என்கின்ற இரண்டு அணிகளுள் தமிழ் தேசியத்தின் எதிரியோடு கூட்டிச் சேர்வதாகவே அவையும்.

இதுதான் அரசியல் தத்துவம் சொல்லும் அடிப்படை உண்மை. ஈழத் தமிழ் மக்கள் ஐக்கியம் , ஒற்றுமை , ஒருமைப்பாடு என்ற உன்னதமான தேசிய அபிலாசையை சொல்லிலும், செயலிலும், தோற்றத்திலும் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளரை ஆதரித்து அதனை முன்னெடுப்பதானது முள்ளிவாய்க்காலுக்கு பின்னானகால வீழ்ச்சியில் இருந்து எழப்போகிறோம் என்ற செய்தியை பறைசாற்றுவதாகும்.

பேரினவாத ஒடுக்குமுறையால் மூன்று இலட்சம் அப்பாவி மக்களை இழந்துள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைகள், தாய்மார் கர்பிணித்தாய்மார், பெண்கள், நோயாளிகள், முதியோர், இளையோர் என இனப்படுகொலைக்கு உள்ளானபோதிலும், 3, 46,000 இராணுவ இரும்பு சப்பாத்திக்கு கீழும், விதைத்து விட்டார் போல் இருக்கும் மேலதிக பொலிஸ் படைகளின் ஒடுக்கு முறைகளுக்கு கீழும்„ பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வுப் படைகளின் கழுகுச் செயற்பாடுகளில் கீழும், எதிரியினாலும் எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழ் தலைவர்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்ன பின்னமாய் உடைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்கள் தம் தேசிய அபிலாசையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழக்கத் தயார் இல்லை என்பதை உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்ட , தம்பலத்தை தாம் உணர்ந்து முன்னேற தமிழ் பொது வேட்பாளரை பெரு வெற்றியடையச் செய்ய வேண்டும். சங்கை தமிழ் தேசியத்தின் நாதமாய் ஒலித்துக் காட்ட வேண்டும். 

https://tamilwin.com/article/essay-on-sri-lankan-election-1724360461

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!

2 months 4 weeks ago

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!

 — கருணாகரன் —

நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். 

“அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் காத்திருக்கும் வரிசை யுகத்தை மாற்றினேன். விவசாயிகளுக்கு உரத்தைத் தந்தேன். பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்கினேன்…. நாம் இனி வாழமுடியுமா என்று நம்பிக்கையற்றிருந்த மக்களை நிம்மதியோ, அச்சமின்றி வாழ்க்கையைத் தொடரக் கூடியவாறான சூழலை உருவாக்கினேன். அப்படிச்செய்தேன். இப்படிச் செய்தேன்.. ” என்று ஏராளமாகச் சொல்லிச்செல்கிறார் ஜனாதிபதி.

இதில் சில உண்மைகளுண்டு. மறுக்க முடியாது. 

ரணில் சொல்வதைப்போல (அவர் விரும்பியதைப்போல அல்ல) தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும். அது பொருளாதாரப் பிரச்சினையையும் இனப்பிரச்சினையையும் தீர்க்கும் முகமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். கூடவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது உட்படப் பலவற்றைச் சீர்செய்திருக்க முடியும். முக்கியமாக அரசியலமைப்பை மாற்றியிருக்கலாம். குறைந்தபட்சம் அதை நோக்கி நகர்ந்து சாத்தியமான பலவற்றையும் செய்திருக்கலாம். 

தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் சாட்டித் தப்பி விட முடியாது. ஏனென்றால் அனைத்துத் தரப்பினரும் பங்காளிகள். அதில்லாதபோது ஒருவரையொருவர் குற்றம்சாட்டியோ அல்லது எதிர்ப்புக் காட்டியோ தப்பி விடலாம். அப்படித்தான் ஒவ்வொருவரும் இழிவான முறையில் தங்கள் தங்கள் அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ இவர்கள் நேர்மையாக – விசுவாசமாகச் சிந்திக்கவில்லை.  “அந்த  நெருக்கடிச் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு தன்னை 71 தடவை அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அப்படிப் பொறுப்பேற்றிருந்தால் அது கள்வர்களைப் பாதுகாப்பதாகவே முடிந்திருக்கும். அதை நான் விரும்பவில்லை” என்று இப்பொழுது சஜித் பிரேமதாச பெருமையாகச் சொல்கிறார். 

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டைப்  பொறுப்பேற்று, ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு கள்வர்களைப் பிடித்துச் சிறையில் தள்ளி, ஊழலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் அல்லவா! இதையே செய்திருக்க வேண்டும் சஜித்.

அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் அவர்கள் ரணில் அரசாங்கத்தில் பாதுகாக்கப்பட்டனர். ஊழல் தொடர்ந்தது. 

தவிர, ரணிலின் அழைப்பை ஏற்றுத் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு செயற்படும்போது, ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்திற்குரிய பொதுப் பண்புக்கு மாறாகச் செயற்பட முனைந்திருந்தால் அதை மக்களுக்குச் சொல்லி விட்டு  (நிரூபித்துக் கொண்டு) அதிலிருந்து விலகியிருக்கலாம். அதுவே சரியானது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை. தேசிய அரசாங்கத்திற்கான வற்புறுத்தல்களை இலங்கையின் புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குகின்ற மதத்தலைவர்கள் எவரும் செய்யவில்லை. 

இதனால் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்தே, தங்களின் பாரம்பரியச் சிந்தனை முறையிலிருந்தே சிந்தித்தனர், செயற்பட்டனர்.  எவரும் நாட்டின் தேசிய நெருக்கடி, தேசியப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு என்று சிந்திக்கவில்லை.

பதிலாக தனியொருவராக (ஒற்றை ஆளாக) நிற்கும் ரணில் விக்கிரமசிங்க  தன்னைப் பலப்படுத்துவதற்காக, பிறரைப் பயன்படுத்துவதற்காக, தந்திரோபாயத்தின் அடிப்படையில்தான் பலரையும் அழைக்கிறார் எனச் சொல்லப்பட்டதுண்டு.  

தனியொருவராக நிற்கும் ரணில் எப்படி ஆளுமையும் நேர்மையும் உள்ள மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அவர்கள் தங்கள் ஆளுமையினாலும் நேர்மையினாலும் ரணில் விக்கிரமசிங்கவை அம்பலப்படுத்தியிருக்கலாம். கட்டுப்படுத்தியிருக்க முடியும். 

என்பதால் அன்றைய சூழலை இழந்தது தவறேயாகும். 

இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டக் கூடியதாக அந்த நெருக்கடிச் சூழல் அனைவருக்குமான பொறுப்பை ஏற்குமாறு அழைத்தது.  

பொதுவாகவே நெருக்கடியொன்றின் போதுதான் அனைத்துத் தரப்பும் ஒருமுகப்பட்டுச் செயற்படக்கூடிய சூழலும் உளநிலையும் உருவாகும். உதாரணம், சுனாமி அனர்த்தச் சூழல்.

அந்தப் பேரிடரின்போது புலிகளும் அரசும் தமிழரும் சிங்களரும் முஸ்லிம்களும் என எதிரெதிர்த் தரப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து பேதங்களின்றிப் பணியாற்றினர். அதொரு முன்னுதாரணமாகப் பேசப்பட்டது. அதிலிருந்து நல்லெண்ணச் செயற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தால் பிந்திய இலங்கையின் பேரழிவுகளும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது.

இன்னொரு சந்தர்ப்பம், கொரோனா பெருந்தொற்றுக்காலப் பேரிடர்ச் சூழல். அதன் போதும் அனைத்துத்தரப்பினரிடத்திலும் ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருந்தது. இனவாதம் தணிந்திருந்த சூழல்களிவை. 

ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியோடிணைந்த அந்த நெருக்கடிச் சூழலை அனைத்துத் தரப்பும் இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதற்கான கருநிலை “அறகலய“வின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. “அறகலய”வில் நேரடியான அரசியற் கட்சிகளுக்கு அப்பாலுள்ள அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்து நின்றது. மட்டுமல்ல, இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதலும் அங்கே ஓரளவு காணப்பட்டது. அல்லது அதைப்பற்றிப் பேச வேண்டும் என்ற உணர்வு அங்கே இருந்தது.

ஆகவே அதையொட்டி,  அதற்குப் பின் வரவிருந்த தேசிய அரசாங்கம் என்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அனைவரும் செயலாற்ற முன்வந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு சஜித்தும் அநுரவும் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகளும் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் இனவாதம் தேவைப்பட்டது. அதை விட்டு அரசியல் செய்து பழக்கமில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குப் பின்னின்றனர். அவர்கள் சொன்ன காரணங்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவெறும் சாட்டுகளே. அதிலொன்று, ரணிலை நம்பமுடியாது. அவர் சூழ்ச்சிக்காரர். ராஜபக்ஸக்களை (திருடர்களை) காப்பாற்றுபவர். அவர் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிகளுக்காகச் செயற்படுகின்றவர் போன்றனவாகும். 

இதிலும் உண்மையுண்டு. ஆனால், ஏற்புடையதல்ல. ஏனென்றால் – 

ஒன்று, வெளிச்சக்திகள் ரணிலை மட்டுமல்ல, அதிகாரத்திலிருப்போரையும் அதிகாரத்திற்கு வெளியே இருப்போரையும்தான் கையாள – கைப்பொம்மைகளாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றன. சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க, சுமந்திரன், மனோ கணேசன், ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றவர்களைப் பிற நாட்டுத் தூதர்கள் சந்திக்கிறார்கள். 

தங்களுக்குப் பொழுது போகவில்லை என்பதற்காகவா இந்தச் சந்திப்பையெல்லாம் ஒவ்வொரு நாட்டுத் துதுவர்களும் நடத்துகின்றனர்?

அல்லது இவர்கள் இந்தத் தூதர்களைச் சந்திப்பது ஏதோ அன்புறவு காரணமாகவா?

எல்லாவற்றுக்குப் பின்னும் நிகழ்ச்சி நிரல்களுண்டு. 

ஆகவே பிறருடைய நிகழ்ச்சி நிரல்கள் எப்போதுமிருக்கும். அது யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தொடரும். அதிகாரத்தில் இல்லாத சக்திகளையும் அவர்கள் நாடிபிடித்துப் பார்ப்பர்.

எனவே இதை ஒரு காரணமாகச் சொல்லித் தப்ப முடியாது. 

அப்படித்தான் ரணிலை நம்ப முடியாது என்பதும். அவர் ஒரு சூழ்ச்சிக்காரர். சேர்ந்திருப்போரையே அணைத்துக் கெடுத்து விடுவார். கட்சிகளை உடைப்பதில் வல்லவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 

அரசியலில் போட்டியிருக்கும். இந்த மாதிரிச் சூழ்ச்சிகளும் இருக்கும். 

அரசியலென்பதே போட்டிகளின் களம்தான். முரண்பாடுகளின் இயக்கம்தான். சூழ்ச்சிகள் இடையறாது நிகழும் ஆட்டமே.

ஆகவே அதற்கேற்ற காய்நகர்த்தல்களும் காய் வெட்டுகளும் நடக்கும். ஒரே கட்சிக்குள், ஒரே அமைப்புக்குள், ஒரே அணிக்குள் கூட இதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

அப்படியில்லாத ஒரு அணியை – ஒரு கட்சியை யாராவது காட்டுங்கள் பார்க்கலாம். 

தங்கள் அணிக்குள் வெட்டுக்குத்துகளும் குழிபறிப்புகளும் முரண்பாடுகளுமிருப்பதைப் போலவே வெளியிலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன், இப்படிச் சொல்வோர் தமது அணிக்குள்ளும் வெளியிலும் போட்டியாளர்களை முறியடிப்பதற்கும் வெட்டியெறிவதற்கும் முயற்சிப்பதில்லையா?

எனவே ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய இந்தக் குற்றச் சாட்டுகளும் ஏற்புடையவையில்லை.

ஆகவே இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைக் கடந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சஜித்தும் அநுரவும் முன்வந்திருக்க வேண்டும். இருவரும் இளைய தலைமுறையினர். அப்படி இருவரும் வந்திருந்தால், உரிய பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயற்பட்டிருந்தால், தங்களுடைய செயற்பாட்டுத்திறனால் இன்று மிகப் பெரிய ஆளுமைகளாக மிளிர்ந்திருப்பர். நாடும் கணிசமான அளவுக்கு மீண்டிருக்கும்.

வயோபதிரான, ஒற்றையாளான ரணில் விக்கிரமசிங்கவை களத்திலிருந்தே அப்புறப்படுத்தியிருக்க முடியும். அவருடைய பலத்தையும் ஒளிவட்டத்தையும் இல்லாதொழித்திருக்க முடியும். 

ஆனால் நடந்தது என்ன?

ஒற்றையாளான – தனியனான –  ரணில், முதிய வயதில் தனிக்காட்டு யானையாக மெல்ல மெல்லச் சூழலைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பதவியே இல்லாமல் தன்னுடைய வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடுமுழுக்கச் சென்று தன்னை நிலைப்படுத்தினார்.  

இதற்கு வாய்ப்புக் கொடுத்தால் அவர் அதைச் செய்யத்தானே செய்வார்!

அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரில்லை. பின் கதவு வழியாக வந்தவர் என்ற பரிகாசமெல்லாம் அரசியலில் எடுபடாது. நீங்கள் களத்தில் நிற்கிறீர்களா இல்லையா என்பதே முக்கியமானது. 

ஜனாதிபதியாகப் பதவியேற்று ரணில் களத்தில் நின்றதே அவர் இன்று போட்டிக்குரிய வேட்பாளராக  மாறிருப்பதற்கான காரணம்.

2020 இல் ரணில் தோற்றுப்போன ஒருவர். அவரிடம் கட்சியும் இருக்கவில்லை. வெற்றியும்  இருக்கவில்லை. ஏறக்குறைய அரசியலுக்கு முழுக்குப் போடும் நிலையில் இருந்தார்.

இன்று?

சவாலுக்குரிய போட்டியாளராக – ஒரு இளைஞரைப்போல களத்தில் நிற்கிறார்.

செடியை முளையிலேயே கிள்ளாமல் விட்டால், அல்லது நமக்கு வாய்ப்புக் கிட்டும்போது அதைக் கை விட்டால் பிறகு அது நம்மையே பதம் பார்த்து விடும். 
 

https://arangamnews.com/?p=11123

முல்லைத்தீவில் நடப்பது என்ன?

3 months ago

ரவிகரன்  

முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது.

அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன, கடலோர பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழுமியிருந்த மக்கள் அவர்களுடைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திருப்பி அனுப்பியிருந்தனர்.

mullai.jpg

கனிய மணல் கூட்டுத்தாபனம் கொக்கிளாய் முகத்துவார பகுதியிலிருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக உள்ள கரைவலைப்பாடுகள் மற்றும் காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுவந்த விளைநிலங்கள், மானாவரிக் காணிகளை மேற்சொன்ன 44 ஏக்கரை 32 குடும்பங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து முள்கம்பி வேலிகளை அமைத்து அடத்தாக, அதுவும் உறுதிக்காணிகள் (சொந்தக்காணிகள்) கனிய மணல் அகழ்வை செய்துவருகிறார்கள்.

மாகாண சபைக்காலத்தில் இந்த அடத்தான வேலைகளை செய்வதற்கு நாம் கொடுக்கவில்லை. இந்த காணி பறிப்பு நடவடிக்கை ஏற்கனவே இந்த பகுதியில் நிறையவே நடந்திருக்கிறது. இராணுவப் பாதுகாப்போடு ஏற்கனவே 20 ஏக்கர் வரையான பூர்வீக தமிழர்களுடைய உறுதிக்காணிகளில் தற்பொழுது சிங்கள குடியேற்றம் நடைபெற்றிருக்கிறது. அதேபோல், கொக்கிளாய் முகத்துவாரத்தில் இது தவிர, நான் குறிப்பிட்ட 44 ஏக்கர் கனிய மணல் அகழ்வுக்காக தமிழ் மக்களிடமிருந்து நிலங்கள்  பறிக்கப்பட்டுவிட்டன.

‘மாற்றுக்காணிகளோ பணமோ எமக்கு வேண்டாம்; எமது முன்னோர்கள் எமக்கு தந்த பூர்வீக காணிகளே எமக்கு வேண்டும்’ என்று பல போராட்டங்களை இப்பிரதேச மக்கள் நடத்திவிட்டார்கள்.

அதேபோல் இப்பிரதேச மக்கள், தங்களுடைய பூர்வீக பரம்பரைக்காணிகளை பறிக்கின்றார்கள் என்றும்  கனியமணல் அகழ்வினால் தமது கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் கரையோர வளங்களும் இப்பகுதி கடற்தொழிலும் அழிக்கப்படுகிறது என்றும் பெரும் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

 

mul1.jpg

அத்துடன் நன்னீர் ஊற்றுக்கள் உவர் நீராக மாறும் நிலை ஏற்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் கடல் நீர் கிராமத்துக்குள் வரலாம் எனவும் அம்மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.இந்த செயற்பாடுகள் காரணமாக காலப்போக்கில் கிராமம் வளமற்று வரட்சி இடமாக மாறலாம் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் எங்கள் வாழ்வாதார நிலத்தையும் கடலையும் பறிக்காதீர்கள் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த 31 ஆம் திகதியும் கனிய மணல் அகழும் நோக்கத்தோடு திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததோடு,நாம் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து அவர்கள் திரும்பி சென்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோ மீட்டர் நீளமானது.கனிய மணல் கூட்டுத்தாபனம் இந்த முயற்சியில் ஈடுபடுவதென்பது கரையோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கும் இருப்புக்கும் கேள்விக்குறியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.இது தவிர,திணைக்களங்கள் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்வதிகாரிகளோடு கூட்டம் நடத்தி வருவது சரியா?என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கிறார்கள்.கடற்தொழில் பிரதிநிதிகள், காணிகளின் உரிமையாளர்கள் எவரையும் அழைத்து பேசாது தங்களுடைய என்னத்துக்கு ஏற்ப செயல்படுவது எந்த நியாயம் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தயவு செய்து வாழவிடுங்கள்…நிலப்பறிப்புகளை செய்யாதீர்கள் என்பதே இப்பிரதேச மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.

https://thinakkural.lk/article/307841

முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல்

3 months ago

முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல்
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

 இலங்கையின்  ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39  வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப்  போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி 

 ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது.

இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசுவுமான  நாமல் ராஜபக்ச  களத்தில் இறக்கப்பட்டிருப்பதை  அடுத்து மும்முனைப் போட்டி என்ற தோற்றப்பாட்டில்  மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியுடன் சில  அரசியல் அவதானிகள் குழப்பகரமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

அதேவேளை நாமல் ராஜபக்சவையும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித்  

ஜயவீரவையும் சேர்த்து ஐந்து பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக ஜனாதிபதி தேர்தலை சில ஊடகங்கள் காண்பிக்க முயற்சிக்கின்றன.

 விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பெருவாரியான கட்சிகள், குழுக்களுடன் சேர்ந்து  கூட்டணிகளை அமைக்கிறார்கள். ராஜபக்சாக்களை கைவிட்டு வருபவர்கள்  இருவருடனும் இணைகிறார்கள். சில கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தத்தில் முடிவுகளை எடுத்து வெவ்வேறு அணிகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கட்சித் தாவல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. எவர் எந்தப் பக்கம் நிற்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் புதிய அரசியல் கலாசாரம், முறைமை மாற்றம் பற்றியும் வாய்கூசாமல் பேச்சு.

 இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் சூழ்நிலையில் இடம்பெறுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட  படுமோசமான  பொருளாதார நெருக்கடி இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சியை மூளவைத்தது. ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய அந்த கிளர்ச்சிக்கு பிறகு முதற் தடவையாக தங்களது  வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அதை  இந்த தேர்தல் நிச்சயம் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தத் தடவை பிரசாரங்கள் தேர்தலுக்கான  அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டன. சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வருடமே அறிவித்து தங்கள் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். 

ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்தமாத பிற்பகுதியிலேயே அறிவித்தார். அவரது ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்திருப்பதால் தன்னை தேர்தலில் ஆதரிக்கக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. 

தனது கட்சியின் சார்பிலான வேட்பாளராக அன்றி பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வந்திருப்பவர்களை  உள்ளடக்கிய ஒரு விசித்திரமான கதம்பக் கூட்டணி ஒன்றின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். 32 அரசியல் கட்சிகள் குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி ஒன்று தொடர்பான உடன்படிக்கை கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் பிரதான அரசியல்  கட்சி  ஒன்றின் தலைவர் தேசியத்  தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். 

பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை களமிறக்குவதற்கு  ராஜபக்சாக்கள் தீர்மானித்ததை அடுத்து அவர்களைக் கைவிட்டு அந்த கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்து விட்டார்கள். அதனால்  ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள்  ஒவ்வொருவரும் தனக்கு கொண்டுவரக்கூடிய  வாக்குகளின்  எண்ணிக்கையைப் பற்றி உண்மையில்  அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

தங்கள் தொகுதிகளில் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு ஆதரவு அதிகரித்துவருவதன்  காரணமாகவே அந்த  பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சாக்களை கைவிட்டு அவரை ஆதரிக்க முண்டியடிக்கிறார்கள் என்று சில அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளாக இருந்த அரசியல்வாதிகள் கூட தங்களது ஆதரவாளர்களின் வேண்டுகோளின்  பிரகாரமே விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தாஙகள் தீர்மானித்ததாக பகிரங்கமாகக் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி தனது பிரசாரத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு தந்திரோபாயத்துடன   முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தன்னை அல்ல தேசத்தையே முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் பிரகடனம் செய்திருக்கிறார். 

எவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மற்றைய வேட்பாளர்களைப் போலன்றி தனது  எதிர்காலத்துக்காக அல்ல நாட்டின் எதிர்காலத்துக்காகவே  போட்டியிடுவதாகவும் கூறும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் சகல கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

     “என்னுடன்  இணைந்து பணியாற்ற முன்வருமாறு பிரேமதாசவுக்கும் அநுரா குமாரவுக்கும் முன்னரும் நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் இப்போது கவலைப்படக்கூடும். அடுத்த தடவை அவர்களை எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அரசாங்கத்திற்குள் கொண்டுவருவேன். அவர்களுக்கு மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று கடந்த வாரம் பத்திரிகை  ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும்  சந்தித்தபோது ஜனாதிபதி கூறினார்.

தேர்தல் பிரசார மேடைகளில் பெரும்பாலும் அவர் எந்த வேட்பாளரையும் தாக்கிப்  பேசப்போவதில்லை என்பது நிச்சயம் என்று தெரிகிறது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை நோக்கி வழிநடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையே ஒரேயொரு மார்க்கம் என்று கூறும் அவர் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் தனது தலைமையிலான அரசாங்கம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத்  தொடருவதற்கு தனக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆணை தருமாறு மக்களை கேட்கிறார். 

மற்றைய பிரதான வேட்பாளர்களும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்பதையும் சில திருத்தங்களுடன் அதையே தொடரப் போவதாகக்  கூறுவதையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகிறார். புதிய வாக்குறுதிகளை அவர்  வழங்கவில்லை. தற்போது செல்லும்  பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கே அவர் மக்களின் ஆணையைக் கோருகிறார். அத்துடன் கடந்த காலத்தைப் போன்று கட்சி அரசியல் செய்வதில் நாட்டம் காட்டாமல் சகல கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய ஒரு சுயேச்சை வேட்பாளராகவே தன்னை முன்னிறுத்தியிருக்கும்  விக்கிரமசிங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட புதிய ஒரு ‘அவதாரமாக’ தன்னைக் காட்சிப்படுத்துகிறார்.

 ஆழமான கட்சி அரசியல் போட்டாபோட்டிகள் நிறைந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இலங்கைச்  சமுதாயத்தில் ஜனாதிபதியின் தற்போதைய அணுகுமுறை  எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மக்கள் மத்தியில் அதற்கு  எந்தளவுக்கு வரவேற்பு  இருக்கும் என்பதும்  முக்கியமான கேள்விகள்.

கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் தங்களது நியமனப்பத்திரங்களை கையளித்த பிறகு மூன்று பிரதான வேட்பாளர்களும்    ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

“இலங்கை மக்களுக்கு  பிரகாசமான  ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே நான் மக்களின் ஆணையை நாடி நிற்கிறேன். நாம் நாட்டைப் பொறுப்பேற்று உறுதிப்பாட்டைக்  கொண்டுவந்தோம். உங்களுக்கு இப்போது உணவு, எரிபொருள்  மற்றும்  ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றன. இது ஒரு தொடக்கம் மாத்திரமே. உறுதிப்பாடுடைய ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு பெருமளவு பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சட்டம் ஒழுங்கை நிவைநாட்டியிருக்காவிட்டால் பங்களாதேஷின் கதி இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு ஆணையைத்  தருமாறு மக்களிடம் வேண்டுகிறேன்.

“நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயந்து ஓடினார்கள். அத்தகைய ஆட்களிடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்” என்று ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையார் பாணியில் பொதுமக்கள் யுகம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக சூளுரைத்தார்.

  “பொதுமக்களின் யுகம் ஒன்றை உருவாக்குவதாக நான்  உறுதியளிக்கிறேன். அபிவிருத்தியின்  பயன்களை நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலையை நான் உருவாக்குவேன். எனக்கு ஆதரவாக அணிதிரளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் கூறினார்.

மக்களுக்கு மாற்றம் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது என்று கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார தங்களது முகாம் மாத்திரமே அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வல்லமையைக்  கொண்டது என்று குறிப்பிட்டார்.

  “கடந்த காலத்தில் பெருமளவு தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் கூட வருடக்கணக்காக மககள் சொல்லொணா இடர்பாடுகளை அனுபவித்தார்கள். இந்த தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியும்.  துன்பங்களை அனுபவிக்கும் நிலவரம் மாறவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டையும் மக்களையும் இடர்பாடுகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடியதாக இந்த தேர்தலை எம்மால் மாற்றமுடியும். அதை எமது முகாமினால் மாத்திரமே சாதிக்கமுடியும் ” என்று அவர் கூறினார்.

நாமல் ராஜபக்சவை பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலத்தை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவை மீளக்கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் கிளர்ச்சியின் விளைவாக  ராஜபக்ச குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு பிறகு அந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதே நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க  முக்கிய அம்சமாகும்.

ராஜபக்ச குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.  ஜனாதிபதி விக்கிரமசிங்கவை  ஆதரிப்பதே அவர்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவு  என்று ஒரு கட்டத்தில் பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் நோக்கில்  அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு   இணங்குவதற்கு ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டதை அடுத்து பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

விக்கிரமசிங்கவுடன் முரண்படுவதற்கு முன்னதாகவே தங்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தியதன் மூலம்  ஜனாதிபதியை பயமுறுத்தும் பாணியில் ராஜபக்சாக்கள் நடந்துகொண்டார்கள். தங்களுக்கு மக்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு உரைகல்லாக தம்மிக்கவையும் அவரது பணத்தையும்  பயன்படுத்தும் ராஜபக்சாக்களின் பிரயத்தனம் இறுதியில்  பயனளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கடைசி நிமிடத்தில்  அறிவித்தார். அதனால் வேறு வழியின்றி நாமல் ராஜபக்சவை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்டது.

தேர்தலில் போட்டியிடாவிட்டால் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்  என்றும்  அஞ்சிய  ராஜபக்சாக்கள் கட்சியைப் பாதுகாப்பதற்காக நாமல் ராஜபக்சவை போட்டியிட வைத்திருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா அல்லது பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வாக்களிக்கப் போகிறார்களா? போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக  தங்களது தவறுகளைப்  பொருட்படுத்தாமல் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமானவர்களாக  இருக்கவேண்டும் என்ற விபரீதமான எண்ணம் ராஜபக்சாக்களிடம் நிலைகொண்டிருக்கிறது.

அதேவேளை, சாத்தியமானளவுக்கு கூடுதல்பட்ச வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்சாக்கள்  சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக பெரும்பான்மையினவாத  அணிதிரட்டலை மீண்டும்  செய்வதில் நாட்டம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தேர்தல் நோக்கங்களுக்காக என்றாலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதால் ராஜபக்சாக்களின் முயற்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த தடவை பெரிதாக எடுபடுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

 எதிர்காலத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கும் குறிக்கோளைக் கொண்ட இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தின் மூத்தவர்களைப் போலன்றி இனவாதமற்ற அரசியல் பாதையை தெரிவுசெய்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்வதற்கு முன்வருவாரா? குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை தனது தேர்தல்  விஞ்ஞாபனத்தில் அறிவிப்பதன் மூலம் இனங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான தனது சிந்தனையை அவர் வெளிக்காட்ட முடியும்.

ஜனாதிபதி தேர்தலில் 23 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 16 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற முன்னணி அரசியல்வாதிகளும் அவர்களில் அடங்குவர். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெருவாரியான சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட நிலைமை அதுவே.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியில் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்களால் ஒரு பிரிவினரால் அமைக்கப்பட்ட ‘மக்கள் போராட்டக் கூட்டணி ‘ என்ற இயக்கத்தின் சார்பில்  நுவான் போபகே 

என்ற சட்டத்தரணி தேர்தலில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது.

வழமையாக ஜனாதிபதி தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுவந்த சில அடிப்படைப் பிரச்சினைகள் இந்த தடவை பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைக்கு  அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொலிஸ், காணி போன்ற முக்கிய அதிகாரங்கள்  குறித்து தெளிவற்ற நிலைப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புக்களை தவிர வேறு எதையும் பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் எதிர்பார்க்க முடியாது.

 இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருப்பதாக  தென்னிலங்கையின் எந்த வேட்பாளராவது உறுதியளித்தால் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறும் அரசியல்வாதிகளும் வடக்கில் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலைவரங்கள் குறித்த அவர்களது புரிதலின் இலட்சணம் அது. 

இது இவ்வாறிருக்க, தமிழ்ப் பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற புதிய அமைப்பினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். 

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்ப்பொது வேட்பாளராக நியமிக்கப்படக்கூடியவருக்கு இருக்கவேண்டியவை என்று வரையறுத்த தகுதிகள் சகலவற்றுக்கும் முரணாக அரியநேத்திரனின் நியமனம் இடம்பெற்றது.

அரியநேத்திரன்  தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளின் ஒரு குறியீடே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவரை நியமித்தவர்கள் கூறுகிறார்கள். அவரும் தனது குறியீட்டுக் கடமை தேர்தல் தினத்துடன் முடிந்துவிடும் என்று கூறுகிறார். அதனால் அவரைப் பற்றி பேசுவதில்  அர்த்தமில்லை. அவரை நிறுத்தியவர்கள் தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறார்கள்? தேரதலுக்கு பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(ஈழநாடு ) 
 

 

https://arangamnews.com/?p=11118

ரணிலைத் தாண்டி முன்னிலையில் ஓடும் சஜித்!

3 months ago

புருஜோத்தமன் தங்கமயில்

 

sajith.jpg


ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. 

 

ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் எதிர்கொள்கிறார்கள். ஏற்கனவே, மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் ரணில் பக்கம் ஓடிவிட்டார். இந்தத் தாவல் படலம் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தங்களை முன்னிறுத்தும் கட்சிகளின் உறுப்பினர்கள் வரையில் பரவும் வாய்ப்புக்களைக் காண முடிகின்றது. அதிலும், ரணிலுடனான கட்சி ரீதியான உரையாடல்கள், தனிப்பட்ட உரையாடல்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பரபரப்பாக இருக்கிறார்கள். 

ராஜபக்ஷக்கள் ஆட்சியை ரணிலிடம் கையளித்துவிட்டுச் சென்ற தருணத்தில், பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவின் போது, தனக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாக ரணில் கூறியிருந்தார். அதுவும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின் போதே, அவர் அதனை வெளிப்படையாக தெரிவித்தார். இதனை, கூட்டமைப்பினர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியான நிலையில், ரணிலின் அணுகுமுறை எவ்வாறானது, எங்கு எவரோடு எதனைக் கொண்டு – கொடுத்து கையாளுவர் என்பது தெளிவானது. 

நாட்டில் வாகன இறக்குமதிக்கான தற்காலிகத் தடை நீடிக்கின்றது. இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதியும் நிகழவில்லை. வாகன அனுமதிப்பத்திரத்தை வைத்து, சில கோடிகளையாவது தேற்றலாம் என்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அதனை, தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரணில், பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த சஜித், ‘சாராய அனுமதிப்பத்திரங்களை வழங்கி ஆள்பிடிக்கும் அரசியலை தோற்கடிப்பேன்.’ என்று கூறியிருக்கிறார். வழக்கமாக தேர்தல் காலங்களில் கோடிகளில் பேரங்கள் நடைபெறும். இப்போதும் அது நிகழ்கின்றது. அதனோடு சேர்த்து மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஏற்கனவே, மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள், ரணிலின் பக்கத்தில் இருக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அவர்கள் சஜித்தோடு இணைந்தால், அவர்களின் விபரங்களை வெளியிடுவோம் என்று ரணில் அணியினர் மிரட்டுவதாக தென் இலங்கையில் பேசப்படுகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தங்களினால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், இந்தப் பேரங்களில் அவ்வளவுக்கு அடிபடவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் குறித்து சந்தேகம் கொண்டவர்கள், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில், தாவல் படலத்துக்குள் சங்கமித்து கோடிகளை அள்ளுகிறார்கள். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஓட்டத்தில் இந்தக் கணம் வரையில் சஜித்தான் முன்னிலையில் இருக்கின்றார். அவரை நெருக்கும் அளவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை. அதனால், அவர் பின்னால் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் கட்சிகளும், தலைவர்களும் அணி வகுத்திருக்கிறார்கள். ஆனாலும் சஜித்தின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்கான திட்டங்களின் போக்கில், வழக்கத்துக்கு மாறாக பல வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். அதிலும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரும் ரணிலின் பினாமிகள். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்திட்டம், சஜித்தை நோக்கி திரளும் வாக்குகளில் ஒரு பகுதியையாவது குறைப்பதாகும். இந்தப் பினாமி வேட்பாளர்கள் தங்களை இனத்தின் காவலர்கள், அப்பழுக்கற்ற மனிதர்கள் என்றெல்லாம் அறிவிக்கும் கூத்துக்கள் எல்லாமும் நடைபெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்கள், பிரதான வேட்பாளர்களின் பினாமிகள் என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சஜித்தின் வாக்குகளை பிரிப்பதற்காக ரணிலால் களமிறக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களாக விஜயதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா உள்ளிட்டோரையும் தென் இலங்கை பார்க்கிறது. ஏனெனில், தென் இலங்கையிலும் சாதி சார் அரசியல் பெரும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது. அதன் போக்கில், சஜித்துக்கு எதிராக விஜயதாச களமிறக்கப்பட்டிருப்பதாக கருத்து உண்டு. அதுபோல, இராணுவம் உள்ளிட்ட முப்படை சார் வாக்குகள் இலட்சக்கணக்கில் உண்டு. அவற்றில் கணிசமானவை இம்முறை சஜித்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பக்கத்திற்கும் செல்லும் சாத்தியமுண்டு. அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இறுதி யுத்தத்தை வென்ற தளபதி என்ற அடையாளத்தோடு பொன்சேகாவை ரணில் களமிறக்கியிருக்கின்றார் என்பதும் குற்றச்சாட்டு. அதன்மூலம், பொன்சேகாவின் விசுவாசிகள் சஜித்தை புறந்தள்ளுவார்கள் என்பது கணிப்பு. 

வடக்கு கிழக்கில் ஏற்கனவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பெயரில் அரியநேந்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அதனை தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புச் செய்தாலும், அதனால் ஆதாயம் அடையும் வாய்ப்பு ரணிலுக்கானது. இப்படியான இன்னொரு நடவடிக்கையாகவே, மலையக தமிழ் வாக்குகள் சஜித்தை நோக்கி திரள்வதைத் தடுப்பதற்காக திலகராஜ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது, சஜித் அணியினரின் குற்றச்சாட்டு. இந்த  விடயங்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்தத் தேர்தலில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளில் பெரும்பான்மையானவை சஜித்தை நோக்கியே திரளும். பொது வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் அடையாளங்களைக் கொண்டு, அந்தத் திரட்சியில் ஒரு சில இலட்சம் வாக்குகளைப் பிரித்தாலே, அது ரணிலுக்கான சாதகமான விடயமாகும். ஆனால், ரணில் எதிர்பார்க்காத விடயம் ராஜபக்ஷக்களிடம் இருந்துதான் அவருக்கு பதிலடியாக கிடைத்திருக்கின்றது. 

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு வந்த தம்மிக்க பெரேரா, இறுதி நேரத்தில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளைக் காரணங்காட்டி போட்டியில் இருந்து விலகினார். ஆனால், அவரை விலகச் செய்ததில் ரணிலின் பங்கு இருப்பதாக ராஜபக்ஷக்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்த நெருக்கடியான நிலையில், இளைய ராஜபக்ஷவான நாமல் முன்வந்து ரணிலுக்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்றிருக்கிறார். மற்றவர்களை வேட்பாளர்கள் நிறுத்தினால்தானே, அவர்களை மிரட்டி உருட்டி அடிபணிய வைக்க முடியும், தானே வேட்பாளராகிவிட்டால், வெருட்டல் உருட்டலுக்கு வழியில்லாமல் போகும் என்பது நாமலின் எண்ணம். அதனால்தான், படுதோல்வி காணும் வாய்ப்புள்ளது என்ற நிலையிலும் நாமல், ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தார். 

தம்மிக்க பெரேராவை ஒதுங்க வைத்தால், ராஜபக்ஷக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஒதுங்கி விடுவார்கள் என்பது ரணில் எதிர்பார்ப்பு. அதன்மூலம், ராஜபக்ஷ ஆதரவு வாக்குகள் தனக்கு முழுவதுமாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கனவே  பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னோடு இருக்கிறார்கள், தேர்தலில் இருந்து ராஜபக்ஷக்கள் ஒதுங்கிவிட்டால், ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு ரணிலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இந்த கணிப்பைக் கொண்டு ரணில் காய்களை நகர்த்த, நாமல் தன்னையே களத்தில் நிறுத்தி ரணிலுக்கு செக் வைத்திருக்கிறார். இதன்மூலம், ரணில் பக்கம் திரள வேண்டிய வாக்குகளில் குறைந்தது ஐந்து இலட்சம் வாக்குகளாவது இழக்கப்படும் வாய்ப்புண்டு. ரணில், வடக்கு கிழக்கு, மலையகத்தில் சுயேட்சை வேட்பாளர்களைக் கொண்டு நடத்திய வாக்குப் பிரிப்பு வேட்டையும் தென் இலங்கையில் பொன்சேகா, விஜயதாசவைக் கொண்டு நடத்திய இராணுவ – சாதி ரீதியான அடையாள வாக்குப் பிரிப்பையும் நாமல் களமிறங்கி நாசமாக்கிவிட்டார். 

தேசிய மக்கள் சக்தியின் பின்னாலான திரட்சி தற்போது பெருமளவு அடிபடத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே தென் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மீதான அதிருப்தி என்பது கணிசமாக உண்டு. அதனை மாற்றுவதற்காக அநுர கட்சியை, பொது அமைப்புக்களோடு இணைந்து தேசிய மக்கள் சக்தியாக பெயர் மாற்றம் செய்தார். ஆனாலும் அது அவ்வளவு சாத்தியமான வெற்றிகளை பெற்றுத்தருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அரகலய முடிந்த கையோடு தேர்தல் ஒன்றுக்கு நாடு சென்றிருந்தால், தேசிய மக்கள் சக்தி, இரண்டாமிடத்துக்கு வந்து, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டது. அதனை, அந்தக் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களிலேயே காண முடிகின்றது. முதலாவது இடத்துக்கு போட்டியிடும் ஆன்ம பலத்தோடு இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது மூன்றாமிடத்துக்கான போட்டியிலேயே இருக்கிறார்கள். சிலவேளை அதிலும் அவர்கள் நாமலிடம் தோற்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், தென் இலங்கையின் சமூக கட்டுமானம் சாதி – மத – அடிப்படைவாதம் சார்ந்தது. அது, பெரியளவில் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்தது இல்லை. 

தமிழரசுக் கட்சியின் ஆதரவு என்பது சஜித்தை நோக்கியதாகத்தான் இன்னமும் இருக்கின்றது. அதனை, இந்தியாவும் வலியுறுத்துவதாக தெரிகின்றது. ரணிலோடு, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனித்துத் தனித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், இறுதியில் சஜித்தோடுதான் நிற்பார்கள் என்பதுதான் நிலை. அது, தமிழ் மக்களின்  பெருந்திரட்சி எந்தப் பக்கம் என்ற அடிப்படையிலும் நிகழ்வதுமாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பொதுக் கட்டமைப்பினர் முன்வைத்தாலும், அந்தக் கட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளே தங்களின் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. அதனால், பொதுக் கட்டமைப்பின் அரசியல் பத்தியாளர்கள் மாத்திரம் பிரச்சாரம் நடத்தி, பொது வேட்பாளரை நோக்கி, வாக்கைச் சேர்த்துவிடுவார்கள் என்று நம்புவது பெரும் அபத்தமாகும். அதனால், அது சில ஆயிரம் வாக்குகளோடு இன்னொரு எம்.கே.சிவாஜிலிங்கமாக அரியநேந்திரனை கட்டமைப்பதோடு முடிந்து போகும். அப்படியான நிலையில், பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் தங்களோடு இருப்பதாக காண்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி செயற்படும். அது, சஜித்தை நோக்கிய திரட்சியாகவே இருக்கும். கடந்த காலங்களைப் போன்றே, வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குப் முன்னால், சஜித்தை ஆதரிப்பதான அறிவிப்பை தமிழரசு விடுக்கும். 

இன்னொரு பக்கம், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் கருத்து வெளியிட்டு வந்த தமிழரசின் முக்கியஸ்தர் ஒருவரை டில்லி அவசரமாக அழைத்திருக்கின்றது. அங்கு அவருக்கு சஜித்தை நோக்கிய நகர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கி அனுப்பியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில், சம்பந்தப்பட்ட தலைவர், பொது வேட்பாளர் பற்றி பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு இந்தியாவே இன்னமும் எஜமான்.  தென் இலங்கையின் உணர்நிலை என்பது, சஜித்தை நோக்கிய திரட்சியாக இருக்கின்ற நிலையில், அந்த ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள இந்தியா நினைக்கின்றது. அதனால்தான், சஜித்துக்கான ஆதரவு நிலையில் இந்தியா இருக்கின்றது. அதன்மூலம், எதிர்காலத்தில் சஜித்தோடு நெருக்கமாக இயங்கலாம் என்பது பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்பு. ரணிலைப் போன்ற மூத்த தந்திரசாலியைக் கையாள்வது இந்தியாவுக்கு பெரும் தலையிடியானது. அப்படியான நிலையில், சஜித் அவர்களுக்கு விருப்பான தேர்வு. 

வாக்குத் திரட்சிக்கான நகர்வுகள், பிரித்தாளும் உத்திகள், கோடிகளில் பேரம் என்று எதிர்வரும் ஒரு மாத காலத்தில் அதிகமான பரபரப்புக்களை தேர்தல் களம் காட்டப் போகின்றது. இந்த அலைக்கழிப்புக்களில் அடங்காத பெரும்கூட்டமான மக்கள் தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்துக்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளும் முகவர்களும் தின்று கொழுத்து பெருச்சாளிகளாக திளைக்கிறார்கள். தேர்தல்கள் முடியும் வரையில் இதுதான் காட்சிகளாகப் போகின்றது. 

- காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 18, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_18.html

நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔

3 months ago
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02

நன்றி - யூரூப்

இலங்கை அதிபர் தேர்தலோடு தொடர்புடைய விடயமாக இருப்பதால் இணைத்துள்ளேன்.    

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்

3 months ago

 

சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்

spacer.png

 

இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா?

முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத்  தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார்.

ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது.

இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய  மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது.

அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார்.

மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு.

தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான்.  தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம்.  அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது.

அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை.  கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா?

கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம்.

ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை.

பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு  அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக்  காத்திருப்பது  தலைமைத்துவப் பலவீனம்தான்.

கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா?

அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா?

கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த்  தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா?

இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா?

அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும்.

https://www.nillanthan.com/6860/

தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளின் அதிர்ச்சியின் விளைவான தாக்கங்கள்; இந்தியாவுக்கான படிப்பினைகள்

3 months ago

Published By: VISHNU  16 AUG, 2024 | 03:46 AM

image

சுஹாசினி ஹைதர் 

இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன.

2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர்  இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார்.

அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும் கூட்டரசாங்கங்களின் வீழ்ச்சி அதே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் குறைந்தளவு நட்புறவைக் கொண்ட பிரதமர் ஒலீயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது.

அடுத்து இப்போது பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவை திடீரென்று பதவியில் இருந்து விரட்டியிருக்கிறது. அவர் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கிறார். ஹசீனா அரசாங்கத்தின் மீது இந்தியா எவ்வாறு பெருமளவுக்கு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிர்ச்சியை உணர்ந்து கொள்ளமுடியும்.

ஹசீனாவுக்கு பிறகு பதவிக்கு வருபவர்களுடன் எவ்வாறு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பதில் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களின் நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  தெற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாற்றங்களின்  விளைவுகளினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அது போன்ற விளைவுகளில் இருந்து தான்  தப்பித்துக் கொள்வதற்கும்  இந்தியாவுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாடங்கள் எவை? 

இந்திய அரசாங்கம் அதன் சொந்த அயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாரில்லாத ஒரு நிலையில் இருந்திருக்கக்கூடாது என்பது முதல் பாடம். 

பங்களாதேஷில் இந்தியாவின் பிரசன்னத்தை பொறுத்தவரை, தலைநகர் டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு புறம்பாக, சிட்டாகொங், ராய்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெற் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பல இந்திய அமைப்புக்கள் அந்த நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாம் கடந்த ஒரு சில மாதங்களாக மாத்திரமல்ல, கடந்த சில வருடங்களாக ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பை பற்றிய விபரங்கள் முழுமையாக திரட்டப்பட்டு புதுடில்லிக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்திருக்க வேண்டும். 

அவாமி லீக் அரசாங்கம் ஒரு எதேச்சாதிகார, தனிக்கட்சி ஆட்சியாக மாறிக்கொண்டுவந்தது. எதிரணி அரசியல்வாதிகள் பலர்  சிறையில் அடைக்கப்பட்டதுடன் மேலும் பலர் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள்.

சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தொல்லைகளுக்கு  உள்ளாக்கப்படுவதாகவும் உணர்ந்தார்கள். நிலைமை இவ்வாறாக இருந்தபோதிலும், அதைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது  தனது அக்கறைகளை ஹசீனா அரசாங்கம்  விளங்கக்கூடிய முறையில் கூறுவதற்கோ இந்திய அரசாங்கம் எதையும்  செய்யவில்லை.

மேலும், பங்களாதேஷ் எதிரணியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு இந்திய இராஜதந்திரிகள் தவறினார்கள்.  முன்னாள் பிரதமர் பேகம்  காலிதா ஸியாவின் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, ஒரு சந்தர்ப்பத்தில்,  ஹசீனா அரசாங்கத்தின் வேண்டுகோளையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஒருவரை இந்திய அரசாங்கம் நாடுகடத்தியது. 

இவையெல்லாம் அரசியல் மதிலின் ஒரு பக்கத்தில் மாத்திரம்   நின்றுகொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அத்தகைய ஒரு பக்கச்சார்பான ஊடாட்டத்தை வரலாறு பல தடவைகள் வேண்டிநிற்கிறது.

பேகம் காலிதா ஸியாவின் கீழான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில்,  குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் எல்லையோரக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக  இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் பாரதூரமானதாக இருந்த அதேவேளை, ஒரு நீண்டகாலத்துக்கு அயல்நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சியை அலட்சியம் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்திருக்க முடியாது.

 ஆப்கானிஸ்தானில் இந்திய  தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட படுமோசமான தாக்குதல்களில் தலிபான் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும்கூட, அந்த இயக்கத்துடன்  உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்தது.

இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அடிக்கடி இந்திய விரோத நிலைப்பாடுகளை எடுத்த வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், அதன் தலைவர்களை இந்திய அரசாங்கம் வரவேற்றது. கே.பி. சர்மா ஒலீ தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் இந்தியா கடுமையாகாஆட்சேபித்த வரைபடங்கள் தொடர்பிலான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கூட அந்த கட்சியுடன் புதுடில்லி விவகாரங்களை கையாண்டது. 

இந்த செயற்பாடுகள் எல்லாம் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை  அயல்நாடுகளில் உள்ள தரப்புகளுடன் ஊடாட்டங்களை வேண்டிநிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

மாலைதீவில் அன்றைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலீக்கு இந்தியா அளித்த முழுமையான ஆதரவும் முஹமட் முய்சுவை இந்திய விரோத தலைவர் என்று காண்பித்துக் கொண்டதும் தேர்தல் அலை மறுபக்கம் மாறியபோது பயனில்லாமல் போய்விட்டது. கசப்பான ஒரு  உண்மையை இந்தியா ஜீரணித்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன் மாலைதீவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்ட போதிலும், கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி முய்சுவின் அரசாங்கத்துடன் நெருக்கமான ஊடாட்டங்களை நாடினார். 

புதுடில்லி அதன் வீறுகாட்டும் மனோபாவத்தைக் கைவிட்டு அயல்நாடுகளுடனான ஊடாட்டங்களை பரந்தளவில் பேணினால் இத்தகைய கடுமையான பாடங்களை தவிர்த்திருக்க முடியும். ஒரு கட்சி ஆட்சியின் உறுதிப்பாட்டை விடவும் நாட்டுக்குள்ளும் எல்லைகளுக்கு வெளியேயும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் கருத்துக்களை புதுடில்லி விரும்பி ஆதரிக்கவேண்டும்.

இழந்த நற்பெயரும் இனவாதப் பார்வையும்

இந்தியா அதன் நண்பர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பது பங்களாதேஷ் மற்றும்  ஷேய்க் ஹசீனா விவகாரத்தில் நாம் பெற்றுக்கொண்ட இன்னொரு படிப்பினையாகும்.

காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு தலிபான்களிடம் இருந்து தப்பியோடிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களுக்கு விசா வழங்குவதற்கு மறுத்தபோது நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற நற்பெயரை புதுடில்லி இழந்துவிட்டது. அந்த ஆப்கானியர்களில் முன்னைய ஆப்கான் அரசாங்கத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

அவர்கள் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் இந்திய இராஜதந்திரிகளை பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு கதவை மூடுவதற்கு இந்தியா எடுத்த தீர்மானம் தொடர்ந்தும் ஒரு கசப்பான விவகாரமாகவே நீடிக்கிறது. கோட்பாட்டுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

தெற்காசியாவில் அதிகாரத்தை அடிக்கடி இழக்கும் தலைவர்கள் சில காலத்துக்கு பிறகு திரும்பவும் பதவிக்கு வருகிறார்கள். ஷேய்க் ஹசீனா இன்னொரு பாதுகாப்பான நாட்டைத் தேடிக்கண்டு பிடிக்கும்வரை தங்கியிருப்பதற்கு அனுமதித்ததன் மூலம் நல்ல காரியம் ஒன்றை  இந்தியா செய்திருக்கிறது. அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அது ஒரு துரோகச் செயலாக அமைந்திருக்கும். எதிர்காலத்திலும் அவரை கையாளும் விடயத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறை கடைப்பிக்கப்பட வேண்டும் 

ஹசீனா தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது புதிய அரசாங்கத்துடனான உறவுகளைச் சிக்கலாக்கும். குறிப்பாக அவரை நாடுகடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தால் அல்லது அவாமி லீக் கட்சியினர் தங்களை மீள அணிதிரட்டுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்துவதாக கருதப்பட்டால் பிரச்சினை தோன்ற சாத்தியம் இருக்கிறது.

அயல்நாடுகளில் உறவுகளை இனவாத நோக்கின் அடிப்படையில் அணுகுவது ஒரு தவறு என்பது காலந்தாழ்த்தாமல் இந்தியா படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.  தெற்காசியா மதரீதியான பெரும்பான்மைச் சமூகங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். வெவ்வேறு நாடுகளில் சனத்தொகையின் அதிகப்பெரும்பான்மையான பிரிவினராக இந்துக்களும் முஸ்லிம்களும் பௌத்தர்களும் வாழ்கிறார்கள். நல்லுறவுகள் ஏதோ ஒரு வகையில் மதத்துடன் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று எண்ணுவது தவறானதாகும்.

இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நேபாளத்துடன் இந்தியா மிகவும் சிக்கலான உறவைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பூட்டானும் முஸ்லிம்களை பெரும்பானமையினராகக் காண்ட மாலைதீவும் பெரும்பாலும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தன.

முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளில் ( ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பஙகளாதேஷ் ) இருந்துவந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாத்திரம் குடியுரிமையை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை அயல்நாடுகளில் ( மேலே குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமல்ல) எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. 

ஹசீனாவின் பதவி விலகலை தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் மோடி அரசாங்கத்தின் காட்டும் அக்கறை சரியானதே. ஆனால், இந்திய உள்துறை அமைச்சின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு போன்ற கருவிகளின் ஊாடாக அல்லாமல் மிகவும் சாதுரியமாக அந்த அக்கறை வெளிக்காட்டப்பட வேண்டும்.

தனது எல்லகைளுக்குள் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்களையும் பாதுகாப்பதில் பற்றுறுதி கொண்டிருப்பதாக, சொல்லால் அன்றி செயலால், இந்திய அரசாங்கம் காண்பிப்பதன் மூலமாக பங்களாதேஷ் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தியாவின் அக்கறை கரிசனையுடன் நோக்கபடுவதை உறுதிசெய்யலாம்.

தெற்காசிய தனித்துவ பொறிமுறை

இந்தியா முதன்மையான வல்லரசு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும் என்பது நான்காவது பாடம். பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை எதிர்க்கவேண்டியது அவசியம் என்கின்ற அதேவேளை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டிக்கான களமாக பிராந்தியம் மாறிவிடக்கூடாது. 

வர்த்தகம், இணைப்பு , முதலீடு மற்றும் மூலோபாய உறவுகளில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் நன்கு தெரிந்தவையே. பங்களாதேஷில் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிரான  அமெரிககாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலன்களை நசுக்கிவிட்டன.

பாகிஸ்தான் தேர்தல்கள் குறித்து எந்த கருத்தையும் அமெரிக்கா கூறாமல் இருந்த பின்புலத்தில் நோக்கும்போது வாஷிங்டன் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கைகளும் பங்களாதேஷில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் விசேட விசேட விசா கொள்கையை பிணைக்கும் அமெராக்கத் தீர்மானமும் பாசாங்குத்தனமானவை  என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்  (சார்க் ) போன்ற தனித்துவமான தெற்காசிய பொறிமுறைகளை மீட்டெடுத்து இந்தியா வெளித்தலையீடுகள் இன்றி அயல்நாடுகளுடன் ஊடாட்ங்களைச் செய்வதற்கு வழிவகைகளை கண்டறியவேண்டும். பாகிஸ்தானுடனான இரு தரப்பு பிரச்சினைகள்  இந்தியா ஒரு தசாப்த காலமாக சார்க் அமைப்பை பகிஷ்கரிக்க வழிவகுத்தன.

பங்களாதேஷுடனான உறவுகள் மோசமடையுமேயானால் ( சார்க்கை  கைவிட்டதைப் போன்று ) பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான  வங்காள விரிகுடா செயற்திட்டம் ( Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Cooperation ) or BIMSTEC ) போன்ற மற்றைய பொறி முறைகளையும் கைவிடவேண்டுமா அல்லது அவ்வாறு செய்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும்  என்பது குறித்தும்  இந்தியா பரிசீலனை செய்யவேண்டும்.

இறுதியாக, கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் கொந்தளிப்புகளில்  இருந்தும்  தேர்தல் முடிவுகளில் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும் குறிப்பிட்ட சில பொதுவான பாடங்கள் மீது புதுடில்லி மாத்திரமல்ல, சகல தெற்காசிய தலைநகரங்களும் கவனம் செலுத்தியாக வேண்டும். தொழில் வாய்பின்மையும் சமத்துவமற்ற வளர்ச்சியும் வீதிகளுக்கு மக்களை இறக்குகின்றன. ஆனால்,  எந்தளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஜனநாயக பின்னடைவை மூடிமறைக்க முடியாது.

நவீன ஜனநாயகங்களில் எதிர்ப்பை நசுக்கும் செயற்பாடுகளை நீண்டகாலத்துக்கு தொடரமுடியாது."நீங்கள் ஒரு வருட காலத்துக்கு பயிரை வளர்க்க விரும்பினால் சோளத்தை பயிருடுங்கள்..... காலாதிகாலத்துக்கு பயிர் செய்ய விரும்பினால் ஜனநாயகத்தை வளருங்கள்" என்ற ஒரு பழைய கூற்று இருக்கிறது. இது இந்தியாவையும் அயல்நாடுகளுடனான அதன் உறவுகறையும் பொறுத்தவரை உண்மையாகும்.

https://www.virakesari.lk/article/191184

பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.

3 months ago
Ranil-Tamil-partees.png?resize=750,375&s பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை.

இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் செல்லவில்லை. ஆனால் மூன்று கட்சிகள் சென்றன. அவை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளாக அங்கே செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறுதான் சென்றார்கள் என்று வெளியில் நம்பப்படுகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக அணுகவில்லை என்றாலும் கூட, அது பொதுக் கட்டமைப்பு என்பதற்காகத் தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தும் பொதுக் கட்டமைப்பை அவர்கள் அழைத்தார்கள். தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம். எனவே அந்த இரண்டு அழைப்புகளும் வெளிப்படையாக பொதுக் கட்டமைப்புக்கு என்று கூறப்படாவிட்டாலும், பொதுக் கட்டமைப்பை நோக்கியவை தான்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால், அந்த மூன்று கட்சிகளும் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் போயிருக்கக் கூடாது.ஆனால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன ?

நாட்டில் உள்ள கட்சிகள் என்ற அடிப்படையில், நாட்டின் தலைவர் ஓர் அழைப்பை விடுக்கும் பொழுது சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரீகம் என்று கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கும் பொழுது அவர்கள் சென்று சந்திப்பது இயல்பானது. இம்மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளிடம் மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே அந்த அடிப்படையில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதாக ஒரு விளக்கம் தரப்படுகின்றது.

பொதுக் கட்டமைப்பின் ஊடக அறிக்கை ஒரு பொதுக் கட்டமைப்பாக அந்த சந்திப்பில் தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
மூன்று கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சார்பாகத் தங்கள் பங்குபற்றியதாகத் தெரிவிக்கவில்லை.

ஆனால்,பொதுக் கட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பொது வேட்பாளர் விமர்சிப்பவர்கள் அவ்வாறுதான் வியாக்கியானம் செய்கின்றார்கள். பொதுக் கட்டமைப்பு உடைந்து விட்டது, பொதுக் கட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை, அந்த மூன்று கட்சிகள் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டன,பொதுக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையில் உருகிப் பிணைந்த கூட்டு உருவாகவில்லை… என்றெல்லாம். விமர்சனங்கள் வருகின்றன

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு.அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அதற்கென்று ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதிக் கொண்டமையும் ஒரு புதிய தோற்றப்பாடுதான்.கடந்த 15 ஆண்டுகளாக பலரும் எதிர்பார்த்த;எழுதி வந்த ஒன்று.அது இப்பொழுது ஏறக்குறைய ஒரு மாதக் குழந்தைதான்.அதில் பலவீனங்கள் உண்டு.அங்கே தவறுகள் நடக்கும்.அங்கே முழுமையான கூட்டுப் பொறுப்பை, உருகிப் பிணைந்த இணைப்பை எதிர்பார்க்க முடியாது.அதைப் படிப்படியாகத்தான் ஏற்படுத்தலாம்.இவ்வாறு கட்சிகளையும் மக்கள் அமைப்பையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?

ஏனென்றால் தமிழர் அரசியலில் எல்லாமே சிதறிப் போய் இருக்கின்றன என்பதனால்தான், தமிழரசியலின் சீரழிவு காரணமாகத்தான் அவ்வாறு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது.தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்து வருகிறது.

sajith-tamil-partees.webp?resize=600,300

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்காக குடிமக்கள் சமூகங்கள் இன்று நேற்று உழைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகின்றன.மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில்,தமிழ் சிவில் சமூக அமையத்தில் இருந்து தொடங்கி இப்பொழுதுள்ள பொதுமக்கள் சபை வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.அதில் தற்காலிக வெற்றிகளை அவர்களால் பெற முடிந்திருக்கிறதே தவிர நிரந்தர வெற்றிகளைப் பெற முடியவில்லை.

இவ்வாறான ஒரு துர்பாக்கியமான அரசியல், சிவில் சமூகப் பின்னணியில், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பும் ஒரு தற்காலிக வெற்றியாக மாறிவிடக்கூடாது என்ற கரிசனை குடிமக்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு கிடையாது. ஒற்றுமை சிதைந்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை யோசிக்கலாம் என்று கூறுவதற்கு வேறு தெரிவே கிடையாது. தமிழ் மக்கள் ஒன்றுசேரத் தவறினால் தமிழ்க் கட்சிகளை ஒரு மையத்தில் ஒன்றிணைக்கத் தவறினால்,அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதை விடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் ஒரு தூர்ந்து போகும் சமூகமாக மாறிவிடுவார்கள் என்பதுதான்.

எனவே தமிழ்ச் சமூகம் தூர்ந்து போய் ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப் போவதற்கு அனுமதிக்க முடியாது.அந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் சக்திகளையும் தரப்புகளையும் ஐக்கியப்படுத்துவதுதான் ஒரே வழி. ஐக்கியம் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே இல்லை என்ற ஒரு விளிம்பில் இப்பொழுது தமிழ் அரசியல் வந்து நிற்கின்றது. அந்த அடிப்படையில்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு யோசிக்கப்பட்டது.

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அவ்வாறு மக்களை ஒரு பெரிய திரட்சியாகக் கூட்டிக்கட்டுவது என்று சொன்னால், அந்த மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கட்சிகளையும் கூட்டிக்கட்ட வேண்டும். அவ்வாறு கூட்டிக்கட்டத் தவறினால் தமிழ்ச் சமூகம் இப்பொழுது இருப்பதை விடவும் கேவலமான,பாரதூரமான விதத்தில் தூர்ந்து போய்விடும்.அவ்வாறு தூர்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக் கட்ட்டமைப்பு.எனவே பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று உழைப்பவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை விரும்பாத சக்திகள் பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்; விரும்புகிறார்கள்;அதற்காகக் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் ஒரு மாதக் குழந்தையான பொதுக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமா? அல்லது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் மேலும் தீவிரமாக,தீர்க்கதரிசனமாக;அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டியிருப்பதை அது காட்டுகின்றதா?

ஏனென்றால் இந்த இடத்தில் மனம் தளர்ந்தால்,இந்த இடத்தில் சோர்வடைந்தால், பிறகு தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் செல்லும்? ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தோல்வியுற்ற பின் எட்டு ஆண்டுகள் சென்றன இப்படியொரு கட்டமைப்பை உருவாக்க.ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய சறுக்கல்கள், தளம்பல்கள் போன்றவற்றை பொருட்படுத்தி பலவீனமான ஒரு ஐக்கியத்தை உடைப்பதா? அல்லது அதனை மேலும் பலப்படுத்தி உடைக்கப்பட முடியாத ஒன்றாக உருகிப் பிணைந்த ஒன்றாக வளர்த்தெடுப்பதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.தத்துவ ஞானி ஹெகல் கூறுவார் “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எதையென்றால்,நாம் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக பொதுக் கட்டமைப்புக்கும் பொருந்தும். அரசற்ற சிறிய ஒரு மக்கள் கூட்டம் எதிர்த் தரப்பு விரும்புவதை செய்ய வேண்டுமா அல்லது செய்யக் கூடாதா?

https://athavannews.com/2024/1396287

Checked
Thu, 11/21/2024 - 16:53
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed